வீரத் தமிழச்சி BRAVE TAMIL WOMEN – பகுதி 1: வீரமிகு குயிலி

Image Source : Vikatan

தமிழ்ப் பெண்கள் வீரமிக்கவர்கள். புறநானூற்றுப் பெண் முறத்தால் புலியை அடித்து விரட்டினாள்; முந்தைய போர்களில் வரிசையாக தந்தையும் கணவனும் வீர மரணமடைந்திருந்த நிலையில் பச்சிளம்பாலகன் கையில் ஆயுதத்தை கொடுத்து ‘வென்றுவா’ என்று அனுப்பி வைத்தாள்; ‘முதுகில் காயம்பட்டு என் மகன் மாண்டிருந்தால் அவன் பாலுண்ட தனத்தை அறுத்தெறிவேன்’ என சூளுரைத்தவளும் அவளே. இந்த வரிசையில் நேரிடையாக தாங்களே போரில் குதித்த பெண்களும் இருந்தார்கள்.

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் அரசி வேலு நாச்சியார் ஆவார். அவர் கணவர் முத்துவடுகநாத பெரிய தேவர் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டபின் எட்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். அப்போது ரகசியமாக மக்களையும் படையையும் சேர்த்து போருக்குப் பயிற்சியளித்தார். 

குயிலி என்பவள் ஆங்கிலேய உளவாளி வெற்றிவேல் என்பவனை குத்திக் கொன்று வேலுநாச்சியாரைக் காப்பாற்றினார். இதனாலேயே வேலுநாச்சியாரின் மெயக்காவலராக நியமிக்கப்பட்டார்.

1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்க விருப்பாச்சியிலிருந்து வேலுநாச்சியார் கிளம்பினார். அவருக்கு துணையாக மருது பாண்டியர்கள், திண்டுக்கல் கோட்டையிலிருந்து  ஹைதர் அலியின் படையினர் வந்தார்கள். குயிலி பெண்கள் படைக்கு தலைமை தாங்கினார். ஆங்கிலேய தளபதிகள் கர்னல் மார்டின், கர்னல் பான்சோர் மற்றும் ஆற்காடு நவாப்பின் பெரிய படையுடன்  ஒன்று சேர்ந்து வேலு நாச்சியாரை எதிர்த்தனர்.

வேலு நாச்சியார் சக்கர வியூக முறையில் எதிர் கொண்டார். திருபுவனம், கோச்சடை, காளையார் கோவில் போர்களில் இம்முறையாலே வென்றார். காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை கோட்டையை மீட்க படை சென்றது. வீரப் பெண்கள் ஏராளமாக வேலு நாச்சியரர் படையில் இணைந்தார்கள். குயிலி இப்படைப்பிரிவை தலைமை யேற்று நடத்தினார்.

விஜயதசமி தினத்தன்று கோட்டையிலுள்ள அம்பாள் ராஜராஜேஸ்வரியை வழிபட பெண்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள். பெண்கள் படையை சேர்ந்த  வீராங்கனைகள் ஆடைக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கோட்டைக்குள் சாமி கும்பிடப் போவது போல நுழைந்தார்கள். குயிலி கோட்டையை நன்கு ஆராய்ந்தார். கோட்டை கொத்தளம் முழுக்க ஆங்கிலேயர், ஆற்காடு நவாப் படையினர் பலமாக காவல் காத்து வந்தனர். எதிரியை வீழ்த்துவது சுலபமில்லை என்பதை குயிலி புரிந்து கொண்டார்.

குயிலி வெற்றிக்கான திட்டத்தை தீட்டினார். பெண்களெல்லாரும் வழிபடவே வந்திருப்பதாக எண்ணி கவனக்குறைவாக ஆங்கிலேயர்  இருந்து விட்டனர். கோட்டையில் வெடி மருந்து கிடங்கு எங்கேயென்று குயிலி தேடிக் கண்டு பிடித்தார். அதில் வெடி மருந்து, பீரங்கி குண்டுகள், துப்பாக்கி , தோட்டாக்கள் பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு பிடித்தார்.

கோவில் உள்ளே விளக்கெரிக்க கொப்பறையில் வைத்துள்ள எண்ணெயை சேலையில் ஊற்றிக் கொண்டார். கோவில் வெளிச்ச தீப்பந்தத்தை மறைத்து எடுத்துக் கொண்டு வேகமாக வெடிமருந்துக் கிடங்கின் மேடைமீது ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் தீவைத்துக் கொண்டு கிடங்கில் குதித்தார். கிடங்கிலிருந்த வெடிப் பொருட்கள் வெடித்துச் சிதறின. ஆங்கிலேய வீரர்கள் அதனருகே நெருங்கக் கூட முடியவில்லை. தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தது.

வெடி ஓசை கேட்ட வேலு நாச்சியார் படையுடன் கோட்டையுள் நுழைந்து தாக்குதல் நடத்தினார். கோட்டையுள்ளிருந்த பெண்கள் படை வீராங்கனைகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினார்கள். கடுமையான போர் நடை பெற்றது. இறுதியில் வேலு நாச்சியார் வெற்றியடைந்தார்; கோட்டையை மீட்டெடுத்தார். 

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரிடம் இழந்த நாட்டை மீட்டவர் வேலுநாச்சியார் மட்டுமே.
இதை சாத்தியப்படுத்தியது குயிலியின் உயிர்த் தியாகமேயாகும்.

குயிலிதான் உலகின் முதல் தற்கொலைப் போராளி. சிவகங்கையில் அரசு ராணி வேலுநாச்சியார் அவர்களுக்கு மணி மன்டபம் அமைத்து, அங்கேயே வீரத் தமிழச்சி குயிலிக்கு நினைவு சின்னம் அமைத்துள்ளது.. 

குறிப்பு:- குயிலியை கற்பனையென்று கூறுவோரும் உண்டு. ஜாதி அடிப்படையில் முரண்பட்ட செய்திகள் உண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறுவ முற்படுகின்றனர். தமிழினத்தின் வீரவலாறு என பெருமை பேசுவதுதான் நம் குறிக்கோள்.

Image Source : Vikatan

6 thoughts on “வீரத் தமிழச்சி BRAVE TAMIL WOMEN – பகுதி 1: வீரமிகு குயிலி

Add yours

  1. இதுவரை நான் போராளி குயிலி குறித்து எங்குமே படித்ததில்லை. அரிய தகவல்
    அறிய வைத்தமைக்கு நன்றி.
    இந்த தலைமுறையில் யாரோ சிலர் படித்தாலும் நல்லது.
    வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

    Like

    1. போற்றுதற்குரியது என்பதில் ஐயமென்பதில்லை.

      Like

    2. ஆனாலும் குயிலி பற்றிய செய்தியில் சில முரண்கள் காணப்படுகின்றன. தமிழரின் வீரத்தை பறைசாற்ற ஒரு சான்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

      Like

  2. தன் திறமைகளை பதிய வைக்கவோ அல்லது பதிய வைக்க தெரியாமலோ போன தால் தான் நிறைய செய்திகள் ஆதாரம் இல்லாமல் போய் இந்த நிலையில் நம் இனம் நிற்கின்றதோ!

    Like

    1. உண்மைதான் வேம்பு.
      தமிழர் வரலாறு சங்க இலக்கியங்களால் ஒருவாறு தப்பித்தாலும் முழுமையாக கிட்டவில்லை.
      இந்த வேதனை ஒரு புறமிருக்க சமகால நிகழ்வுகள் முற்றும் பதிவு செய்யப் பட்டுள்ளனவா என்பதும் கேள்விக்குரியது. பதிவு செய்யப் பட்டுள்ளவையும் காழ்ப்பு உணர்வின்றியும், நேர்மையாகவும் பதிவு செய்யப்படவில்லையோ என்ற ஐயம் இருக்கிறது.

      Like

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑