தமிழக நாட்டு நாய்கள் (TAMIL NATIVE DOG BREEDS) – பகுதி 1
தமிழக நாட்டு நாய்கள் (TAMIL NATIVE DOG BREEDS) – பகுதி 2
மனிதனின் உற்றதோழனாக நாய் சொல்லப் படுகிறது. நன்றி உணர்வுக்கும் நாய்தான் உதாரணம்.
அயல்நாட்டு நாய்களை மேல்தட்டு மக்களைத் தவிரவும் நடுத்தட்டு மக்களும் வளர்க்க துவங்கியுள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன் அதிகமாக நாமறிந்த அயல்நாட்டு நாய் அல்சேஷன்தான். பின்னர் டாபர்மேன், லாப்ரடார், பொமரேனியன், புல் டாக் என வரிசை கட்டி நிற்கின்றன. பாதுகாப்பு என்பதைத் தாண்டி இன்று செல்லம் கொஞ்சவே நாய்கள் வளர்க்கப் படுகின்றன.
நான் சிறு வயதில் நேரில் பார்த்த காட்சி. வயல்களுக்கு நடுவே இருந்த திடலில் ஒருவர் வீடு கட்டுவதற்காக காளவாய் (செங்கல் சூளை) போடிருந்தார். காவிரியில் தண்ணீர் வந்ததால் விவசாய வேலைகள் துவங்கி விட்டன. இனி கோடை காலத்தில்தான் காளவாய் பிரித்து செங்கற்களை வண்டியில் ஏற்றி வரமுடியும். இதற்கிடையில் அந்த காளவாய் அடுப்பு துவாரங்களில் காட்டுப் பூனைகள் நிறைய புகுந்து கொண்டு ஊரில் உள்ள கோழிகளையெல்லாம் கபளீகரம் செய்து கொண்டிருந்தன. நாட்டு நாய்களை ஏவி விட்டார்கள். குறைத்துக் கொண்டே காளவாயில் பாய்ந்த அவை காட்டுப் பூனைகளை வாயில் கவ்வியபடி கொண்டு வந்து எஜமானன் காலடியில் போட்டன.
தமிழ்நாட்டு நாய்களைப் பற்றி பார்ப்பதுதான் நம் நோக்கம்.
உலகில் 350க்கு மேற்பட்ட நாய்களை அங்கீகரித்துள்ளார்கள். இந்தியாவில் மொத்தம் ஆறு நாய் வகைகளே அவற்றில் உள்ளன. அதில் தமிழ்நாட்டு நாய் வகைகள் மட்டுமே நான்கு. அந்த நான்கைப் பற்றி பார்ப்போம்.
கோம்பை ( Kombai )
கோம்பை இன நாய்கள் அழிந்து போன செங்கோட்டை நாய்கள் என்ற இனத்தை ஒத்தவை என டெஸ்மாண்ட் மோரிஸ் எனும் விலங்கியல் நிபுணர் கூறுகிறார்.

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாடிக் கொல்லும் ஆற்றல் கொண்டவையாகும். இதன் தூரத்து உறவினரான கோம்பை அதே வீரமும், போர்க்குணமும் கொண்டது. வேட்டைநாய் இனமானாலும் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் பக்குவமுடையது. காட்டுப் பன்றி, காட்டெருமை, மான் போன்றவற்றை வேட்டையாட பயன் படுத்தினார்கள். வீடு, கால்நடைகளை காக்கும் விசுவாசமான நாய். புலி, சிறுத்தை களிடமிருந்து கால்நடைகளை காப்பது இதன் பணி.
மருது சகோதரர்கள் காளையார் கோவில் போரில் கோம்பை நாயை போர்த்தலைவர்களாகப் பயன் படுத்தினார்களாம். இது எந்த நிலையிலும் எஜமானருக்கு ஆபத்து வராமல் காக்கும் குணம் கொண்டது. சிறு குழந்தைகளிடமும் முப்பது வயது நபரிடமும் வெவ்வேறு விதமாக பழகும். தேனி அருகில் உள்ள கோம்பை என்ற ஊரில் அதிகம் வளர்க்கப் படுகிறது.
இதில் ஆண் 23 – 25 அங்குல உயரமிருக்கும், எடை 30 கிலோ இருக்கும். பெண் தோராயமாக உயரத்தில் 2 அங்குலமும் எடையில் 5 கிலோவும் குறைவாக இருக்கும். மூக்கு வாய் கருமை நிறத்தில் இருக்கும்.
கன்னி ( Kanni/ Cunni)
இது தமிழ்நாட்டை சேர்ந்த நாய். நாயக்கர் காலத்தில் படைத் தலைவர்கள் ஆந்திரா, கர்னாடகாவில் இருந்து கொண்டு வந்தார்கள்.

கூச்ச சுபாவமிருப்பினும் எசமானனை காக்க தவறாது. தேவையின்றி குறைக்காது. தனித்தே வேட்டையாடும். வலுவான கால்களிருப்பதால் மான் வேட்டை சிறப்பு.
திருநெல்வேலி, கோவில் பட்டி, கழுகுமலை, கொண்டாங்கிப் பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுப்பகுதிகளில் மாப்பிள்ளைக்கு திருமணத்தில் சீராக கொடுப்பதாலும் கன்னிஆடு என்ற இனத்தின் நிறத்தில் இருப்பதாலும் கன்னி எனப் பெயர் வந்தது.
பொடித்தல நாய், ஊசிமூஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், கொசக்கடி நாய், குருமலைநாய், குருந்தன்மொழிநாய், தோல்நாய் என வேறு பெயர்களும் உண்டு. இது வேட்டைக்காகவே வளர்க்கப்பட்டது. சாதாரணமாக கருப்பு, பழுப்பு நிறத்தில்இருக்கும். பாதங்களிலும் மார்பிலும் சிறிது வெண்மையாக இருக்கும். ‘பால்கன்னி’ எனப்படும் கிரீம் நிற நாய்களும் உண்டு.
கூறான நீண்ட முகம், சிறிய தலை, கீழிறங்கிய மார்பு, மெலிதான நீண்ட உடல், குறைவான முடி, நீண்ட மெல்லிய வால் இந்த அழகிய உடலமைப்போடு இருக்கும்.
ஆண்நாய் 64 செமீ, பெண் நாய் 56 செமீஉயரம் இருக்கும்.
சிப்பிப்பாறை (Chippipaarai)
சிப்பிப்பாறை நாய் மதுரை அருகில் உள்ள சிப்பிப்பாறை என்ற ஊரில் அரச குடும்பத்தாரால் இனப்பெருக்கம் செய்யப்பட்டது.

மதுரை, திருநெல்வேலி ஆட்சியாளர்கள் தங்கள் மதிப்புக்காக இவற்றை வளர்த்தார்கள். காட்டுப் பன்றி, மான், முயல் போன்றவற்றை வேட்டையாடவும், வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தினார்கள்.
இன்றளவும் ஒரு ஊரே ஒன்றுகூடி சிப்பிபாறையை வளர்க்கிறது. ராசிபுரம் அருகே பனைமரத்துப்பட்டியில் வீடுகள் தோறும் வளர்க்கிறார்கள். விலை கொஞ்சம் அதிகமாயினும் வளர்க்கிறார்கள். கம்மாளப்பட்டி, சித்த நாயக்கன் பட்டி போன்ற 200 மலை குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் பகலிலும் விலங்குகள் தொல்லை தருகின்றன; வெடிகளுக்கெல்லாம் அவை மசிவதில்லை. அத்தோடு திருடர் பயமும் அதிகம். இந்த இரண்டுக்கும் காவல்துறையை விட இந்த மக்கள் அதிகம் நம்பியிருப்பது இந்த சிப்பிப்பாறை நாய்களைத்தான்.
இவை இளம்மஞ்சள், செம்மண் நிறம், சாம்பல் நிறக் கோடுகள் கொண்டிருக்கும். வளைந்த நீண்ட வால் இருக்கும். ஆண் நாய்கள் 63 செமீ; பெண் நாய்கள் 56 செமீ உயரம் உடையனவாக இருக்கும். உடல் முடிகள் குட்டையாகவும் மினுமினுப்புடனும் இருப்பது வெப்பத்தை தாங்க உதவும். விழுந்து புரண்டு பூச்சிகளை உதிர்த்துவிடும். நமது நாட்டு வெப்ப தட்ப நிலைக்கு ஏற்ற நாய் ஆகும்
ராஜபாளையம்(Rajapalayam)
ராஜபாளையம் பகுதியில் அதிகம் காணப்படுவதால் இப்பெயர் வந்ததாகக் கூறுவர். இது நமது வேட்டை நாய் வகையைச் சேர்ந்தது.

இயற்கையாக பார்வையால் வேட்டையாடக் கூடியது. மோப்பம் பிடித்து வேட்டையாடவும் பயிற்சியளித்தால் முடியும். லாப்ரடார் ரெட்ரீவர்,ஜெர்மன் ஷெப்பர்ட் போன்று பிரபலமாக இல்லை யென்றாலும் அவற்றுக்கு இணையான ஆயுளும் விளையாட்டுத் திறமையும் உள்ளது. கண்கானிப்புத் திறமைகொண்ட அற்புதமான காவல் நாய். எளிதில் அந்நியர்களை நம்பாதென்பதால் சில குறிப்பிட்ட நபர்களை சீக்கிரம் சரியாக அறிமுகப்படுத்துவது நல்லது. இதனால் நட்பானவரையும் வெளியாரையும் வேறுபடுத்தி அறியும். இது அந்நியர்களை நம்பாது; ஆக்கிரமிப்பை அனுமதிக்காது. சிறந்த காவல் நாய்.
வசதி படைத்தவர்களும் ஆட்சியிலிருப்போரும் வளர்த்தார்கள். விஜயநகரப் பேரரசின் வருகையின் போது பாளையக்காரர்கள் ஆந்திரா, கர்நாடகா பகுதியிலிருந்து கொண்டு வந்தார்கள்.பாளையக்காரர்கள்( Poligar) வளர்த்ததால் ஆங்கிலேயர்கள் இதை பொலிகார் ஹவுண்ட் என்றார்கள். இந்தியத் தபால் தலை வெளியிடப்பட்ட நான்கு நாய்களில் ராஜபாளையமும் ஒன்று. மற்றநாய்களின் தபால்தலை மதிப்பு 5ரூபாய், இதன் மதிப்பு 15 ரூபாய்.
இது வெள்ளை நிற உடலும், மடிந்து தொங்கும் காதும், இளஞ்சிவப்பு மூக்கும்,தங்க நிற கண்களும், சற்றே வளைந்த வாலும் கொண்ட பெரிய நாயாகும்.சராசரியாக 65 – 75 செமீ உயரம் இருக்கும். வலுவான எலும்புகளை உடையது.
இந்த நாட்டு நாய்களின் சிறப்பம்சம் அவை நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை அறிந்து கொண்டால் மனித நடமாட்டமில்லாத இடம் சென்று உயிர்விடும் என்பதே.
Podcasts
தமிழக நாட்டு நாய்களைப் பற்றி சுவாரசியமான தகவல்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஆராச்சிக்கட்டுரை . எழுத்து நடை சிறப்பு.
LikeLiked by 1 person
நண்றி நண்பரே. ராமநாதபும் மண்டை நாய்கள் , கொங்கு மண்டலத்து கருநாய்கள் போன்வையும் உண்டு. ஆயினும் இந்த நாண்குமே முதன்மையானவை..
LikeLike