அன்புமொழி

திருவிளையாடல் வசனம் போல் கதை எழுதி பெயர் வாங்குவோர் ஒரு வகை; படித்ததை பற்றி சொல்லி மற்றவர்களை படிக்க தூண்டுவோர் மற்றோர்வகை. நான் இரண்டாம் வகை.

என்னைப் பற்றி:

என் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். பள்ளி விடுமுறை நாட்களில், குழந்தை பருவத்திலேயே எனக்கும் தம்பிக்கும் ‘கந்தன் கருணை’ புத்தகத்தை படித்து தன்குரலில் ஏற்றஇறக்கத்துடன் சொல்வார்கள். கதைகளின் மீதான எனது ஆர்வம் இவ்வாறுதான் தொடங்கியது! இதை ஊக்குவிக்கும் விதமாக எங்களுக்கு காமிக்ஸ் வாங்கி கொடுத்தார்கள். இதை தொடர்ந்து நானும் (7 வயது) என் தம்பியும் (4 வயது) பள்ளிக்கு செல்லும்போது வீட்டில் கொடுக்கும் 5 காசுகள் 10 காசுகளை எல்லாம் சேர்த்து வைத்து சிறுவர் இதழ்களை வாங்கி படிப்போம்.

ஞாயிற்று கிழமைகளில் வரும் தினமணியின் “சுடர்” இல் ஏ.என்.சிவராமனின்  தலையங்கம் முதல் இலக்கியம், நாடகம், நாட்டியம், சங்கீதம்(சுப்புடு), சினிமா என அத்தனை விமர்சனங்களையும் படித்துவிடுவேன்.

5ஆம் வகுப்பு கோடை விடுமுறையில் ராணிமுத்துவில் வரும் முழுநீள நாவல்களை படிக்கத் தொடங்கி விட்டேன். கூடவே வானொலியில்  வினாடி வினா, முத்து பந்தல், இசையும் கதையும், குறுக்கெழுத்துப் புதிர் என என் விருப்பம் அங்கேயும் சென்றது. இதன் விளைவாக சிறுகதைகள், கவிதைகள்  எழுதி தோழிகளுக்கு படிக்க கொடுப்பேன்.
அண்ணன் முதுகலை தமிழ் படிக்கும் போது  லா.ச.ரா, நீல.பத்மநாபன், ராஜம் கிருஷ்ணன், வி.ஸ.காண்டேகர் என நிறைய புத்தகங்கள் கொண்டு வருவார்; சந்தோஷமாய் படித்துவிடுவேன்.

ஆண்டுகள் பல ஆயினும் புத்தகக்  கண்காட்சியில் புத்தகம் வாங்குவதும், வானொலி கேட்பதும் இன்றளவும் தொடர்கிறது. இந்த ஆண்டு கொரானாவால் புத்தகங்களை மகள் ஆன்லைனில் வாங்கிக் கொடுத்துவிட்டாள்.

படிப்பதற்கு நாட்டமின்றி, ஈடுபாடின்றி இருப்பவர்கள் பலர்; இதற்கு காரணங்கள் பல கூறிக்கொண்டாலும், சிறு வயதில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா சோறுட்டும்போது கதைகள்  கேட்டிருக்கிறோம்தானே! சக்திமான், ஸ்பைடர்மேன், டாம் அண்ட் ஜெர்ரி தொடங்கி இன்றைய டோரா புஜ்ஜி, பெப்பா பிக் வரை அனைத்தும் கதைகள்தானே!

இந்த ‘கதை சொல்கிறேன்’ வலைத்தளத்தில் ‘வாசித்ததில் ரசித்தது’ பக்கத்தின் வாயிலாக நான் ரசித்தவற்றை உங்களுடன் பகிர வருகிறேன். தொடர்ந்து படிக்கலாமே.!

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: