வாசித்தது:-புதிய நீதிக் கதைகள்
ஆசிரியர்:- சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை
சுஜாதாவின் எழுத்துக்கள் பாரம்பரியம் முதல் பாஸ்தா வரை பரிமாறும் பஃபே சிஸ்டம் (நவீன அட்சய பாத்திரம்). சயின்ஸ் , சமூகம் சஸ்பென்ஸ், சரித்திரம், சினிமா என்று எல்லா வகையும் பரிமாறப்படும். விருந்தின் இறுதியில் சாப்பிடும் ஐஸ்க்ரீம் போன்றதான சமயோசித அறிவை நகைச்சுவை சேர்த்து சொல்லப்பட்டவைதான் இந்த புதிய நீதிக் கதைகள்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இதனை பதிவிடுகிறேன். சிறுவயதில் மனதில் ஆழமாய் பதியும் என்பதற்காகத்தான் கதைகள் வழி நீதியை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டுகிறோம். இந்த தொகுப்பில் 130 கதைகள் உள்ளன. முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டது போல் பெரும்பாலும் விலங்குகளை வைத்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது. சிலகதைகளுடன் அதேகருத்தை அறிவியலோடு சேர்த்துக்கொடுத்து நவீன வடிவம் என்றிருக்கிறார். ம்…இதுதானே உங்கள் பாணி என்று நம்மைச் சொல்ல வைத்திடுகிறார்.
முதல் கதை ‘கழுதையும் கோழியும்’ அட்டகாசம். வைக்கோல் களத்தில் நின்ற கழுதையிடம் வந்த சிங்கம் “நான் கழுதையெல்லாம் அடித்துச் சாப்பிடும் பழக்கம் இல்லை, என்ன செய்வது! பசிக்கொடுமை” என்று கழுதையைத் தாக்க வருகிறது. அந்த நேரத்தில் கோழி ஒன்று அபசுரமாக ஏறக்குறைய சுருட்டி ராகத்தில் கூவ, சிங்கத்திற்கு அலர்ஜியான அந்த சத்தத்தால் முன் பாதங்களால் காதை மூடிக்கொண்டு பின் பாதங்களால் ஓட, சும்மாயிராத கழுதை தைரியமாக ‘சிங்கம் பயந்தாரி ‘ என்று விரட்ட, கோழி கூவுவதை நிறுத்த, திரும்பிய சிங்கம் கழுதையை கபளீகரம் செய்துவிடுகிறது.

நீதி: தைரியம் வேண்டும்தான், அசட்டு தைரியமல்ல!
ஓசி மரியாதை: –
விக்கிரகம் ஒன்றை அவசரமாக கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அன்று ஸ்ட்ரைக் ஆனதால் வேறு வழியின்றி கழுதை ஒன்றின்மேல் விக்கிரகத்தை ஏற்றிவர வழியில் பார்த்தவர்கள் எல்லாம் வணங்குகிறார்கள். கழுதைக்கோ தன்னைத்தான் வணங்குவதாக நினைத்து ஒரே குஷி. கோயிலுக்குவந்து விக்கிரகத்தை இறக்கிய பின் ‘என்னை எல்லோரும் வணங்குகிறார்கள். நான் இனி பொதி சுமக்க மாட்டேன்’ என்று முரண்டியது. ‘கழுதையே! வணக்கம் உனக்கல்ல நீ சுமந்த விக்கிரகத்துக்கு’ என்று சொல்லி வண்ணான் நாலு சாத்து சாத்தி முன்னைவிட அதிக சுமையை ஏற்றிவிடுகிறான்.

நீதி: உனக்கு சேராத பெருமையை எடுத்துக் கொள்வது நல்லதல்ல.
பிரார்த்தனை:-
பசியோடிருந்த நரி ஒன்று வழியில் வந்த வாத்துக் கூட்டத்தைப் பார்த்ததும் குயுக்தியுடன் ‘எங்கள் குல வழக்கபடி ஒரு வாத்தை சாப்பிட்டுச் சென்றால்தான் எங்கள் சாமி அருள் புரியும் சீக்கிரம் உங்களில் யாரெனச் சொல்லுங்கள்’ என்றது. புத்திசாலி வாத்து ஒன்று, நரியாரே! எங்கள் குல வழக்கபடி யாராவது இறக்கு முன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வாத்து தேவனைப் பிரார்த்திப்போம் என்றது. ‘அதற்கென்ன பிரார்த்தித்துக் கொள் காசா பணமா’ எனச் சொல்ல வாத்துக்கூட்டம் மொத்தமும் ‘க்வாக்’ ‘க்வாக்’, என்று பிரார்த்திக்க பக்கத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த உரிமையாளன் ஒடி வர மாட்டிக் கொண்ட நரி அடி வாங்கி காலொடிந்து போகிறது.

நீதி: மெலியார்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்ல!
பூனை டாக்டர் எம்.பி.பிஸ்:-
சரணாலயத்தில் பறவைகளுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு ஒரு ருத்ராட்சப்பூனை ஸ்டாத்ஸ் கோப் மாட்டிக்கொண்டு அங்கு சென்றது. ‘இங்கு யாருக்கு உடம்பு சரியில்லை?’ என்று கேட்டது. வாசலில் காவலிருந்த சாதகப் பறவை, ‘நாங்கள் நல்லாதான் இருக்கிறோம். உன்னைப்போன்ற போலி டாக்டர் இல்லாதவரை நன்றாக இருப்போம்’ என்றது.

நீதி:குணத்திற்கு மாறுபட்ட நற்செயல்கள்சந்தேகத்திற்குரியவை.
காதல் :-
பூன ஒன்று ராஜகுமாரன் மேல் காதல்!? கொண்டு பிரம்மாவிடம் சென்று என்னை சிறிது காலத்திற்கு பெண்ணாக மாற்றுங்கள் என்று கேட்கிறது. பிரம்மா சரி அப்படியே ஆகட்டும் என்று மேனகை ரேஞ்சுக்கு அழகாக்கி,’பெஸ்ட் ஆ ஃப் ஆனால் நீ உன் பழைய குணத்தைக் காட்டினால் பழையபடி மாறிவிடுவாய்’ என்று நிபந்தனையுடன் வழக்கம் போல வரமளிக்கப்படுகிறது. பூனை மச்சினி போன வேகத்திலே திரும்ப என்ன ஆச்சு பூனாவதி? (இதுதான் சுஜாதா) அதையேன் கேட்கிறீர்கள்?காதலன் முத்தம் கொடுக்க இருந்த நேரத்தில் எலி ஒன்று ஓரமாக ஓடியது. துரத்தலை மறக்கமுடியவில்லை என்றது பூனை.

நீதி:- இயல்பான குணம் மாறாது/வேஷங்கள் காப்பதில்லை.
புத்தகத்தின் பின்னுரையில்:-
சுஜாதாவின் புதிய நீதிக் கதைகள் வாழ்வின் சில உண்மைகளை அங்கதத்தடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும்புதி நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் பெரியவர்களுக்கும்சிறுவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. உண்மைதான்! சுஜாதா சார் !
Leave a Reply