1970 களில் வெண்மைப் புரட்சி மூலம் இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முன்னேறியது. அதே நேரத்தில் உள்நாட்டு மாட்டினங்கள் அழியத் தொடங்கியதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் ஐந்து நாட்டு இன மாடுகள் இவ்வழிவை சந்திக்க வேண்டி வந்தது.
1. உம்பளச்சேரி இன மாடுகள்
2.புலிக்குளம் இன மாடுகள்
3.காங்கேயம் இன மாடுகள்
4.பர்கூர் மலை மாடுகள்
5.ஆலம்பாடி ன மாடுகள்
வெளிநாட்டு இன மாடுகளுக்கு நோய் சிகிச்சை, தீவணம், பராமரிப்பு என அதிக செலவு பிடிக்கும். உள்நாட்டு இன மாடுகளுக்கு இத்தனை செலவில்லை.
உள்நாட்டு இன மாடுகள் வாலினால் கொசுக்களை விரட்டி நோயிலிருந்து காத்துக் கொள்ளும். மடி நோய்கள் வெளிநாட்டு மாடுகளைத்தான் தாக்கும்.
உள்நாட்டு மாடுகள் தானே தீவனத்தை தேடிக் கொள்ளும். வெளிநாட்டு மாடுகளுக்கு தீவணச் செலவு அதிகம். உள்நாட்டு மாடுகளுக்கு 20-30 ரூபாய் எனில் வெளிநாட்டு மாடுகளுக்கு 100 ரூபாய் ஆகும்.எல்லா உள்நாட்டு இன மாடுகளும் எந்த தட்ப வெப்ப நிலையையும் தாங்க வல்லவை.
1. உம்பளச்சேரி இன மாடுகள் UMBALACHERY BREED

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் காணப் படுகின்றன. இதன் அடையாளம்
நெற்றியில் இலை, நட்சத்திரம் வெள்ளையாகக் காணப்படும். கொண்டையில் வெள்ளை, முதுகில் வெள்ளைக்கோடு, நாண்கு கால்களிலும் சாக்ஸ் போட்டது போல் வெள்ளை, நீண்ட வாலில் பாதி வெள்ளை. பிறக்கும் போது செந்நிறமாக இருந்தாலும் ஏழெட்டு மாதங்களில் பழுப்பு நிறமடைந்து விடும். மிகக் குறைவான அளவு பாலே கறக்கும். கன்று ஊட்டிய பின் அதிக பட்சம் 1 லிட்டரே கறக்கும். மடியை எக்கி பாலை உள்ளிழுத்துக் கொண்டு மீண்டும் கன்று ஊட்டக் கொடுக்கும். வளர்ப்பவரைத் தவிர மற்றவரை கறக்கவிடாது. அதிக கெட்டியான பால். மேய்சசலுக்கு அவிழ்த்து விட்டால் மேய்ந்து விட்டு மாலையில் கன்றுக்கு பால் கொடுக்க வீட்டுக்கு வந்திடும். அக்கம் பக்கத்து ஊர்களில் விற்கப்பட்டாலும் நினைவோடு பழைய இடத்துக்கே கூட திரும்ப வந்திடும்.
“முத்து முத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடைக்காது” என்பது காளமேகப்புலவரின் பாடல்.
காளைகளின் கொம்புகள் பல மாதிரி வளர்வதால் ஜோடி சேர்ப்பதில் சிக்கல் வருமென்பதால் கொம்புகளை கன்றிலேயே தீய்த்துவிடுவார்கள்; காதுகளையும் குறைத்திடுவார்கள்.
காளைகள் காவிரிப் படுகையில் குறைந்த உணவுடன் 7 மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல், 2500 கிலோ பாரத்தை அசராமல் 20 கிமீ வரை இழுத்துச் செல்லும். உழவுக்கும், வண்டியிழுக்கவும், ரேக்ளா ரேசுக்கும் காளைகள் பயன்படுகின்றன.
உணவாக வெறும் வைக்கோலும் தண்ணீரும் போதும்; கறவை நாட்களில் மட்டும் சிறிது புண்ணாக்கு பருத்திக் கொட்டை தேவை.
கிடை மாடுகளாக அனுப்புவதால் அங்கேயே சினைப்பட்டு வந்திடும்.
தெற்கத்திமாடு,மோழைமாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு என வேறு பெயர்கள் உண்டு.
ஆட்டுக்காரிமாடு, வெண்ணாமாடு, சூரியங்காட்டுமாடு, கணபதியான் மாடு என வகைகள் உள்ளன.
2. புலிகுளம் இன மாடுகள் PULIKULAM BREED

புலிக்குளம் எனும் ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றன. பெரிய திமில், கூரிய கொம்பு, சீறிப்பாயும் வீரியம் இதன் சிறப்பு. பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதன்மை பங்களிப்பு. ஒரு புலியைக்கூட கூரிய கொம்புகளால் குத்திக் கொன்றுவிடும். எந்த கடின தட்ப வெப்பத்தையும் தாங்கும் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் இலங்கை, மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.20 ஆண்டுகள் வாழும். பசு 250கிலோ காளை300கிலோ எடையிருக்கும்.3லிட்டர் வரை பால் கொடுக்கும். நல்ல ஜீரண சக்தி கொண்டது. கீழக்கட்டு, மணி, பளிங்கு மாடு என வேறு பெயர்கள் உண்டு. குட்டையான திடமான உடலமைப்பும், கூரிய கொம்புகளும், வலிமையான திமிலும் கொண்டது. சாம்பல் மற்றும் கருஞ்சாம்பல் நிறத்திலிருக்கும்.
புலிக்குளம் காளை இனத்தை இந்திய அரசின் மரபணு அமைப்பு 2012 இல் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின காளையாக அறிவித்துள்ளது.
3. காங்கேயம் இன மாடுகள் KANGEYAM BREED

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திலும், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. விவசாயத்துக்கு ஏற்ற மாடு. 5000கிலோ வரையான பாரத்தை இழுக்கும். பஞ்ச காலத்திலும் பனையோலை, எள்ளுச்சக்கை, கரும்புத்தோகை என கிடைப்பதை சாப்பிடும். சத்து மிக்க பால் அதிக பட்சம் 2 லிட்டரே கறக்கும். பிறக்கும் போது செந்நிறமாக இருந்து ஆறுமாதத்தில் சாம்பல் நிறமாக மாறும். திமில், முன்பகுதி பின்கால் பகுதி அடர் நிறத்தில் இருக்கும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.
உட்பிரிவுகள்
மயிலை(வெள்ளி)
பிள்ளை( வெண்மை)
செவலை(சிவப்பு)
காரி(கருப்பு).
சிந்து சமவெளியில் கிடைத்துள்ள திமில் உள்ள காளை காங்கேயம் காளையை ஒத்துள்ளது. காங்கயம் மற்றும் புலிக்குளம் இன மாடுகள் ரோமில் உள்ள பன்னாட்டு உணவு மற்றும் விவசாய நிறுவனத்தில் பதிவு செய்து இந்தியாவின் பாரம்ரிய மாட்டினமாக உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. இலங்கை, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி யிருக்கிறது.
4. பர்கூர் மலை (செம்மறை) மாடுகள் BURGUR BREED

பர்கூர் மலைக்காடுகளில் மேயக்கூடிய மாட்டினம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள பர்கூர், தோணிமடுவு உள்ளிட்ட 34 கிராமங்களில் இவ்வின மாடுகளை வளர்க்கிறார்கள். மலையில் கிடை போட்டு வளர்ப்பார்கள். வனத்துறையின் கெடுபிடியால் வனப்பகுதியில் வளர்ப்பது சிரமமாக உள்ளது. வீரப்பன் பிரச்சினை இருந்தபோது இவர்கள் சொல்லொன்னாத் துயருக்கு ஆளானார்கள்.
இம்மாடுகள் பழுப்பு நிறத்தில் வெள்ளை திட்டுக்களுடன் இருக்கும். அரிதாக வெள்ளை நிறத்தில் பழுப்பு திட்டுக்களுடன் காணப்படும். மற்ற இனத்தைவிட அதிகமாக உழைக்கும்; நாண்கு நாள் வரைகூட நீர் அருந்தாம லிருக்கும். நாண்கு பேர் சுமையை ஒருவரே சுமக்கும். கெட்டியான குளம்பு அமைப்பால் லாடம் அடிக்கத் தேவையில்லை. விற்பனைக்காக அந்தியூர் சந்தைக்கு கொண்டு வரப்படும்.
5. ஆலம்பாடி இன மாடுகள் ALAMBADI BREED

ஆலம்பாடி என்ற ஊர் ஒகேனக்கலில் இருந்து ஐந்து மைல் தொலைவில் கர்னாடகப் பகுதியில் உள்ளது; மொழிவாரி மாநிலம் பிரித்தபோது கர்னாடகாவுக்குள் சென்றது. எனினும் இங்கிருப்போர் தமிழ்தான் பேசுகிறார்கள். இவ்வூரில் தோன்றிய மாடு. நீண்டகால்கள், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றி , கனத்த கொம்பு இதன் உருவ அமைப்பு. இதற்கு குறைந்த அளவே தீனி தேவைப்படும்.
தர்மபுரி மாவட்டத்தின் பெண்ணாகரம், ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும்பாலை, ஏரியூர் பகுதிகள் மற்றும் கிருட்டிணகிரி எல்லையிலுள்ள தேன்கனிக்கோட்டை, நாட்ராம் பாளையம், அஞ்செட்டி பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வின மாடுகள் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். 290 கிலோ முதல் 362 கிலோ வரை எடையிருக்கும். இவ்வகை மாடுகள் உழவுக்கும் வண்டியிழுக்கவும் பயன்படுகிறது. எந்த வெப்ப தட்ப நிலைக்கும் பொருந்தக்கூடியது. நீண்டதூர பயணத்துக்கு ஏற்ற குளம்பு அமைப்பு கொண்டது. இதன் சாணத்தை பயன் படுத்தினால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் வேண்டியதில்லை. கலப்பினம் உருவாகிவிட்டதால் தருமபுரி கிருட்டினகிரி வனப்பகுதியில் உள்ள அசல் மாட்டினம் அடையாளம் காணப்பட வேண்டும்.
Leave a Reply