அலஸ்காவை தந்து விடு!!

ரஷ்யாவின் யுக்ரேன் மீதான  ஆக்கிரமிப்பு வலுவடைந்து வரும்  இந்நாட்களில்  ரஷ்யாவின் தரப்பில்  இருந்து விசித்திரமான  அச்சுறுத்தல்கள் வந்த  வண்ணம் இருக்கின்றன.

இவற்றிற்கு மகுடம் வைத்தாற்போல்  ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒலெக் மட்வேச்சேவா (Oleg Matveychev)  கடந்த வாரம்  “அமெரிக்கா, முன்னர் ரஷ்யாவிற்கு சொந்தமாய் இருந்த, அலஸ்காவையும் கலிபோர்னியா மாநிலத்தின்  ஃபோர்ட் றொஸ் (FortRoss)   குடியிருப்பையும் ரஷ்யாவிற்கு மீளத்  தர வேண்டும்” எனும் கோரிக்கையை விடுத்துள்ளார். இது அமெரிக்கா  விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கெதிராக அமெரிக்காவிடம் இருந்து பரிகாரம் தேடும் முயற்சி என்பது   இவர் வாதம்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின்   பக்தரான ஒலெக்  இப்படி ஒரு அபத்தமான கோரிக்கை விடுத்ததில்  ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஆனால்  அலாஸ்கா எப்போது ரஷ்யாவின் வசம் இருந்தது என்பதை கண்டறிவோமா?

இதை  முழுவதுமாய் புரிந்து கொள்ள ரஷ்ய பேரரசின் 1700க்கு முந்திய  ஆதிக்க கட்டமைப்பை  காலக் கண்ணாடியில் நோக்கியே  ஆகவேண்டும்.

1639ம் ஆண்டு.  கடல் நீர் நாய்களின்,  (sea otters and beavera)  கம்பளி போன்ற மிருதுவான தோலின் (உரோமங்கள்)  மவுசு சீனாவிலும்  மேற்கத்திய நாடுகளிலும்  உச்சம்  தொட்ட நாட்கள் அவை.  இந்த தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் செல்வந்தர்களின் அடையாளச்  சின்னமாக இருந்தன. இதற்காக ரஷ்யாவின் சைபீரியா  மற்றும் அலாஸ்கா பிரதேசங்களில்   வாழும் இப்பிராணிகள்   வேட்டையாடப் பட்டன.

Fur hunter with hunting dogs in canoe
Fur hunter with hunting dogs in canoe

முதலில் சைபீரியா பிரதேசத்தில்  இப்பிராணிகளை  அவற்றின் தோலுக்காக வேட்டையாடி கொன்று குவித்த பின்னர் ரஷ்யர்களின் கவனம்  1740களில் அருகே உள்ள தங்கள்  அலஸ்கா மாநிலம் பக்கம்  திரும்பியது.

அலஸ்காவின் பூர்வீக குடிமக்களான  டிலிங்கிட்ஸ் (Tlingits)  இந்த பிராணிகளை தோலுக்காக  மட்டுமின்றி  இறைச்சி, கொழுப்பு  போன்ற மற்ற அத்தியாவசிய  தேவைகளுக்காகவும் வேட்டையாடினர். இவர்கள் ஒரு மனித-மிருக சமநிலையை பேணி வந்தனர் என்பது உண்மை.   இதனால் தோல் சேகரிப்பிற்காக  மட்டுமே இங்கு வந்து மிருகங்களை கொன்று குவித்த ரஷ்யர்களுடன் பல மோதல்களும் முறுகல்களும்  வெடித்தன.

படிப்படியாக பூர்வீக குடி மக்களிடம்  இருந்தும் தோல் கொள்வனவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல்,  அவர்களுடன் கூட்டுறவு அமைப்பின்  கீழ் கம்பெனிகளும்  ஆரம்பிக்கப்பட்டன. இது ஒரு  சுமுகமான வாழ்க்கை முறைக்கு வழிகோலியது எனலாம். இந்த  அமைதியான சூழல் புதிய ரஷ்ய குடியிருப்புகள் (colony) இங்கு பல்கிப் பெருக காரணமாகின.

தெற்கே இருந்த அமெரிக்கர்களுக்கு மட்டும் ஆசை வராதா என்ன?  அமெரிக்கரும் பிரித்தானியரும்  1780களில் ருசி கண்ட பூனைகளாக தோலுக்காய் களமிறங்கி அதில் வெற்றியும் கண்டனர்.  ரஷ்யர்கள் சீனாவின்  மேற்குக் கரை துறைமுகங்களில் மட்டுமே  தம் ஏற்றுமதி பொருட்களை  தரையிறக்கினர். ஆனால் அமெரிக்க மற்றும் பிரித்தானியர்கள் சீனாவின் வாசல்படி துறைமுகமான கன்டோன் (Canton)  துறைமுகத்திற்கே வந்து நங்கூரமிட்டனர்.  இதனால் அவர்கள் வியாபாரம் மிக சிறப்புற்றது எனலாம்.

ரஷ்யர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே மலர்ந்த புரிந்துணர்வில்  1799ல் ‘ரஷ்ய – அமெரிக்க கம்பனி’  தொடங்கப்பட்டு வியாபாரம் விமரிசையாக நடைபெற்றது.

இவர்களின் வியாபார பரவலின் ஒரு அங்கமாக ரஷ்யர்கள் கலிபோர்னியா மாநிலத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த FortRoss பகுதிக்கு 1812ல் குடியேறி குடியிருப்புகளை அமைத்து உரிமை கொண்டாடினார்.  அலஸ்காவில்  வேட்டையில் மந்தநிலை ஏற்படதே இந்த இடப்பெயர்விற்கு முக்கிய காரணம்.

ஏன் கலிபோர்னியாவை தெரிவு செய்தார்கள் எனும் உங்கள் கேள்விக்கு பதில்: இக் கடல் சார்ந்த பகுதிகளிலும்  கடல் நீர் நாய்கள் பெருமளவில் வாழ்ந்ததே!

1850களில் அலஸ்காவில் இருந்த நீர்நாய்கள் முற்றாக மறைந்து போகும் நிலைக்கு வேட்டையாடப்பட்டன. இதன் விளைவாக  அங்கு வாழ்ந்த துருவக் கரடி, ஓநாய் மற்றும் துருவ நரிகளும் தோலுக்காக வேட்டையாடப்பட்டன.

இப்போது அமெரிக்காவிலும் அலஸ்காவிலும் ரஷ்யர்கள் ஆதிக்கம் செலுத்தியதற்கான காரணம் புரிந்திருக்கும்.

1,518,800 சதுர கி.மீ பரப்பளவுள்ள அலஸ்காவை  பாதுகாப்பதோ பராமரிப்பதோ ரஷ்ய அரசுக்கு ஒரு சுமையாகவே பட்டது.  மேலும் என்றாவது ஒரு நாள் அமெரிக்கா அலஸ்காவை  ராஜதந்திரம் அல்லது ஒரு போர் மூலமாக  தனதாக்கிக் கொள்ளும் என ரஷ்யா உறுதியாய் நம்பியது.

முடிவு?  மார்ச் 30,1867ல் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி $7.2 மில்லியனுக்கு (இன்றய மதிப்பு ஏறத்தழ $145 மில்லியன்கள்)  ரஷ்யா அலஸ்காவை கைகழுவியது.

Copy of Treasury Warrant issued by US Treasury   US$7,200,000

அங்கு வாழ்ந்த ஏராளமான   ரஷ்யர்கள்   தம் தாய்நாடு திரும்பினர்.

இன்று அலஸ்கா அமெரிக்காவின் 49வது மாநிலமாக திகழ்கிறது.

வாயில்வா  ஜீவன்களின் தோலுக்காக உலக சரித்திரத்தில் அரசுகள் அடித்துக் கொண்டதும் விலை பேசியதும் மனித சமுதாயத்தின் இழிநிலையையே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ரஷ்ய தொலைக்காட்சியில் ஒலெக் மட்வேச்சேவா ஆற்றிய உரையில் அமெரிக்காவின் மேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றும் யுக்ரேனில் பொது இடங்களில் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்   பேசியுள்ளார்

மரணத்தின் எல்லையில் நின்று தவிக்கும் யுக்ரேன் நாட்டு மக்களின் உலராத வடுக்களில் தீப்பொறியை அள்ளித் தெளிக்கும் இது போன்ற வார்த்தைகள்  வேதனையானவையே!

(முற்றும்)

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: