அக்னிச் சிறகுகள்

வாசித்தது:  WINGS OF  FIRE
ஆசிரியர்: A.P.J.அப்துல் கலாம்
                     (உடன்) அருண் திவாரி
வகை:      சுயசரிதம்
தமிழில்: அக்னிச் சிறகுகள்
மொழிபெயர்ப்பு:   மு.சிவலிங்கம்
பதிப்பகம்: கண்ணதாசன்
பக்கங்கள்:  374
விலை:    ரூபாய் 100
பதிப்பு:    34ஆம் பதிப்பு

ஏவுகணை நாயகனாக, நாட்டின் முதல் குடிமகனாக  ஜனாதிபதியாக, இளைஞர்கள், மாணவர்களின்  மனங்கவர்ந்த தலைவராக  விளங்கிய  திரு ஏ.பி .ஜெ. அப்துல்கலாம் அவர்கள்  சுயசரிதையில்  ஏவுகணை விஞ்ஞானியானதை அக்னிச் சிறகுகளாக்கித்  தந்திருக்கிறார்.

  அக்னிச்சிறகு வருமுன்:
                    திரு கலாம் அவர்களுக்கு     பெரிய அளவில் படிப்பு இல்லாத   பெற்றோர்களான ஆஷியம்மா,  ஜெயுனுல்லாபுதீன்   ஆகியோரின் நெறிமுறையான வாழ்க்கை அவர் பிறந்து வளர்ந்த  இராமேசுவரத்தின் சிவன் கோயில் தலைமைக் குருக்கள்,தன் நண்பரும் மைத்துனருமான அகமது ஜலாலுதீன்,  தன் விஞ்ஞான ஆசிரியர் என்று பலரின்  அணுகுமுறைகள் தனது  சிறந்த பண்புகளாக,இயல்புகளாக  தன்னை மாற்றியுள்ளதை  நூலில் பல இடங்களில் கூறியுள்ளார்.
         உடன் பணியாற்றியவர்கள், அவர்களின் குறிப்பிடத்தக்க குணாதிசயங்கள், வியந்து பார்த்த   பிரத்யேக  அம்சங்கள், தன் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு  எனப் பலவற்றையும்   குறிப்பிட்டுள்ளார்.
  அக்னிச்சிறகுவரக் காரணம்:
             தன்  ஆய்வுக்கூடத்தில்   வேலை செய்யும் யாரோ ஒருவர் என்றிருந்த  அருண் திவாரி  தன் சுயசரிதையை எழுதக் காரணமான  நிகழ்வை    குறிப்பிட்டுள்ளார்.  (என்னவென்பதை  புத்தகத்தைப் படித்து அறிந்து கொள்க.)

வேற்றுச்  சிறகு:
                      விமானப் படை விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற தன்னுடைய சிறகை விரிக்கும் கனவு, கலெக்டராக வேண்டும்   என்ற  தந்தையின்  மாற்றுச் சிறகின் கனவு, இதெல்லாம் மாறி காலத்தின் கட்டாயமாக அவர் ராக்கெட் என்ஜினியராக வேற்றுச் சிறகாக  மண்ணில் நிலைத்த புகழ் பெற மகத்தாக உருவானது அக்னிச் சிறகுகள்!.
  சிறகடிக்க :
                        தான் இராக்கெட் என்ஜினியரானதும் ஒவ்வொரு முறை அந்த சோதனையில் கிடைத்த தோல்விகளுக்குப் பிறகு  தான் மீண்டெழுந்ததும் , செயலில் குறுக்கிடும் அழுத்தங்களும், அதனை அவர் மாற்றி யோசி என்பதாக கையாண்ட விதமும்,  சின்ன சின்ன விஷயங்களையும் அலட்சியப்படுத்தாது கூர்ந்து  கவனித்தல்,  எனப்பலப்பல அனுபவங்களைக் கூறியுள்ளார்.
அக்னிச் சிறகுகள்:
                 எந்தத் துறையிலும் வெற்றிகள் என்பது எளிதல்ல. தோல்விகள்  தடைகள் வருதைக் கண்டு துவண்டு போகாமல் , தவறை எப்படி சரிசெய்து மீள்வது என்பதை   சிறகுகள் முளைப்பதற்கான  அறிகுறிகள் தோன்றுவதும்,  பின்னர் அது முளைக்காமலோ அல்லது  முறிந்து போவதுமாகவோ    திரும்பத் திரும்ப  நிகழ்வதுமான போராட்டங்களில் இருந்து பீனிக்ஸ் பறவையாக  அக்னியே சிறகுகளாக்கி விரித்து பறந்த அக்னி ஏவுகணை  (நாயகனான) கலமாக கலாம் மாறிய வரலாறை நிச்சயம் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

அக்னிப் பறவையொலி:
                       நடக்கும்  நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ற தன் மனநிலைக்கும் ஏற்ப வேதங்கள், பகவத் கீதை,  குரான் , ஆங்கிலக் கவிதைகள் ,தானே எழுதிய கவிதை வரிகள் எனப்  பொருத்தமாக  அங்கங்கு சேர்த்திருக்கிறார்கள் .    போராட்டமே  வாழ்வா என்று மனச்சோர்வு  கொள்வோர் படித்தால்   மனதில் புத்துணர்வு பெறுவார்கள் என்றால் மிகையல்ல.
            இந்த சுயசரிதையைப் படிக்கும் ஒவ்வொருவரும்  தன்அடுத்த கட்ட முயற்சியை  நம்பிக்கை எனும் சிறகுவிரித்துத் தொடர்வார்கள்.

           ஒருவர் தன்முயற்சியில்  செயலில்  எவ்வளவு கவனமாக   விழிப்புடன்  இருக்க வேண்டும் என்பதற்கு  பல நிகழ்வுகளை நூலில்  குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து  ஒரு நிகழ்வைத் தருகிறேன் . இதைப் படித்த போது ஒருநிமிடம்   ஆடிப்போனேன். நிச்சயமாக நீங்களும்  இதேபோல் உணர்வீர்கள்.

சிறகு முறியாதிருக்க:
எஸ்.எல்.வி.3.ராக்கெட் ஏவ தயராக   இருந்த நிலையில்  அதன் நுட்பங்கள் பற்றி பேராசிரியர் தவன்,  மாதவன் நாயர்,  ஆகியோருடன்  பேசிக்கொண்டே எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்வையை சுழலவிட அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  தீயணைப்புக் கருவியின்  பெரிய குழாயின் முனை ராக்கெட்டை நோக்கிய  நிலையில்  இருந்ததைக் கவனித்த கலாம்,  எதிர்பாராது தண்ணீர் வெளியேறி  ராக்கெட் மீது  பீய்ச்சி அடித்தால்  ராக்கெட் முழுவதும்   சேதமாகிடும் என்று தோன்றவே உடன் வந்த மாதவன் நாயரிடம்  தீயணைப்புக் கருவியின்  முனையை எதிர் திசையில் திருப்பிவிடும்படி  கூற, அதன்படி திருப்பிவிட்ட சில நிமிடங்களில் அந்த குழாயிலிருந்து வெகுவேகமாக தண்ணீர் பீய்ச்சி அடித்துள்ளது.  ஏவுகலத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் தீயணைப்புக் கருவி  சரியாக வேலை செய்கிறதாவென சோதித்துப்  பார்த்திருக்கிறார். இதை என்னவென்று   சொல்வது தொலைநோக்கால் கற்றுக்கொண்டபாடமா?.அல்லது ஏதோ  ஒரு தெய்வசக்தி  எங்களைப் பாதுகாத்ததா?.என்று குறிப்பிட்டுள்ளார்.
           எப்படியோ அவரின் உள்ளத்தில்  தோன்றிய எச்சரிக்கை உணர்வு பலரின் பலகால உழைப்பு ,மிகப்பெரும் பொருட் செலவு , இவற்றையெல்லாம் விட அதில் ஈடுபட்ட அத்தனை பேரின்   நம்பிக்கை   அனைத்தும்  காப்பற்றப்பட்டது ஒவ்வொரு முறையும்  பணியில் நேர்ந்த குறுக்கீடுகள் இடையூறுகளை அவர் எப்படி (அழகாக)  சமாளித்தார் , தடைகளை எவ்வாறு  எதிர்கொண்டார் என்பதைப் படிக்கும்போது …..நீங்களே படித்து  அதை உணருங்களேன்.   
ரசித்தது:
              கலாம் அவர்களின்  எழுத்தில் வார்த்தைகளில்  இந்த புத்தகத்தில்  கூறியுள்ளதை  அப்படியே உங்கள் வாசிப்புக்காக, உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா ?. 31 ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட எனது முழுப்பெயரைச் (அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன்  அப்துல் கலாம்  -Avul Pakir Jainulabdeen Abdul Kalam) சொல்லி என்னை அழைப்பதில்  சந்தோஷப்படும்  ஒரே நபர் இந்த உலகத்திலேயே  சேஷன்  மட்டும்தான் என்று கூறியுள்ளார்.
              எவருக்கும்  பிடித்தமானது அவரது பெயர் .அதையும் சுருக்காது  கூப்பிட்டால் மிகப் பிடித்தமானதாகும்.   உலகமே அண்ணாந்து பார்க்கும் விஞ்ஞானியாக உயர்ந்த நிலையிலும்  தன் பெயரைச் சுருக்காது  கூப்பிடுவதைக் கேட்க  குதூ….கலமாகிறார் .
நாமும்  சேர்ந்து  ….ஆம் அதேதான்.
அக்னிச் சிறகை  …. பெ(க)ற்று இலக்கு நோக்கி பறப்போமே!. 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑