கடலுக்கு அப்பால்(kadalukku appal)

வாசித்தது:- கடலுக்கு அப்பால்
ஆசிரியர்:- ப.சிங்காரம்
வெளியிடு:- தளவாய் பதிப்பகம்

திரை கடலோடி திரவியம் தேடி சிங்கப்பூர்  செல்லும் தமிழர்கள் வாழ்க்கை, உலகப்போர் நிகழ்ந்த காலத்தில் (பார்த்தவரின்) நிகழ்வுகளோடு சேர்த்து சொல்லப் பட்டிருக்கிறது.

கதாநாயன் செல்லையா. தோழன் மாணிக்கம். ஊர்க்காரரும் முதலாளியுமான வானாயீனா. அவரின் மகள் மரகதம். மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஊரில் இருந்து சிங்கப்பூரில் பெட்டியடி பையனாக (கிராமத்து வழக்கில் சொல்வதானால் ஓடும்பிள்ளை) சேர்ந்து  படிப்படியாக உயர்கிறார். தன் முதலாளியின் ஆசியுடன் தனியே தொழில் தொடங்குகிறார். ஊரிலிருந்து வேலைக்கு உதவியாக என்று படித்தவனானசெல்லையாவை சிங்கப்பூருக்கு அழைத்து வருகிறார். ஆனால் மனதில் தொழிலைக் கற்றுக் கொடுத்து மருமகனாக்கிக் கொள்ள நினைத்திருக்கிறார்.

ஊர்சுற்றி பார்க்க வரும் மகள் மரகதம், மனைவி காமாட்சியும் யுத்தத்தினால் ஊர் திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் தங்க வேண்டியதாகிறது. கிராமத்தில் சிறுவயதில் ஒன்றாக விளையாடியது, பெரியவர்களின் இலைமறை காயான எண்ணம், இள வயதினருக்கு வரக்கூடியதான இயல்பான அன்பினால் மரகதம் செல்லையாவின் மனங்கள் இணைகின்றன.

செல்லையா முதலாளியிடம்  சொல்லாமல் நேதாஜியின் படையில் சேர்ந்துவிடுகிறான். அதனால் முதலாளி மனம் மாறுகிறது.தன்னிடம் வேலை செய்யும் நாகலிங்கத்திற்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார். பெண், பெண்ணின் தாயார், தெரிந்தவர்கள் என யார் சொல்லியும்  தன் முடிவை மாற்றாதிருக்கிறார்.

போரின்போக்கு மாறி செல்லையா சிங்கப்பூருக்கு திரும்பி வருகிறான். முதலளாயின் மகன் கலவரத்தில் இறந்து விட அவன் உடலை சுமந்து  வருகிறான். மரகதத்திடம் செல்லையா பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை  என்பவளாக காதலனை காக்க(தண்ணியத் தேடி போகாது) தண்ணீர் மலைக்கு சென்று வேண்டிக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்  என்று மனதை  திருப்பி விடுகிறாள்.

ரசித்தது:- காதலில் தோல்வியுற்ற செல்லையாவை தோழன் மாணிக்கம் வாடா மச்சான்  என்று  புகைத்து கூடி  குடித்து ஆடாமல் இலக்கியத்தை மேற்கோள் காட்டி இடித்துரைத்து திருத்துவது அருமை. ஒரே காதல் ஊரில் இல்லையடா கருத்தை நண்பனுக்கு புரியவைப்பதாகட்டும் இறுதியில் செல்லையாவைத் தேடி வருவதாட்டும் உண்மையில் மாணிக்கம் போன்ற நண்பன் இருந்தால்… என்றுபொறாமைப்பட வைக்கிறார் ஆசிரியர்.

கோவலன் கண்ணகியை பிரிந்து மாதவியை தேடிச் சென்றதற்கு மாணிக்கம் வாயிலாக ஆசிரியர் சொல்லும் கருத்து ரசிக்கவைக்கிறது. ஊருக்கு கிளம்புவதற்கு முன்பாக முதலாளி வீட்டில் சாப்பிடுவதற்கு செல்லையாவை அழைக்கிறார்கள்.காமாட்சி  தன்மகளை  விடைபெற்றுக் கொள்ள கூப்பிடுகிறார்.

இருவரின்  கண்களிலும் காதலை  மறைக்கும் கண்ணீர் திரையிட கைகூப்புகின்றர்.  செல்லையாவிடம் எந்த ஒரு விகல்பம் இன்றி அவர்கள் நடந்து கொள்வது  தமிழ் பண்பாட்டை பாசத்தைக் காட்டுவதாகும்.

வலித்தது:-
முதலாளி, செல்லையாவிடம் தான் ஊருக்குச் சென்று வந்த பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்வித்து  பிழைப்புக்கும் வழிவகை செய்வதாகக் கூறுகிறார். அதுவரை அவரை எதிர்த்து பேசாத செல்லையா பெண்தரவில்லை  என்ற கோபத்தில் முகத்தில் அறைகிறாற் போல் வேண்டாம் நான்வேறுவேலை தேடிக்கொள்கிறேன் என்று கூறிவிடுகிறான். வயது, அனுபவத்தின் காரணமாகவும் நினைத்த வண்ணம்மருமகனாக்க முடியாத வருத்தம், தன்னை நம்பி அனுப்பிய செல்லையாவின் அப்பா, தன் மகன் மறைவு என்று எல்லாம் மனதில் நிழலாட எல்லாவற்றையும் விட பெட்டியடி பையனாக வந்ததுமுதல் பலரும் மதிக்கும் வகையில்வளர்ந்த வலிமிகு வரலாற்றை சொல்லச் சொல்ல செல்லையாவுடன் நாமும் அவரை கோபித்துக் கொள்ள
முடியாதவராகிறோம்.

கடலுக்கு அப்(பொருட்)பால்  தேடிச் செல்லும் செல்லையா மரகதம்  என்ற பெண்(இன்பத்து)பால் அறத்தொடு நிற்றலாய்  தன் பண்புகளால் எந்த சூழ்நிலையிலும் தன்நிலை மறக்காதவளாக இருக்கிறாள். நவரசங்களில் சிருங்கார ரசத்தை அழகான வார்த்தைகளால் அளவாய் சேர்த்து மற்ற சுவையையும்  கலந்து வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் பண்பு குறையாதவர்கள் என்று சிங்காரமாய் சொல்லியதற்கு சிங்காரம் அவர்களுக்கு நன்றிகள்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑