நூல்:இறையன்புவின் சிந்தனை வானம்
வகை:சிந்னைத் துளிகள்
தொகுத்தவர்:சுந்தர ஆவுடையப்பன்
பக்கங்கள்;154
வெளியீடு: நீயூ செஞ்சுரிபுக் ஹவுஸ்
விலை: 40ரூபாய்
சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் இறையன்புகளின் படைப்புகளில் வாசித்தவைகளில் நேசித்த சிந்தனைகளைத் தொகுத்து 80 தலைப்புகளில் தந்திருக்கிறார்.
இறையன்பு பற்றி குறிப்பிட வேண்டுமானால் தகவல் களஞ்சியம் என்றே சொல்லலாம் . அவரது பேச்சிலும் எழுத்திலும் தகவல்கள் நிறைந்திருக்கும்.
இறையன்புவின் சிந்தனை வானத்தில் ஔிர்ந்ததில் ரசித்த விண்மீன்கள் சில:
இயற்கை எனும் தலைப்பில்:
1.இயற்கையில் எதுவுமே வீண் இல்லை. மண்ணில் முளைக்கும் புல்கூட மண்ணரிப்பைத் தடுக்கிற காரணத்தால்தான் பூமிக்குக் கூட புல்லரிக்கிறது.புல்லைப் பற்றி நினைத்தால்.
2.பறவை ,காரணப்பெயர் மட்டுமல்ல- – சுதந்திரத்திற்கான இடுகுறிப்பெரும் கூட.
பணி எனும் தலைப்பில்:
1.பூக்களுக்கு நீர்வார்க்கும்போது கூட கடனே என்று செய்பவர்கள் இருக்கிறார்கள். பாறைகளை உடைக்கும்போது கூட மென்மையான இதயத்துடன் செய்பவர்கள் இருக்கிறார்கள்.பணி எப்போது திருவிழாவாக மாறுகிறதோ அப்போதுதான் நாம் அதை முழுவதுமாக லயித்து அனுபவிக்க முடியும்.
2.மகுடத்திற்காக குனிவதும் தலைகுனிவுதானே !.
புத்தகம் எனும் தலைப்பில்:
1.எவ்வளவு நேர்மையானவனும் இரவல் வாங்கிய புத்தகத்தைத் திருப்பித் தருவதில் மட்டும் தன் நேர்மையை விலக்கிக் கொள்கிறான்.
(நூறுக்கு இருநூறு சதம் உண்மை ).
2.நாம் எதை விருப்பத்துடன் வாசிக்கிறோமோ,அது நம் இதயத்தில் எப்போதும் ஈரமாக இருக்கிறது.
மௌனம் எனும் தலைப்பில்:
1.சொற்களுக்கு ஆற்றல் அவற்றைப் பயன்படுத்துவதில் மட்டும் இல்லை ; சமயத்தில் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதிலும் அடங்கியிருக்கிறது.
ரசனை எனும் தலைப்பில்:
எப்போதும் மலையை ரசிக்க முடிவதே அது நம் வரவேற்பறைக்குள் வர மறுப்பதால் தான்.
வரலாறு எனும்தலைப்பில்:
வரைபடத்தில் உள்ள கோடுகளை விரிவாக்கும் தகராறுதானே உலக வரலாறு?. (இதைவிட எளிமையாய் வரலாற்றைச் சொல்ல முடியுமா?.)
பொது எனும் தலைப்பில்:
*வேளாண்மை என்பது பிழைப்பு மட்டுமல்ல .அது ஒரு கலை.மண்ணில் மரகத ஆடை போர்த்தி மகிழ்கின்ற ஒரு மகத்தான தொழில் .ஒவ்வொரு நாற்று நடும்போதும் உழவனின் நெஞ்சில் நம்பிக்கையும் நடப்படுகின்றது.
(அழகான ஆழமான கருத்து.)
முதுமை எனும்தலைப்பில்:
1.இளமை என்பது வயதாகாமல் இருப்பதல்ல.ஆகிய வயதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமே.
2.யார் தன்னுடைய வயதுக்கேற்ற முதிர்ச்சியோடு வாழுகிறார்களோ அவர்கள்தாம் இளமையுடன் இருப்பவர்கள் .இளமை என்பது புத்துணர்ச்சியுடன் திகழ்வது.
ஆசிரியர் எனும்தலைப்பில்:
1.தொடர்ந்து மாணவனாக இருக்க சம்மதிப்பவர்கள் சிறந்த ஆசிரியராக திகழ முடியும்.
2.உண்மையிலேயே குழந்தையாக இருப்பவர்தான் குருவாக முடியும்.
(தொடர்ந்து கற்க முடியும்.).
இலக்கியம் எனும் தலைப்பில்:-
*அனைத்துக் குறள்களையும் நினைவில் வைத்துக்கொள்வதற்கு சிரமப் படுவதைக் காட்டிலும் ஒரே ஒரு குறள்படி வாழ்ந்தால் அதுவே மேலானது அல்லவா?
(எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. படித்ததில் என்றும் எனக்கு பிடித்த குறள்.)
உணவு எனும் தலைப்பில்:
உணவு என்பது குறியீடு.அந்த ஒரு கணத்தில் தன் உணர்வுகளைக கட்டுப்படுத்த முடியாதவர்கள் மற்ற நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்குச் சாட்சியாக அமைந்துவிடுகிறது.
பொறமை , எளிமை ,சுயநலம்,தேடல், நம்பிக்கை ,பிறப்பு ,மாணவர்கள் போன்ற பல தலைப்புகளில் உள்ள விளக்கங்கள் ,கருத்துகளும் சிறப்பாக உள்ளன.
முடிவெடுக்க முடியாது தடுமாறுவர்க்கு இந்த புத்தகத்தை படிப்பது சிறப்பாக உதவும்.
Leave a comment