என் பெயர் பினாகபாணி. அந்த காலத்திய எங்கள் அப்பாவின் பூர்வீக வீட்டை நோக்கி டூவீலரில் பயணித்து கொண்டிருக்கிறேன்.
அரசுத்துறையில் வேலை. பணி ஓய்வு கிடைத்து இரண்டு வாரம் ஆனது. இனி வருமானம் குறைந்து விடும். வாடகை கொடுத்து சென்னை மேற்கு மாம்பலத்தில் இனி குடும்பம் நடத்த முடியாது என்பதனால், இயற்கை விவசாயம் செய்து இங்கே மனைவியுடன் மீதி காலத்தை கடத்த எண்ணியுள்ளேன். பின்னாடி வண்டியில் மூட்டை முடிச்சுடன் சாராத… அதான் என் தர்ம பத்தினி அமர்ந்துள்ளாள். அவர்களுக்கு வழி காட்டியபடியே முன்னே டூ வீலரில் நான் செல்கிறேன்.
சென்னை புறநகர் பகுதியில்… ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது அந்த பங்களா. பல வருட பழமை அதன் தோற்றத்தில் தெரிந்தது. பங்களாவை சுற்றி பெரிய தோட்டம் இருந்தது. அசோகா மரம் முன் வாசலை ஒட்டி இருக்க…நந்தியாவட்டை.. முள்ளுகனகாம்பரம் செடிகள்…கோரை புற்கள் என புதர் மண்டி, காம்பவுண்ட் சுவர் அருகில் காட்சி அளித்தது. இத்தனை வருடமும் சம்பளம் கொடுத்து, பராமரிப்புக்கு ஆள் போட்டும், யாரும் சரியாக வேலை செய்யாமல் சென்று விட்டனர். யாரும் ஒரு மாதம் தாக்கு பிடிப்பதில்லை.
அவர்கள் கூறும் காரணம், எனக்கு சிரிப்பை தான் வரவழைத்தது. பேய் காற்று வீசுவதாகவும், இரவு நேரங்களில் வினோத சப்தம் கேட்பதாகவும் கூறினார்கள். ஊருக்கு தள்ளி இருக்கும் வீடு. அக்கம் பக்கத்தில் வீடு என்று எதுவுமில்லை. அதனால் ஏற்படும் காற்றின் வேகம் அப்படித்தான் இருக்கும் என்று கூறியும் அவர்கள் இங்கு தங்காமல் ஓடி விட்டார்கள். வண்டி வீட்டை நெருங்கியவுடன்…
காம்பவுண்ட் கேட் அருகே இருந்த கிழவன் கதவை திறந்தான்.
யார் நீங்கள் என்றேன்…
(தொடருங்கள்…. )
(மேலே உள்ளது ஒரு வலைக்குழுவில் தந்த தொடக்கம். இனி கதைக்கு தலைப்பு தந்து நான் தொடர்ந்தேன். கதை பரிசு பெற்றது)
அமெச்சூர் நடிகர்கள்
அந்த கிழவன் என்னை உற்று நோக்கி, ” அப்படியே ஐயாவை உரிச்சி வச்சிரிக்கீங்க ” என்றான்.
நான் முன்னேறிச் சென்று போர்டிகோவின் ஒரு பக்கத்தில் டூ வீலரை நிறுத்தினேன். சாமான்களையும் சாரதாவையும் சுமந்த வண்டியை சாமான்களை இறக்கிட வசதியாக திருப்பி போர்டிகோவில் நிறுத்தியாயிற்று.
” ஐயா நீங்கள் யார் என்று கேட்டேன்.”
” நானும் இதே ஊர்தான். என் மகன் வீட்டைவிற்று விட்டு அவன் பொண்டாட்டி ஊரோடு போய்ட்டான். நான் ஒரு வாரமா இங்கதான் தங்கியிருக்கேன். ஐயா இருந்தவரை நான்தான் இங்க தோட்ட வேல செஞ்சுகிட்டு இருந்தேன்”
அப்போதுதான் கவனித்தேன் ஒரு தகரப்பெட்டி போர்டிகோவின் ஒரு மூலையில் இருக்கிறது.
” அதுதான் உம்ம பெட்டியா”
ஆமாம் என்பதாக தலையை ஆட்டினார்.
” புதரா மண்டி கிடக்கிற தோட்டத்த சரி பண்ணனும் ; வேற எங்கயும் வேலைக்கு போகவேணாம்”
” ஏற்கனவே ஒத்துகிட்ட வேல ஊரப்பாக்கத்தில இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அத முடிச்சிட்டு மூணாம் நாள்ள இருந்து ஆரம்பச்சிடலாம்”
என் மனைவி வீட்டின் கவைத்திறந்து உள்ளே பிரவேசித்தாள். முதலி்ல் சாமான்களை ஹாலில் இறக்கி வைத்துக் கொள்ளலாம். வீட்டை சுத்தம் செய்தபின் அதனதன் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
” சரி. சாமான்களை இறக்க ஆள் யாரையாவது கூப்பிடும்”
” இந்த அத்துவான எடத்துல ஆளு யாரு கெடப்பா. நாம்பளே எறக்கிடலாம் “
” உமக்கு என்ன வெளையாட்டா தோனுதா, நடக்கிற காரியமா இது”
” பேசிக்கிடு இருக்காம வாங்க ஐயா எறக்குவோம்”
வேன் டிரைவரும் அவரும் அதற்குள் வேலையில் இறங்கி விட்டார்கள். வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் , பெரிய கட்டில் எல்லாம் எப்படி இறக்குவது. நான் யோசித்து முடிப்பதற்குள் என்னையும் கூப்பிட்டு விட்டார்கள்.
வேன் ஓட்டுனர் இந்த மாதிரி வீடு மாற்றுவதற்கெல்லாம் நிறைய சவாரி போனவர் போலும். ரொம்ப நேர்த்தியாக வேலை செய்தார். நான் ஒப்புக்குத்தான் கை வைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ரெண்டு பேருமே எல்லாம் முடித்துவிட்டார்கள். பார்வைக்குத்தான் கிழவன், ஆனால் ஆள் பெரிய பலசாலி.
முதலில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டுமே. மோட்டார் ஆன் செய்து பார்த்ததில் வேலை செய்கிறது.
சமயலறையை சுத்தம் செய்து கொண்டால் இரவு டிபனுக்கு உப்புமா செய்து கொள்ளலாம்.
“ஐயா பெரியவரே, உப்புமா சாப்பிடுவீரா”
இரவு போர்டிகோவிலேயே படுத்துக் கொண்டார்.
புது இடமாக இருக்கிறதே, தூக்கம் வருமோ வராதோ எனக் கவலை. ஆனால் நாங்களும் களைப்பு மிகுதியில் படுத்ததும் தூங்கிப் போனோம்.
ஆதனூர் என்ற அந்த கிராமம் கூடுவாஞ்சேரியிலிருந்து மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தூரம். பெரிய கடைகளோ, மருத்துவ மனையோ கிடையாது. எதற்கும் கூடுவாஞ்சேரியோ ஊரப்பாக்கமோ வரவேண்டும். இப்போது ஊரப்பாக்கத்திலிருந்து பெரிய தார்ச்சாலை போட்டுவிட்டார்கள்.
மறுநாள் ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்து சாமான்களை அடுக்க ஆரம்பித்தோம்.
தோட்டத்தை சுற்றிப் பார்த்தேன். முன்புற கேட்டிலிருந்து போர்டிகோ அறுபதடி தூரம் இருக்கும். வீட்டின் கீழ்த்திசையிலும் மேல்திசையிலும் காம்பவுண்டுக்கு இடையில் உள்ள தூரம் ஐம்பது அடி தூரம் இருக்கும். கீழ்த் திசை காம்பவுண்டு ஒரு பத்தடி தூரத்துக்கு இடிந்து விழுந்து கிடக்கிறது. மேல்திசையில் பெரிய மாமரம் காம்பவுண்டையும் தாண்டி கிளைகளை பரப்பிக் கொண்டு நிற்கிறது. பங்களாவின் பின்புறம் காம்பவுண்டுக்கு இடையே உள்ள தூரம் எண்பதடி தூரம் இருக்கும். கொய்யா,சப்போட்டா,மாதுளை, சீதாப்பழச் செடி என பழ வகைகள். எல்லாம் பராமரிப்பின்றி கிடக்கிறது. அங்கு மட்டும்தான் என்றில்லை; மொத்த தோட்டமும் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.
அந்தப் பெரியவர் மறுநாள் காலையில் கிளம்பிப் போனவர் மாலையில்தான் திரும்பினார், இரவு படுக்கைக்காக.
“உங்க பெரியப்பா மகள் உங்களை ரொம்ப விசாரிச்சாங்க” என்றார்.
” அப்படியா” என்றேன்.
” ஆமாம்”
என் அப்பா காலத்திலேயே அவருக்கும் பெரியப்பாவுக்கும் சொத்து பிரிவினை செய்து கொண்டு விட்டார்கள். என் அப்பா இந்த வீடும் ஐந்து ஏக்கர் நன்செய் நிலமும் போதும் என்று , ஊரப்பாக்கத்திலுள்ள வீட்டு மனையும், இருபத்தைந்து ஏக்கர் நிலத்தையும் தன் அண்ணனுக்கே தந்து விட்டார். பெரியப்பாவுக்கு ஓரேவொரு பெண், அவள்தான் ஊரப்பாக்கத்தில் வீடு கட்டிக்கொண்டு குடும்பத்துடன் வாழ்கிறாள்.
கடந்த வாரம் மேற்கு மாம்பலம் வந்திருந்தாள். அவர்களின் வீடு கடனில் மூழ்கி விட்டதால் என்னுடைய ஆதனூர் வீட்டைக் கேட்டு வந்திருந்தாள்.
“பணி ஓய்வு பெற்று விட்டதால நானே அங்க குடிவரப் போறேன். மேலும் மாடியை சரி செய்து ஐடி யில் வேலை பார்ப்பவர்களுக்கு வாடகைக்கு விடும் திட்டமும் வச்சிருக்கேன். அஞ்சு ஏக்கர் நிலத்திலயும் விவசாயம் பண்ணப் போறேன். வேணுமின்னா உன் புருஷனை எங்கூட சேர்ந்து விவசாயம் பார்க்கச் சொல்லு”
“அண்ணா அவரு விவசாயமெல்லாம் பார்க்க மாட்டேன்னுதான எல்லத்தையும் வியாபாரத்தில தொலைச்சார்; வீடும் முழுகிப் போச்சு. இப்போ வாடகை வீட்ல இருக்கோம். எம் பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சிடுச்சு, வேலைக்கான ஆர்டரும் வந்திடுச்சு. இனி சாப்பாடு பிரச்சினை இல்ல. என்ன இருந்தாலும், நல்லதோ கெட்டதோ எதானாலும் அப்பா சொல்லுரதத்தான் இந்த பெண் கேட்கிறாள். நான் என்ன செய்யரதுன்னே தெரியல” என்று புலம்பி விட்டுப் போனாள்.
இன்றும் வேலை அதிகமிருந்ததால் நித்ராதேவி சீக்கிரமே தழுவிக் கொண்டாள்.
இரவு ஆழ்ந்த தூக்கத்தில இருக்கும் போது மாடியில் யாரோ புழங்குவது போல சந்தடி கேட்டது. யாராயிருக்கும், பெருச்சாளி பூனை ஏதாவதிருக்கும். ஒரே சுவர்க் கோழியும், சில்வண்டும் ரீங்கரிக்கும் ஓசைதான் கேட்டுக் கெண்டிருந்தது. அந்த இடைவிடாத சத்தமே அச்சத்தை ஏற்படுத்தியது.
யாரோ வீட்டைச் சுற்றிவருவது போல் அரவம் கேட்டது. உற்றுக் கேட்டதில் ‘ஜல்..ஜல்’ என்று ஒரே ரிதத்தில் கொலுசின் ஓசை. சப்தமெழுப்பாமல் தெருப்பக்க ஜன்னல் திரையை லேசாக விலக்கி சிறு இடைவெளி வழியே பார்த்தேன். பெரியவர் ‘எறா’ வடிவத்தில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அரவம் ஏதும் கேட்கவில்லையோ.
என் தோளைத் தொட்டது போல உணர்ந்து சரேலெனத் திரும்பினேன். என் மனைவி பயந்து போய் நின்றிருந்தாள். ஜாடையிலேயே பின்பக்கம் வந்து பார்க்கக் கூப்பிட்டாள்.
அதே ரிதத்துடன் கொலுசு சத்தம் மீண்டும் வீட்டின் பின்புறம் கேட்டது.
மேலும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டதில் ‘ ஜல்..ஜல் ‘ வீட்டை நெருங்கி வந்து பின் கதவு அருகில் கேட்டது. மெதுவாக பக்கவாட்டில் நகர்ந்து சென்று தெருப்பக்கம் கரைந்து போனது. காம்பவுண்டைத் தாண்டி உள்ள சாலையில் நாய்கள் குறைத்துக் கொண்டிருந்தன.
பெரியவர் எந்த தொந்தரவு மின்றி தூங்கிக் கொண்டிருந்தார்.
இரவு நெடு நேரம் கழித்து மீண்டும் தூக்கம் வந்தது.
காலையில் எழுந்ததும் பெரியவர்,
” நான் கூடுவாஞ்சேரி போகிறேன். சாயங்காலம் திரும்பி வர்ரப்போ ஏதாவது வாங்கி வரனுமா உங்களுக்கு”
என்று கேட்டார். இரவு சம்பவம் எதுவும் தெரியாதவராக.
“நாங்கள் வெளியில் போகிறோம்; பார்த்துக் கொள்கிறோம். அப்பறம் இங்கிருந்து தாம்பரம் போக 80 ஆம் நம்பர் பஸ் எத்தினி மணிக்கு தெரியுமா”
“சரியா பத்து மணிக்கு இருக்கு”
பத்து மணி பஸ் பிடிக்க பேருந்து நிறுத்தத்துக்கு அரை கிலோ மீட்டர் நடக்கனும். ஒருவழியா பஸ் ஏறி தாம்பரம் வந்தோம். முடிச்சூர் சாலையில் இருந்த ப்ரீ ஓன்டு கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் எங்களுக்கு ஏற்ற மாருதி ஆல்டோ வண்டி ஒன்றை தேர்வு செய்து வாங்கினோம். காய்கள் பழங்கள் என எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பினோம். நாளைக்கு என் மகன் பெங்களுரில் இருந்து வருகிறான். இந்நேரத்தில் கார் கட்டாயம் தேவை.
வழியில் சாரதா,
” ஏங்க, கிழக்கு பக்க காம்பவுண்டு பத்தடி தூரத்துக்கு உடைந்து திறந்து கெடக்குது. அதை மொதல்ல கட்டிடனும்” என்றாள்.
” ஏற்பாடு செய்வோம் “
இரவு சாப்பட்டுக்குப்பின் போர்டிகோ வில் இரண்டு நாற்காலி போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த பெரியவர் வந்தார்.
இன்றிரவு எதற்கும் இருக்கட்டும் என்று காம்பவுண்ட் கேட்டை பூட்டி வைத்தேன்.
நேற்று போலவே இன்றும் அந்த கொலுசு சத்தம் . வீட்டின் முன்புறத்தை தவிர்த்து மற்ற மூன்று பக்கமும் கேட்டது. சத்தம் கொஞ்சமும் பிசிரில்லால் ஒரே ரிதமில் கேட்டது. மாடியிலும் முதல் நாள் போலவே அரவம் கேட்டது. மரங்களில் இருந்த பறவைகள் எல்லாம் ஏதோ உணர்ந்தவை போல அமைதியிழந்து சிறகடித்த வண்ணமிருந்தன. கொக்குகளெல்லாம் ‘குர்ரே..குர்ரே ‘ என்று கூவி அலைந்தன. ஆந்தையும் கோட்டானும் அபஸ்வரத்தில் அலப்பரை செய்து கொண்டிருந்தன.
அதே நேரத்தில் போர்டிகோவில் பெரியவர் தூக்கத்தில் பிணாத்தும் சத்தம். பிணாத்துகிறாரா அலறுகிறாரா என சந்தேகமாயிருந்தது. எனக்கு கதவைத்திறந்து பார்க்க எண்ணம். சாரதா தடுத்து விட்டாள். முகமெல்லாம் வியர்த்திருந்தாள். வீட்டின் வெளிப்புற விளக்குகளை எரியவிட்டேன். அந்த கெலுசுக்குரிய உருவத்தை பார்ப்பதற்காக ஹாலின் பக்கவாட்டு ஜன்னலைத் திறந்தேன்; படாரென்று ஏதோ ஒன்று ஜன்னலையும் தாண்டி முகத்திலடிப்பது போல வந்து மோதியது; நான் ஓரடி பின்னல் நகர்ந்து கொண்டேன்.
‘வீல்’ என்ற அலறலோடு சாரதா என்னை கட்டிக் கொண்டாள். நான் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றேன். மயக்கமே வரும் போல் இருந்தது. ஜன்னல் வழியே எலி ஒன்று தாவி வெளியே ஓடியது. இந்த எலிதான் சாரதாவை பயமுறுத்தியதோ. அப்போது என்மீது மோதியது என்னவாக இருக்கும்?. வௌவாலா இல்லை ஏதாவது ஆவியா?
காம்பவுண்டின் உடைந்து விழுந்திருந்த இடைவெளியில் கருப்பு நிற புடவை, அவிழ்த்து விட்ட முடி என்று ஒரு பொன்னிற இளம்பெண் இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்தவண்ணம் காற்றைப்போல் கடந்து போனாள். அவள் காலைப் பார்த்ததும் அதிர்ச்சியானேன். இது எப்படி சாத்தியம் என்று குழம்பினேன்.
கிழக்கு காம்பவுண்டுக்கு வெளியே நாய் குறைத்துக் கொண்டிருந்து. தாக்க வருபவரை பார்த்து குரைத்துக் கொண்டே விலகி ஓடுவதுபோல் சத்தம் விலகி விலகி சென்று கொண்டே இருந்தது. தோட்டத்து மரங்களில் பறவைகளின் சடசடப்பும், சத்தமும் நீடித்தது.
” ஏங்க, எல்லாரும் சொன்னது சரிதான் போல. இந்த பங்களா வேண்டாம்”
என சாரதா ஆரம்பித்து விட்டாள்.
“நாளைக்கு அருண் வந்திடுவான், அவன் வந்ததும் முடிவு செய்யலாம்”
என்று சமாதானப்படுத்தினேன்
எனக்குள் என்னென்னவோ சிந்தனைகள் மாறிமாறி வந்து கொண்டே இருந்தன. ஒரு முடிவும் கிடைக்க வில்லை. தொட்டுப் பார்த்தேன் நெற்றி கழுத்திலெல்லாம் வியர்வை.
மறநாள் காலை எட்டு மணியளவில் அருண் வந்து விட்டான். டிபன் சாப்பிட்டுவிட்டு தூங்கப்போய் விட்டான்.
நான் பெரியவரை இன்று முதல் என்னிடம் வேலை செய்ய கேட்டுக் கொண்டேன். அவருக்கு காலை டிபன் கொடுத்து விட்டு வேலையைப் பற்றி கூறினேன். முதலில் வளர்ந்து கிடந்த வேலிக்காத்தான் முள் புதரையெல்லாம் வெட்டி உடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் இடைளெியில் போட்டோம். நந்தியாவட்டை, முள்கனகாம்பரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்திவிட்டு,கோரைப் புற்களை யெல்லாம் அடியோடு வெட்டி அப்புறப் படுத்தினோம். அசோக மரங்களை சுற்றியும் சுத்தப்படுத்தினோம்.
பின்பக்கம் மேல்திசை மூலையில் இருந்த பெரிய கிணற்றைச் சுற்றிலும் இருந்த புதரை அப்புறப் படுத்தினோம்.
“பெரியவரே, பங்களாவின் முன் பகுதி பூராவும் நிறைய பூச்செடிகளும் குரோட்டன்ஸ் செடிகளுமாக ரம்மியமாக இருக்க வேண்டும். இரண்டு பக்கவாட்டிலும் பூச்செடிகளோடு, கீரைகள் போன்றவையும் பயிர் செய்ய வேண்டும். பின் பகுதி பூராவும் காய்கறிகள் பயிர். இதுதான் திட்டம்”
“ஆகா அருமை, அப்படியே செய்திடலாம் ” என்றார்.
சாரதா தன் பயத்தை மகன் அருணிடம் கொட்டித் தீர்த்தாள். அருணும் குழம்பி என்ன செய்யலாம் என்று யோசிக்க லானான்
” அப்பா, பேசாம இந்த பங்களாவ வித்துட்டு கூடுவாஞ்சேரியிலோ , ஊரப்பாக்கத்திலா நல்ல வீடோ ஃப்ளாட்டோ வாங்கிட்டா என்ன”
” உன் தாத்தா எல்லாத்தயும் தன் அண்ணனுக்கு கொடுத்திட்டு தனக்கின்னு ஆசையோட வச்சிக் கிட்டது இந்த வீடுதான்”
“ஓகோ சென்டிமென்ட் இடிக்குதா. சரி நல்லா யோசிப்போம்”
இரவு வழக்கம் போல டிபன் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் டிவி நிறுவி டிஷ் கனெக்ஷன் தந்து விடவேண்டும். பத்து மணிக்கெல்லாம் படுத்துவிட்டோம். வீட்டின் மேற்கு காம்பவுண்ட் ஒட்டி மாத்தூர் செல்லும் சாலை. அதில் மக்கள் நடமாட்டம்போல் ஆளரவம் கேட்டது. பறவைகள் ‘சட சட’ வென இறக்கைகளை அடித்துக் கொண்டன.
நல்ல தூக்கம் கண்ணை இழுக்கும் நேரம் இன்றைக்கும் அதே ரிதத்துடன் கொலுசு ஒலி. சாரதா எழுந்து அருணை சத்தமிடாமல் எழுப்பினாள். அரண் எழுந்து கூர்ந்து கவனித்தான். கொலுசு ஒலி அவனுக்குத் தெளிவாக கேட்டது.
” அப்பா, நான் தெருக்கதவை திறந்து போர்டிகோவில் இறங்கியதும் நீங்கள் மாத்தூர் சாலை பக்கம் வெளிச்சம் வரும்படி அந்தப் பக்க லைட்டை போடுங்கள்”
என்று கதவைத் திறந்து போர்டிகோவில் இறங்கினான். நான் அந்த பக்கத்து லைட்டைப் போட்டேன்.
பறவைகள் முன்னிலும் அதிகப் பரபரப்புடன் சத்தமிட்டு பறக்க ஆரம்பித்தன. ஒரே ஆரவாரமும் குழப்பமுமாக இருந்தது.
என்ன ஆச்சரியம்! கருப்பு நிறப் புடவை, அவிழ்த்து விட்ட முடி, பொன்னிற தேகம், மோகினி . அருண் அதைப்பிடிக்க பாய்ந்தோடினான். அதற்குள் அந்த மோகினி இரண்டு கைகளையும் விரித்தபடி அப்படியே அந்தரத்தில் எழும்பி பறந்து காம்பவுண்டின் வெளிப்புறம் இறங்கியது. அருண் காம்பவுண்டை ஏறிக்குதித்து அந்த உருவத்தின் இடுப்பை இறுகப் பற்றினான். மயக்கும் டைட்டன் ஸ்கின் பெர்ஃப்யூம் மூக்கைத் துளைத்தது. யாரோ இரும்புக் குழாயால் ஓங்கி அருணை அடிக்க,
“ஆ….அம்மா..”
என்ற அலறலோடு பிடியை நழுவவிட்டான். உருவம் விடுபட்டு இருளில் ஓடி மறைந்தது. நானும் பெரியவரும் முன்புறக் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தோம். அருண் வலது காலைப் பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டு இருந்தான்.
அவனை மெல்ல கைத்தாங்கலாக பிடித்து தூக்கிய வண்ணம் வீட்டுக்கு கொண்டு வந்தோம். இதென்ன அருண் கையில் ஒரு மொபைல் போன்.
மாத்தூர் மண் சாலையில் நாய்கள் கூட்டமாக குறைப்பது கேட்டபடியே இருந்தது.
காரில் இரவோடு இரவாக கூடுவாஞ்சேரி இருபத்திநாண்கு மணி நேர ஆஸ்பத்திரியில் அருணை சேர்த்தோம்.
நடந்த சம்பவங்கள் எல்லாம் அச்சத்தை தருவதாகவே உள்ளன.
அருணுக்கு மாவுக்கட்டு போட்டிருக்கிறார்கள். மறுநாள் மதியத்துக்கு மேல் வீட்டுக்கு அழைத்துப் போகவுள்ளோம்.
பெரியவர் வந்தார்,
” ஐயா, அருண் தம்பி அடிபட்ட மரத்தடியில் பார்த்தேன். மரத்து மேலே கிணற்று ராட்டினம் கட்டி, கயிற்றில் ஒரு முனையில் மூன்றடி நீளமுள்ள இரண்டு இஞ்ச் பைப்பு கட்டியிருக்கு. மறுமுனை காம்பவுண்ட் வெளியே தொங்கிக்கிட்டு இருக்கு. அந்த உருவம் ரெண்டு கையாலயும் அந்த இரும்பு பைப்ப புடிச்சிக்கவும் வெளிய இருந்து கயித்த இழுத்து அலாக்கா வெளியேத்தி யிருக்காங்க.” என்றார்.
காலை பத்து மணியளவில் ஊரப்பாக்கத்திலிருந்து என் பெரியப்பா மகள், அவள் கணவன், மகள், மகன் என எல்லாரும் பார்க்க வந்தார்கள்.
என் ஒன்றுவிட்ட சகோதரி,
” அண்ணா நான் சொல்லறதைக்கேளு. வயசான காலத்தில எதுக்கு வீண் பிடிவாதம். அந்த வீட்ட வித்திட்டு வந்திடு”
” கடைசியா என் அப்பா வாழ்ந்த வீடு. எங்க பாதுகாப்புக்கு ஒரு ஏற்பாடு இருக்கு. மேல் பகுதி பூராவும் செப்பணிட்டு ஐ டி யில் வேலை பார்க்கிறவங்களுக்கு வாடகைக்கு விடப்போறேன். கீழே எங்களுக்கான இடம் போக மீதி இடத்துல ஒரு ப்ளே ஸ்கூல் தொடங்கப் போறேன்”
வந்தவர்கள் கிளம்பிப் போய் நெடுநேர மானாலும் அருண் மட்டும் தீவிர சிந்தனையிலேயே இருந்தான். ஆமாம், அந்த உருவத்தை கட்டிப் பிடித்தபோது முகர்ந்த அதே டைட்டன் ஸ்கின் நறுமணம் இப்போது அவன் அத்தை மகள் வந்த போதும் வீசியதே. என்னிடம் அதையும் கூறினான்.
” போகட்டும் விடு, அருண்”
என்று அவனை சமாதானப் படுத்தினேன்.
அருண் அந்த மொபைல் போனில் கொலுசு ஒலியை போட்டுக்காட்டினான். அந்த கருப்பு உருவம் உடைந்த காம்பவுண்டை கடந்து போகையில் காலில் கொலுசு இல்லாததும் என் கண் முன் வந்தது.
அருண் சொன்னான்,
” அப்பா, திரைக்கதை வலுவாக இல்லை. அவர்கள் அமெச்சூர் நடிகர்கள், சரியாக நடிக்கத் தெரிய வில்லை”
அமெச்சூர் நடிகர்கள் கதை பிரமாதம். துப்பறியும் கதையைப் போன்று இருந்தது.
வளவள என்று விளக்காமல் ஒரு வரியில் கதையை முடித்திருப்பது அருமை.
மேலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள்.
LikeLiked by 1 person
ஊக்கமளிக்க உங்களைப் போன்றோரிருக்கையில் எனக்கென்ன கவலை.நன்றி.
LikeLike
கதை….விரு விரு என்று ரம்யமாக சென்றது… அருமை…
LikeLiked by 1 person
நன்றி திரு. பார்த்திபன்
LikeLike