நெஞ்சின் அலைகள்

வாசித்தது:   நெஞ்சின் அலைகள்
ஆசிரியர்: அகிலன்
வகை:  நாவல்
பதிப்பகம்: தாகம்பதிப்பகம்
விலை:ரூபாய் 75

அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர்.   ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும்  ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன்  என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில்  நூலகத்திலிருந்து  என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில்  நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.

அலைகள்:
இந்திய விடுதலைப்போராட்டமெனும் வீரம் ஒரு அலையாகவும், அத்தைமகன் வாசுவுக்கும் மாமன் மகள் கனகத்திற்குமான காதல் ஒரு அலையாகவும், அவர்களுக்கு இடையில் கனகத்தின் தந்தை தர்மலிங்கத்தின் அந்தஸ்த்து ஒரு அலையாகவும்  குறுக்கிடுகிறது. கனகத்தின் தாய் இறந்ததால் தர்மலிங்கம் மறுமணம் செய்துகொள்ளும்     மரகதமும் அவளின் தம்பியான பசுபதி இருவரும்  சேர்ந்து தர்மலிங்கத்தின் பணத்தாசை எனும் பேரலைலையைப் பயன்படுத்தி சுறாவளியாக அவரின் சுருட்டு கம்பெனியையும் கனகத்தையும் ஒரேடியாக சுருட்ட நினைக்கிறார்கள்.

தர்மலிங்கம் தன் தங்கை பையனான  வாசுவுக்கு அவர்கள் குடும்பத்தின் ஏழ்மை நி(அ)லையைப் பயன்படுத்திக் குறைந்த  சம்பாத்தியத்தில்  தன் சுருட்டுக் கம்பெனியில் வேலை போட்டுத் தருகிறார்.

பசுபதி தன் அக்காவின் சிபாரிசால்  கம்பெனிக்குள் புயலாய் நுழைந்து  சிற்றலை போன்ற வாசுவை தந்திரமாக  கம்பெனியிலிருந்து விரட்டி விடுகின்றான்.
வாசு வீட்டின் வறுமை அலையை சமாளிக்க ஆங்கிலேயரின் படையில்  சேருகின்றான். அங்கு அவனுக்கு சிலர் நண்பர்களாகிறார்கள். பின்பு அங்கிருந்து அவர்கள் ரங்கூனுக்கு  அனுப்படுகிறார்கள். இதற்கிடையில் வாசுவுக்கு  தர்மலிங்கத்திடமிருந்து   பசுபதி கனகம் மனம் ஒப்பி திருமணம் நடப்பதாகவும் பத்திரிக்கையுடன்  கடிதமும் வருகிறது. சந்தேக அலையால் வாசு  குழம்பினாலும்  கனகத்தின்  பண்பும்  அவள் தன்மீது கொண்ட காதலும் அந்த திருமணத்தை நம்ப மறுக்கிறது.

ரங்கூனுக்கு அவர்கள் வந்த நேரம் ஜப்பானியர் குண்டுவீசி தாக்க , அதில் வாசு காயமடைய, ஒருபுறம் பர்மியர்கள் துரத்த, தப்பித்து ஓடும் வாசு   எதிர்பாரா அலையால் தன்னோடு கல்லூரியில் படித்த லோகநாதனின் மருத்துவ குடும்பத்தில்  வந்து சேருகின்றான்.

லோகநாதனின் தங்கையான புஷ்பா எனும் அன்பலை வாசுவை விரும்ப அதனை ஏற்கவும் முடியாமல் விரும்பவும் முடியாதவனாக வாசு தவிக்கிறான். போரின் போக்கில் புஷ்பா தன்னுடைய குடும்பத்தை இழக்க வாழ்கையலை அவர்களை ஒன்றிணைக்கிறது.
போரின் கோரமும்  ,அவலமும், வேதனையும் ,சொந்த நாட்டிலேயே படும் அவமானமும் ,அகதிகளாக அல்லல் பட்டு வரும் கொடுமையும் என்று போரின்  கொடுமையை கோரஅலையை தன் சொற்களினால்  படம்பிடித்திருக்கிறார்
ரங்கூனில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையில் இந்தியாவுக்கு  பலவித இன்னலைகள் தாண்டி  வாசுவும்  புஷ்பாவும்   வந்து சேர்கிறார்கள்.

இதற்கிடையில் வாசு இறந்ததாக செய்திவர  கனகத்தின்  ஆழ் மனஅலை அதை நம்ப மறுக்கிறது.  பசுபதியை மணக்க விரும்பாத கனகம் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி    கலகத்தாவில் தன் தோழியின் தந்தை இராணுவத் தொடர்புள்ள  ஒருஅலுவலகத்தில்  வேலைபார்ப்பதால் வாசுவைப்பற்றி அறிந்துகொள்ள  நம்பிக்கை அலை அவளை அங்கு இழுத்து வருகிறது.

புஷ்பாவுடன் இணைந்தபோதும் கனகத்தை  மறக்காத நெஞ்சின்  அலைகளுடன் வாசு .
வாசு இறந்ததாக வந்த தகவலை நம்பாது  நெஞ்சின் அலைகளுடன்   தேடிவரும் கனகம்.
இருவரின் நெஞ்சின் அலைகள்   ஒன்றானதா?.
அலையை  பு(ப)டித்து கிடைத்தது முத்தா  அல்லது கிளிஞ்சலா  என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ரசித்தது:
கதைக்களம் தொடங்கும் திருச்சி மலைக்கோட்டையைச் சேர்ந்த  சுந்தரம் உருவமும் அவ்வாறே. அவனுக்கு இட்டிலி சாம்பார் என்றால் உயிர்.
அகதிகளாக வரும் கூட்டத்தினரில் கனகம் வாசுவைத் தேடி  வரும்போது, ‘எத்தனையோ இடங்களில் குண்டு விழுகிறது. இந்த சப்பாத்தி செய்யும்  சமையல்காரன்   தலையில் ஒன்று விழக்கூடாதா?. தோசைக்கல்லு மாதிரி இருக்கிறதே. எப்படி இதை சாப்பிடுவது. என்ன இருந்தாலும் இட்டிலி சாம்பாருக்கு இதெல்லாம் ஈடு வருமா ?. என்பான்.
சப்பாத்தி செய்யும் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் இந்த வசனமும்  நினைவுக்கு  வந்துவிடும். 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑