மானமிகு மணி (ரத்னராஜூ)

ரு காலத்தில் மணி எங்களின் ஹீரோ. மணியை ஓட்டப் பந்தயத்தில் மிஞ்ச யாரும் கிடையாது. கணீரென்ற குரல் எல்லாரையும் நடுங்க வைக்கும். ஒற்றைப் பார்வையே பயத்தை உண்டாக்கும். ஆள் கருப்பென்றாலும் களையான முகம். நடுத்தர உயரமே என்றாலும் கம்பீரம் மட்டும் குறையாது.
மணி இப்படியிருந்தாலும் எங்களிடம் மட்டும் பயங்கலந்த அன்பு. சந்தேகத்தோடே வாலை ஆட்டும். திடீரென்று குனிந்தால் அவ்வளவுதான்; தலை தெறிக்க ஓடிடும். குனிந்தால் கல்லெடுப்போம், அடிப்போம் என்ற சந்தேக பயம்.

ந்த மணி எப்படியோ எங்கள் தெருவுக்கு வந்து விட்டது. நாங்கள் தெரு பிள்ளைகள் ஒருநாள் மாலை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது யூனியன் பள்ளி வெளித் திண்ணையில் பசியால் நடுங்கிக் கொண்டு ஈனசுரத்தில் முனகிக் கொண்டிருந்ததை வேம்புதான் முதலில் பார்த்து குரல் கொடுத்தான். பாவம் பசி போலும், நிற்கவே முடியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து விழுந்தது. நான் வேகமாக வீட்டுக்கு ஓடினேன். ஒரு பெரிய கொட்டாங்கச்சியில் முக்கால் பங்குக்கு பால் ஊற்றிக் கொண்டு வந்தேன். அம்மா அப்போது வத்சலா அக்கா வீட்டுக்கு போயிருக்கவே நானாகவே ஊற்றிக் கொண்டாந்துவிட்டேன்.

பால் கொட்டாங்கச்சியை வாயருகே வைச்சதும் நாய்க்குட்டி நாக்கால்
” சளக்..மளக்…சளக்..மளக்..” என சப்தமெழுப்பிய படியே , ஒரே மூச்சில் குடித்து விட்டது. ஆசுவாசமாய் அப்படியே எறைக்க எறைக்க படுத்துக் கொண்டது.
விளையாட பசங்கள் சரியா கூடலைனா , மத்த பேர் வர்ர வரைக்கும் நாய்க் குட்டியோட விளையாடுவோம். அதை போலிஸ் நாய் போல் பழக்கி விட்டால் போதும். திருடன்கள் பயமே இல்லை.
முதலில் அதற்கு நல்ல பெயர் வைக்க வேண்டும். நாங்கள் எல்லாரும் ஏகமனதாக மணி என்ற பெயரை சூட்டினோம். சிறிய ரப்பர் பந்தை போட்டு எடுத்துவரப் பழக்கினோம். பிறகு சிட், ஸ்டேண்ட், ஜம்ப் எல்லாம் பழக்கினோம். ஆனால் அதுதான் மக்கு மாதிரி சரியாவே கத்துக்கல. ஆனால் யாரையாவது காட்டி “சூ” என்றால் போய் துரத்தும். பெரும்பாலும் ஆடு, மாடு களைத்தான் துரத்தும்.
அதற்கு எங்கள் வீட்டு சாப்பாட்டை விட பக்கீர் முகமது வீட்டு சாப்பாடுதான் ரொம்ப புடிக்கும். மணி கொஞ்சம் அசைவப் பிரியன்.
மற்ற வீடுகள் எங்கேயும் அசைவம் இல்லைனா மட்டுமே எங்க வீட்டு சாப்பாட்டை நாடும். மற்ற வீட்டு சைவம் அதற்குப் புடிக்காது.
அதனிடம் உள்ள நல்ல பழக்கமே மிச்சம் வைக்காமல் சாப்பிட்டிடும். நாங்கள் சாப்பாட்டில் மிச்சம் வைச்சா மணியைக் காட்டித்தான் சொல்வாங்க.
” இருந்தா மணி போல இருக்கனும்; அதப் பாத்து கத்துக்குங்க”.
ணியோட காதல் கதை ரெம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும். மேலவீதியில் ரோகினி வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற ஒரு செவலை நாய்தான் அதன் ஃபியான்ஸி. என்ன ஒரு ஒற்றுமை பாருங்க. ரோகினி வீட்டு முன் தள்ளித்தள்ளி ரெண்டு வேப்ப மரங்கள் உண்டு. ஒரு வேப்ப மர நிழல்ல பசங்க சைக்கிளை நிறுத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க , ஒரு கண்ணை ரோகினி வீட்டுக்குள்ள மேய விட்டபடியயே.
இன்னொரு வேப்ப மர நிழல்ல செவலைக்காக நாய்கள். காதல் மன்னர்கள் கூடிடும் வேப்ப மரச் சோலை.
சிலசமயங்களில் நாய்களுக்குள் தங்களுடைய புஜபல பராக்ரமங்களைக் காட்ட வேண்டி வரும். அப்பல்லாம் யார் யாரோடு மோதுறாங்கன்னே கண்டு பிடிக்க முடியாது.
தன்னை விட பலசாலியைப் பார்த்தா மணி நைசா நழுவிடும்.
வெளியில் சென்று விட்டு நாங்கள் கீழவீதியிலிருந்து வடுகத் தெருவில திரும்பியதும்,எங்கேயிருந்து பாரக்குமோ தெரியாது எங்களுக்கு முன்னும் பின்னுமா வாலாட்டிய படி ஓடிவரும். இது ஒரு வகை பூரண கும்ப மரியாதை.
டுகத் தெருவைப் பொறுத்த வரை மணிதான் பாஸ். மற்ற நாய்களெல்லாம் இதுக்கு ஜூனியர்களென்பதால இதுதான் எப்போதுமே தலைமை தாங்கும். வேறு ஏரியா நாய்கள் இந்த தெருவில நுழைந்தால் ” உர் ” என்று உறுமலோட ஆரம்பிக்கும். அதுக்கப்பறம் சரமாரி வசவுகள்தான்.
” கண்ட கண்ட நாய்கள்லாம் வர இது என்னா பொறம்போக்கு தெருவா ? ஒரு தடவ கொலைச்சா தெரியாதா ? நல்ல நாய்க்கு ஒரு கொரப்பு போதும்பாங்க. நீ யெல்லாம் ஒரு நாய்… …. ….யா? வயித்துக்கு என்னா திங்கற? …….யா , இல்ல…….வா? சூடு சொரண இருந்தா திரும்பி ஓடிடு “
அதற்குள்ளாக பரிவார நாய்களெல்லாம் கூடிடும். வெளி ஏரியா நாய் அசடு வழிய சிரிப்பது மாதிரி வாயை வைச்சுக்கிட்டு, வாலை சுருட்டி வயித்துப்பக்கமா வச்சிக்கிட்டு தெருவின் ஒரு ஓரமா பம்மியபடி மெல்லமெல்ல அடிமேலடி வைத்து நகரும்.
இதனால் தான் மனுஷங்களும் சண்டையில
” வால சுருட்டிக்கிட்டு போடா “
” வால ஒட்ட நறுக்கிப் புடுவேன்”
” எங்கிட்ட வாலாட்ற வேலைலாம் வேணாம் ” ன்னு சொல்றாங்களோ.
இதெல்லாம் நாய்களுக்கு தெரியும் போல, அதான் வால சுருட்டிக்கிட்டு போவுது. அப்படியே கீழவீதி தேர்முட்டி வரை விரட்டிப் போவார்கள். அதன் பின் அந்த ஏரியா நாய்கள் பாடு.
ற்ற மற்ற நாயெல்லாம் வீட்டுத் திண்ணையில் ஏறிப் படுத்துக்கும். ஆனால் மணி ஒரு நாளும் அப்படி செய்ததில்லை. திண்ணைக்குக் கீழ பதியம் பறித்து வைத்திருக்கும். அதில்தான் அதன் படுக்கை. இதே போல தெருவில நான்கைந்து இடங்களில் படுக்கும் குழிகள் உண்டு.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணியின் நாட்கள் செல்கையில் அந்த ஆபத்து வந்தது. பேருராட்சியின் நாய் பிடிக்கும் வேன் எங்கள் தெருவில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. யம கிங்கரர் போல் நீண்ட மூங்கில் கம்பில் ஒரு முனையில் கம்பியை வளையம் போல் செய்து வைத்திருப்பார்கள். அதுவே அவர்களின் அஸ்த்திரம். நாயின் தலையில் வளையத்தை மெல்ல நுழைத்ததும் நாய் தலையை பலமாக ஆட்டி தானே சுருக்கில் மாட்டிக் கொண்டுவிடும். பின் நாயை இழுத்து வேனில் போட்டு விடுவார்கள். உள்ளிருக்கும் நாய்கள் பல வித குரலில் கத்துவது மனதைப் பிசையும். சில நாய்கள் அழுவது பாவமாக இருக்கும். ஒரு நாயை பிடித்ததுமே தெருவின் மற்ற நாய்கள் சுதாரித்து கத்தி மற்ற நாய்களை எச்சரித்து சத்தமிடும்.
தூரத்தில் இருந்து பார்த்த மணி தன் இனத்தை காக்க பெருங் குரலெடுத்த குரைத்தது. ஒரு ஆள் மணியை குறி வைத்து ஓடி வந்தான். மணியிடம் அவன் பாச்சா பலிக்க வில்லை. ஆக்ரோஷமா குரைத்துக் கொண்டே மெல்ல பின் வாங்கி எங்கள் வீட்டுக்கும் பக்கீர் முகமது வீட்டுக்கும் இடையில் இருந்த ஒன்றரை அடி அகல சந்தில் நுழைந்தது. துரத்தி வந்தவனும் நுழைய, அகலம் பத்தாமல் அவன் தோள்பட்டையில் சிராய்த்துக் கொண்டு வெளி வந்தான். வந்தவன் எரிச்சல் தாங்காமல்,
” இன்னைக்கு தப்பிச்சிட்ட, ஒருநாள் இல்ல ஒருநாள் மாட்டாமலா போயிடுவ”
கத்திக் கொண்டே அடுத்த நாய் எங்கே என தேடிப் போனான். மணியைப் பிடிக்க முடியாதது அவருக்கு அவமானமாக – பிரஸ்டிஜ் இஷ்யூவாகப் போய்விட்டது.
அந்த ஒருநாள் மணி தெருப்பக்கமே வரவில்லை. கொல்லைப் பக்கமாகவே புழங்கியது. பின் பக்க வேலியில் நுழைந்து பின் பக்கத் தெருவுக்கு போய் வந்தது.
அடுத்த வாரம் அதே வேன் பின்பக்கத்து தெருவில் வந்தது. பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து விட்டதை மணி உணர்ந்தது. நூலிழையில் தப்பித்து நேர் பின்னே உள்ள வீட்டு கொல்லை வழியே வந்து , வேலியில் நுழைந்து எங்கள் வீட்டு கொல்லையில் வந்து விட்டது. கிரேட் எஸ்கேப் !
நாய் வேன் வந்ததிலிருந்தே மணி சுணங்கி விட்டது. செவலையை பார்க்க்கூட போக எண்ணவில்லை. காமம் எனும் பெருந் தீ சும்மா விடுமா?
மனசை ஒடம்பு ஜெயிச்சிடுச்சு.
மேல வீதிக்கு செவலையைத் தேடி வந்து விட்டது. அந்நேரம் அங்கே நான்கைந்து பேர் ” உர்…உர்” என்று சண்டைக்கு சீர் கூட்டிக் கொண்டிருந்தனர்.
அந்த வீரப்போரில் கலந்து கொள்ளாமல் நேரே செவலையிடம் காது விறைத்தபடியும், இளித்துக் கொண்டும், வாலை உயர்த்தி ஆட்டியபடியே சென்றது,
” ஐ லவ் யூ செவலை “
இதைக் கவனித்த ஐவரும் பாய்ந்தார்கள். மணி எவ்வளவோ போராடியது. அப்படியும் வலது முன் காலில் கடி வாங்கி காயமாகிவிட்டது. மற்றபடி உடம்பு முழுக்க ஊமைக் காயங்கள்.
” ஐயோ ஊர் ஒன்னு கூடிட்டாங்கப்பா ”
என்று ஓட்டம் பிடித்து போஸ்ட் ஆபிஸ் வந்துதான் நின்றது. எப்படித்தான் நொண்டிக் கொண்டே அத்தனை வேகமாக ஓடி வந்ததோ தெரியாது. துரத்தி வந்த நாய்கள் வடக்கு வீதி மூலையில் மீன் மார்க்கெட்டோடு திரும்பி விட்டன. ஏனென்றால் மீன் மார்க்கெட் ஜமாத் ரொம்ப ஸ்ட்ராங், சண்டையிட முடியாது.
மெல்ல நொண்டிக் கொண்டே வந்த மணி திண்ணைக்குக் கீழே வந்து படுத்துக்கொண்டது. காயம் பட்ட காலை நக்கிக் கொண்டிருந்ததை பார்க்கப் பாவமாக இருந்தது.
சண்டையில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் தானே!
ஆனால் செவலைக்கு முன் தான் அவமானப்பட்டதை எண்ணி எண்ணி கூனிக் குறுகி மறுகிக் கிடந்தது.
ந்த காலக்கட்டத்தில் தான் அது நடந்தது. பேரூராட்சியின் நாய் வேன் போஸ்ட் ஆபிஸ் தாண்டி மெல்ல வந்து கொண்டிருந்தது.
தெரு நாய்களெல்லாம் குரைத்து எச்சரிக்கை செய்து கொண்டிருந்தன. மணி கண் மூடிப் படுத்திருந்தது. வேன் பத்தடி தூரத்துக்கு நெருங்கி விட்டது. மொத்த நாய்களும்
” மணியண்ணா ஓடிப் போங்கள்; ஓடிப் போங்கள்”
என கூக்குரலெடுத்து கோரஸாக கத்திக் கொண்டிருந்தன.
பணியாள் தூங்கும் மணியை சாமர்த்தியமாகப் பிடிப்பதாக எண்ணிக் கொண்டு பின் புறமாக மெல்ல மெல்ல நடந்து வந்தார். மணி எழுந்து கொண்டது. தலையை படபடவென்று ஆட்டி தன்னை தயார் படுத்திக் கொண்டது. திரும்பி அந்த ஆளைப் பார்த்தது.
சில சினிமாவில் கிளைாக்ஸ் காட்சியில் மனம் திருந்தியவர் போலிஸிடம்,
” என்னைக் கைது செய்யுங்கள் ” என்பது போல் இருந்தது. பணியாளரே மணியின் கழுத்தில் சுறுக்கை மாட்டாமல் திகைத்து நின்று விட்டார்.
நான் செவலை முன் அவமானப் பட்டு விட்டேன். இனி நான் உயிர் வாழ விரும்ப வில்லை. என்னைப் பிடித்துப் போங்கள்” என்பதுபோல பார்த்தது.
வேன் ஓட்டுநர் ” அதைப் பிடித்துப் போடுடா ; ஏன் மசமசன்னு நிக்கிற ” என்று குரல் கொடுக்கவே , பணியாளர் மணியை நோக்கி நடந்தார்.

9 thoughts on “மானமிகு மணி (ரத்னராஜூ)

Add yours

  1. ஒரு…… தெருநாயின் உணர்வுகளை இவ்வளவு அற்புதமாக எழுதியுள்ளீர்கள்….. இந்த திறமையை…. உங்களுக்கு லாக்டவுன்…….. தரவில்லை இயற்கையாக இருந்த திறமை இப்பொழுது வெளிவந்துள்ளது…..கதை மிக அருமை….

    Liked by 1 person

    1. நன்றி. உண்மை தான். பல ஆண்டுகளாக இருந்த எழுத்து வேட்கை; தற்போது தான் எழுத தொடங்கியுள்ளேன். மற்ற கதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

      Like

  2. Still now dogs in our villages, having only three names, If its black we call it Karuppu, if its brown or sandal we call it Sevalai, and Mani 😂
    This story throwbacks memories to my childhood we too have sevalai 😂😄

    Liked by 1 person

Leave a reply to hemalathabai Cancel reply

Create a website or blog at WordPress.com

Up ↑