படித்தது : பத்தாயிரம் மைல் பயணம்
ஆசிரியர்: வெ.இறையன்பு
பக்கங்கள்: 301
பதிப்பகம்: நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்
விலை: 300 ரூபாய்
வகை: கட்டுரை
ஆசிரியரைப் பற்றி:
அரசுத்துறையில் பணி ஆற்றும் ஒருசிலர்,பணிசார்ந்தும் ,பணி சாராதும் பணி ஓய்வு பெற்ற போதும் தன்னால் இயன்ற அளவு மக்களுக்கும் , சமூகத்திற்கும் ஏதேனும் ஒருவகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முன்னேற்றுவது என்பதை தன்பணியாகவே கருதி தொடர்கின்றர். அந்த வகையில் அவர்கள் வகிக்கும் பதவிக்கும் பெருமை சேர்ப்பவர்களாக , முன்னுதாரணமாக இருப்பவர்களாக , மக்கள் மனதில் உண்மையான நாயகர்களாகிறார்கள். பெயரிலேயே இறை (தெய்வம்/அரசன் ) அன்பை வைத்திருப்பவரைப்பற்றி இன்னும் என்ன சொல்ல!
புத்தகம் பற்றி:
வழக்கமான பிரயாணக் கட்டுரைகள் எனில் சென்றுவந்த நாடுகள் , அங்குள்ள சிறப்பான வரலாற்று இடங்கள்,புகழ் பெற்ற கோயில்கள், இயற்கை காட்சிகள்,மக்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் , உணவுகள், அத்துடன் தனக்கு நேர்ந்த சுவையான, இனிமையான,அவஸ்தையான, அனுபவங்களைப் பகிர்வது எழுதப்படாத இலக்கணம்.
இறையன்புவின் பயணக்கட்டுரையில் உணவுப்பொருள்கள்,மருந்துப் பொருள்கள் , சிகிச்சை முறைகள், பானங்கள்,உணவுகள்,உடைகள் எப்படி உருவாகின ,அவை எப்படி பிரயாணம் செய்து நாடுவிட்டு நாடு வந்தன என்று ஆராய்ந்து கொடுத்திருக்கின்றார்.இது தவிர மனிதர்களின் ஆபத்தான , சாசமான , நாட்டைக் கண்டுபிடித்த பயணங்கள் பற்றியும் நாற்பத்தைந்து கட்டுரைகளில் விவரித்திருக்கிறார்.
உதாரணத்திற்கு ஒன்று:-
நாலு கால் புயல்:
குதிரையுடன் தொடர்புடைய இரண்டு
பிரபலங்கள் :
பாபர் முதன்முதலில் காண்டாமிருகத்தைப் பார்த்த போது அதனை உற்றுநோக்கி ‘குதிரையைப் போல இருக்கிறது’ என்றாராம். (நமக்கும் வியப்பு அதுஎப்படி ? ) உண்மையில் காண்டாமிருகம் குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். இந்தநுட்பமான அறிவினால்தான் அவர் 14வயதில் அரசராக முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து மாவீரன் அலெக்சாண்டர். சிறுவனாக இருந்த போதே, யூசபேலஸ் என்ற அடக்க இயலாத முரட்டுக் குதிரை தன்நிழலைப் பார்த்தே பயப்படும் அதன் பலவீனத்தை தெரிந்து அதன் முகத்தைத் திருப்பி சவாரி செய்து வெற்றி கொண்டார்.
முப்பது வயதான அந்தக் குதிரை இந்திய மன்னர் போராஸோடு போர் புரியும்போது இறந்தது. அதை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
நம்நாட்டின் ராணாபிரதாப்சிங் அக்பருடன் போரிட்டபோது ,தன்னுடைய பிரியமான குதிரையான ‘சேத்தக்’ முகத்தில் குட்டியானையின் கவசத்தை மாட்டி எதிரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
போரில் கடுமையான காயமடைந்த அவரைக் காப்பாற்றி ,நீளமான கால்வாயைத் தாண்டி எடுத்துச்சென்று பத்திரமான இடத்தில் சேர்த்தது. அவ்வாறு கடமையை நிறைவேற்றி விட்டு தன் உயிரையும் இழந்தது. தற்போதும் கூட ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ராஜஸ்மந்’ என்ற இடத்தில் அதன் சமாதி உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.
இது வரலாற்றுடன் தொடர்புடையது.
ஐந்நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய நாய் சைசில் பூமியில் திரிந்த விலங்குகளுக்கு முன்னங்காலில் நான்கு குளம்புகள்,பின்னங்காலில் மூன்று குளம்புகள் இருந்தன.பிறகு படிப்படியான மாறி குதிரையின் வடிவத்தைப் பெற்றன.
இது குதிரை பற்றிய ஆய்வு வழி அறிவியல் ரீதியானது.
இன்னும் புராணத்தில், வேதத்தில், புனைவில், மூடநம்பிக்கையில் என குதிரையுடன் தொடர்புடைய அத்தனை தகவல்கள் தொகுத்து அளித்துள்ளார்.
உதாரணத்திற்கான ஒன்றின் சுருக்கிய தகவல்களே இவ்வளவு!
கட்டுரையின் சில சுவையான தலைப்புகளைத் தருகிறேன் . நிச்சயம் அதற்காகவே இந்தப் புத்தகத்தை படிக்கத் தோன்றும்.
தலைப்புகள்:
1.எகிறிக் குதிக்கும் தக்காளி
2.ஆம்லெட் வயது 4,000
3.இட்லி ,தோசை ,இடியாப்பம்,பீஸா
4.ஆயிரம் ஜன்னல் வீடு
5.செல்லமே
இந்த புத்தகத்தை சென்ற ஆகஸ்டில் படிக்கத்தொடங்கி இடையில் விட்டு (கிட்டதட்ட பத்து புத்தகங்கள் வரை படித்து பதிவும்எழுதி) பின்பு படித்து (ஒருமாதம்முன்பு )முடித்தும் பதிவு தற்போதுதான் எழுதி முடித்தேன். ஒருவேளை பத்தாயிரம் மைல் பயணம் என்பதால் அதிக நாள் ஆகிவிட்டிருக்கலாம்.
பிராயணத்துடன் இந்த நூலை எடுத்துச்சென்றால் நிச்சயமாக அந்தந்த ஊரைப்பற்றிய மேலதிக தகவல்களுடன் பயணத்தை இனிமையாக்கும் என்பதில் ஐயமில்லை.
Leave a comment