(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
வீடு கிரகப் பிரவேசம் அமர்க்களமாக நிறைவேறி விட்டது. விழாவுக்கு வந்தவர்கள் எல்லாருமே சொன்ன ஒரே பாராட்டு
“இதுவரையில் இப்படி ஒரு வீட்டைப் பார்த்ததில்லை”.
வீட்டைக் கட்டிய பசுபதி போட்ட உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. பல வீடுகளை நேரில் போய்ப் பார்த்தான். நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டின் வரைபடங்களைப் பார்த்தான். ஆர்க்கிடெக்ட்டிடம் பல வரைபடங்களை வரைய வைத்தான். அவ்வளவு உழைப்பைப் போட்டதால்தான் இத்தனைப் பாராட்டும் கிடைத்தது.
சமையலறைக்கருகில் உள்ள டைனிங் ஹாலில் திருமகளும் அவள் தம்பி முதலிய உறவினர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அனைவருமே திருமகள் புராணம்தான் பாடிக் கொண்டிருந்தார்கள். எல்லா பாராட்டையும் புன்னகையோடு பவ்யமாக ஏற்றுக் கொண்டு இருந்தாள். அதைக்கூட அவளுடைய பெருந்தன்மை யாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
திருமகளின் பெருமை பேசுபவர்களுக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். எந்த நேரத்திலும் அவள் எதற்காகவும் பெரிதாக உணர்ச்சி வசப்பட்டு கொண்டாடியதே இல்லை.
எல்லாமும் முடிந்து இரவு சாப்பாடும் முடிந்து வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பசுபதியின் மகன்,
“அப்பா, அம்மாவுக்கு பெருமை தாங்கல. தம்பி குடும்பம் கேட்கக் கேட்க அப்படியே பந்தாவாக உட்கார்ந்திருந்ததை பார்த்தீங்களா” என்று அம்மாவை சீண்டினான்.
பசுபதி, “அம்மா எந்தக் காலத்தில உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்காங்க இப்ப பேசறதுக்கு” என்றான். அதை உண்மையென்று அவன் மகனும் மகளும் ஆமோதித்தார்கள்.
அந்த வீட்டை மனக்கண்களால் பார்த்து பார்த்து வடிவமைத்தார்கள். தரை தளத்தில் ஒரு வரவேற்பறை விருந்தினர்களை வரவேற்க. அடுத்து ஒரு பெரிய லிவிங் ஹால், அதை ஒட்டியே டைனிங் இடம். லிவிங் ஹாலில் முன்புறம் மகனுக்கான அறை. அடுத்து மகளுக்கான அறை. கடைசியில் உள்ள சமையறைக்கு எதிரே அம்மா அப்பாவுக்கான அறை. லிவிங் ஹாலில் இருந்து மாடிக்கு செல்வதற்குப் படிகள். இது மாடியின் பிற்பகுதியில் கொண்டுவிடும். அங்கு ஒரு ஹால், இரண்டு அறை, சமையலறை என உண்டு.
வீட்டின் போர்டிகோவில் இருந்தும் ஒரு மாடிப்படி உண்டு. அது மாடியின் முன்பகுதிக்கு செல்லும். அது ஒரு பெரிய ஹால். சுவரில் வரிசையாக கண்ணாடிக் கதவுகளோடு கூடிய அலமாரிகள் ; அது முழுக்க புத்தகங்கள். இந்த புத்தக அறை பசுபதியின் நெடுநாள் கனவு. வீடென்று ஒன்று கட்டினால் புத்தக அறை அதில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது அவன் ஆசை.
இன்னும் எந்த அறையிலும் எதுவும் பொருத்தவுமில்லை; அடுக்கி வைக்கவும் இல்லை. மற்றவர்கள் எல்லாம் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு படுக்கைக்காக போய் விட்டார்கள். பால்காய்ச்சிய வீட்டில் இரவு விளக்கெரிய வேண்டும்; யாராவது தங்கினால் இன்னும் சிறப்பு என்றார்கள். அதனால் பசுபதி தரையில் பாய் விரித்து தலையனையோடு அமர்ந்து பாவேந்தரின் குடும்ப விளக்கு எடுத்து படிக்கத் தொடங்கினான். இரவு தூங்கும் முன் கட்டாயம் சில பக்கங்களாவது படித்து விட்டுத்தான் தூங்குவான். திருமகள் காய்ச்சி பனங்கல்கண்டு போட்ட பால் டம்ளர்களோடு வந்தாள். பாலைக்குடித்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தான்.
“பாப்பா, எல்லாமும் முடிந்ததா. இனி தூங்க வேண்டியதுதானா”
“என்னை சீண்டுரதுக்காகவே பாப்பாங்கறீங்க அதானே”
“இல்லையில்லை, பகல் முழுக்க உன் சொந்தக்காரங்க பாப்பான்னு ஒன்னக் கூப்பிட்டதால அப்படியே பதிஞ்சிடுச்சி”
“எப்பவும் போல ‘திரு’அப்படின்னே கூப்பிடுங்க”
“சரிங்க..திரு, இந்த வீடு எனக்கு ஒரு கனவு; உனக்கு அப்படி யில்லையா”
“இல்லைன்னு யார் சொன்னதாம்”
“என்னிடமும், பிள்ளைகளிடமும் இருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் உன்னிடம் இல்லையே அதனால் கேட்டேன்”
“………………….”
“எதையும் பெரிசாக நீ எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு உள்ள காரணத்தை இருபத்தைந்து வருடங்களா வற்புறுத்தி நான் கேட்டதில்லை; இன்றைக்கு கேட்கிறேன். நீ சால்ஜாப்பு சொல்லி தப்பிவிடாமல் உண்மையை சொல்லித்தானாக வேண்டும்.”
திருமகள் மவுனம் காத்தாள். நெடிய பெருமூச்சொன்று வெளிப்பட்டது. குனிந்து பாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவள் முகத்தைக் காட்ட விரும்பவில்லை. நிமிர்ந்தால் அவள் கண்கள் பனித்திருப்பதை அவன் கண்டு பிடித்திடுவான் என்று அதைத் தவிர்த்தாள் போலும்.
அவள் பதில் சொல்வதற்கு அவன் காத்திருக்கிறான் என்பது அவளுக்கு நல்லாவே தெரியும்.
சிறிதாக தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். ஆவேச மேடைப் பேச்சு பேசப் போவதில்லை; ஆனாலும் ஏதோ ஒன்று தொண்டையில் அடைப்பதாக உணர்ந்தாள் போலும்.
“வந்து… எப்படி ஆரம்பிச்சு எப்படி சொல்றதுன்னு தெரியலீங்க. நானும் எல்லாரும் போல கூத்தும் கும்மாளமுமாக இருந்தவதான். எனக்கே தெரியல எப்படி இப்படி மாறினேன்னு. யூ ஜி பைனல் இயர் முடிக்கும்போது குடும்பத்தில நடந்த சில வேதனையான நிகழ்வுகளினால அமைதியானவள் பின் இயல்பு நிலைக்கு திரும்பவே இல்லை என நினைக்கிறேன்”
அவனுக்கு திருமகள் குடும்ப வேதனை நிகழ்வு நன்றாகத் தெரியும்; அதை மீண்டும் அவள் வாயால் சொல்ல வேண்டாமென எண்ணினான்.
“அதெல்லாம் சரி திரு. இந்த அளவுக்கு உன்னை எப்படி மாற்றிச்சு என்பதுதான் விளங்க வில்லை.”
“வீட்டிலுள்ளவங்க ஆசைப்படி மருத்துவமோ, பொறியியலோ படிக்க எனக்கு விருப்பமில்லை. ஐ ஏ எஸ் படிக்க வேண்டுங்கறதே என்னோட ஆசை. அதற்காகவே இளங்கலையில் வரலாறு, சமூக அறிவியல், பெருளாதாரம் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை எடுத்தேன். நல்லாவும் படிச்சேன் ; என் கனவை நனவாக்க தேவையான எல்லாத்தையும் தேடித்தேடிப் படிச்சேன். காலத்தோட சதி நான் இளங்கலை முடித்ததே பெரும்பாடு ஆகிடுச்சு.”
“எதிர்பாரா நிகழ்வுக்கு என்ன செய்வது, திரு?”
“அதற்கப்புறம் எதையும் என் மனதுக்கு கொண்டு செல்றதை விட்டுவிட்டேன். அது என்னை மேலும் மனபாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றி வந்திருக்கு”
பசுபதிக்கு தெரிய வேண்டிய பதில் தெரிந்து விட்டது. எதிர்காலக் கனவு கனவாகவே முடிந்ததால் வந்த ஏமாற்றம் தந்த மாற்றம் இது.
திருமகளின் அப்பா குகநாதன் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை செய்தார். அரசு கெசட்டட் அதிகாரி. தஞ்சை மாவட்டத்தில் பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர். நஞ்சையும் புஞ்சையும் ஏராளமாக இருந்தது. சொந்த ஊரில் அரண்மனை மாதிரி வீடு. பண்னையார் குடும்பங்களில் அவர்கள் குடும்பம்தான் வில் வண்டி கலாச்சாரத்தில் இருந்து கார் கலாச்சாரத்துக்கு முதன்முதலாக மாறியது. நில புலன்களை குத்தகைக்கு விட்டதில், குத்தகைதாரர் தருவதை ஏற்று வாங்கிக் கொண்டார். பெரும்பாலும் அவர்கள் பஞ்சப் பாட்டுதான் பாடிக் கொண்டு வருவார்கள். இவருடைய தயாள குணத்தால் அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்று நம்பிவிடுவார்.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை செய்தாலும் அவர் கோவில் நிர்வாக அதிகாரியாகப் போக விரும்பவில்லை. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறை தலைமை அலுவலகத்திலேயே பணிபுரிந்தார். அதற்கு காரணம் இருந்தது. ஒவ்வொரு கோவிலாக மாற்றலாகிப் போய்க் கொண்டிருந்தால் பிள்ளைகளின் சீரான கல்விக்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணினார். அதனால் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று அங்கேயே தன்னை தக்க வைத்துக் கொண்டார். மேலும் எல்லாரும் கோவில்களில் பணியாற்றவே விரும்பியதால் இவருக்கு போட்டியென்பதே இல்லாமலிருந்தது.
விடுமுறை நாட்களில் காரில் குடும்பமாக மகாபலிபுரம், புலிக்காட், முட்டுக்காடு போன்ற சுற்றுலா பொழுது போக்கு இடங்களுக்குப் போய் விடுவார்கள். அனேகமாக எல்லா வாரக்கடைசி நாட்களிலும் மெரினா, பெசன்ட் நகர் பீச் என்று போய் விடுவார்கள்.
கல்லூரியில் படிக்கிற பெண் என்றாலும் திருமகள் அப்பாவின் முதுகில் படுத்து கழுத்தைக் கட்டிக் கொண்டு விளையாடுவது அவளுக்கு அன்றாட விளையாட்டு.
மகள் இளங்கலை மூன்றாமாண்டு முடிக்கப் போகிறாள்; மகன் பன்னிரண்டாம் வகுப்பு, இனி அவன் பொறியியல் படிப்பில்தான் சேரப் போகிறான். எனவே சென்னையிலிருந்து வெளியூருக்கு மாற்றலாகிப் போகலாம் என்ற நிலை. அதற்கான அலுவலக நெருக்கடியும் வந்தது.
இருநூறு வேலி நஞ்சை நிலம் உள்ள கோவிலுக்கு குகநாதன் அதிகாரியாக வந்தார். பெரிய வீடொன்றை ஒத்திக்கு ஏற்பாடு செய்து, அதில் குடியேறினார்கள்.
நஞ்சை மட்டுமே ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஏக்கர் சொத்து கொண்ட கோவில். ஊரில் உள்ள வீடுகளின் அடி மனை கோயிலுக்கு சொந்தம். எல்லாரும் பகுதி வரி செலுத்திக் கொண்டு வீடு கட்டி வசிக்கிறார்கள்.
மிகவும் அற்பமான தொகைதான் பகுதி வரி யென்பது. அதைக்கூட ஆண்டுக் கணக்காக கோவிலுக்கு செலுத்தாமல் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கோவில் நித்தியபடி பூசைக்கும், விசேடநாள் பூசைக்கும், திருவிழாக்களுக்கும் பணப் பற்றாக்குறையால் ஏதோ பெயருக்கு செய்து கொண்டிருந்தார்கள்.
அறங்காவலர் குழுக் கூட்டத்தைக் கூட்டினார்.
“எல்லாருக்கும் வணக்கம். இவ்வளவு சொத்து இருந்தும் கோவில் செலவுகளுக்கு கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஒழுங்காக வரி செலுத்தாதவர் களிடமிருந்து நிலத்தை திரும்ப எடுக்க வேண்டிவரும்”
” அதெப்படி? பல வருடங்களாக குத்தகை வைத்து இதையே நம்பி யிருப்பவங்க என்ன செய்வாங்க?”
” அதே மாதிரி கோவில் செலவுகளுக்கு குத்தகை பணத்தை நம்பியிருக்கிற கோவில் என்ன செய்யும்?”
விவாதம் முடிவில்லாமல் போனது. கோவில் நிலத்தை கபளீகரம் செய்து வைத்திருப்பவர்கள் எதிர் வினையாற்ற முடிவு செய்தார்கள்.
அடுத்ததாக சாமி சிலைகள், நகைகள் கணக் கெடுப்பில் இறங்கினார். சக்கரத்தாழ்வார் உற்சவ விக்கிரகமும் சில நகைகளையும் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
காவல்துறை அறங்காவலர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது.
எல்லாரும் சேர்ந்து சதி செய்து அந்த உற்சவர் சிலையை கொண்டு வந்து இவர் வீட்டில் பதுக்கி வைத்து விட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்களின் அரசியல் பலமும் பணபலமும் சேர்ந்து அவர் வீட்டில் சோதனை நடத்தியது. சக்கரத்தாழ்வார் ஊற்சவ விக்ரகம் தோட்டத்தில் மலர்ச் செடிகளின் புதரில் கிடைத்தது. விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.
ஒரே நாளில் எல்லாம் தலைகீழானது. தற்காலிக பணி நீக்க உத்தரவு. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. புதிதாக கட்டிய வீடு, நகைகள், கார் எல்லாவற்றையும் பறிமுதல் செய்ததுடன் , வங்கிக் கணக்கையும் முடக்கி விட்டார்கள். குடும்பம் இடி விழுந்த தென்னை மரமாக நின்றது. சொந்த ஊருக்கே கிளம்பிப் போனார்கள்.
திருமகளின் அம்மா,
“பெருமாளே, உன் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்டுத்தானே இங்கு மறுதல் கேட்டு வந்தோம்; இப்படி செஞ்சுட்டியே நியாயமா” என்று பெருமாள் படத்தின் முன் நின்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
திருமகள் நிலை பேச்சற்றுப் போயிருந்தது. தன் அப்பாவைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும். சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர். அவரை சிக்கவைக்க யாரோ செய்த பாதகம் இது.
குகநாதனின் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்த நண்பர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக உள்ளார். அவர் வந்து ஆறுதல் கூறினார்.
“திருமகள், கவலைப்படாதே நானிக்கிறேன். குகநாதனை இதிலிருந்து விடுவித்திடுவேன். ஆனாலும் இந்த நேர வேதனை தாங்கித்தான் ஆக வேண்டும்”
“அங்கிள், நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செஞ்சதில்ல; அப்படிங்கறப்ப இந்த தண்டனை ஏன்”
“இந்த எடத்திலதான் கடவுள்னு ஒன்னு உண்டாங்கிற கேள்வி வந்திடும்; உனக்கும் அது வந்திடுச்சின்னு நெனைக்கிறேன். நீ அந்த சிந்தனைக் கெல்லாம் போயிடாதே”
“எங்களோட கனவு கற்பனைகள் பொய்த்துப் போனது பத்தியெல்லாம் கவலை இல்லை. இந்த அவமானத்தை அப்பா எப்படி தாங்கிக் கொள்வார் என்பதுதான் என் கவலை”
“குகநாதனுக்கு இது பேரிடிதான்; அவனை சமாதானப் படுத்த நானாச்சு”
“அப்பாவை சந்தித்து பேச வேண்டுமே இப்போது”
“கோர்ட்டுக்கு கூட்டிவரும் போது சந்திக்க ஏற்பாடு செய்யறேன்”
அவர் கிளம்பிப் போனதும் அமைதி நிலவியது.
திருமகள் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி வழிந்து கொண்டிருந்தது. அம்மாவுக்கே யாராவது ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கையில் அவள் மகளுக்கு என்ன ஆறுதல் சொல்லிவிடப் போகிறாள். எல்லாருமே உடைந்த ஓடத்தில் தானே பயணம் செய்கிறார்கள்.
“அம்மா, நான் படிப்பை தொடரப் போவதில்லை ; தம்பி மட்டும் இன்ஜினியரிங் சேர்ந்து படிக்கட்டும்.”
“அப்போ ஒன்னோட கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை”
“இன்றைய நிலைமைல அவன் ஒருத்தன படிக்க வைக்கறதே பெரும்பாடு”
“நீ கவலைப்படாதே, பெரிசா வருமானம் ஒன்னும் தாராத வயல் வெளிய வித்துடலாம்”
“அம்மா வேண்டாம், என்னைக் கட்டாயப் படுத்தாதிங்க.”
“அக்கா அவசரப்பட்டு பேசாத, அப்பா வந்திடட்டும்; அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்”
என்று தம்பியும் எடுத்துக் கூறினான். அவள்தான் கேட்பதாக இல்லை.
அன்று முதல் எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தாள்.
ஆனால் தனிமையில் இருக்கும் போதெல்லாம் அவள் கண்கள் கசிந்தபடியே இருந்தன. உள்ளுக்குள் கண்ணீர் ஊற்று ஏதும் உள்ளதோ? அல்லது கண்ணீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விட்டதோ ? கண்கள் அவள் கட்டுப் பாட்டை இழந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.’என்ற பாரிமகளிர் பாடிய புறநானூற்றுப் பாடல் அவள் கண்முன்னே வந்து வந்து போனது.
குகநாதன் ஜாமின் பெற்று வந்த பின்னரே சரிவர சாப்பிட ஆரம்பித்தாள். அவள் அப்பா மேற்கொண்டு குடிமைப் பணி தேர்வெழுத கோச்சிங் வகுப்பில் சேர கூறிய போதும் மறுத்து விட்டாள்.
தற்காலிக பணி நீக்கம். ஐந்தாண்டுகள் வழக்கு நடை பெற்றது.
கோவில் மெய்காபாளர் சாட்சியமும், தடயங்களும், திறமையாக வழக்கறிஞர் நண்பர் வாதாடியதும் சேர்ந்து வழக்கு வெற்றியடைந்தது. மீண்டும் பணி கிடைத்தாலும், எஞ்சிய நாண்காண்டு காலத்தையும் வி ஆர் எஸ் கொடுத்து வேலையை உதறி வந்து விட்டார்.
திருமகள் கல்யாணத்தை சீரும் சிறப்புமாக செய்து முடித்தார்.
பசுபதிக்கும் அரசு வேலைதான்.பி டி ஓ ஆபிசில் ஏ இ. இங்கும் அந்த அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகம்தான். பசுபதியுடைய தலைக்கு மேலும் அதே கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாக அவள் அஞ்சுகிறாள். தன் வாழ்நாள் முழுவதுமே எதிலாவது ஆசை வைத்தால் அது நிலைக்காமல் போவதுதானோ என்ற பயமே அவளுடைய பற்றற்ற நிலையின் காரணம்.திருமகளின் திருவுளத்தில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அச்சத்தைத் தெரிந்து கொண்ட பசுபதி, ” அப்படி எதுவும் நடக்க விடமாட்டேன், திரு. என்னை நீ நூற்றுக்கு நூறு நம்பலாம்.”என்று திருமகளின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தான். அவள் அவன் மார்பில் முகம் புதைத்து விம்மினாள். சிறு குழந்தைகள் அழுகை நின்றாலும் செருமிக் கொண்டு இருப்பார்களே அதைப் போல நெடுநேரம் வரை செருமிக் கொண்டே இருந்தாள்.
முன்னைய கதைகளைவிட மேம்பட்ட நிலையில் உள்ளது. அறவழியில் வாழ நினைக்கும் அரசு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் காலந்தோறும் தொடர்ந்துகொண்டிருப்பதை வாழைப்பழத்தில் ஊசிபோல் சொல்லியிருக்கிறீர்கள். ஊடே சங்க இலக்கியச் செய்யுள் வரிகள் செருகலும் கணப்பொருத்தமே! வாழ்த்துகள்!
LikeLike
நல்லவர்கள் பலரை நான் பர்த்ததின் விளைவே இக்கதை.நன்றி.
LikeLike