நெஞ்சங் கவரும் வங்காளக் கதைகள்

வாசித்தது: நெஞ்சங் கவரும்  வங்காளக்  கதைகள்
ஆசிரியர்: விபூதி பூஷண் பந்தோ  பாத்யாயா
வகை:    சிறுகதைத் தொகுப்பு
பதிப்பகம்: சாகித்ய அகாதெமி
பக்கங்கள்:  245
ஆங்கிலமொழி பெயர்ப்பு: அசோகதேவ்  சௌத்ரி
தமிழ் மொழி பெயர்ப்பு: ஆனைவாரி   ஆனந்தன்
விலை:    100 ரூபாய்

 ஆசிரியர்  விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை.  அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.

 இந்தத் தொகுப்பில்  உள்ள 17 கதைகளில்  5 கதைகள் பேய் ஆவி கதைகள். இவை 75 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. படிக்க சுவையானவையாக இருக்கின்றன.
நெஞ்சங் கவர்ந்த  பேய் (கதையிலிருந்து) ஒன்றை  காண்போமா?.
             
கதைத் தலைப்பு:   நறுமணச் சரக்கு மூட்டைகளில்
பிசாசுகள்:
     ஹஸாரி விஸ்வாஸ் ,ஜதீன் பத்ரா இருவரும் இளமைக் கால முதலே நண்பர்கள்.ஹஸாரி கல்கத்தாவில்  பர்ரா பஜாரில்  பலசரக்குக் கடை வைத்திருப்பவர்.  தன் நண்பனின் ஆலோசனைப்படி ஜதீன் சந்தையில் புரோக்கராக தொழில் செய்து நன்கு ம்பாதிக்கிறார்.

              ஜதீன்  ஒருநாள்  தன் நண்பனிடத்தில் நறுமணச் சரக்கு மூட்டைகள்  ஏற்றி வந்த கப்பல்  ஒன்று    மணல் திட்டில் மோதியதால், பாதி மூட்டைகள்  கடலில் மூழ்க, மி(மீ)தந்த  மூட்டைகளை துறைமுகத்தில்  ஏலமிட இருப்பதாக  கூற, இருவரும்  நூறு  மூட்டைகளை  ஏலம் எடுத்து வந்து  முன்பே இருந்த சரக்கு மூட்டைகளுடன்  சேர்க்க நிரம்பி வழிந்த   குடோனைப் பூட்டி ஒருஆளைக் காவலுக்கும்   வைக்கின்றனர். 

           முதல்நாள்  இரவு யாரோ  குடோனுக்குள் திருடுவது போல் சத்தம் கேட்கிறது  என பக்கத்துக் கடைக்கார்கள்  காவலாளியை எழுப்ப  பூட்டிய படி இருக்கும்  குடோனுக்குள்  இரவெல்லாம் சத்தம் மட்டும் கேட்கிறது. விடியும் நேரத்தில் சத்தமின்றி அமைதியாகிறது.

          காலையில் செய்தி அறிந்து வந்த  முதலாளி கதவைத் திறந்து பார்க்க மூட்டைகள் எல்லாம் வைத்த இடத்தில் அப்படியே இருக்கிறது. பொறாமையால்  ஏற்படுத்திய  வதந்தி என  நினைக்கிறார்.

                 அடுத்தநாள் இரவு  ஹஸாரி தானும் அங்கேயே தங்கி காவலிருக்க ,  இரவில் காளைகள் ஒன்றுடன் ஒன்று  சண்டையிடுவது போல சத்தம் கேட்டு விழிக்கிறார்.காவலாளி நேற்றும் இதேபோல் நடந்ததெனப் புலம்ப, தூக்கம்கெட்டு குழம்பிய மனதுடன் கவலையும் சேருகிறது.  

                    பொழுது விடிந்ததும்  சத்தமும் நின்றுவிட, குடோனைத் திறந்து பார்த்தால்   மூட்டைகள்   அளவில் குறையாது ஆனால் அடுக்கிய நிலையில் இருந்து திசை மாறியும்  ஒன்றின் மீது ஒன்றாகச் சாய்ந்தும்    ஒன்றோடொன்று மோதிக் கொண்டவை போல்  காணப்பட இதனால் திடுக்கிட்ட ஹஸாரி திருடன் என்றால் யார் கண்ணிலும் படாமல் இருக்க  முடியாது  ஒருவேளை கப்பலில்  இறந்தவர்களின்  ஆவிகளாக இருக்குமோ என  பயப்படுகிறார்.

               ஆட்களை  அதிகப்படுத்தி  காவலிருக்க அடுத்த நாள்  இரவில்  புயல் வீசுவது போன்றும் நூற்றுக் கணக்கான மனிதர்கள் பெருமூச்சு விடுவது போன்றும்  சத்தம் கேட்கிறது.  பயத்தில் உறைந்தவர்  பின் கதவைத் திறந்து பார்க்க…

      நிகழ்வைப் படித்தபின்   சிரிப்போ அல்லது பயமோ அவரவர் மனநிலைக்கு ஏற்ப….. எனக்கு சிரிப்புதான் வந்தது.

                    விட்டலாச்சார்யா படக் காட்சிபோல ,மூட்டைகள்  உயிர் பெற்றவைபோன்று இராணுவ வீரர்கள் போல அணிவகுத்து ஒன்றின் பின் ஒன்றாக கிடங்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. 

            முதலில்  உப்பு மூட்டை வெளியேவந்து படைத்தளபதி போல வழிகாட்டியாக முன்செல்ல, மற்ற மூட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக  அணிவகுத்து நிற்க, சிறிதுநேரம் துள்ளலும் குதியுமாக  இருந்து பின்பு  சாலையைக் கடந்து செல்கிறது.  எரிகிற கொள்ளியில் சேர்ந்த எண்ணெயாக  ஹஸாரியின் சொந்த  மூட்டைகளும்  பின் தொடர்ந்து   செல்ல என்ன ஆயிற்று ?.புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரசித்தது:       
கதையின் பெயர்: மீன் தூண்டில் நிபுணரின்  சங்கடங்கள் :
        வங்க மொழியில் மீன்பிடி வலையைப்  பயன்படுத்தாது  தூண்டிலைக் கொண்டு  மீன்பிடிப்பவர்களை பார்ஷெல் என்று அழைப்பது பழக்கம். இத்தகைய பார்ஷெலில் ராம்ஹரி ஹோர் என்பவர் நிபுணத்துவம் பெற்றவர்.

                  ஒருமுறை ராம்ஹரி மீன் பிடித்துக்கொண்டிருந்த போது  அங்கு சிறுவர்களும் மீன்பிடிக்க வருகிறார்கள்.  தூண்டிலில் மீன்பிடிக்க பொறுமை வேண்டுமல்லவா?.  சிறுவர்களுக்கே உரிய குணத்துடன்  தங்களுக்குள் முலாம்பழத்தை பங்கிட்டுக் கொள்வதில்   சச்சரவு வர, ராம்ஹரி மீன்பிடிக்க வந்தீர்களா?. இப்படி சத்தம் போட வந்தீர்களா என்று   கோபமாய் சத்தமிட , சிறுவர்கள்  சிறிது தள்ளிவந்து தூண்டிலிடுகின்றனர்.

சிறிது நேரம் கழித்து ராம்ஹரியின் கிறீச்சிட்ட குரல் கேட்டு  ‘மாமா பெரிய மீனபுடிச்சிட்டார்டா .வாங்கடா போய் பார்க்கலாம் என்று வருகின்றனர்.

               உண்மையிலேயே  பெரிய மீனானதால் தூண்டிலை அவர் இழுக்கவும் கழியை உடைத்துக் கொண்டு   ஊக்குடன் மீன் தப்பிவிட , உங்க சத்தத்தால மீனும் வரல என்னோட கவனமும் போச்சு  என்று  சிறுவர்களைக் அவர் குறை கூற,   இதற்கு அபுல் எனும்சிறுவன் , ‘மாமாவோட  நூல் ஏற்கனவே பழுதாயி இருந்துச்சு  .அதனால முதல் இழுப்பிலேயே  அறுந்துடுச்சு. அது நம்மோட தப்பா?.  நாம ஒன்னும் மீன்கிட்ட போயி  அதை அறுத்துட்டு   ஓடிப்போயிடுன்னு  சொல்லிக் கொடுக்கலியே?’.என்று முணுமுணுக்கிறான்.  முகத்தில் மென்நகை படிய,  காக்கா முட்டை படத்தில்  சின்ன காக்கா முட்டையாகவரும் சிறுவனி்ன்  முகமும் பேச்சும்  நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

            இந்தத் தொகுப்பில்   வறுமையின் கொடுமையைக்  சொல்லும் கதை ,பள்ளியில் படிக்காமல் ,வீட்டுப்பாடம் செய்யாமல் ,ஆசிரியரிடமிருந்து அடிவாங்காது இருக்க ,  சிறுவர்கள்   செய்யும்   வேலை… 

            சிறுவர் கதைகள் மட்டுமின்றி ஒவ்வொரு கதையும் தனித்தனியே சிறப்பாக மனித உணர்வுகள் கொண்ட நெஞ்சங் கவர்ந்த  வங்காளக் கதைகளை நீங்களும் வாசித்துப் பாருங்களேன். 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑