பாவை

வாசித்தது: பாவை
ஆசிரியர்: மு.வரதராசனார்
பக்கங்கள்:184
விலை: 70 ரூபாய்
பதிப்பகம்: மு. வ.பதிப்பகம்
வகை:  நாவல்

மு.வ. என அவர் பெயரைச் சுருக்கலாம். அவரின் தமிழறிவை, தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை  சுருக்கிடமுடியாது. உலகம் சுற்றிய முதல் தமிழ் பேராசிரியர். அமெரிக்க பல்கலைக்கழத்தின் பிலிட் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர்.  இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

கதை பற்றி:
மு.வரதராசனாருக்கம் நண்பர் ஒருவருக்குமான உரையாடலின் விளைவே இந்த கதை. அதாவது தமிழ் இலக்கியங்களில்  காணப்படும்  பசலை ,இற்செறித்தல், அலர், உடன்போக்கு,என்ற காலத்திற்கு  ஒவ்வாத கருத்துகள்,பெயர்களே பிடிக்கவில்லை என்று கூற ,மு.வ. அவர்கள் சொற்கள் விளங்காதவையாக இருக்கலாம். ஆனால் காதலின் தொடக்கம் இவ்வாறுதான் இருக்கிறது. நகரத்தில் வேண்டுமானால்  சூழல்கள் மாறியிருக்கலாம் ஆனால் கிராமத்தில்  இன்றும் அப்படியேதான் இருக்கிறது என்று சொல்லி அந்த அடிப்படையில் எழுதப்பட்ட கதையே பாவை.

கதை:
நிகழும்  எழுதப்பட்ட (1953) காலம்.  மணியக்கார்  மகன் பழனி.   கள்ளுக்கடை (மனமின்றி) நடத்திவரும் வேலுப்பிள்ளையின் மகள் பாவை. வேறு தொழில் செய்துபார்த்து கையைச் சுட்டுக்கொள்ள வேறு வழியின்றி கள்ளுகடை  நடத்தி வருகிறார். பழனியின் அன்னை தனக்குப் பெண்குழந்தை இல்லாததால்  பள்ளிக்கு வரும் பாவையிடம் சிறுவயது முதலே பாசமும் அன்புமாக சடை போடுவது, பூச்சூட்டுவது  என்று பிரியமாக இருக்க,பாவையும் பிரியமாக ஒட்டிக்கொள்கிறாள்.  வழக்கமாக தோழிகளுடன்  தண்ணீர் குடிக்க வரும் பாவை ஒருமுறை தனியே வரும்போது  பெரியம்மா தண்ணி வேண்டுமெனக் கேட்க , அப்போது மணியக்கார் இப்படி ‘எல்லாம் முறையில்லாமல்  கூப்பிடக்கூடாது அத்தை என்றுதான் அழைக்கவேண்டும் .என் பையனத்தான் கட்டிக்கணும் உன்அப்பாவுக்கும் எனக்கும் எவ்வளவு நாள் பழக்கம்’  என்று  கூற அவள் நாணத்துடன் ஓடிவிட இதைப்பார்க்கும் பழனி சிரித்துக் கொண்டிருக்கிறான்.

காலங்கள் ஓட  பெற்றோர் ஆரம்பக்கல்வியுடன் படிப்பை நிறுத்திட வீட்டோடு பருவப்பெண்ணாக பாவை வளர்ந்து நிற்கிறாள்.
வெளியூர் சென்று படிக்கும் பழனியை பத்தாம் வகுப்புடன் மணியக்காரர்  நிறுத்திவிட , காளையான பழனி வீட்டருகே சென்று பார்வையாலயே பாவையை நாட, பாவையின் கண் பாவையில் தன்னைக் கண்டுகொள்கிறான்.
இவை எதையும் அறியாத மணியக்கார்   ஒருநாள் ‘தன்மகன் சொந்தத்தில்  திருமணமே வேண்டாம் என்கிறான். பேசாமல்  உன்பெண்ணைக்கொடன்  என்று கேட்க,’அதற்கு ‘உன்இனமும் என் இனமும் ஒப்புக்கொள்ளாது’ நம்காலத்தில் இதெல்லாம் வேண்டாம்’ என்று வேலுப்பிள்ளை சொல்லிவிடுகிறார்.

பழனியின் நடவடிக்கைகளால் பாவையை அவன் விரும்புவதைத் தெரிந்துகொண்டு தந்தை  அவனக்குப் பெண் தேடுகிறார்.  ஊரில் நன்மதிப்பு பெற்ற ஏகாம்பரச்செட்டியாருடன் பேசி பழனிக்கு புத்தி சொல்ல அவன் பாவையை மணப்பதில் உறுதியாக இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். வேலுப்பள்ளையிடம்  சொல்லி மகளை சிறிது காலத்திற்கு  வேற்றூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்காவது அனுப்பிவைக்கும் படியும்  சொல்கிறார்.
இன்னும் பலபடியாக பெண்ணுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும்  தொல்லை தரும் விதத்தில் யோசனை  சொல்ல, செட்டியார்  அதை ஏற்க மறுப்பதுடன் இந்த யோசனையுடன் என்வீட்டிற்கு வராதே என கடிந்துகொள்கிறார்.
முதலில் நம்ப மறுக்கும் வேலுப்பிள்ளை பிறகு உண்மையை உணர்ந்து பாவையை உறவினர் வீட்டுக்கு  அனுப்பி வைக்கிறார்.

அங்கு அவளை தன் உருப்படாத தம்பிக்கு  கட்டாயத் திருமணம் செய்திட செய்யும் சூழ்ச்சியிலிருந்து தற்காத்து தகை சான்றார் பேணின்  என்பவளாக   இரவோடு இரவாக  அவர்கள் வீட்டிலிருந்து  வித்தியாசமான முறையில்  வெளியேறுகிறாள்.
அதன்பின்னர் ஏற்படும் திருப்பங்கள் எதிர்பாரா திருப்பங்கள்  பாவையும் பழனியும் ஒன்றிணைந்தார்களா?
கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உருவத்தில் பாவை  இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் தன்னை கைப்பாவையாக ஆக்கவிடாமல், தன் பெண்மைக்கு இழுக்கு நேர இருக்கும்போது கொல்லிப் பாவையாக மாறி சீறவும் ,தன் மானத்தைக் காத்து  வாழ்க்கையைத் தேடி தைரியமான பாவையாகிறாள்.

ரசித்தது:
கதையில் ஒரு எழுத்தாளர் தன் மனைவியைப் பற்றிக் கூறும்போது சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்போல புது பட்டுப்புடவை நகை வேண்டும் என்றே வாழ்கிறாள்.  எளிமையாக வாழ்வதைப்பற்றி சொன்னால் அதை அவள் கேட்பதில்லை. அதற்காக  அவளைகெட்டவள் என்று சொல்ல முடியுமா ? . குழந்தைகயைும் என்னையும் நன்கு கவனித்துக் கொள்கிறாள். யந்திரம்  நல்லதுதான் செய்ததையே செய்யும்.செம்மறியாடு நல்லதுதான் முன்னே சென்ற  ஆட்டின் வழி செல்லும் . அப்படித்தான் அவளும் என்ன சொன்னாலும் மறந்துவிட்டோ துடைத்துவிட்டோ  வழக்கம் போலத் தன்வேலையைச் செய்து கொண்டிருப்பாள் என்பார்.
இது மற்ற உறவுகளுக்கும் பொருந்தும்தானே!
அகத்திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை என்று கூறுவர். அந்த அடிப்படையில்  குறுந்தொகை, நற்றிணை போன்ற பாடல் காட்சிகளை விரிந்த பொருளாக கொண்டதுபோல்  அதே வேளையில்    விறுவிறுப்பு குறையாமலும் எழுதியிருக்கிறார்.
அவரின் ‘இலக்கியத்திறன்’ , ‘இலக்கியமரபு ‘இரண்டையும்  ஒன்றாக்கி படைத்திருக்கிறார். 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑