என் தம்பி வண்டு

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)

என் தம்பி ஈஸ்வரிடம் இருந்து போன் வந்து பேசி ரிசீவரை வைத்து விட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தேன்.
வீட்டோடு தங்கி சமையல் வேலை செய்துவரும் தங்கம்மாள் என் ஆயாசத்தை பார்த்து விட்டு,
” அம்மா களைப்பா இருக்கா, எலுமிச்சை சாறு தரட்டுமா”என்று கேட்டாள்.”கொஞ்சமா” என்பது போல கையைக் காட்டினேன்.
” அம்மா, ஒங்களுக்கு தம்பின்னா உசிரா”
” அதுக்கும் மேல.””இவ்வளவு வயசானப்றவும் எப்டி மாறாம அப்டியே இருக்கீங்க”
“சரி கேட்டுட்ட. வண்டு கதைய கேளு.”
“எங்களூரில் பள்ளியில் ஏட்டாம் வகுப்பு மேலே படிக்க இரண்டு மைல் போய் பாபநாசம் போர்டு ஹை ஸ்கூல் அல்லது மூன்று மைல் போய் உமையாள்புரம் “தி ஹை ஸ்கூல்” போகனும். எட்டாவதோடு படிப்பை நிறுத்தி நாலு வருடம் ஆகிவிட்டது”

“என் தோழிகளெல்லாரும் என் ‘தம்பி என் தம்பி’ ன்னு பேசறப்பல்லாம் எனக்கு தங்கச்சி தான இருக்கா….சே.. நமக்கும் ஒரு தம்பி இல்லைன்ற வருத்தம் இருந்துகிட்டே இருக்கும். அதைத் தீர்க்கிற மாதிரி தம்பி வந்து பொறந்தான். அவன்தான் ஈஸ்வர்.”

“ஈஸ்வருக்கு மூனு மாசத்ல தலை ஒறுத்து நின்னதும் நான் அவனை தூக்க ஆரம்பிச்சேன். அதிலிருந்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு புகுந்த வீடு போறவரை அவனை பிரிஞ்சதே இல்ல. குரங்கு குட்டிய நெஞ்சில சுமந்து கிட்டிருக்கும்; நான் இடுப்பிலே தூக்கிக் கிட்டு போவேன். ‘மீனாட்சி, குழந்த பத்தரம்’ன்னு அம்மா மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.”
“அவனுக்கு அலங்காரம் செய்ஞ்சு பார்க்கறதுதான் முக்கிய வேலை எங்களுக்கு. ஒரு வருசம் ஆனதிலிருந்து என்னோடதான் படுத்துக்குவான். புரியுதோ இல்லியோ தூங்கறப்ப கதை சொல்லுவேன். அப்படியே தூங்கிடுவான்.””அக்கா தொட்டுக்க” ன்னு கேட்டு முந்தானைய கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவுல வைச்சு நிமின்டிக் கிட்டே தூங்கிடுவான்.”

“வீட்டு கொல்லைக் கடைசில ஒரு வாய்க்காலும் அடுத்து வயல் வெளியுந்தான். மூனு வயசு நடக்கறப்பவே வாய்க்கால் கரையில மேயும் சின்ன நண்டுகள பிடிச்சிக் கிட்டு வருவான்; பயப்படவே மாட்டான். பின்னாடி பெருக்கல் குறியாட்டமும் முன்னாடிப் பக்கம் நேராவும் பெல்ட் வைச்ச நிஜார் பாக்கெட்டில நண்டுங்கள போட்டுக் கிட்டு வந்து காட்டுவான். அதனாலேயே அவன ‘நண்டு’ ன்னு கூப்பிடுவாங்க. நா மட்டும் ‘வண்டு’ன்னுதாங் கூப்பிடுவேன்.”

“என் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அவரு ஒரு வகையில சொந்தந்தான். ஏர் ஃபோர்சில் வேலை, அம்பாலா ங்கிற எடத்தில வேல. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டுந்தான். அதால அவரோட அண்ணனும் அண்ணியும் வந்தாங்க. வாசல் நிலைப் படியைத் தாண்டி உள்ளே வந்ததுதான் தாமதம்  வண்டு ஓடியாந்து
“மாமா” ன்னு அவரு காலக் கட்டிக் கிட்டான். ஒரு கணந்தான் தாமதிச்சார், அப்படியே அவனத் தூக்கிக் கிட்டார்.
எனக்கு ஒடனே இந்த மாப்பிள்ளையைப் பிடிச்சு போச்சு. வண்டு என்னோட வளர்ப்புன்னு யாரோ சொல்லி வச்சிருக்காங்க போலருக்கு; அதனால அவருக்கும் என்னப் பிடிச்சிருச்சாம்.
வழக்கம் போல தன்னோட நண்டு வித்தைய பெண்பார்க்க வந்தவங்கள்டயும் இந்த வண்டு காட்டிட்டான்.
“மாமா பாக்கெட்டுல கை வுடுங்க”
கை வுட்ட மாப்பிள்ளை சரேல்னு கையை எடுத்தார். வண்டு ” ஓ..ஓ..” ன்னு சிரிச்சுகிட்டே பாக்கெட்டிலருந்து நண்டுங்கள எடுத்துப் போட்டான். எல்லோரும் சிரிச்சாலும் அப்பா சிரிக்கல. என் தங்கச்சியிடம் அவன வெளிய அழைச்சிட்டுப் போய் வெளையாட்டு காட்டச் சொன்னார். வந்திருந்தவங்க அத தடுத்தடாங்க “

“என்னோட கவல யெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் இந்த வண்டுவப் பிரிஞ்சு நான் எப்படித்தான் புகுந்த வீட்டில இருப்பேங்கறதுதான்.”
“திருமணம் நடந்து மறுவீடு முடிஞ்சு நான் பூந்தோட்டம் கிற அவர் சொந்த ஊரில இருந்தோம்.
அவர் அம்பாலா என்ற இடத்தில் விமானப்படையில் வேலை செய்றதால மனைவியோட வந்து தங்க குவாட்டர்ஸ் எதுவும் இல்ல. அதனால தாம்பரத்துக்கு மாறுதல் வாங்கி அழைச்சிட்டு போறதாக் கூறி’பூந்தோட்டம்’ ங்கிற அவர் சொந்த ஊரில ஆறு மாசம் இருக்கச் சொன்னார்.
அப்பாகிட்ட இருந்து கடிதம். ஈஸ்வருக்கு காய்ச்சலாம்.
என் கணவர் தாதிக்காமல் கிளம்பச் சொல்லி ஊருக்கு அழைச்சிட்டுப் போனார்.”
“ஐயய்யோ அப்பரம்” தங்கம்மாள்
“அக்கா ..அக்கா.. ன்னு பினாத்திகிட்டு இருந்து இப்பத்தான் தூங்கறான்” என்றார் அம்மா.
வண்டு நல்ல காய்ச்சலோடு தூங்கிக் கிட்டிருந்தான். பார்த்தவள் பதறிட்டேன். செத்த நேரத்தில கண் முழிச்ச வண்டு,
“அக்கா” ன்னு பாய்ஞ்சு என்ன கட்டிக் கிட்டான். உடம்பு அனலாகக் கொதிச்சது. அப்பிடியே சிறிது நேரம் வைச்சிருந்து விட்டு மெல்ல இறக்கி பாயில் உட்கார வைச்சேன். அப்பவும் என் கைகள அவன் விடல. ஒரு வாரத்தில திரும்ப வந்து அழைத்துப் போறதா அத்தான் சொல்லிட்டு போனார். என் வண்டு கூட பொழுது இன்பமாப்  போச்சு.”

“வாழுற நாள் இத்தனைதான்னு தெரிஞ்சிட்டா ஒருத்தர் எப்புடி ஒவ்வொரு மணித்துளியையும் அநுபவிப்பாரோ அதுபோல வண்டு கூட நேரத்தை அநுபவிச்சு செலவிட்டேன்.”
” நாலு ஆண்டா பங்காளி குடும்பத்தில ஏதாவது நடந்து அதனால கோயிலுக்கு போய் மொட்டை அடிக்கறது தள்ளித் தள்ளிப் போனிச்சு. அவனுக்கு இதனால ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைச்சு பின்னி மடித்துக் கட்டியிருப்பேன். என் கல்யாண போட்டோவில் அவன் ரெட்டை ஜடை பார்த்தாலே தெரியும். அப்பறமா எடுத்து காட்டறேன்.
சில நாள்ள நான் கெளம்பிடு வேங்கறதால அப்பா ஒருநாள் காலைல மொட்டை அடிக்கறவரை அழைச்சிட்டு வந்து மொட்டை அடிச்சிட்டாங்க.. எனக்குத்தான் அழுகையா வந்துட்டது. புதன், சனியில் அவனுக்கு எண்ணெய் தேய்தச்சு குளிப்பாட்டி துவட்டிவிட்டு பால் சாம்பிராணி புகை போட்டு முடியை உலர்த்துவேன். சிக்கெடுக்கும் சீப்பால் வலிக்காம, முடி உதிராம சிக்கெடுத்து, கமகமக்கும் தேங்காயெண்ணெய் தடவி அழகாக பின்னி விட்ட முடி போய்டுச்சு. ஆனாலும் குளிப்பாட்டி திருநீறு பூசி வண்டு நின்னப்ப பழனி தண்டாயுதபாணி நிற்கறாப்ல இருந்திச்சு.”
“ஒரு வாரத்தில வண்டுவ கொஞ்சம் கொஞ்சமாக பேசி நான் ஊருக்குப் போரத புரியவைச்சேன்.
சமத்தா டாட்டா காட்டினான், நாந்தான் கலங்கின கண்களை துடைச்சு கிட்டு போனேன்”
“த்சொ..த்சொ…” தங்கம்மாள்
“ஆறு மாசத்தில அத்தான் தாம்பரம் மாற்றல் வாங்கி வந்திடவே நான் பூந்தோட்டத்திலிருந்து தாம்பரம் போய்ட்டேன். அடுத்த மூனு வருடமும் அப்பப்ப பூந்தோட்டம் வரும் போதெல்லாம் வண்டுவை வந்து பார்த்து சந்தோஷப்பட்டு் போவேன். எங்களுக்கு பெல்காம், சண்டிகார், டெல்லி, பெங்களூர் ன்னு மூனு ஆண்டுக்கு ஒருமுறை மாறுதல் வந்து கிட்டே இருந்திச்சு. நாங்களும் ரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை ரெண்டு மாச லீவுல வந்து இருந்துட்டுப் போவோம்.”

“லீவுல வர்ரப்பல்லாம் அத்தானுக்கு அவன்தான் காரியதரிசி.
“அத்தான் பல் துலக்க வேப்பங்குச்சி”
“வெரி குட் நண்டு.”
ஆமாம் அதிகாலையில் எழுந்து இரண்டுபேரும் ஒரு மைல் தூரத்தில இருக்குற கொங்கன் ஆற்றுக்குப் போய் காலைக்கடன் முடிச்சு வருவாங்க.
வந்ததும் அவங்கிட்ட சின்ன குண்டானையும் இரண்டணா காசும் கொடுத்து வீட்டுத் திண்ணையில் உட்கார வைச்சிடுவேன். பாதியா பொளந்த மூங்கில் பிளாச்சியை தோள் நடுவில வைச்சு, ரெண்டு மொனையிலும் தொங்குற உரிகள்ல இருக்கிற பானைகள்ல பதநீர் இருக்கும். அதை விற்பவர் லாவகமான ஒரு நாட்டிய நடை நடந்து முன்னும் பின்னுமாகத் தொங்கும் உரிகளை சேதமில்லாமல் கொண்டாருவார். ரெண்டணாவுக்கு முக்காலிட்டர் குவளையால் நாலு ஊத்திக் குடுப்பார். அந்த ரெண்டு மாசமும் அத்தானும் அவனும் காலையில் குடிப்பது அந்த பதநீர்தான். அத்தானும் வண்டுவும் சரியான ஜோடி”
“ஐ…” தங்கம்மாள்
“ரெண்டு வருடத்துக்கு ஒரு தடவன்னு லீவுல வந்து போய்க் கிட்டிருந்தோம். வண்டு நல்லா வளர்ந்துட்டான். இப்போ
ஐஞ்சாவது படிக்கிறான்.”

“ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லைங்கிற குறை எனக்கு இருந்திச்சு. மூனு முறை தங்காமல் அபார்ஷன் ஆகிவிட்டிருந்தது. உடம்பும் ரொம்ப வீக்கா இருந்தது. தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிக்க வேண்டும். அம்மாவுக்கு சுகர் கட்டுக்கடங்காமல் இருந்ததால் அதிகம் அலைய முடியாது. அதனால் தங்கச்சி கல்யாணத்தை நல்லபடியா முடிக்கறத்துக்காக என்னை அம்மா வீட்டிலேயே விட்டுவிட்டு அத்தான் மட்டும் கிளம்பிப் போனார்கள். அந்த நேரத்தில ஒரு நல்லதும் எனக்கு நடந்திச்சு. பரம்பர நாட்டு வைத்தியர் பனையக் கோட்டையார் என்பவர் எனக்கு பிள்ளைப் பேறுக்கு மாதவிலக்கு நாட்களில் மருந்து கொடுத்து சரி செஞ்சிடலாம்னு சொன்னார். அவர்ட்ட மூலிகைப் பச்சிலை வாங்கி வர அப்பாவும் வண்டுவும் விடியற்காலை நாலு மணிக் கெல்லாம் எழுந்திரிச்சி போவாங்க. வைத்தியர் மூலிகையை பறிச்சு அதை அடையாளம் தெரியாதபடி கசக்கி ஒரு வாழை இலையில மடிச்சு கொடுக்கிறதை வாங்கி வருவாங்க.
முதல் நாள் உப்பு புளி காரம் இல்லாத பத்தியம். வெறும் நொய் கஞ்சிதான். இரண்டாம் நாள் இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். மூன்றாம் நாள் குழைய வடிச்ச சாதம் வெறும் பருப்பு போட்டு சாப்பிடலாம். இது போல மூனு மாசம் மருந்து சாப்பிட்டேன்.
நல்லபடியாக தங்கச்சியின் கல்யாணம் முடிஞ்சது. அத்தான் வந்திருந்து ஊருக்கு அழைச்சுகிட்டு போனாங்க.
அடுத்த ஆண்டே நான் கருவுற்று ஊருக்கு வந்தேன். வளைகாப்பு , பிரசவம் எல்லாமே நல்ல படியா முடிஞ்சது. அழகான பெண் பிள்ளை பெத்தெடுத்தேன்.”
“ஆகா..ஆகா….” தங்கம்மாள்.
“அடுத்த  ரெண்டாண்டுல ஒரு ஆண் பிள்ளை, அடுத்த ரெண்டாமாண்டில இன்னொரு ஆண் பிள்ளைன்னு பெத்தெடுத்தேன். ஒவ்வொரு தடவையும் பிரசவம் முடிஞ்சு குழந்தை ஒரு வயசு ஆகுற போதுதான் அத்தான் வந்து அழைச்சிட்டுப் போவார்.
ஒவ்வொரு குழந்தையையும் வண்டுதான் தரையில கால் படாம பார்த்துக்குவான். குழந்தைங்களுக்கு மூனு மாசம் ஆனதும் பால் பத்தாம கிளாக்ஸோ பால் பவுடர் கலந்து கொடுப்பேன். காலை ஆறு மணிக்கு கலந்து வண்டுவிடம்ஃபீடிங் பாட்டிலைக் கொடுத்து புகட்ட சொல்லிட்டு நான் பாத்ரூம் போய்டுவேன். அவன் பங்கிடா பாலைக் கொடுப்பான். பாலைக் குடிச்சதும் குழந்தை ‘ஆய்’ போவும். அப்போ அழகா தன் காலில உட்கார்த்தி வைச்சிருப்பான். அதுக்குள் நான் வந்து மத்ததை கவனிச்சுக்குவேன். எனக்குத் தெரிஞ்சவரை இப்புடி ஒரு தாய் மாமன் பாத்ததே இல்ல.”
“கோவை சூலூர் மாறுதல் ஆகி வந்தோம். அப்போது வண்டு பட்டப்படிப்பு முடிச்சிட்டான். அவன் சூலூர் வந்திருந்தப்ப எனக்கு உடல் நலமில்லாம படுத்த படுக்கையாகிட்டேன். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிலிட்டரி பெட்டில் அனுமதிச்சாங்க. அவுங்க தர்ர காலை டிபன் எப்படியோ சாப்பிட்டிடுவேன். மதியம் சாப்பாடுதான் எனக்கு சுத்தமா பிடிக்காது. இரண்டு வாரம் காலை ஏழரை மணிக் கெல்லாம் பிள்ளைகளுக்கு டிபன் கொடுத்து மதியத்துக்கும் சப்பாத்தி சப்ஜி செய்ஞ்சு கொடுத்து சென்ட்ரல் ஸ்கூல் டிரக்கில் ஏற்றி விட்டுடுவான். சாம்பார், ரசம், காய் செய்ஞ்சு எடுத்துக் கிட்டு பன்னிரண்டு மணிக் கெல்லாம் என் பெட் பக்கம் வந்து நிற்பான். நான் சாப்பிடர வரை பறிமாறிட்டு கொஞ்சம் ஊர்க்கதை பேசிட்டு பாத்திரங்களை எடுத்துகிட்டு போவான். சூலூர் போய்தான் மூன்று மணிக்கு சாப்பிடுவான். அடுத்த அரை மணியில் பிள்ளைகள் வந்திடுவாங்க. வந்ததும் சாதம் சாப்பிடுவாங்க. சாம்பார்ல முருங்கைக்காய், கத்தரிக்காய் எது போட்டாலும் அதுகூட தெனமும் மாங்காய் போட்டு விடுவான். பிள்ளைங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். சும்மாவா சொல்வாங்க ‘மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும்’னு”
“அம்மா..அரும..” தங்கம்மாள்.
“அடுத்ததா ஆவடி மாறுதல்; அத்தோடு ரிட்டையர்மென்ட். நினைத்தால் போதும்
போரூரிலிருந்து வண்டு வந்து நிற்பான். பிள்ளைகள் கல்யாணத்துக் கெல்லாம் தாய் மாமனாக நின்னு எல்லாமும் செஞ்சான். எங்களின் எண்பதுக்கு எண்பது நிகழ்வுக்கு தாய் வீட்டு சீர் சிறப்பா செஞ்சான்.
அத்தான் போனதுக்குப்பின் அவனே ஆறுதல். பெண் மும்பையில, ஆண் பிள்ளைங்க ரெண்டுபேரும் கனடா நாட்டில.
நினைச்ச மாத்திரத்தில வந்து நிக்கறவன், இந்த கொரோனா வந்ததில இருந்து நாண்கு மாசமா கண்ணால காண முடியல”
கண்களோரம் கசிந்த கண்ணீரைப் பார்த்து, 
“அழுவுறீங்களா அம்மா”

“இல்லை தங்கம்மா. நான் அழுவுல ; ஆண்டவனை நினைச்சு உள்ளம் உருகி நிற்கையில கண்ணீர் ஊற்றாக வரும்னு வள்ளலார் பாடியிருக்கார் ; அது போலத்தான் இது” என்றேன்.             

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: