வாசித்தது: அதடே ஆமெ சைன்யம்
ஆசிரியர் : எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழில்: தளபதி
மொழி பெயர்த்தவர்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம்:அல்லயன்ஸ்
பக்கங்கள்: 228
விலை: 180 ரூபாய்
வகை: நாவல்
ஆசிரியர் எண்டமூரி வீரேந்திநாத் அவர்களின் கிரவுஞ்ச வதம் நாவல் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அந்த காதல் நாவல் எழுதியவரா என்பதாகவும் நாவலா ?.அல்லது திரைப்படமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒருஅதிரடித் திரைப்படம் பார்ப்பது போல நாவலை வடிமைத்திருக்கிறார் என்றால்
மிகையல்ல.
தளபதி:
ஆரம்பமே அதிரடியாக:
கதையின் நாயகன் ஒரு நடிகன். அவன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரவுடிகளாக நடித்தவர்கள் உண்மையாகவே தாக்க அவனுக்குத் தலையில் அடிபட,
அடுத்தடுத்த காட்சிகள்:
மருத்துவமனையில், அவனுக்கு தலையில் அடிபட்டதால் நினைவு இழந்ததாகவும் ,அவன்பெயர் சரவணன் என்றும் , அவன் மனைவியும் மகளும் காத்திருக்கிறார்கள், இனி நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்றும் மருத்துவர்கள் கூற, அவனோ தான் பிரபல நடிகன் சைதன்யா என்றும் தனக்கு இன்னும் மணமாகவில்லை என்றிட , மருத்துவர்களோ அவன் சரவணன் தான் என்பதாக தொடர்ந்து வேறு வேறு நிகழ்வுகளில் நிரூபிக்க முயல உச்சமாக அவனை மனநலமருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல, தான் சரவணன் தானோ என அவனே நம்பத் தொடங்கும் அளவுக்குச் செல்லும் குழப்பங்களுக்கு எல்லாம் முடிவுகட்ட அவன் அவர்கள் போக்கிலேயே சென்று ஒருயுக்தியைக் கையாண்டு (என்ன யுக்தி என்பதை புத்தகத்தைப் படிக்க) தான் சைதன்யாதான் என்பதை தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பிவிடுகின்றான். உண்மையான கதை இனிதான் ஆரம்பம் .அதுவரை….
இடைவேளை:
சைதன்யா இவ்வாறு தன்னை சரவணன் என்று சித்தரிக்க முயன்றது யார்?.என்று ஆராயத் துவங்க, காட்சிகள் விறுவிறுப்பாகிறது.
மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்க உதவும் நர்ஸ் அஷௌஹிணியைக் காவலர்கள் துப்பாக்கியால் சுட சுருண்டு விழுந்து இறந்ததை பார்க்கிறான். ஆனால் அடுத்தநாள் பிரனூஷா என்ற பெயரில் அவள் வருவதும் ,மனைவியாக வந்தவள் துணைநடிகையான லஷ்மி என்பதும் ,மேற்சொன்ன குழப்பங்கள் அத்தனைக்கும் தலைவி பிரனூஷாவே என்பதையும் கண்டறிகிறான்.
திருப்புமுனை:
பாகிஸ்தான் கமாண்டர் அஜ்மராலியை பழிவாங்க நினைக்கும் பிரனூஷா, அவளுக்கு உதவியாகவும், தனக்கான ஒரு நல்ல நோக்கத்திற்காகவும்,தன் அம்மா, மற்றும் அப்பாவின் நண்பரான இஸ்மாயில்,துணை நடிகையான லஷ்மி ஆகியோருடன் தளபதியாக தலைமையேற்று கலைக்குழுவாக சந்தேகம் வராதபடி பாகிஸ்தான் செல்கின்றனர்.
எதிர் திருப்புமுனைக் காட்சி:
கலைக்குழு திட்டமிட்டபடி சென்று சேர்கிறது. சிறையில் உள்ளவர்களுக்காகவும் கலைநிகழ்ச்சி நடத்த கேட்கும் கமாண்டர் அஜ்மராலியின் பேச்சும் நடவடிக்கைகளும் தங்களை யார் என அவன் கண்டுபிடித்துவிட்டதை சைதன்யா யூகித்துவிடுகிறான்.
கண்ணாமூச்சி விளையாட்டு போல கமாண்டர் அஜ்மராலி தன்குழுவோடு துரத்த, சைதன்யா தான் நினைத்ததை முடிக்க முயல, கார்,ஹெலிகாப்டர் , டேங்க் ,கண்ணீர்ப் புகைக் குண்டுகள் என மாறிமாறி திரைப்படக்காட்சியும் மிஞ்சும்படி சண்டை நடைபெறுகிறது.
இத்தனை பிரையாசைப்பட்டு சைதன்யா சென்ற நல்ல காரியம் என்ன?. பிரனூஷா ஏன் அஜ்மராலியை பழிவாங்க நினைத்தாள்?. இவையெல்லாம் நிறைவேறியதா?. அஜ்மராலிக்கு துப்பு கொடுத்த உளவாளி யார்?. தளபதியைப் (படித்து) பின்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
ரசித்தது:
கதையின் இறுதிப்பகுதி ரசிக்கும்படியாக உள்ளது. அதை எழுதினால் கதையின் முடிவைச் சொல்வது போலாகும். எனவே அதையும் சேர்த்து ரசிக்க புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Leave a comment