வாசித்தது: சீனிவாச ராமானுஜம்
ஆசிரியர்: ஜோஸ்னா பாரதி (ஆங்கிலத்தில்)
தமிழில்: சிவஞானம்
பதிப்பகம்: அகரம்
பக்கங்கள் :32
விலை: 25 ரூபாய்
வகை:வாழ்க்கை வரலாறு
அகராதியில் சீனிவாச ராமானுஜம் = கணிதம் என்றே பொருள் கொள்ளக்கூடிய அளவுக்கு அவரின் கணித அறிவு திறமை. அறிவியல் கண்டுபிடிப்புகள் கருவிகள் கருத்துகள் மாறிக்கொண்டே ( இருக்கும்) இருக்கிறது. இன்றளவும் அவரின் கணக்கு குறியீடுகள் பின்பற்றப்படுவதும், அவர் விட்டுச் சென்ற கணித தீர்வுகளுக்கு வழி தேடுவது இன்றும் தொடர்கிறதெனில் அவரின் கணித அறிவை எந்த கணித குறீயீட்டால் அளப்பது?
கணித (மேதை ) வரலாறு :
புத்தகம் குறைவான பக்கங்கள் இருப்பதால் குறிப்பேடு என்றே சொல்லலாம். டிசம்பர் 22 இராமானுஜரின் பிறந்ததினத்தை 2011ஆம் ஆண்டு( 125 வது பிறந்த நாளில்) ‘தேசிய கணித தினமாக ‘இந்தியா அறிவித்துள்ளது. தான் படித்த பள்ளியில் 1200 மாணவர்களை 35 ஆசிரியர்களுக்கு எப்படி ஒதுக்கீடு செய்வதென்று ராமானுஜத்தை கேட்கும் அளவு அவர் திறமை பெற்றிருந்தார்.
அவருடைய அறிவுடன் வறுமை போட்டியிட்டது. சில நல்லஉள்ளங்கள் அவருக்கு உதவின.இந்நிலையில் அவருக்குத் திருமணம் நடைபெற , குடும்பம் நடத்த பொருளீட்டுவதற்காக இராமானுஜம் வேலை தேடி சென்னை வந்து எண்ணூர் துறைமுகத்தில் வேலையில் சேர்ந்தார்.
அவரது கணித ஆர்வத்தைக் கண்ட அங்கிருந்த ஆங்கிலேயர் அவரை நீங்கள் ஏன் இங்கிலாந்தின் கணித ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது?.என்று கேட்க இராமானுஜத்திற்கு இந்த யோசனை பிடித்து போக,1913 ஆம்ஆண்டு தன் கணித தேற்றங்களை பேராசிரியர் ஜி.எச் .ஹார்டிக்கு அனுப்ப ,அவரோ முதலில் முகம் தெரியாத யாரோ ஒரு குமாஸ்தா மதராசிலிருந்து அனுப்பிய கடிதம் என நினைத்து அதனைப் பார்க்கவில்லை.
எதேச்சையாக ஒருநாள் எடுத்து படித்தபோது அதில் முடிவுறாத்தொடர் , தொடர் பின்னம் , எண் கோட்பாடு முதலியவை பற்றிய 120 தேற்றங்களை எழுதியிருந்ததைக் கண்டார். கணிதத் துறையில் தேர்ச்சி பெற்றவரான ஹார்டிக்கு அவரின் திறமை புரிந்தது. தன் சக கணிதவியலாளருடன் அவரின் கணக்கீடுகள் அதற்கான விடைகள் பற்றி விவாதித்தனர்.
ஹார்டி ‘ ராமானுஜம் எழுதியுள்ள பெரும்பான்மையான சூத்திரங்கள் என்னை முழுமையாகத் தோல்வி அடையச் செய்துவிட்டன.இதுபோன்ற சூத்திரங்களை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறினார்.
அடுத்தடுத்து அவருக்கான அங்கீகாரமாக சென்னை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவராக அதற்கான உதவித்தொகை, வேலை பார்த்த நிறுவனமும் அவருக்கு சில சலுகைகள் தந்தது.
ஹார்டி இராமானுஜத்தை இங்கிலாந்துக்கு அழைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் அந்நாளில் கடல் தாண்டிச்சென்றால் பிராமணத்தை தொலைத்துவிடுவார்கள் என்ற மூட நம்பிக்கை இருந்தது.
இருப்பினும் அவர் கடல் தாண்டிச்சென்றார் எப்படி? அதன் சுவாரசியத்தை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ராமானுஜம் ஓய்வின்றி தன் கணித ஆராய்ச்சியின் பயனாக மாறா வர்க்கங்கள், கலப்பின எண்களின் பயன்கள் ,நீள்வட்ட( தீட்டா) செயல்பாடுகளின் ஆராய்ச்சி, பை( Pi)யின் மதிப்பீடு, தீட்டா செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவை. அளவை,அலகு குறித்த சமன்பாடுகள் என்று ஏராளமான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.
அவரைப் பற்றி இன்னும் பல தகவல்கள் இந்தப்புத்தகத்தில் உள்ளன. சிறுவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் பக்கங்கள் குறைவாகவும், படங்களுடனும் , பெரிய எழுத்திலுமாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணிதத்தை விரும்பாதவர்கள் கூட இந்தப்புத்தகத்தின் வழியே அவரின் வாழ்க்கை வரலாற்றை அறிபவர்கள் அவரின் கணித ஆர்வம் நிச்சயமாக நம்மையறியாமலே நமக்குள்ளும் வந்துவிடுவதை உணர்வார்கள்.
Leave a comment