வாசித்தது: படிப்பது சுகமே
ஆசிரியர்: இறையன்பு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள்: 120
விலை: 90ரூபாய்
வகை: கட்டுரை
ஆசிரியரைப் பற்றி:
நல்ல நூல்களைத் தேடிப் படிப்பது மனதையும் உடலையும் என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இத்தகைய படிப்பும் அதனால் வரும் உயர்வுக்கும் அடையாளமாகத் திகழ்பவர் இறையன்பு. அவரின் தன்னம்பிக்கைப் பேச்சால் நம் உள்ளங்களில் நிறை(ற்)பவர் .
படிப்பின் சுகம் பற்றி:
எந்த ஒரு மனிதனும் உணவை மட்டுமே போதும் எனச் சொல்வான். வேறு எந்த பொருளையும் போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. வீண்பகட்டு,வெற்று ஆடம்பரம் , புகழ் மயக்கம் போன்றவற்றில் மனதை செல்லவிடும் மனிதன் தன் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அதன்போக்கில் செல்லவிடும்போது மனம் செம்மையை இழந்துவிடுகிறது.
உடலையும் மனதையும் ஒருசேர செம்மையாக வைத்திருக்க உதவுவது படிப்பு மட்டுமே. அத்தகைய படிப்பு என்பது பள்ளியில்,கல்லூரியில் மற்றும் துறைசார்ந்த வகையில் எவ்வாறு படிப்பது, எந்தவகையில் அதனை தம்வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பாதையாக்குவது, அது எவ்வாறு ஒருவரது இலட்சியங்கள், கனவுகள் நிறைவேற துணைநிற்கிறது என்பதை கட்டுரையாக வடித்துள்ளார் ஆசிரியர்.
தேர்வுக்கு மதிப்பெண் பெற மட்டுமே படிப்பது மட்டுமல்லாது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் படிப்பதும், அதனை ஆழ்ந்த வாசிப்பாகக் கொள்வதும், படித்தவற்றை நினைவில் கொண்டு வருதும், அதன் தொடர்பான செய்திகளைத் தேடித்தேடி படிப்பதும் படிப்பின் ஆழத்தை விரிவுபடுத்தும் இதனால் ஒருசெய்தியும் அது தொடர்பான கருத்துகளும் எளிதில் மறக்காது என்பதையும் கூறுகிறார்.
தேர்வுக்கு:
தேர்வுக்கு படிக்கும்போது கேள்விக்கான விடையைத் தேர்ந்தெடுக்கும் (ஆப்ஷன்மாடல்) தேர்வு முறை அல்லது வாக்கியங்களில் பதிலளிக்கும் முறை எனத் ஒவ்வொருவகை தேர்வுக்கும் எப்படித் தயாராக வேண்டும், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைச் சுவைபட கூறியுள்ளார்.
அவரே சான்றாக:
இறையன்பு அவர்கள் வேளாண்மை, ஆங்கில இலக்கியம், வணிக மேலாண்மை,உளவியலில் முனைவர் இன்னும் இதுபோன்ற பல படிப்புகளிலும்அவர் பெற்றிருக்கும் பட்டங்கள் அவரின் கல்வியறிவின் ஆழத்தை பறைசாற்றுகின்றன.
வியந்தது:
தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியாக பதவியை அபிரகாம் லிங்கன் அடைவதற்கு முன் அவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக குறிப்புகளாகத் தந்திருக்கிறார்.
1816 இல் தொடங்கும் போராட்டம் தனிப்பட்ட வாழ்வில், அரசியலில் தொடர் தோல்விகள், பணியில், தொழிலில் என மாற்றி மாற்றி வாழ்வே போராட்டமா?. .. என்று குறிப்புகளைப் படிக்கும் நிலையிலேயே அயர்ந்து போகச் செய்கிறது. ஆறிலிருந்து அறுபதுவரை என்பது போல அவரின் வாழ்வில் 1816 தொடங்கி 44 வருடங்கள் தொடர் தோல்விகள் போராட்டங்களுக்குப் பிறகு 1860 வருடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆகிறார்.
பள்ளி ஆய்வாளர் வருகையின் போது ஆசிரியரே வற்புறுத்தியும் புத்தகத்தை பார்த்து எழுதாத காந்தியின் நேர்மை. இவையெல்லாம் படித்த பிறகு மக்களின் மனங்கவர்ந்த மிகப்பெரும் தலைவர்களாக உயர்வதற்கு அவர்களின் நேர்மையே மூச்சாக, விடாமுயற்சியே உணவாக கொண்டிருந்தனர் என்றால் மிகையல்ல!
ரசித்தது:
தேர்வு முடிந்தபிறகு அடுத்த வருடம் பள்ளி ஆரம்பமாகும் வரை விளையாட்டு ,இலக்கியம் ,சிலம்பம், இயற்கை என்று தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரிவுபடுத்திக்கொள்ள என்று ஆசிரியர் குறித்துள்ளதில் ஒருசில:
கொஞ்சம் விளையாடுங்கள்- வெற்றி பெறுவதற்காக அல்ல- விட்டுக்கொடுக்கக்,
கற்றுக்கொள்வதற்காக.
கொஞ்சம் இலக்கியம் வாசியுங்கள்- தெரிந்துகொள்வதற்காக அல்ல- இன்னும் நமக்கு எவ்வளவு தெரியாமலிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள,
ஒரு செடியை ,மரத்தை,சூரிய உதயத்தை உற்று கவனியுங்கள்- இயற்கையின் பேருருவின் முன் நாம் எவ்வளவு குள்ளம் என்பதை அறிய, இப்படி உதாரணம் காட்டுவதிலும் அழகாக பாடம் நடத்திவிடுகிறார் இறையன்பு.
இந்தபுத்தகத்தை வாசித்தால் தேர்வு பூச்சாண்டி என்ற பயம் போய் எப்படிப்பட்ட தேர்வும் எளிது என்ற தோற்காத மனநிலையே தோன்றும்.
Leave a comment