பெண்ணாகப் பிறப்பதே பெருமை என்கிறார்கள். பாரதி கூட “மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்கிறார்.
நம் கதை நாயகி ரமாமணி யிடம் கேட்டால், “மங்கையராய் பிறப்பதற்கே மாபாதகம் செய்திட வேண்டும்” என்பாள்.
அவள் அப்படிச் சொல்லக் காரணம் இருக்கு. இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான்.
“பெண் குள்ளம்”
“உயரம் பொருத்தமில்லை”
இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது. வந்து மட்டும் என்னவாகிடப் போகிறது? அதே பாட்டு; வேற ராகம்.
கதைநாயகி ரமாமணி அம்மாவிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டாள்,
“அம்மா நல்லா கேட்டுக்க; இதுவும் திகையலன்னா இத்தோட நிறுத்திக்கோங்க. நான் வரும் வருடம் டீச்சர் ட்ரெய்னிங் சேர்ந்து படிக்கப் போறேன்”
“உனக்கென்னடி இப்போ இருபது தானே ஆகுது. அதுக்குள்ளயே சலிச்சுக்கறியே. உன் பெரியப்பா பெண்ணுக்கு ரெண்டு டஜன் வரன் வந்து பார்த்தப்பறம்தான் குதிர்ந்தது, தெரியுமோல்லியோ?” இது அவள் அம்மாவின் சமாதானம்.
“அப்படியா சேதி? இருபதுதானே ஆகுது, இன்னும் நாலு வருடம் போகட்டும்; அப்புறம் தேடலாம்” ரமாவின் பதில்.
“அம்மா தாயே உன்னோட மல்லு கட்ட என்னால முடியாது; உன் பாடு உன் அப்பா பாடு, ஆள விடு” அம்மா நழுவிக் கொண்டாள்.
தெற்கு வடக்காக உள்ள பக்தபுரி ரோட்டில் கிழக்கு சாரியில் பஹோலாவுக்கு நான்கு வீடுகள் தள்ளித்ததான் அவர்கள் வீடு. ரமாமணி தெருக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். நிலைப்படியில் இருந்து மூன்று படிகள், இறங்கி தரைக்கு வந்தாள். அம்மா கார்த்தாலையே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டி ருந்தாள். அது அவளின் தினம் தவறா நித்தியப்படி.. பதினைந்தடிக்கு மண் தரை. அதில் முன்புற காம்பவுண்டு சுவரை ஒட்டி ஒரு பவளமல்லி. மயக்கும் மணத்துடன் நாளும் இரவில் பூக்கும்; காலையில் பூத்த தெல்லாம்தரையில் கொட்டிக்கிடக்கும். மரத்தினடியில் அப்பாவின் அங்கவஸ்த்திரத்தை விரித்துக் கட்டி வைத்திருந்தாள். அதில் விழும் பூக்கள்தான் சுவாமி படத்துக்கெல்லாம் ஆரம் போல கோர்த்து சாத்தப்படும்.
கீழே கொட்டிக்கிடக்கும் பூக்களை யாராவது வந்து அள்ளிப் போவார்கள். அந்தப் பூக்களைக் எப்படியோ காய்ச்சி சாந்து செய்து, சுத்தம் செய்த சிறிய கொட்டாங்குச்சியில் வடித்து வைத்திருப்பார்கள். அது கெட்டிப்பட்டு இருக்கும். ஆள்காட்டி விரலில் தண்ணீர் தொட்டு அந்தசாந்தில் குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக வைத்துக்கொள்வார்கள். அரகஜா போல ஒரு நறுமணம் வீசும்.
ரமாவின் அம்மா உயரமாகத்தான் இருப்பாள்; அப்பாதான் கொஞ்சம் உயரம் கம்மி. அவருடைய ஜீன்தான் ரமாவை பாதித்திருக்கிறது.
ரமாவின் உயரம் நூற்றி ஐம்பது செண்டிமீட்டர்தான். நம் நாட்டு பெண்களுக்கு சராசரி உயரம் நூற்றி ஐம்பத்து இரண்டு சென்டி மீட்டர். அதுக்கும் ஒரு இன்ச் கூடினால் ரொம்ப உயரமா தெரியும்; குறைஞ்சா ரொம்ப குள்ளமா தெரியும்.
பள்ளியில் வாரம் ஒருநாள் கூட்டுப் பிராத்தனை நடக்கும். அப்போதெல்லாம் ரமாதான் வரிசையில் முதல் ஆளாக நிறுத்தப்படுவாள். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறும் போதெல்லாம் வேண்டிக் கொள்வாள்.
“தாயே, பரமேஸ்வரி, இந்த வருட வகுப்பில் புது அட்மிஷனாக யாராவது என்னை விட உயரம் குறைந்தவள் வரவேண்டும். நான் குறைந்தபட்சம் இரண்டாவது இடத்திலாவது நிற்க வேண்டும்”
அந்த பரமேஸ்வரி அதைக் காதில் போடுக் கொள்ளவே இல்லை.
சிறு பிள்ளையில் டாப்ஸும் மிடியும் போட்டு விளையாடிய போதெல்லாம் ரொம்ப க்யூட்டாகத்தான் இருந்தாள். பின் வயது ஏறஏற உடையில் மாற்றம் வந்து, பாவாடை தாவணியில் மாறிய போதுதான் அவள் உயரம் குறைவு என்பதே தெரிய வந்தது.
ஆனாலும் அவள் அழகுதான். தொப்புள்க்கு மேலே பாவாடை கட்டி, அழகாக தாவணி சொருகி, மடிப்புடன் மேலாக்கில் பின் குத்தி அழகு தேவதையாகவே இருப்பாள். நேர் வகிடும் இல்லாமல் கோண வகிடும் இல்லாமல் வகிடு எடுத்து தலை சீவி இருப்பாள். கருகரு வென கட்டுக்கடங்கா கத்தையான முடியை ஒத்தையாகப் பின்னினாலும், இரட்டை ஜடை போட்டு மடித்துக் கட்டினாலும் அவள் தலை அமைப்புக்கு சூப்பராகவே இருக்கும்.
சைக்கிளில் சென்றாலும், நடந்து சென்றாலும் பவளமல்லி வீட்டைத் திரும்பிப் பார்க்காமல் யாரும் போகவே மாட்டார்கள். மாலையில் கல்லூரி விட்டு பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லும் மாணவப் பட்டாளங்கள், மார்ச் ஃபாஸ்ட்டில் மிலிட்டரிக்காரர் இடப்பக்கம் திரும்பி சல்யூட் அடிப்பது போல, இடப்புறம் திரும்பியபடியே செல்வார்கள்.
“அவள் கண்ணில் படமாட்டாளா?”
பெண்களின் உயரம் பற்றி பலமுறை அவள் வீட்டில் சர்ச்சை வந்துள்ளது. அப்போ தெல்லாம் சினிமா நடிகைகளைக் காட்டி அம்மா சொல்வாள். அவளுக்கு நடிகை சுஜாதாவைப் பிடிக்காது.
“அது என்ன போத்து மாதிரி அப்படி ஒரு உயரம்”என்பாள்.
பின்னாளில் ரேவதியை தலைமீது வைத்து கொண்டாடுவாள்.
“ரேவதிதான் சிட்டாட்டம், சிமிழாட்டம் இருக்கிறா” என்பாள்.
ஒருவேளை தன் மகளுக்கு தன் உயரம் பற்றி தாழ்வு மனப்பான்மை வந்திடக்கூடாது என்பதற்காக அப்படி கூறுகிறாளா தெரியாது.
ரமா தீர்மானமாக இருக்கிறாள். தனக்கு வரப்போகும் கணவன் நிச்சயம் ஆறு அடிக்கு குறையாத உயரம் இருக்க வேண்டும். அதை அம்மாவிடமும் தெளிவாகக் கூறி விட்டாள்,
“வரன் ஆறு ஆடி உயரத்துக்கு கொறச்சலா இருந்தா கண்டிப்பா ரிஜெக்ட்டெட் தான் “
அப்பாவின் ஜீன் தான் தன்னுடைய உயரம் குறைவானதற்கு காரணம். அதைப்போல் வரப்போகும் கணவரின் ஜீன் வழி தன் பிள்ளைகள் உயரமாக இருப்பார்கள் என கணக்கு போட்டாள்.
வீட்டின் கொல்லை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். வாலை தூக்கித் தூக்கி ஆட்டிக் கொண்டே, ” க்ரீச்..க்ரீச்” என்று கத்தும் அணிலை ஆர்வமாகப் பார்ப்பாள். ஏதாவது ஆபத்து என்று உணர்ந்தால்தான் அப்படிக் கத்தும். கீழே வேலி ஓரமாக ஏதாவது பூனை போய்க் கொண்டிருக்கும்.
ஒரே நாளிலில் பல முறை கூட இப்படி உட்கார்ந்திருப்பாள். உட்கார்ந்தபடியே கனவு காண தொடங்கிடுவாள்.
பக்தபுரி அக்கிரகாரத்தின் வடகோடியில் காலேஜ் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு ரமாவும் அவள் மகனும் மகளும் சாமி கும்பிட்டு வருவார்கள். அப்போதெல்லாம் பக்தபுரியே பொறாமையோட பார்க்கும்.
” டீ.. ரமா..யாரு உன் புள்ளயாண்டானா?”
“ஆமாம் மாமி. இவ என்னோட பொண்ணு”
“பையன் நன்னா ஆறடிக்கு மேல ஆஜானு பாகுவா இருக்கனே, பொண்ணும் இவ்ளோ வளர்த்தியா இருக்காளே, அவா அப்பா ரொம்ப வளர்த்தியோ?”
இப்படி அந்த மாமிகள் கேட்பதை சந்தோஷமாக அனுபவித்து சிரித்துக் கொண்டே வருவாள்.
“ரமா காஃபி குடிக்கல்லியே, சுடு செய்ஞ்சுத்தரவா ” என்ற அம்மாவின் குரல் கேட்டு நனவுலகத்துக்கு வருவாள்.
ரமாவின் தம்பி இரண்டு வயது இளையவன். இப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். மூக்கின் கீழே மெல்லிசாக மீசை அரும்பு விடத் தொடங்கி உள்ளது. குரல் கூட உடைந்து சப்தம் ஒரு மாதிரியாக வருகிறது. அவன் ரமாவைவிட ஒரு அடிக்கு உயரமாகத் தெரிகிறான்.
அக்காள் தமபிக்குள் சண்டை வந்தால் அக்கா அவனை,
“ஒட்டடைக் குச்சி”
“நெட்டைகொக்கு” என்பாள்.
“உனக் கெல்லாம் இ பி யில் வேலை ஈசியா கெடைக்கும். நின்ன நிலையிலேயே தெருவிளக்கு கழற்றி மாட்டி விடுவாய்”
பதிலுக்கு தம்பியும் சளைக்காமல்,
“அரைக்காப்படி”
“ஆழாக்கு”
“குள்ளக் கத்திரிக்கா” என்று திருப்பித் தாக்குவான்.
“உயரத்தைப் பற்றி கவலைப்படாதே ரமா; உனக்கு இன்னும் ரெண்டு வளர்த்தி இருக்கு. ஒன்னு கல்யாண வளர்த்தி. இரண்டாவது பிள்ளைப் பேறு வளர்த்தி. அதனால சரியாயிடுவ” என அம்மா அளந்து விடுவாள்.
அப்போதெல்லாம் ரமா,
“அதெல்லாம் நேரா மேல வளர்ர வளர்த்தியில்ல. சைடுல அகலமா வளர்ற வளர்த்தி” என்று மறுப்பு சொல்லிவிடுவாள்.
ரமாவின் அம்மா பரபரப்பாக இருந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் வீட்டை ஒழுங்கு படுத்தி அழகாக்கும் பொறுப்பு. கணவருக்கு முராரியில் இருந்து ஸ்வீட், காரம் வாங்கிவரும் வேலை. காஃபி போட தூள் ஏகமாக இருக்கிறது. இத்தோடு வெங்காய பஜ்ஜி மட்டும் போதும். நேரம் சுறுங்கிக் கொண்டே வந்து ஆறு மணியானது. வாசலில் இரண்டு ஆட்டோக்கள் வந்து நின்றன. மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இறங்கி வந்தார்கள்.படிகளில் ஏறி வந்தார்கள் . அப்பா வெளிவந்து வெற்றிலைக் காவிப் பல் தெரிய,
“நமஸ்காரம், எல்லாரும் வரணும்”
என்று நிலைப்படி கிழிறங்கி வந்து வரவேற்றார். காலணிகளை படிக்கட்டு கீழேயே கழற்றிவிட்டு விட்டு உள்ளே வந்தார்கள். ரமாவின் அம்மா,
“வாங்கோ வாங்கோ”
என வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள்.
ஆண்களிருவரும் நாற்காலியிலும், பெண்கள் மூவரும் ஈரோடு ஜமக்காளத்திலும் அமர்ந்தார்கள்.
ஷேம லாபங்கள் பற்றியும், பஸ் போக்குவரத்து பற்றியும், பிள்ளையின் உத்தியோகம் பற்றியும் பேசிவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தார்கள்.
அந்த மாப்பிள்ளை வரனுக்காக என்ன தேடியும், பிள்ளைக்கு பிடித்தாற்போல் பெண் கிடைக்கவே இல்லை. சலிக்காமல் அவன் ஆசைக்கு ஏற்ப தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
பெண்பார்க்க வந்ந பெண்களே ஐந்தேமுக்கால் அடி உயரம் இருப்பார்கள். வரனும், உடன் வந்தவரும் ஆறு அடிக்குக் குறையாமல் இருப்பார்கள். இதைக் கவனித்த அம்மாவும் தம்பியும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டார்கள், தோளைக் குலுக்கிக் கொண்டார்கள்.
எல்லாருக்கும் ஸ்வீட், காரம், பஜ்ஜி பரிமாறப்பட்டது. காஃபியும் கொடுத்தாகி விட்டது.
“பெண்ணைப் பார்க்கலாமோ ” என ஒரு மாமி கேட்டாள்.
அப்பா, “பேஷா”என்று “அடியே, ரமா வை அழைத்து வா ” என்றார்.
ரமா வந்தாள். “எல்லாரையும் சேவிச்சுக்கோ” என்றார் அப்பா.
எல்லாருக்கும் நமஸ்காரம் செய்தாள் ரமா. வந்ததில் ஒரு பெண்மணி தன் பக்கத்தில் உட்காரும்படி கையைப் பிடித்து உட்கார வைத்துக் கொண்டாள். அதுதான் பையன்பெண்ணை இலகுவாக பார்கக்கூடிய கோணம்.
சிறிது நேரம் அவர்கள் உறவினர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள், அதில் யார்யாரை இவர்களுக் கெல்லாம் தெரியும் என்பதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மணி ஏழை நெருங்கி விட்டது.
“சரி நாங்கள் கிளம்புகிறோம். போய்ச் சேர்ந்ததும் தகவல் சொல்கிறோம்”
என்று கிளம்பி விட்டார்கள் அந்த நாச்சியார் கோவில் காரர்கள். இவர்கள் யாருக்கும் இந்த பதிலில் நம்பிக்கை இல்லை.
“பிடித்திருந்தால் இப்போதே அதைக் கோடி காட்டி விட்டாவது போயிருக்கலா மில்லையோ?” என்றுதான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.
அப்பாவோ வந்திருந்த வேற வரன்களின் ஜாதகங்களை யெல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொண்டார். இதில் எதுவெல்லாம் ஜாதகம் பொருந்துகிறது என நாளை பொருத்தம் பார்க்க வேண்டும்.
இரவு எப்பவும் டிபன்தான் சாப்பிடுவார்கள்; சாப்பிட்டு முடித்தார்கள். மணி ஒன்பது ஆகி விட்டிருந்தது.
ரமா தான் என்ன உணர்ச்சியில் உள்ளோம் என்று புரியாத நிலை. யாரும் யாரோடும் பேசவில்லை. இறுக்கமான சூழலே நிலவியது. அதை மாற்ற ரமாவின் தம்பி டிவி யை ஆன் செய்து பாடல் காட்சிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பாவின் போன் அடித்தது. இந்நேரத்தில் யாராயிருக்கும் என எண்ணியவாறே எடுத்தார். நம்பர் கால், புதிய நபர்,
“மாமா எனக்கு உங்கள் புத்ரி ரமாவை மிகவும் பிடித்து விட்டது. இந்த மாதிரி லக்சனமா, சிட்டாட்டமா இருக்கும் பெண்ணைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். மத்தபடி பெரியவா பேசுவா” என்று முடித்துக் கொண்டார்.
பிள்ளையின் வீட்டில் எல்லாரும் அறடிக்கு குறையாத உயரம். அது அவனுக்கு வெறுப்பை தந்து விட்டிருந்தது; அதனால் உயரம் குறைவான பெண்ணாகத் தேடியிருக்கிறான்.
விபரம் அறிந்ததும் தம்பி,
“நெட்டைக் கொக்கு ஆம்படையா”
என்று ரமாவிடம் கேலியைத் தொடங்கினான்.
A nice srory. A reality.
LikeLiked by 1 person
Thank you.. Read my other stories too and share your feedback..
LikeLike
Good story. Very practical.
LikeLiked by 1 person
Thanks for your positive thoughts..
LikeLike