வண்ணநிலா(அத்யாயம் 1)

( சித்திரம்: கிரிஸ் ரத்னம், ஆஸ்திரேலியா)

(நண்பர் நல்லரத்னம் வேறு கதைக்காக முன்னர் வரைந்தனுப்பிய இரு சித்திரங்களுக்காக பின்னர் புனையப்பட்ட கதை.)

மார்கழி மாதம் பிறந்து விட்டது; பனியும் குளிருமாக இருக்க வேண்டும் ; மாறாக மழை பெய்து கொண்டிருக்கிறது. தங்கராசு  சென்னை கோட்டை மின்சார ரயில் நிலையத்தில் இறங்கி சாலையை கடந்து எஸ்பிளனேடு சாலையில் நுழையும் போது மழை பெரிதாகப் பிடித்துக் கொண்டது. வேகமாக ஓடி ராஜா அண்ணாமலை மன்றத்தின் படிகளிலேறி வராண்டாவில் நின்று மேல் துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டான். அவன் பார்க்க வேண்டியவர் எதிரில் உள்ள ஹைகோர்ட்டில்தான் உள்ளார், மழை விட்டால் ஒரே ஓட்டமாக ஓடி கோர்ட் கட்டடத்தில் ஒதுங்கிக் கொள்ளலாம். சுற்றுமுற்றும் உள்ளவர்களைப் பார்த்தான்; பெரும்பாலோர் ஜிப்பா, வேட்டியோடு இருந்தார்கள். அது என்ன இடம், அங்கே என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள ஆர்வம் வந்துவிட்டது.  தன்னைப் போலவே மழைக்கு ஒதுங்க ஓடிவந்தவர் அருகில் நிற்கவே அவரிடம் கேட்டான்,” ஐயா, இந்த கட்டடத்தில என்ன விசேடம் நடக்கப் போகுது”

அவர் அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்; பார்வையிலேயே ‘சொன்னால் புரிந்து கொள்வாயோ’ என்ற அவநம்பிக்கை தெரிந்தது. இருந்தாலும், 

“இதுதான் ராஜா அண்ணாமலை மன்றம்; வருட முழுக்க இங்க தெனமும் நாடகம், பாட்டுக் கச்சேரின்னு ஏதாச்சும் நடக்கும். இப்போ சென்னைல எல்லா சபாவிலயும் இசை விழா நடக்கராப்ல இங்கயும் நடக்குது. இவங்க எல்லாரும் பாட்டுக்காரங்க. காலைல இசை பத்தின பண் ஆராய்ச்சி பண்ணுவாங்க; சாயங்காலம் பெரிய பெரிய வித்வான்லாம் பாடுவாங்க, வாத்யம் வாசிப்பாங்க; ஏதாச்சும் புரிஞ்சுதா” என்றார்.

” புரிஞ்சுது..புரிஞ்சுது. உள்ளார போய் பார்க்க காசா இல்ல ஓசியா”

” மதியனம் வரைக்கும் நடக்கும் ஆராய்ச்சிக்கு ஓசிதான்; யார் வேணா போகலாம்; ஆனா மதியானத்துக்கு மேல டிக்கெட் வாங்கனும், அது ஓசி கெடையாது”

தங்கராசு அடுத்த கேள்வி கேட்பதற்குள் அம்மனிதர் இடம் பெயர்ந்து விட்டார். 

டிசம்பர் பதினெட்டு முதல் ஜனவரி ஒன்று வரை நடக்கும் நிகழ்ச்சி நிரல் இரண்டு பெரிய ஃப்ளக்ஸ் பேனர்களாகக் காட்சியளித்தன. அதுமட்டுமல்லாது அன்றைய முற்பகல் பண் ஆராய்ச்சி நிகழ்வில் பங்கு பெறும் ஒரு இளம் பெண்ணின் படத்துடன் அறிவிப்பும் காணப்பட்டது. அந்த படத்தையும் பெயரையும் பார்த்த தங்கராசு துணுக்குற்றான். தன் மனைவி பானுமதி கல்யாணத்தின் போது எப்படி இருந்தாளோ அச்சு அசலாக அதைப்போலவே இந்தப் பெண் படமும் இருந்ததுதான். அதைவிட அந்த பெண்ணின் பெயர் அவனை உலுக்கியது. அவனும் அவன் மனைவியும் தேடித்தேடி கண்டுபிடித்து வண்ணநிலா என்று தன் மகளுக்கு வைத்த பெயர். ஒரு வேளை இந்தப் பெண் தன் மகளாக இருக்கலாமோ? யாரிடமாவது விசாரிக்க வேண்டுமே, தவித்தான். மன்றத்தின் பின்புறம் பக்க வாட்டில் இருந்த நேரே மேடைக்கு செல்லும் கதவின் அருகில் நின்று யோசித்தான். அந்த பேனரில் இருக்கும் பெண்ணின் தோற்றம் மீண்டும் மீண்டும் அவன் கண்முன்னே வந்தது.

அவனுக்கு தன் மனைவி பானுமதி வண்ணநிலாவை மார்போடு அணைத்து கொஞ்சும் காட்சியும் காரணமில்லாமல் கண்முன்னே வந்தது. அவன் மனைவியையும் பெண்ணையும் நினைக்கும் போதெல்லாம் இந்த ஒரு காட்சியே அவன் கண்முன்னே தோன்றுவதுதான் வழக்கம்.

கேன்டீனில் இருந்து காபி வாங்கிக் கொண்டு வந்த  இருவர் அவனருகில் வந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

முதலாமவர், “அப்பறம் எப்படி போகுது வாழ்க்கை”

இரண்டாமவர், ” நான் இப்போ தமிழறிஞர் கு.கோதண்டபாணியாரிடம் உதவியாளனாக இருக்கேன்.”

முதலாமவர்,” ஓ..அவரா, லேபர் கமிஷனரா இருந்தப்ப திரு.வி.க கூட பழகினவர், கன்ட்ரோலர் ஆஃப் இமிக்ரேஷன், ரயில்வே சர்வீஸ் கமிஷன் மெம்பர் மாதிரி பல பதவியில இருந்தாரே அவர்தான”

இரண்டாமவர்,”அவரேதான். தமிழ் இசைல பண் ஆராய்ச்சி கட்டுரை படிக்கறார். இன்னைக்கு மார்க தாளம் பற்றி பேப்பர் படிக்கறார்; அதற்காக திருப்புகழ்ல இருந்தெல்லாம் பாட்டு பாட அந்த பொண்ணு வண்ணநிலாவை நான் தான் அழைச்சிகிட்டு வந்தேன்”

முதலாமவர், ” இந்த பெண்ணை எப்படிப் பிடிச்சே”
“நானெங்க பிடிச்சேன்; எல்லாம் கோதண்டபாணியார்தான் பிடிச்சார். எலக்ட்ரிக் ட்ரெயின்ல பாடி பிச்சை எடுக்கற பெண்; பரனூர்ல இருந்து அழைச்சிகிட்டு வந்தேன்”

“சரி வா , உள்ளே போகலாம்”

இரண்டு பேரும் உள் வாயிலை நோக்கி நடந்தார்கள். தங்கராஜுவும் அவர்களைப் பின் தொடர்ந்து போனான்.

 நாளை  தொடரும்….

4 thoughts on “வண்ணநிலா(அத்யாயம் 1)

Add yours

    1. நண்பரின் இரண்டு சித்திரங்கள்; அவற்றை வைத்து எழுதிய கதை; முயற்ச்சி வெல்லும் எனக் கருதுகிறேன்.

      Like

    1. எனக்குத் தெரிந்தவரையில் திரு. கோவிந்தசாமிநாதன்(கோண்டு)அவர்களின் மகன் திரு. வெங்கடேஷ் என்றொருவர் ராவ்சாகேப்.திரு.கோதண்டபாணிபிள்ளை யவர்களின் மகள் வழிப் பேரன்(ராமாபுரத்தில்) உள்ளார். ஒருவேளைாஅது நீங்களாக இருப்பின் மகிழ்ச்சியே!
      நானும் அவருக்கு உறவினன்தான் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.

      Like

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑