சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE : பகுதி …1 ( 25 மலர்கள்)

காலக் கண்ணாடி எனும் இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களி்ன் அக புற ஒழுக்கங்களை நமக்கு தௌளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவ்வாறே அக்காலத்திய தாவரங்கள்,விலங்குகள் முதலானவற்றையும் விளக்குகின்றன. இவ்வரிசையில் மலர்கள் பற்றி அறிய வியப்படைகிறோம். பத்துப் பாட்டு தொகுப்பில் உள்ள, கபிலர் யாத்த குறிஞ்சிப் பாட்டு 99 மலர்களைப் பேசுகிறது. தமிழ்த் தாத்தா அரிதின் முயன்று குறிஞ்சிப்பாட்டை வெளிக்கொண்டு வந்தது நம்முடைய பேறு எனலாம். அதிலும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில்  கடைசி மலர் கிடைக்காது  அவர் தேடிக் கொணர்ந்த அரிய முயற்சி வியக்கத்தக்கது.

சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் 99 மலர்களை முதலில் பார்ப்போம்.

தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்துவிளையாடினார்களாம். இதனுடன் மற்ற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பெற்ற மலர்கள் தொடரும். பகுதி 1 இல் 25 மலர்களைக் காணலாம்.

1. காந்தள் மலர் – Glory lily, Indian Coral, Scarlet Bauhinia ( Botanical Name : Gloriosa Superba L)

இலக்கியங்களில் மகளிரின் செஞ்சாந்து பூசிய விரல்களுக்கு உவமையாக சொல்லப்படும் மலர். மலர்ந்து ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இது தமிழ் நாட்டின் ‘மாநில மலர்’.

2. ஆம்பல் – White water lily ( Botanical Name : Nymphaea Lotus L. var. Pubescens ) இன்றைய அல்லி மலரை குறிக்கும். இது வெள்ளை, நீலம், சிவப்பு நிறங்களில் பூக்கும். இரவில் மலர்ந்து காலையில் சூம்பிவிடும். நெய்தல், குவளை மலர்களும் ஆம்பலை போன்றே இருக்கும். குவளை மணமுள்ளது, ஆம்பல் மணமற்றது.

3. அனிச்சம் – Blue Pimpernel, Scarlet Pimpernel ( Botanical Name : Anagallis arvensis Linn )

இது மிகவும் மென்மையான இதழ்களை உடையது; முகர்ந்தாலே வாடிவிடக்கூடியது. செம்மஞ்சள், நீலம் ஆகியவை இதன் நிறம். இப்பூக்கள் சூரியன் உதித்ததும் மலரும்.
4. குவளை – Fragrant water lily ( Botanical Name: Nymphaea odorata Ait )

செந்நிறத்தில் பூக்கும். மணமிக்கது. இதன் மொட்டு மகளிரின் கண்களுக்கு உவமையாகும். செங்குவளை, கருங்குவளை, வெண்குவளை என்ற வகைகள் உண்டு.
5. குறிஞ்சி – Kurinji, Neelakurinji ( Botanical Name : Strobilanthes Kunthiana )

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் பூக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் சிறப்பானது. நீலக் குறிஞ்சி பூப்பதனாலேயே நீலகிரி, நீலமலை என பெயர் வந்தது.
6. வெட்சி, Scarlet ixora ( Botanical Name : Ixora Coccinea L)

வெட்சிப்பூ இட்டிலிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பூ இலை எல்லாம் மருத்துவ குணம் கொண்டது. வெள்ளை சிவப்பு இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும்.
7. செங்கொடுவேரி, Scarlet leadwort (Botanical Name: Plumbago rosea L.)

சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆயுர்வேதத்தில் சிறந்த மருத்துவ மூலப்பொருளாக பயன்படுகிறது. செங்கொடு – வேரி இந்த இரண்டு மலர்களை சேர்த்து செங்கொடுவேரி என குறிக்கின்றனர்.
8. தேமா, தேமாம்பூ, Sweet Mango ( Botanical Name : Mangifera Indica L.)

முக்கனிகளில் ஒன்றான மா மலர். மாவில் இனிப்புமா புளிப்புமா என இரு வகை உண்டு. கொத்துக்கொத்தாக மஞ்சள் நிறத்தில் பூக்கும்.
9. மணிச்சிகை , Purple heart glory ( Botanical Name : Ipomoea sepiaria )

மணிச்சிகைப்பூ செம்மணிப்பூ என்றும் பெயர் பெறும். உவர் மண் சார்ந்த நிலத்தில் ஆண்டு முழுவதும் பூக்கும் கொடி வகை. வெள்ளை நிறத்தில் புனல் வடிவ பூக்கள்.
10. உந்தூழ், Indian thorny Bamboo ( Botanical Name : Bambusa Arundinaca )

புதர் தாவரமாகிய பெரு மூங்கிலின் மலர் பெயர்தான் உந்தூழ். பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும். மூங்கில் பூத்தால் அந்த வருடம் வெள்ளாமை பொய்க்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
11. கூவிளம், bael (Botanical Name : Aegle Marmelos Corr)

வில்வம் என்ற பெயரில் நாம் நன்கு அறிந்தது. வில்வ மரம் சிறிய முட்கள் நிறைந்திருக்கும். இலை, பழம் மரத்தின் பாகங்கள் மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.
12. எறுழ், paper flower climber (Botanical Name : Calycopteris floribunda Lam)

எரியும் தீயைப்போல் இப்பூ இருந்ததாக குறிஞ்சி பாட்டில் கூறப்படுகிறது. இப்பூக்கள் மருத்துவ குணம் மிக்கது; மரம் 10 மீட்டர் வரை வளரும்.
13. சுள்ளி, Porcupine flower (Botanical Name : Barleria Prionitis L.)

இம்மலர் நாமறிந்த நாயுருவி மலர் என்பதாகும். விலங்குகள் உடலிலும் மக்களின் ஆடைகளிலும் தைத்து பற்றிச் சென்று தன்
இனத்தை பெருக்கி கொள்கிறது.
14. கூவிரம், Sacred garlic pear (Botanical Name : Crateva religiosa G. Frost)

கூவிளம் போன்று கூ’ என்னும் அடைமாழி பெற்றது இது. இலக்கியப் பாடல்களில் வேறெங்கும் இப்பெயர் இல்லை.
15. வடவனம், Shri Tulsi ( Botanical Name : Ocimum sanctum L. Var. hirsutum )

இம்மலர் துளசி என்போரும் திருநீற்று பச்சிலை என்போரும் உளர். துளசியிலும் கருந்துளசியைக் குறிப்பதாகவும் சிலர் கூறுவர்.
16. வாகை, Siris tree, Woman’s tongue ( Botanical Name : Albizia lebbeck (L.) Benth )

தூங்கு மூஞ்சி மரம் போலவே வாகை மரம் இருக்கும். வாகை மரத்தின் இலை, பூ, விதை, மரப்பட்டை, பிசின் என அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை.
17. குடசம், Indrajao ( Botanical Name : Holarrhena antidysenterica )

விண்ணை நோக்கி குடை போல இப்பூ இருப்பதாக கூறப்பட்டுள்ளது.குடசப்பாலை, வெட்பாலை, குளப்பாலை இதன் வேறு பெயர்கள். மருத்துவ குணம் மிக்கது.
18. எருவை, Small Bulrush ( Botanical Name : Typha angustata L. )

எருவை ஒருவகை நாணற்புல். எருவை என்பது பெரு நாணல்; வேழம் என்பது சிறு நாணல். இக்காலத்தில் நாணல், நாணாத்தட்டை, கொறுக்காந்தட்டை, பேக்கரும்பு எனவும் கூறுவர்.
19. செருவிளை, Butterfly Pea ( Botanical Name : Clitoria ternatea L. var. albiflora Voigt )

நீல நிற கருவிளை போன்று வெண்மை, மஞ்சள் முதலிய நிறங்கள் கொண்டது. செருவிளை வயலில் விளைவது. கொடி இனம்.
20. கருவிளம், Butterfly Pea ( Botanical Name : Clitoria ternatea L. )

ஊதா நிற சங்குப் பூ. சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படுவது. இதை கருங்காக்காணம் எனவும் கூறுவார்.
21. பயினி, Indian copal tree ( Botanical Name : Vateria indica L. )

பயின் எனில் அரக்கு. பயின் மரம் பயினி எனப்பட்டது. கப்பல் ஓட்டை அடைப்பதற்கும், வைரத்தை பட்டை தீட்டும்போது குச்சியால் வைரத்தை பயின் கொண்டு இணைத்து, குச்சியை பிடித்து சாணைக் கல்லில் பட்டை தீட்டுவர்.
22. வானி, Spindle tree ( Botanical Name : Euonymus dichotomus )

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் இதன் தாயகம். வானி ஆறு படுகை காரணமாய் வானி என பெயர்பெற்றது. இவ்வாறு இப்போது சிறுவானி எனப்படுகிறது
23. குரவம், Asiatic Tarenna ( Botanical Name : Webera corymbosa Willd )

நறுமணம் மிக்கது; பாவை என்றும் அழைப்பர் . குயில்கள் இப்பூவை விரும்பி உண்ணும். இதன் காய்கள்தான் “பாவை” என்பாரும் உளர்.
24. பசும்பிடி, Mysore gamboge ( Botanical Name : Garcinia xanthochymus )

பசும்பிடி என்னும் மலருடைய இளமுகிழ் சுவையாகவும் நறுமணம் மிகுந்தும் இருப்பதால் வாயிலிட்டு மெல்லுவார்கள்.
25. வகுளம், Spanish cherry ( Botanical Name : Mimusops elengi L. )

இன்றைய மகிழம் பூ தான் வகுளம். நறுமணமிக்க மலர்கள். இதன் சாறு ஊதுபத்தி செய்ய பயன்படுகிறது.

பகுதி 2 இல் அடுத்த 25 மலர்களைக் காணலாம்….

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: