மறக்கமுடியுமா? – பகுதி-1

வாசித்த புத்தகம்: மறக்கமுடியுமா? பிரபலமானவர்களின் மனதைத் தொட்டதும்!சுட்டதும்!! (முதல்  பாகம்)
தொகுத்தவர்: தங்க .காமராஜ் அவர்கள்
பதிப்பகம்: நவமணி பதிப்பகம்

77 பிரபலங்களின்மனதைத் தொட்டதும் சுட்டதுமாக நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. சிலர் தொட்டது மட்டும்,சிலர் சுட்டது மட்டும்  ஒருசிலர் இரண்டுமாக  பதிவிட்டிருக்கின்றனர். யாவுமே உண்மை நிகழ்வுகளாய்  இருப்பதனால்   எதைக்கொடுப்பது என சற்று தடுமாறி படிப்பினையாகவும், பயனுடையதாகவும், நெஞ்சை நெகிழ செய்யக்கூடியதுமான நிகழ்வுகளை முடிந்தவரை தொடராக கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

சிலரின் பெயர் மட்டும், சிலரின்பெயரோடு தொழில், பதவி, சிலர் தொழிலில், பதவியில் செய்த  செயல்கள் என்று  அறிந்திருப்போம். அவர்களின் வாழ்வில் நடந்தவற்றை படிக்கும்போது ஓஹோ என்று வாய்விட்டு சொல்ல, அட என்று புருவத்தை உயர்த்த, இதழ் கோடியில் சின்ன புன்னகை வர, விழி ஓரத்தில் துளிர்க்கும் கண்ணீர் என கலவையாய் பல உணர்வுகள் வெளிப்படுகின்றன. புத்தகத்தை முழுமையாக படித்தால் நான் சொல்வது நூற்றுக்கு நூறு சரி என்பீர்கள்.

சில நெருடலான சம்பவங்கள் உள்ளதால்  ரசித்தது  என்று  சொல்ல மனம் இடம்  தரவில்லை. 77 பேரின் பதிவுகளில்  நான்  சொல்ல நினைத்தவர்களின் பெயர்கள், கவிக்கோ அப்துல் ரகுமான், தற்போதைய தலைமைச்செயலர்  இறையன்பு , நீதியரசர்  எஸ்.மோகன், தொழில்அதிபர்  நல்லி குப்புசாமி, நடிகர்கள் நாகேஷ், பார்த்திபன், பிரசாந், மனோரமா, எழுத்தாளர்கள் சாவி, விக்ரமன், புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பத்திரிக்கையாளர்கள் மணவை முஸ்தபா, மாலன், என்று பட்டியல் நீளமானதாய்   உள்ளது.

தொட்டது:- காஞ்சிபுரத்தில் பணியாற்றும் போது இறையன்பும் அவர் மனைவியும் ஸ்நோபி என்ற நாய்குட்டியை  வளர்த்திருக்கின்றனர். தோட்டத்தில் இருந்த கறுப்பன் என்ற நாய்குட்டியும் ஸ்நோபியும் நண்பர்களாகிவிட்டனர்.

ஒருநாள் கறுப்பனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. ஸ்நோபி ஏன் இன்று இவ்வளவு பால் குடிக்கிறது என்று ஆச்சிரியப்படும் அளவுக்கு கிண்ணம்  உடனுக்குடன் காலியாகிக் கொண்டிருக்க, உடல்நிலை சரியில்லாத தன்  நண்பனை பாலைக் குடிக்க உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் ஒன்றும் தெரியாததுபோல் இருந்த ஸ்நோபியின் வேலைதான் என்பது புரிய மனிதர்களிடம் குறைந்த மனிதநேயம் சாப்பாட்டுக்கு சண்டையிடும் நாய்களிடம்! இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி=நாய்
நாய்=நன்றி என்று அகராதியில் போடும் அளவுக்கு நாய்களின் எஜமான விசுவாசம் நாம் அனைவரும் அறிந்ததே!
தோழமை விசுவாசத்திலும் நாங்கள் குறைந்தவர்களில்லை என்று சொல்கிறதா ஸ்நோபி..

முன்னாள் அமைச்சர் திரு க.இராஜாராம்

பேரறிஞர் அண்ணா அவர்கள் சிகிச்சைக்காக  அமெரிக்கா சென்ற போது உடன் சென்றவர்  திரு ராசாராம் .
சென்னை மாகாணம் தமிழ் நாடு எனறு பெயரிடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அண்ணாவுக்கு மீண்டும் உடல் சுகவீனப்படவே அமெரிக்க மருத்துவரான மில்லர் வரவழைக்கப்பட்டார். அண்ணாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனெ  மில்லர் சொல்ல  அடையாறு புற்று நோய் மருத்துவரான திரு கிருஷ்ணமூர்த்தி   கூடாது  உங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு பேஷண்ட் எங்களுக்கு அவர் தலைவர் ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றிருக்கிறார்.

இந்த தகவலை அண்ணாவிடம் ராஜாராம் சொல்ல அவரோ நீ தனியாக மில்லரை சந்தித்து இந்த அறுவை சிகிச்சை செய்து கொ ள்ளாவிட்டால் என்ன ஆகும்? என்று கேட்டு அதற்கு அவர் என்ன பதிலைச் சொன்னலும்  மறைக்காமல் தன்னிடம் வந்து  சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்.

அதன்படி ராஜாராம் மில்லரை சந்தித்துகேட்க அண்ணாவின் தொண்டைக் குழாயில் காலிஃபிளவர் அளவில் புற்று நோய் கட்டி  இருக்கிறது அதை வெட்டி எடுக்காவிட்டால் அது எல்லா நரம்புகளையும் பாதிக்கும்  தாங்க முடியாத வலி ஏற்படும். அதை தவிர்ப்பதற்கே அறுவை சிகிச்சை என்றிருக்கிறார்.

இதை எப்படி அண்ணாவிடம் சொல்வது என சற்று தயங்கிய ராஜாராம் பிறகு மில்லரின் கருத்தை அப்படியே கூறிவிட்டார்.
அண்ணா ஆபரேஷன் செய்ய ஒத்துக்கொண்டார்.  மில்லர் “ஆபரேஷனை நாளை வைத்துக் கொள்ளலாமா”என கேட்க அண்ணா “ப்ளீஸ் நாளை மறுநாள் பண்ணுங்களேன்  “என்று பதிலளிக்க மில்லர் “சிரித்துக் கொண்டே நல்ல நாள் ஏதும் பார்க்கிறீர்களா”? என்று வினவ அதற்கான

அண்ணாவின்  பதிலை அவர் வாய் மொழியாக அப்படியே தருகிறேன்.

“இல்லை டாக்டர் நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.அதை நாளை முடித்து விடுவேன். அப்புறம் நான்  இறந்து போனாலும்  கவலையில்லை. அதற்காத்தான் டயம் கேட்கிறேன்”.

அண்ணாவின் பதிலால் இப்படி ஒரு மனிதரா புத்தகத்தின்  மேல் பற்று கொண்ட இப்படி ஒரு தலைவரா? என்று அசந்து போனது  மில்லர்  மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே.

அதுதான் நம் பேரறிஞர்!
சென்னை மாகாணம் தமிழ் நாடு  என்று பெயர் சூட்டிக் கொண்டது அண்ணாவினால்..
தமிழும் தமிழ்நாடும் அவர் பெயரை அண்ணா!அண்ணா! என்றேதான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑