(ஓவியம்: கிறிஸ்டி நல்லரத்னம்,மெல்போன்,ஆஸ்திரேலியா)
வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில் மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.
நெகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் சில ராஜாவின் நினைவில் எழுந்து அவனிடமிருந்து பெருமூச்சாக வெளிப்பட்டன. வரும் நாட்களிலும் அடுத்தடுத்து பல நிகழ்வுகள் அவன் நினைவில் தோன்றி நெகிழவைக்கப் போகின்றன.
பல காரணங்களால் தள்ளிப் போனதால் ராஜாவுக்கு ஐந்து வயதில்தான் மொட்டைபோட்டு காது குத்தினார்கள். அடுத்த சில மாதங்களில் முடி வளர்ந்திடவே அவனை ஒரு முடி திருத்தகத்தில் உட்கார வைத்து, “தம்பையா, இவனுக்கு நல்லா கரவ்வா வெட்டிவிடு. ராஜா, சட்டைபையில் இருக்கும் காசை கடைக்காரரிடம் கொடுத்திட்டு, எங்கியும் பராக்கு பார்க்காம ரோடு ஓரமாவே நடந்து வீட்டுக்குப் போ” என்று சொல்லிவிட்டு போனார் அவன் அப்பா.

.அவனை சுழல் நாற்காலியின் கைகளுக்கிடையே ஒரு பலகை வைத்து அதில் உட்கார வைத்தார்; நேரிடையாக நாற்காலியில் உட்காரவைக்காதது அவனுக்கு ஏமாற்றமே. ஒரு வெள்ளைத் துணியை கழுத்திலிருந்து போர்த்தி முடிந்து விட்டார். வெட்டிவிடும் முடி அவன்மேல் விழாதபடி உடலை மூடி சரி செய்தார். ராஜாவுக்கு இது வேடிக்கையாக இருந்தது. ஏதோ சிம்மாசனத்தில் அமர்த்தி தனக்கு முடி சூட்டு விழா நடக்கப்போவதாகவே ராஜா கற்பனை செய்து கொண்டான் அவன் உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலி எதிரே சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி பதித்திருந்தது. அதேபோல அவன் முதுகுப் பக்கமும் சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி பதித்திருந்தது. முன் பக்க கண்ணாடியில் பின்புறமிருந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் தெரிந்தது.அதில் இவனது தலையின் பின் பக்கம் தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் அடுக்கடுக்காக முன், பின் கண்ணாடிகளின் பிம்பங்கள் தெரிந்தன. ராஜாவுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.
தண்ணீர் தெளிப்பானால் நுண்துளிகளாக தண்ணீரை தலையில் தெளித்தார். பின்னர் முடி வெட்டும் கருவியால் வெட்டத் தொடங்கினார். ராஜவுக்கு தலை கூசியதால் தோளை குறுக்கிக் கொண்டான். அவனுக்கு எல்லாமே புது அனுபவமாக இருந்தது.வேலை முடிந்ததும் அவன் சட்டைப் பையில் இருந்து அவராகவே நாலணா துட்டை எடுத்துக்கொண்டார்.கடையிலிருந்து கிளம்பிப் போகையில் அவனையறியாமல் ஏதோ ஒரு சினிமா பாட்டை பாடிக் கொண்டே போனான்.
வீட்டுக்குப் போனால் நேரே உள்ளே போய்விட முடியவில்லை. சந்து வழியாக கொல்லைப்பக்கம் போய் உடையெல்லாம் நனைத்து வைத்துவிட்டு குளித்த பின்தான் வீட்டுக்குள் போக அனுமதித்தார்கள் ; கேட்டால் ‘பரியாறி’ தீட்டாம்.
மொட்டை போடுவதற்கு முன்புவரை இரட்டை சடையோடுதான் அவன் வலம் வந்தான். இப்போது கிராப் தலையுடன் அவனைப் பார்க்க அவனுக்கே ஆசையாக இருந்தது. தான் இப்போதுதான் ஆண்பிள்ளையாக பிறந்ததுபோல உணர்ந்தான். ‘அப்பாடி, இனிமேல் சவசவன்னு எண்ணெய் தடவி வழிச்சி சீவி சடை போடும் அக்காவிடமிருந்து விடுதலை.’ என்று ஆனந்தமாக வீடு நோக்கி வீருநடை போட்டான். பெரிய பரிசுகள் கூட கொடுக்காத மகிழ்ச்சியை சில நேரங்களில் சில சிறிய பொருட்கள் கொடுத்துவிடுவது இயல்புதானே.
நாச்சியார்கோவிலில் தம்பையாவின் குடும்பம் இருந்தது. தம்பையா எட்டாவது படிக்கையில் அவன் அப்பா மரணம் அடைந்திடவே, அவன் அம்மா நிலத்தையும் வீட்டையும் குத்தகைக்கு விட்டு மகனுடன் கபிஸ்தலம் வந்து தன் அண்ணன் வீட்டில் அடைக்கலமானாள். இந்த நாட்டில் கணவனை இழந்த கைம்பெண்களின் கலங்கரை விளக்கமே உடன் பிறந்தவர்கள்தானே. அவர்களால்தான் பல பெண்களின் வாழ்க்கைக் கப்பல் தரைதட்டாமல் தப்பிக்கின்றன.
ஆண்டுகள் பல உருண்டோடின. தம்பையாவுக்கு கல்யாணம் செய்யவேண்டும்; அவன் மாமன் மகளும் பொருத்தமாக இருந்ததால் கல்யாணத்தை முடித்துவிட்டு,கடையை தம்பையாவிடம் தந்துவிட்டு மாமா சிங்கப்பூர் நண்பரின் கடையில் வேலைசெய்ய போய்விட்டார். கடை பெயர்ப் பலகையில் எம்.ஜி.சாமி என்று இருந்தாலும் எல்லாரும் தம்பையாபிள்ளை கடை என்றுதான் சொல்வார்கள். என்ன காரணமோ தம்பையாவின் மனைவிக்கு கர்பம் தங்காமல் தள்ளித்தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
தம்பையா ராஜாவுக்கு இரண்டாம் நம்பர் மிஷினால்தான் முடி வெட்டுவார்; அதுதான் தலையின் தோல் தெரியாதபடிக்கும் முடிவெட்டி பத்துநாள் ஆனது போலவும் இருக்கும். அவன் சில ஆண்டுகளில் வளர்ந்துவிட்டபோது பலகை போட்டு உட்கார வைப்பதில்லை; நேரிடையாக சுழல் நாற்காலிதான், மிஷின் இல்லை கத்தரிக்கோல்தான். அவனுக்கு ஏதோ மேல்பதவி கிடைத்தது போல உணர்ந்தான். அவனைவிட பெரிய பையன்களெல்லாம் இன்னமும் பலகைபோட்டு உட்கார்ந்துதான் முடி வெட்டிக் கொள்கிறார்கள்.
ராஜா தலை உச்சியில் சுழி இருக்குமிடத்தில் கொஞ்சம் முடியைக் குறைக்கச் சொன்னால், “குறைத்தால் முடி விறைச்சுகிட்டு நிக்கும், படியாது, இதுதான் சரி. எனக்குத் தெரியும் ராஜாவுக்கு எது அழகுன்னு” என்று பதில் சொல்லிவிடுவார். தலை என்னவோ ராஜாவுடையதுதான்; அதன் அனுபோக பாத்தியம் தம்பையாவுடையது. முடி வெட்டி முடித்து தலை கழுத்து எல்லாம் பவுடர் போட்டு துடைத்து விட்டதும் கழற்றிவிட்ட சட்டையின் மேல்பொத்தானைப் போட்டுக் கொண்டு ராஜா கிளம்பும்போது, திருப்தியில்லாதவராய் ‘ராஜா ஒரு நிமிஷம்’ என்று சொல்லி சீப்பையும் கத்தரிக்கோலையும் வைத்து உச்சந்தலையிலும், காதுகளுக்கு மேலேயும்’டிக்கிடிக் டிகிடிகி’ என்று ஏதோ திருத்தம் செய்வார்;அப்பவும் அவருக்கு அரை மனசாகத்தான் இருக்கும்.
ஊரில் உள்ள இளசுகளின் கூடுதுறை அந்த கடைதான். ஒரு இளைஞர் பட்டாளம் அங்கு உட்கார்ந்து தினத்தந்தி படிக்கும், தண்ணீர் பீச்சி அடித்து தலை வாரிக்கும். இவர்களைப்போல ராஜா தினமும் கடைக்கு வரமாட்டானா என தம்பையா ஏங்குவார். அதைவிடவும் அவருடைய ஆசையெல்லாம் ராஜா மாதிரி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை நிறைவேற மேலும் சில ஆண்டுகள் ஆனது.
அந்த கடை வழியாக ராஜா வரும்போது உள்ளிருக்கும் நண்பர்கள் அவனை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துக் கொள்வார்கள், அப்போதெல்லாம் தம்பையாவுக்கு பெரிய மகிழ்ச்சி. ஆனால் ராஜாவுக்குத்தான் தெரியும் அதன் விளைவு. அதே ‘பரியாறி தீட்டு’ தீண்டாமை அவனை கொல்லைப்புறம் வழியாக புண்ணிய நீராட வைத்துவிடும். இதன் காரணமாகவே அவன் அந்த கடைக்கு போவதை தவிர்ப்பான். குளிப்பதற்கு பயந்து இல்லை; அந்த தீண்டாமைக்கு பயந்து.
ராஜா பள்ளிப் படிப்பு முடித்து கும்பகோணம் கல்லூரியில் சேர்ந்தான். அவன் தலைமுடி மட்டும் எந்தநாளும் அளவுமாறாமல் ஒரேமாதிரி இருப்பது நண்பர்களுக்கு ஆச்சரியம். சில நண்பர்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை ராஜாவின் வீட்டுக்கு வந்தவர்கள், தம்பையாபிள்ளை கடைக்கும் வந்தார்கள். எல்லாருமே முடி வெட்டிக் கொண்டதுடன் ‘இனிமேல் கும்பகோணத்திலிருந்து இங்கு வந்துதான் முடிவெட்டிக்குவோம்’னு சொல்லிவிட்டுப் போனார்கள்.
இப்போதெல்லாம் முடிவெட்டும்போது முகச்சவரமும், மீசை ஒழுங்கு படுத்துவதும் சேர்ந்து கொண்டன. அதனால் முடிவெட்டவில்லை யானாலும் வந்து முகச்சவரம் செய்துகொண்டு போக ராஜாவை தம்பையாபிள்ளை வற்புறுத்துவார். முகச்சவரத்திலும் எதிர்க்கத்தி போடமாட்டார்.
கல்லூரிப்படிப்பு முடிந்து ராஜா சென்னைக்கு வேலை தேடிச் சென்றான். அங்கு அருகில் உள்ள சலூன்களில் முடிவெட்டிப் பார்த்துவிட்டான். வீட்டில் அம்மாவின் சாப்பாட்டை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சாப்பிட்டு மகிழ்ந்தவன் தன் மனைவி அருமையாக சமைத்தாலும் ‘அம்மாவின் சமையல் போல அவ்வளவு சிறப்பாயில்லை’ என்பதுபோல ராஜாவுக்கு சென்னை சலூன்களில் திருப்தியே இல்லை.
வேலை கிடைத்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. கல்லூரி நண்பனின் கல்யாணத்துக்கு ஊருக்கு செல்லவேண்டும். அப்போது தம்பையா பிள்ளையிடம் போய் முடிவெட்டிக் கொள்ளலாம் என்று இருந்ததில் இரண்டு மாதமாக முடி வளர்ந்துவிட்டது. பார்ப்பவர்கள் “எந்த ஊருக்கு முடி திருப்பதியா, திருத்தனியா” என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கல்யாணத்தில் கலந்து கொள்ள முதல்நாளே வந்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தம்பையா பிள்ளை கடைக்கு போனான். கடை திறந்திருக்கவில்லை. அக்கம்பக்கம் கேட்டதில், ‘ரெண்டு நாளாவே தொறக்கல. பிள்ளைக்கு ஒடம்பு சரியில்லையாம். அடிக்கடி அவருக்கு முடியாமப் போயிடுது’ என்றார்கள். ராஜாவுக்கு அதைக்கேட்டதும் நிற்கவே முடியவில்லை. சைக்கிளில் பறந்து தம்பையா பிள்ளை வீட்டை அடைந்தான். ராஜா சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வாசல்படியில் வந்து ‘பிள்ளை’ என்று கூப்பிட்டான். வீட்டின் கூடத்தில் படுத்திருந்த பிள்ளை யாரென்று தெருப்பக்கம் எட்டிப்பார்த்தார். அவ்வளவுதான் தட்டுத்தடுமாறி எழுந்து,
“வா ராஜா வா எப்ப வந்தே” என்றார் .
“காலையில வந்தேன். ஒடம்பு எப்படி இருக்கு, வாங்க டாக்டர்கிட்ட போவோம்”
“இல்ல ராஜா நல்லாயிட்டேன். ஒடம்புதான் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. ஆமா இது என்ன ஹிப்பி ஸ்டைலா” என்று அவன் தலையைப் பார்த்து கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல. கல்யாணம் அட்டென் பண்ண ஊருக்கு வர்ரப்ப ஒங்ககிட்ட வெட்டிக்கலாம்னு இருந்ததுல கொஞ்சம் வளர்ந்திடுச்சு”
இந்த வார்த்தைகள் காதுகளில் விழுந்தநேரம் அவர் பரபரப்பானார். மெல்ல எழுந்து ஒரு நாற்காலியை நகர்த்தப் போனார். “சொன்னால் நான் நகர்த்திப் போட மாட்டேனா, எங்க போடனும்” என்று கேட்டபடியே ராஜா அவருக்கு உதவினான். நாற்காலி கொல்லைப் பக்கம் மர நிழலில் போடப்பட்டது. ராஜாவை அதில் உட்காரச் சொன்னார். அவன்கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி தந்தார்; ஒரு வெள்ளை வேட்டியை கழுத்திலிருந்து பின் பக்கமாக போர்த்தினார்.
”பிள்ளை என்ன செய்றீங்க; இந்த நெலமைல முடிவெட்டிவிடப் போறீங்களா? ஒன்னும் வேண்டாம் ரெஸ்டா உட்காருங்க” என்று ராஜா எவ்வளவோ சொல்லியும் காதில் விழாதவர் போல வீட்டிலிருந்த கத்தரிக்கோல், சீப்பு, தண்ணீர் கிண்ணம் சகிதம் வந்துவிட்டார்.
“ராஜா எனக்கு இப்போ யானைபலம் வந்திடுச்சு. நீ பேசாம இரு”
ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வேலை முடியவில்லை.
“பிள்ளை இப்ப முடிஞ்சிடுமா. முடியாத உடம்போட நீங்க ஏன் முடிவெட்டிவிடனும். கொஞ்ச நேரத்துல மத்த பசங்கள்ளாம் வந்து என்ன தேடுவாங்க. நான் இங்கிருக்கறது அவங்களுக்குத் தெரியாது.”
இதற்கு பிள்ளையிடமிருந்து பதிலைக் காணோம். அவனை சுற்றிச்சுற்றி வந்து முடிதிருத்தி அவன் தலையை இப்படியும் அப்படியுமாக திருப்பிப் பார்த்து திருப்தி அடைந்தார்.
ராஜா எழுந்து கொண்டான்; ஒரு நூறு ரூபாய் நோட்டை அவரின் கையில் திணிக்கப் பார்த்தான். அவர் ஏதோ நெருப்பு கையில் பட்டது போல வெடுக்கென்று கையை உதறி துள்ளிக் குதித்து பின்நகர்ந்தார்.
“ஐயோ இனிமேல உன்னோட தலையில நான் கைவைச்சி வேல செய்யிற நாள் வருமான்னு ஏங்கிக் கெடந்தேன். அதுக்கு நீ இப்ப எனக்கு ஒரு சான்ஸ் குடுத்திருக்க; காசக்குடுத்து என்ன அவமானப்படுத்தாத. நீ எப்ப சென்னைக்கு திரும்பற”
“நாளைக்கு ராத்திரி வண்டியில் கிளம்பறேன்”
“நாளைக்கு எப்படியும் கடைக்கு வந்திடுவேன், நேரமிருந்தால் கடைப்பக்கம் வந்து போ”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தம்பையாபிள்ளையின் மகன் பிரபு வீட்டினுள்ளிருந்து “அப்பா இது யாரு” என்று கேட்டபடியே ஓடிவந்தான். அவனைத் தொடர்ந்து அவரின் மனைவி காபி டம்ளருடன் வந்தார்.
“முதல்ல காபிய குடி ராஜா”
காபியை குடித்ததும் சட்டைப்பையிலிருந்து மேலும் ஒரு நூறு ரூபாயை எடுத்து இருநூறு ரூபாயையும் பிரபுவின் கையில் கொடுப்பதைக்.கவனித்த தம்பையாபிள்ளையின் மனைவி,
“தம்பி என்ன காரியம் செய்யறீங்க; அவரு கோவிச்சுக்குவாரு” என்றார்.
இதைக் கேட்டதும் சட்டெனத் திரும்பிய தம்பையாபிள்ளை வாய்திறக்குமுன் ராஜா,
“பிள்ளை இது உங்களுக்கில்ல; பிரபுவுக்கு நான் ஒன்னுமே வாங்கியாரல;அதுக்குத்தான்” என்றான். அப்போதுதான் தான் பிள்ளைக்கு ஒன்றுமே வாங்கிவராதது நினைவுக்கு வந்தது. அடுத்தமுறை வரும்போது மறக்காமல் சட்டையும் வேட்டியும் வாங்கிவர வேண்டும் என்று தீர்மனித்துக் கொண்டான். பதில் பேசமுடியாமல் நின்ற தம்பையாபிள்ளையிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். அவன் போன வழியையே பார்த்துக் கொண்டு தம்பையா பிள்ளையுடன் அவர் மனைவியும் நீண்ட பெருமூச்சு விட்டபடி நின்றிருந்தார்கள்.
மெல்ல ஆறுமாதம் ஓடிவிட்டது. நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணத்துக்காக ராஜா ஊருக்கு வந்தான். கல்யாணம் சாப்பாடு எல்லாம் முடிந்த கையோடு வேகவேகமாக தம்பையாபிள்ளையைப் பார்க்கக் கிளம்பினான். ராஜாவின் அப்பா, “தம்பி அவர் இங்க இல்ல, நாச்சியார்கோயிலுக்கே போய்ட்டார்.”
“அப்போ அங்க கடை தொறந்திட்டாரா”
“இல்ல,பார்வ சரியில்ல.அடிக்கடி ஒடம்புக்கு முடியாம போய் கடைய சரியா தொறக்கறதில்ல.அதனால நாச்சியார் கோயில்ல குத்தகைக்கு குடுத்த நெலத்த திரும்ப வாங்கி வெவசாயம் பார்க்குராராம். நீ போறதுன்னா பக்கத்து கடைக்காரர்ட்ட விலாசம் வாங்கிட்டு போ”
பக்கத்து கடைக்காரர் குறிப்பேட்டைபார்த்து விலாசம் எழுதிக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு நாச்சியார்கோவில் நோக்கி கிளம்பினான். கும்பகோணத்திலிருந்து நாலாம் நம்பர் பஸ்ஸில் ஏறி நாச்சியார்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, முகவரியை காட்டி வழி தெரிந்து கொண்டு போனான். கையில் இருந்த பையில் ஒரு ஆரோ சட்டையும், நல்ல பிராண்ட் வேட்டியும் இருந்தது.
வீட்டை அடையும்போது பொழுது சாய்ந்து விட்டது. வீட்டிலிருந்து சாம்பிராணி, ஊதுபத்தி வாசனை வந்தது. ஏதோ சாமி கும்பிடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு “பிள்ளை” என்று குரல் கொடுத்தபடியே நிலைதாண்டி காலெடுத்து வைத்தவன் சிலையானான். பொட்டு வைத்த புகைப்படத்தில் தம்பையா பிள்ளை சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இன்று முப்பதாம் நாள் துக்கமாம். எதுவும் பேசாமல் வாங்கிவந்த ஆடைகளை தன் ஆத்மார்த்த கோடியாக அழுகையுடன் அங்கிருந்த படையல் பொருள்களோடு வைத்தான். கலங்கிய கண்களை துடைத்தபடியே வெளியேறினான்.
நாச்சியார்கோவிலில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறியதிலிருந்து அவனுக்கு பழைய நிகழ்வுகள் அலையலையாக எழும்பிய வண்ணமாக இருந்தன. இதேபோல இன்னமும் பல நிகழ்வுகள் அவன் நினைவில் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கப்போகின்றன.
Leave a comment