வாசித்தது: பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார்
ஆசிரியர்: பவானிதாசன்
வகை: வாழ்க்கை வரலாறு
பக்கங்கள்: 121
விலை: ரூபாய் 20
பதிப்பகம்: ரிலையன்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஆசிரியர்:
நூலாசிரியர் பவானிதாசன் அம்பேத்காரின் வரலாற்றை எளிமையான சொற்களைக் கொண்டு சுருக்கமாகவும் அதே நேரம் அவருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்ளும்படியும் எழுதியுள்ளார்.
புத்தகம் பற்றி:
துணைக் கண்டம் என்று புகழப்பட்ட பெருமைமிகு இந்தியாவின் அரசியல் சட்டத்தை இயற்றிய மாமேதை அம்பேத்கார். அந்த உயரத்தை அடைய அவர் கற்ற கல்வி, அந்த கல்வியை அடைவதற்குள் தீண்டத்தகாதவர் என்று சொல்லிச் சொல்லியே சமூகத்தால் அவர் அடைந்த அவமானங்கள், குறுக்கீடுகள், தடைகள் எல்லாவற்றையும் கடந்து நம்நாட்டின் அனைவருக்குமான பொதுவான அரசியல் சட்டத்தை இயற்றியவர்; சட்ட நாயகன் என்று போற்றப்படடவரின் வரலாற்றை அறிந்து கொள்வது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமை என்றால் அது மிகையல்ல.
பீமாராவ் இராம்ஜி:
தற்கால மும்பை (பம்பாயில்) அம்பவாடே எனும் கிராமத்தில் மகார் எனும் தீண்டத்தகாத குடியைச் சேர்ந்த தந்தை இராம்ஜி சக்பால், தாய் பீமாபாய் 14.4.1891 அன்று பிறந்த தங்களின் 14 வது குழந்தைக்கு இருவரின் பெயரையும் இணைத்து பீமாராவ் இராம்ஜி என்று பெயரிட்டனர்.
பாகுபாடு:
உயர்நிலைக் கல்வி பயிலும் போது வகுப்பில் சாதிய பாகுபாட்டை பீமாராவ் உணரத் தொடங்கினார். வீட்டிலிருந்து கொண்டுசெல்லும் கோணியில் வகுப்புக்கு வெளியில் தான் அமரவேண்டும். உயர்வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உட்காருவதற்கு பலகை, வகுப்பறையில் உள்ள நீரைத் தாங்களே குடிக்கலாம் என்றிருக்க, ஆனால் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டவர்களுக்கோ தாகமெடுத்தால்… புத்தகத்தைப் படிக்கவும். அதையும்விட பாடத்தைப் பற்றிய ஐயத்தை மேல்சாதி மாணவர் ஆசிரியரிடம் கேட்கலாம் அவரும் பதில் அளிப்பார். ஆனால் அதே ஆசிரியரிடம் தீண்டத்தகாதவர்கள் ஐயத்தைக் கேட்கக்கூடாது கேட்டாலும்பதிலளிக்க மாட்டார்.
ஒருமுறை பள்ளியில் பீமாராவ்க்குத் தாகமெடுத்தபோதும் பள்ளியின் வழக்கப்படி தண்ணீரைக் குடிக்க அவரின் சுயமரியாதை இடந்தரவில்லை. அதனால் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த குளத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றார். அதைப் பார்த்த ஒரு பெண்மணி நீ மகார் குடியைச் சேர்ந்தவன் தானே இங்கு தண்ணீர் குடிக்கக்கூடாது மீறிக் குடித்தால் சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுவேன் என்று மிரட்ட, தாகத்தோடு வீட்டுக்கு வந்தே தண்ணீர் குடித்தார். தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்தால் புண்ணியம் என்பார்கள். இங்கே தண்ணீர் குடிக்கக்கூடாது என்று விரட்டியவர்களை என்னென்பது!
அம்பேத்கார்:
தீண்டாமை கொடுமை அவரை ஒருபக்கம் விரட்டிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் அம்பேத்கார் என்ற அந்தண ஆசிரியர் ஒருவர் பீமாராவின் அறிவாற்றலைப் பாராட்டியது, மற்றும் படிப்பில் ஏற்பட்ட ஐயத்தை போக்கியது, அத்தோடு தன் உணவையும் உண்ணத் தந்த அந்த அன்பில் நெகிழ்ந்த பீமாராவின் கண்களுக்கு அவர் கடவுளாகவே தெரிய அதற்கு நன்றி கடனாக அம்பேத்கார் என்ற அவரது பெயரை தன்பெயருடன் இணைத்துக் கொள்ள பின்னாளில் அப்பெயரே இயற்பெயர் போல நிலைத்துவிட்டது.
வாழ்க்கை:
கேலுங்கர் என்ற எழுத்தாளர் அம்பேத்கரின் அறிவையும் அதேநேரம் அவரின் ஏழ்மையையும் புரிந்து கொண்டு தன் செல்வாக்கால் பரோடா மன்னரிடம் பேசி அவரின் கல்லூரி படிப்புக்கு உதவிட அம்பேத்கார் சிறப்பான முறையில் பி.ஏ பட்டம் பெற, பரோடாமன்னர் தன் சமஸ்தானத்திலேயே வேலை தர, வேலையை ஒப்புக்கொண்ட சில தினங்களிலேயே தந்தை இறந்துவிட, மீண்டும் வேலைக்குச் செல்ல மனமற்று இருந்தார். அவ்வேளையில் தகுதியானவர்களை அமெரிக்காவுக்கு பரோடா மன்னர் அனுப்புவது தெரிந்து தானும் சென்று படிக்க விருப்பம் தெரிவிக்க, மன்னர் ஒப்புதல் அளித்ததுடன் படித்துத் திரும்பியதும் பத்து ஆண்டுகள் தன்னுடைய சமஸ்தானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற மன்னரின் ஒப்பந்தத்தையும் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து ‘தான் கற்கும் கல்வியெல்லாம் தாழ்ந்து கிடக்கும் எளியவரைக் கைதூக்கி விடத்தான்’ என்ற தன் குறிக்கோளை மனதில் உறுதியாகக் கொண்டு எதிலும் தன் கவனத்தைச் சிதறவிடாது தினமும் 18மணிநேரம் படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகம் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக பி.எச்.டி. பட்டம் வழங்கியது. தன்னுடைய படிப்புக்கும் உயர்வுக்கும் காரணமான பரோடா மன்னருக்கு நூலைக் காணிக்கையாக்கி தன் நன்றியைத் தெரிவித்தார் அம்பேத்கார்.
பதவியா? படிப்பா?:
அறிவுப்பசி அடங்காத அம்பேத்கார் மேற்கொண்டு படிக்க இங்கிலாந்து செல்வதையும் தொடர்ந்து உதவித்தொகை அனுப்பும்படியும் மன்னருக்குக் கடிதம் எழுத, சமஸ்தானத்திலிருந்து வேலையில் சேரச் சொல்லி கடிதம் வரவே, ஒப்பந்தபடி செல்வதே சரியென முடிவெடுத்தார். இந்நிலையில் இங்கிலாந்தில் பதிவு செய்திருந்த படிப்பைத் தொடர அவரின் அறிவாற்றலை உணர்ந்திருந்த எட்வின் கேனன் சிபாரிசால் 4 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற அனுமதி பெற்று இந்தியா திரும்பினார்.
தொடர்ந்த தீண்டாமை:
மன்னர் நல்லவராக இருந்த போதும் சமஸ்தானத்தில் பணியாற்றிய திவானோ, வெளிநாடு சென்று படித்துத் திரும்பிய தகுதியுடையவர்க்கு சமஸ்தானத்தில் கொடுக்கப்படும் வரவேற்பை தராததுடன், தங்குமிடமோ, அலுவலகத்தில் பதவிக்கான மதிப்போ, பண்புக்கான மரியாதையோ தராமல் தொடர்ந்து அவர் அவமானப்படுத்தப்பட இதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார்.
கல்லூரி ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைக்க, அங்கும் முதலில் சாதியே தலைதூக்க, பின்னர் அவரின் அறிவின் அருமை உணர்ந்து வேற்றுக் கல்லூரி மாணவர்களும் வந்து கற்கத் தொடங்க, அந்தவருமானத்தில் மீதம் பிடித்தும், வெளிநாட்டு நண்பர் கொடுத்த கடன் தொகையுடனும் கோல்காபூர் மன்னரின் உதவியுடனும் இலண்டன் சென்று அங்கு தாம் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடர்ந்தார்.
சட்ட நாயகன்:
படிப்பு, படிப்பு, பட்டங்கள், பட்டங்கள் என்று கடின உழைப்பால் உயர்ந்து நின்றவரை இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்த புகழுடன் இடம்பெறத்தக்கதான வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமக்கான அரசியல் சாசனத்தை இயற்ற ஏழுபேர் கொண்டகுழு அமைக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பு அம்பேத்காரிடம் வழங்கப்பட்டது. மற்ற ஆறு பேரும் ஒவ்வொரு காரணத்தால் விலக தானே முயன்று ஆறே மாதங்களில் சட்ட வரைவு மசோதா தயாரித்து அரசியல் நிர்ணயசபைத் தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் பெருமையுடன் வழங்கினார் அம்பேத்கார்.
நெஞ்சைத் தைத்தது:
ஒருமுறை தன்தந்தையைக் காணவந்த போது அம்பேத்காரையும் அவரது சகோதரரையும் ஏற்றி வந்த மாட்டு வண்டிக்காரர் அவர்கள் கீழ்சாதியினர் என்று தெரிந்ததும் செய்த மிருகச்செயல். சமஸ்தானத்தில் அவர் வேலை செய்தபோது தொடர்ந்து தன்னை நடத்திய விதத்தில் அந்தமாமேதை ஒருநாள் தனிமையில் அழும்படி நேர்ந்து எனில்… படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் அந்தக் கொடுமைையை!?
ரசித்தது:
நூலின் கடைசியில் ‘அம்பேத்காரின் பொன் மொழிகள் ‘என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ரசித்த ஒன்றைத் தருகிறேன்.
கல்வியை ஒரு அறிவுக் கேடயமாக பயன்படுத்து. அதையே பிறரை அழிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தாதே.
அம்பேத்கார், படிப்பு, பதவி, பத்திரிக்கை, பணி போன்று தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோர் நலனைக் கருத்தில் கொண்டே பேசவும் எழுதவும் செய்தார். அவர் கூறியபடியே கல்வியை அதற்கான கேடயமாகவே பயன்படுத்தியுள்ளார் என்பதை அவர் வரலாற்றைப் படிப்பதன் வாயிலாக தன் கருத்திற்குத் தானே சிறந்த உதாரணமாகத் திகழ்ந்திருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அம்பேத்காரின் வாழ்க்கை வரலாற்றை ஊன்றிப் படிப்பவர்கள் அவரின் கொள்கைப்பிடிப்பு கொண்ட உறுதியான மனமே அவரின் உயர்வுக்குக் காரணம் என்பதை உணர்வார்கள். குறிப்பாக நூலைப் படிக்கும் இளைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருசிலரேனும் கொள்கைப்பிடிப்பும் உறுதியும் கொண்டவர்களாக மாறினால் அதுவே அம்பேத்காருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
Leave a comment