குற்றால அருவி

(சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெல்பார்ன், ஆஸ்திரேலியா)

“செல்லம், இந்தா இத சாப்புடு” என்று ஒரு சமோசாவை தன் பேத்தி செல்வியிடம் நீட்டினாள் பாட்டி அஞ்சலை.

 உலையில் அரிசியை கொட்டி முடித்து ஒருமுறை கிளறி விட்டபின் எழுந்துவந்த செல்வி, ” பாட்டி ஒனக்கு” எனக் கேட்டாள்.

“நான் அங்க டீ கடையிலேயே டீ குடிச்சிட்டேன். அது போதும் எனக்கு” என்றாள் பாட்டி.

“இந்தா ஒரு வாய் கடிச்சிக்க பாட்டி” என்று பாட்டியிடம் நீட்டினாள் செல்வி.

செல்வியின் கையை மடக்கி அப்படியே அவள் வாயருகே கொண்டு போனாள் பாட்டி. அதற்குள் பாட்டியின் கண்களிலிருந்து குற்றாலம் கொட்டியது. அது பாசத்தாலா அல்லது மகனும் மருமகளும் இல்லையே என்பதாலா என அவளுக்கே தெரியவில்லை.

 இவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிடும் பாசம் எந்த உவமையிலும் அடங்காது. மொழியில்லாமல் பறவைகளும் விலங்குகளுமே அன்பு பாசம்  காட்டிடும்  போது இவர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வதில் வியப்பேது.
 “சரி மிச்சத்தை நான் பாத்துக்கறேன் நீ போய் படிடா”  என்று பாட்டி செல்வியை அனுப்பிவிட்டு , காலை இட்டிலி வியாபாரத்துக்கு அரைத்து வந்த  மாவை பத்திரமாக வைத்தாள்.

இன்னும் சில தினங்களில் சுணாமி குடியிருப்பில்  வீடு தந்திடுவார்கள். சுணாமி வந்து தன் மகனையும் மறுமகளையும் வாரிக் கொண்டு போனபோது மூன்று  வயது பேத்தியை தூக்கிக் கொண்டு வெளியூர் போயிருந்ததால் இரண்டு பேரும் தப்பித்தார்கள். பாட்டியும் சுணாமியில் போயிருந்தால் பேத்தியின் நிலைமை என்னவாயிருக்குமோ; நல்லவேளை அப்படி நடக்கவில்லை.


ஒருத்தருக் கொருத்தரை விட்டுத்தராத நெகிழ்ச்சியான  எத்தனையோ  பாச நிகழ்வுகள். அதையெல்லாம் பாட்டி அவ்வப்போது அசைபோட்டு பார்த்துக் கொள்வாள்.

பேத்திக்காகவே வாழும் அஞ்சலை பாட்டி, பேத்திக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கும் வரை நோயில்லாமல் இருந்தால் போதும் என்றுதான் எண்ணியிருந்தாள்.


  பன்னிரண்டாம் வகுப்பு முடித்த செல்வி இப்போது நீட் தேர்வுக்காக தீவிரமாக படித்து உழைத்துக் கொண்டிருந்தாள். என்ன ஏதென்று விபரம் புரியா விட்டாலும் பேத்தியை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பாட்டி இந்த பரிட்சை எழுதி நெறைய மார்க்கோட  பாஸாகிட்டா டாக்டருக்கு படிக்கலாம்; உன் பேத்தி டாக்டராகிட்டா உனக்கு சந்தோசம்தான”

“அடியே ராசாத்தி, என்னா அப்புடி கேட்டுட்ட? அதவிட வேற என்னா வேணும் எனக்கு”
அவள் சொன்னது போலவே நீட் தேர்வில் அதிகமார்க் எடுத்திருந்தாள். அவள் மருத்துவம் படிக்க ஒரு நடிகரின் அறக்கட்டளை பெறுப்பேற்றுக் கொண்டிருந்தது.
சுணாமி குடியிருப்பு மக்கள் விபரம் அறிந்து கூட்டமாக வந்து விட்டார்கள் வாழ்த்து சொல்ல.

“பாட்டி, ஒன் மவன் இருந்தா கூட இத்தனை மெனக்கெட்டு படிக்க வச்சிருப்பானான்னு தெரியாது; இட்டிலி கடை போட்டு நீ பெருசா சாதிச்சிட்ட”

பாட்டியின் கண்களில் குற்றாலம் கொட்டியது. அது சந்தோசத்தாலா அல்லது இதைப்பார்க்க மகனும் மருமகளும் இல்லையே என்பதாலா என அவளுக்கே தெரியவில்லை. 

************************

“ஒரு சிறுமி கையில் புத்தகத்துடன் உலையில் அரிசி கிளறுவது போன்ற படத்துக்கு எழுதப்பட்ட போட்டிக்கதை”

*************


Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑