காசே கடவுள்

வாசித்தது:காசே கடவுள்
ஆசிரியர்:ஜாவர் சீதாராமன்
பக்கங்கள்: 136
பதிப்பகம்: அல்லயன்ஸ்
விலை:   65 ரூபாய்
வகை:  நாடகம்

ஜாவர் சீதாராமன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து நாவல் வரிசையில் அவரின் ‘நானே நான்’  படித்திருக்கிறேன் மர்மக்கதை போன்று  அருமையாக இருக்கும். ஏழை படும்பாடு எனும் திரைப்படத்தில் ஜாவர் என்ற பாத்திரத்தில்  நடித்ததால் சீதாராமனுடன்  ஜாவர் என்பது ஒட்டிக்கொண்டது.
நாடகப் பாத்திரங்கள்:
மரகத்தின் தம்பி ரவி
ரவியின் காதலி நிர்மலா
ரவியின் நண்பன் ராம்
நிர்மலாவின் சித்தப்பா பர்மா சர்மா
பர்மா சர்மாவின் நண்பன் சேகர்
கதை:
ஊரிலிருந்து  தம்பியைப் பார்க்க வரும் மரகதத்துடன்    வேலைக்காரன்  பெட்டியைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.அப்போது நிர்மலா ஆண்உடையில் சைக்கிளில்  ஒட்டிவர, வழிவிடத் தடுமாறியதில் மரகதம், நிர்மலா  இருவரும கீழே விழ, சின்னதாக வாக்குவாதம்   நடக்கிறது.
நிர்மலா வரும் வழியில் சேகரைப் பார்த்ததால் சைக்கிளை நிறுத்திப்பேச,அப்போது அவன் அவளை விரும்புவதாகக் கூற , அவளோ அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு கேலி செய்ய, அவனோ உண்மையில் விரும்புவதாகச் சொல்ல,அவளோ சித்தப்பாவுக்குத் தெரிந்தால் உங்களை சும்மாவிட மாட்டார் என எச்சரித்துப்  புறப்பட,
அவனோ இனி என்னைப்பற்றி அறிவாய் என்கிறான் மிரட்டுகிற தொனியில் .

உண்மையில்  ரவுடி, திருடனான சேகர் பிசினஸ் மேக்னெட் எனப் பொய் சொல்லி சர்மாவுடன் பழகுகிறான். அவன் மட்டுமின்றி அவனைச் சேர்ந்த இன்னும் சிலரும்  பழக்கமாகிறார்கள்.
நிர்மலாவைப் பெண்பார்க்க வருவதால்  அன்று வீட்டுக்கு வரவேண்டாமென சர்மா சேகருக்குக் கடிதம்  எழுதிவிட ,எரிகிற தீயில் எண்ணெயாக  எரிச்சலாகிறான்.  சகாவான மற்றவர்களுக்கும் சர்மா அதேபோன்று கடிதம் எழுதியிருப்பதை  அறிய,எல்லோரும் சர்மாவுக்கு உதவ போகலாம் என  நினைக்க , சேகர் எப்படியோ அங்கு சென்று குழப்படி செய்ய நினைத்ததற்கு சரியான வாய்ப்பென  மகிழ்கிறான்.

ரவியும் நிர்மலாவும் விரும்புவதை,ராம் மரகதத்திடம்  கூற  தம்பிக்கு திருமணம் நடந்தால் போதும் என்று 
நிர்மலாவைப் பெண்பார்க்க,  ராம் ,ரவி , மரகதம் வருகின்றனர். நிர்மலா கருத்திலும் உடையிலும்  புதுமை விரும்பி ,இருப்பினும்  காதல் கைகூட  பழமை விரும்பியான மரகதத்திற்காக ,புடவைகட்டி,மூக்கில் புல்லாக்கு ,குஞ்சம் வைத்தசடை, தலைநிறைய கூடைப்பூ,நெற்றியில் காலணா அளவு குங்குமம் ? ! என்று அலங்கரித்துக்கொள்கிறாள்.
பெண் பார்க்க வரும் மரகதத்திற்கு  தன்னை சைக்கிளில் இடித்தது அவள் தான்  என கொஞ்சம் சந்தேகம் வருகிறது .நிர்மலாவைப் பாட்டுப்பாடச் சொல்லி பாடிக்கொண்டிருக்க அந்த  நேரம் சேகர் கும்பல் வர அவன் நினைத்து வந்ததற்கு ஏற்ப  உடன் வந்தவர்களால்   பிரச்சனை வெடிக்க, சேகர் பக்கம் புழுதிக்காற்றடிக்க, தென்றலாக வேண்டிய  நிர்மலாவின்  வாழ்வு சுழற்காற்றாய் மாறி சுழன்றடிக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளால்,  சர்மாவும் நிர்மலாவும் ஊரைவிட்டே கிளம்பக் கூடிய நிலையில் ராம் அவர்களைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்று உதவுகிறான்.

தன் பிரச்சனையின் ஆணிவேரே சேகர் என அறியாத சர்மா அவன்  சொல்லியபடியே தன் சிந்தனையை  தவறான பாதையில் திருப்ப கூடா நட்பு கேடாய் முடியும் என்பதாக  கதை முடிவடையும்.
நிர்மலா ரவி ஒன்றிணைந்தார்களா?
சேகரின் திட்டம் நிறைவேறியதா?
சர்மாவுக்கு உண்மை தெரிந்ததா?
படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ரசித்தது:
மரகதம்  தனக்கு  முருகப்பிள்ளை என்பவரிடம்  இருந்து வரவேண்டிய பணத்தை வாங்கி வரச்சொல்லி வேலையாள் சரவணனை அனுப்புகிறாள். அவன் ஒரு தீராஇட்லி காதலன். எந்தஅளவுக்கு எனில் பாட்டன் வைத்திட்டுப்போன இரண்டு காணியையும் இட்லி ஆசையாலேயே விற்று  செலவு செய்ததாகக் கூறுகிறான்.

பணம் வாங்கச் சென்றவன் அவரின் இட்லி சட்னியில் மயங்கி உண்டுவிட்டு பணம் கேட்காது  திரும்பி வந்து எமானியிடம் தவறுக்குத் தண்டனையாக தோப்புக்கரணம்போட விஷயம் தெரிந்த மரகதம் அப்போ உனக்கு பாரத ரத்னா ,பத்ம பூஷண் மாதிரி ‘இட்லி பூஷண்’ பட்டம் கொடுத்திடலாம் என்பாள். நம்மில்  எத்தனை பேர் இட்லி பூஷண் பூஷணி?!

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑