அப்படியே நில்

விடியற்காலையில் ஆரம்பித்த மழை இன்னும் விட்டபாடாய் இல்லை. வீதியெங்கும் புரண்டு கொண்டு கொண்டு மழை நீர் ஓடுகிறது. 

ரோகிணிக்கு காலை வேளை என்பது மிகவும் முக்கியம். காலை பொழுதை ரசிக்க ஒரு கப் காஃபியுடன் வாசலில் உள்ள தோட்டத்தின் முன் வந்து அமர்ந்து விடுவாள். தொடர்ந்து பெய்யும் மழையால் இன்று வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு வெளியே நோட்டம் விடுகிறாள். இரண்டு நாட்களாய் பார்க்கிறாள் வீட்டின் முன் தோட்டத்தில் புதிதாய் ஒரு பறவை வந்து அமர்ந்துள்ளது. தானியம் வைத்து பார்த்தாள்…சோற்று பருக்கை, சிறு கிண்ணத்தில் நீர் வைத்தாள். ம்ஹூம் ஏதும் அது தொடவில்லை. வெற்று பார்வை பார்த்தபடி அமர்ந்து விட்டு சென்று விடுகிறது. இன்று அது அமரும் இடம் காலியாக இருந்தது. இந்த திடீர் மழையால் அது இங்கு வரவில்லை போலும். 

ரோகிணி….. டீ…. ரோகிணி…. அம்மாவின் குரல் அடுத்த வீட்டு மரக்கிளையில் அமர்ந்திருந்த மைனாவை பறக்க வைத்தது. அம்மா எப்போதும் இப்படித் தான் அலறல் குரலுக்கு சொந்தக்காரி. அன்பாக விசாரிக்கும் நல்லா இருக்கியா..? என்ற வாரத்தை கூட…. அம்மா கேட்கும் போது மற்றவர்கள் பார்வைக்கு மிரட்டல் தொனியில் இருக்கும். அப்பா அம்மாவுக்கு நேர் எதிர். நறுக்கு தெறித்த பேச்சு. தேவையில்லா இடத்தில் நாலு வார்த்தை கூட சேர்த்து பேசமாட்டார். 

ரோகிணி….. மீண்டும் அம்மாவின் குரல்…. 

தோ… வந்துட்டேன் ம்மா. ஏன் இப்போ கத்தற… என்று சிடுசிடுத்தாள். 

இன்னும் காஃபி முழுங்கலையா…? எப்போ கொண்டு வந்தே. பாரு… ஏடு விழுந்து போச்சி. சரி குடு…சூடு பண்ணி கொண்டு வரேன் என்று என் பதிலை எதிர்பார்க்காமல் காஃபி டபராவை தூக்கி சென்றாள். இதான் அம்மா. நாம் அவளை புரிந்து கொண்டோம் என்று நினைத்து அவள் இப்படித்தான் என்று முற்று புள்ளி போட்டு விடுவோம். ஆனால்…அவளோ என்னை புரிந்து கொள்ள முடியாது என்று கமா போட்டு தொடரும் விந்தை. 

சற்றே…. மழை விட்டு தூரல் மட்டுமே இருக்க… வீட்டு வாசலில் ஹாரன் சப்தத்துடன் ஓலோ கார் ஒன்று வந்து நின்றது. சிந்தனை கலைந்து வெளியே எட்டி பார்த்தாள் ரோகிணி. இரண்டு பெரிய சூட்கேசுடன் மிருதுளா காரிலிருந்து கீழே இறங்கி… தன் ஹாண்ட்பாக் கை திறந்து பணத்தை எடுத்து நீட்டுவதை பார்த்தாள். 

இவ்வளவு காலையில் இவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள். வீட்டிற்குள் பார்த்து குரல் கொடுத்தாள் ரோகிணி. அம்மா… அப்பா… மிருது வந்திருக்கா. கார் மழை தண்ணீரை வாரி அடித்தபடி ஒரு வட்டம் அடித்து திரும்ப சென்றது. 

பெற்றோர் இருவரும் வாசலுக்கு விரைந்து வர….தன் இரண்டு சூட்கேஸையும் தரையில் உருட்டிக் கொண்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து… முன் தோட்டத்தின் வழியே வீட்டிற்குள் வர ஆரம்பித்தாள் மிருதுளா. அப்படியே நில்லு….!!! என்ற அம்மா வின் வெண்கல குரல் அவளை தடுத்து நிறுத்தியது…

மிருதுளா சட்டைசெய்யாமல் சூட்கேஸ்களை இழுத்த வண்ணம் அடிமேலடி யெடுத்து வைத்து வந்தாள்.

“கோமதி, அவள் வரட்டும், தடுக்காதே” அப்பா அம்மாவை அடக்கினார்.

நூறு மீட்டர் ஓட்டம் ஓடி வந்தது போல் அம்மாவுக்கு மூச்சு வாங்கியது. அவள் தன்னுடைய ஆத்திரத்தை கட்டுப்படுத்தத் திணறினாள்.

மிருதுளாவை அம்மா கோமதிக்கு கட்டோடு பிடிக்காது.

அம்மா கோமதியின் தாயார் மஞ்சள் காமாலை நோயினால் இறந்து போனாள். அப்போது கோமதிக்கு ஒரு வயதுதான் நிறைந்திருந்தது.

கோமதியின் அப்பா செல்வரங்கத்துக்கு பூர்வீக சொத்து எக்கச்சக்கம். எல்லாரும் கோமதியை கவனித்துக் கொள்ளவாவது கல்யாணம் பண்ணிக்க கட்டாயப் படுத்தினார்கள். அவர் பண்ணிக்கவே இல்லை.

தன் மகள் ஒருவயதிலேயே தாயில்லா பிள்ளையாகி விட்டதை எண்ணி எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருந்தார். செல்வரங்கம் ஒரு சமூக சேவகர். கோமதி போல தாயில்லாத, தந்தையில்லாத குழந்தை களுக்கு ஒரு காப்பகம் துவங்கினார்.

அக்கம் பக்கத்து ஊர் பிள்ளைகளை யெல்லாம் இவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

குழந்தைகளைப் பராமரிக்க ஆயாக்களையும் ஒரு ஆசிரியையும் பணியமர்த்தினார். அவர் தன் ஆறு வயது பெண் குழந்தையுடன் காப்பகத்தின் வெளியே பக்கவாட்டில் இருந்த அறையில் தங்கிக் கெண்டார். மகளை அருகிலிருந்த பள்ளியில் சேர்த்து படிப்பை தடை படாமல் தொடரச் செய்தார்.

செல்வரங்கம் சுற்றிலும் உள்ள ஊர்களில் கோவில் கைங்கர்யம், பொதுப்பணி என்று ஈடுபடுத்திக் கொண்டார். கோமதியின் தேவைகள் அனைத்தையும் தானே கவனித்துக் கொண்டார்.

கோமதி பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியது முதலே அந்த ஆசிரியை யின் மகள்தான் கோமதியை தன்னுடனே பள்ளிக்கு அழைத்துப் போவதும், திரும்ப அழைத்து வருவதுமாக இருந்தாள். மாலை வேளைகளிலும், சனி, ஞாயிறு போன்ற விடுமறை நாட்களிலும் கோமதி விளையாட  காப்பகம் வந்து விடுவாள்.

காப்பகத்து ஆசிரியையின் மகள்  பட்டப் படிப்பு  முடித்து பி.எட் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டாள். காப்பகத்தில் குழந்தைகள் அதிகமாகிவிட்டார்கள். அம்மாவோடு சேர்ந்து கூடுதல் ஆசிரியையாக அங்கேயே வேலை செய்தாள்.

கோமதி வளர்ந்து பட்டப்படிப்பை முடித்துவிட்டாள். உடனேயே சொந்தத்திலேயே மாப்பிள்ளை பாரத்து கல்யாணமும் முடித்து தன் கடமையை நிறைவேற்றி விட்டார்.

செல்வரங்கம் ஆசிரியையிடம் கேட்டார்,

” என் மகளை விட உங்கள் மகளுக்கு ஐந்து வயதாவது அதிக மிருக்கும் இல்லையா?”

“ஆமாம் இருபத்தைந்து ஆகிறது.”

“அப்போ அவளுக்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்திட வேண்டியதுதான். ஏற்பாடு செய்கிறேன்”

ஆசிரியை மகள் முந்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஐயா, அவசரம் வேண்டாம். நான் அன்னை தெரசா போல் இல்லா விட்டாலும் நல்ல சேவகியாக பேரெடுக்க வேண்டும். அதற்கு இடையூறு வேண்டாம்”

“வாழ்க்கைத் துணையின் தேவை இப்போதில்லா விட்டாலும், வயதான காலத்தில் அது நிச்சயம் தேவை அம்மா”

“உண்மைதான். நீங்கள் எந்த நம்பிக்கையோடு கல்யாணம் இன்றி வாழ்கிறீர்களோ அதே நம்பிக்கையோடு நானும் வாழ்வேன்.”

“என்னோடு உன்னை ஒப்பிடுவது சரியில்லை, யோசித்து சொல்”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த காப்பக ஆயா ஒருத்தி,

“ஐயா சொல்வதுதான் சரி”என்றாள்

“அது சரிதான். ஆனால் என் விருப்பம் வேறு ஆயா. ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் ஐயா சமூக சேவை செய்கிறார்?”

” மறுபடியும் கல்யாண பந்தத்தில் மாட்டினால் இதில முழுசா கவனம் காட்ட முடியாது.”

“அதேதான், என்னாலும் முழு கவனம் காட்ட முடியாது. அன்னை தெரசா மாதிரி வேண்டாம். சுயமரியாதைச் சுடர் மணியம்மை மாதிரி சேவை செய்ய விரும்புகிறேன்”

“…………………….”

“புரிய வில்லையா? என்னைப் போலவே சேவை மனப்பான்மை உள்ள ஒருத்தர் கிடைத்தால் பரவாயில்லை. இரண்டு பேரும் ஒத்த கருத்தா இருப்போம்ல”

அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்கள்.

செல்வநாயகத்துக்கு இதயத்தில் கொஞ்சம் பிரச்சினை இருந்து வந்தது. மருத்துவ ஆலோசனையில் ஆன்ஜியோ செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது. தள்ளித் தள்ளி போடப்பட்டு இனியும் ஒத்திப் போட முடியாது என்ற நிலை. அவரின் நலம் விரும்பிக ளெல்லாரும் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். 

மருத்துவமனையில் சேர்த்தது முதல் , சிகிச்சை முடிந்து வீடு வரும் வரை ஆசிரியைதான் உடனிந்து கவனித்துக் கொண்டாள். கோமதி ஒரு முறை வந்து நலம் விசாரித்துப் போனாள்.

” உனக்கு மிகவும் நன்றி.”

” எதற்காக நன்றி ஐயா?”

“யாரோவான நீ உறவு போல பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டாயே” 

“அது எனக்கு கிடைத்த பாக்கியம்”

செல்வநாயகத்துக்கு மறுமொழி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை.

காப்பகத்து பிள்ளைகள் படிப்புக்குப் பின் நல்லநல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்தார்கள்.

வெளிநாட்டிலும் கூட போய் வேலை செய்தார்கள். காப்பகத்துக்கு ஏராளமாக நன்கொடை குவிந்தது.

காப்பகத்தை அறக்கட்டளையாக்கி நெறிப்படுத்தினார். அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

கோமதி தன் பெண் குழந்தை ரோகினியுடன் எப்போதாவது வந்து அப்பாவைப் பார்த்து விட்டுச் செல்வாள்.

செல்வரங்கத்திடம் இளம் ஆசிரியை தன் திருமணப் பேச்சை தானே துவக்கினாள்.

“ஐயா, முன்பொருமுறை எனக்கும் ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்றீர்களே; பின் அதைப் பற்றி நீங்கள் பேசவே இல்லையே ?”

“………………………”

ஆயாவிடம் ஆசிரியை பேசிக் கொண்டிருந்தது எப்படியோ செல்வரங்கத்திற்கு தெரியும் போல. அதனால்தான் அவர் அது பற்றி மறுபடி பேசவே இல்லை.

“ஐயா, மணியம்மை பெரியாரின் கொள்கைக்கும், போராட்டங்களுக்கும் துணை நின்றதை நீங்கள் அறிவீர்கள் தானே?”

“தெரியும்.”

” அது போல உங்களுக்கு ஒரு துணை வந்தால் வேண்டாம் என்பீர்களா?”

“அது..வந்து….”

” தெரியும். சமுதாயம் என்ன சொல்லும் , அதானே?”

“……………..”

“சமுதாயத்துக்கு சேவை செய்பவர்கள் விமர்சனத்துக்கு அஞ்சக்கூடாது ஐயா.”

“நீ சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். எனக்கோ வயது நாற்பத்தைந்து; உனக்கு இருபத்தேழு. என் மகளை விட ஐந்து வயதுதான் நீ மூத்தவள். இது பொருந்தாக் காமம். என் மனம் இதற்கு ஒருநாளும் ஒப்பாது”

“ஐயா நான் உங்களோடு சேரந்து இந்த தொண்டு செய்ய வேண்டுமென்றால், நமக்குள் திருமணம் அவசியம். இப்பாதே என் காதுக்கு சில செய்திகள் வருகின்றன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் திருமணம் அவசியம்.”

செல்வரங்கம் குழப்பத்தில் ஆழ்ந்து போனார்.

“ஐயா, எனக்கு உங்களின் கவுரவமும், நல்ல பேரும் கெட்டுடக் கூடாதுங்கறது முக்கியமாப்படுது”

காப்பகத்தில் இருந்து படித்து இன்று வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் பேசிவைத்துக் கொண்டு ஒரே நேரத்தில்தான் ஊருக்கு வருவார்கள்.

வந்தவர்கள் பேசிப் பேசி செல்வரங்கத்தை சம்மதிக்க வைத்து திருமணத்தை முடித்து விட்டார்கள்.

திருமணத்திற்கு கோமதியோ அவள் கணவனோ வரவில்லை. தன் மகளின் திருமணம் அவள் எண்ணம் போலவே நடைபெற்றதில் ஆசிரியைக்கு நிம்மதி. தன் காலத்துக்குப் பின் தன் மகளின் நிலை என்னவாகுமோ என்ற கவலை தீர்ந்தது. அந்த நிம்மதியோடே சில வருடங்கள் வாழ்ந்து விட்டு மறைந்து போனாள்.

அந்த இருபது வருடங்களில் காப்பகம் பெரிய வளர்ச்சியைக் கண்டது. அங்கு நடைபெறும் பல நிகழ்ச்சிகளுக்கு இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் எல்லாம் வருவது வாடிக்கை.

கோமதி ஒருமுறை காப்பகத்துக்கு வந்திருந்தாள். அவள் அப்பா அப்போது அங்கில்லை; ஆசிரியையும் ஆயாக்களும் மட்டும் இருந்தார்கள். 

கோமதி கேட்டாள்,

“ஆயா அப்பா எப்போ வருவாங்க”

ஆயா, 

“அவரு வூட்டுக்காரம்மாவைக் கேட்டாதான தெரியும் ” என்றார்.

” கேட்டுச் சொல்லுங்க”

ஆயா அமைதியாக இருந்தார்.

‘இது குடும்ப விஷயம் போல தெரியிது; நாம மாட்டக் கூடாது’

ஆசிரியை நேரிடையாகவே பேசினாள்.

“ஐயா வெளியூர் போயிருக்கிறார். நாளை மாலைதான் வருவார். நீ வீட்டில் போய் இரு ” 

என்று கூறிக் கொண்டே குழந்தை ரோகினியை வாங்கக் கை நீட்டினாள்.

” ஒன்னும் வேணாம். நான் ஒருத்தி அவரைப் பார்க்கரதுக்கு இங்க வந்திருக்கேன், அவரு பாட்டுக்கு ஊருக்கு போயிட்டாரா?”

” நீ வர்ரது அவருக்கு மொதல்லியே தெரியுமா ?”

“………………….”

” தெரிஞ்சிருந்தா போயிருக்க மாட்டார்”

“சொந்த பொண்ணவிட யார்யாரோ இந்த எடத்துக்கு உரிமை யாயிட்டாங்கள்ள”

“கோமதி, இது அறக்கட்டளையோட காப்பகம். நீ வீட்ல போய் இரு. உனக்கான எல்லா உரிமையும் அங்க இருக்கு. ஆயா இவங்கள வீட்ல கொண்டு விட்டுடுங்க”

ஆயா கூப்பிட்டும் கோமதி கிளம்பவில்லை.

“நான் வந்திருக்கிறதை சொல்லி அவரை உடனே வரச் சொல்ல முடியாதாமா ?”

“அவர் மட்டும் தனியா போகல; ஊர்ப் பெரியவங்க சில பேரும் முக்கிய விஷயமா போயிருக்காங்க. அதனால அவங்கள வுட்டுட்ட வர முடியாது”

சிறு அமைதி நிலவியது.

” நீ இருக்குமட்டும் நான் இங்க தல வச்சுகூட படுக்க மாட்டேன்”

அவ்வளவுதான்; கோமதி குழந்தையை தூக்கிக் கொண்டு கோபாவேசமாக போய்விட்டாள்.

மறுநாள் செல்வநாயகம் வந்து செய்தி அறிந்து உடனே மகள் வீட்டுக்கு புறப்பட்டு போனார். போனவர் ஏன்தான் வந்தோ மென்று நொந்து திரும்பினார். அந்த ஆசிரியையை அறுத்து விட்டால்தான் மகள் என்ற உறவு நிலைக்குமாம்; அவருடைய எந்த ஆஸ்தியும் அவளுக்கு வேண்டாமாம்.

செல்வரங்கத்தின் உடல் நலம் குன்றத் தொடங்கியது. படுக்கையில் விழுந்தவர் எழாமலே அறுபத்தேழாம் வயதிலேயே போய் சேர்ந்தார்.

செய்தியை அறிந்த கோமதி தன் கணவனுடனும் , மகள் ரோகினியுடனும் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுப்போனாள்.

பதினைந்தாம் நாள் காரியம் முடிந்த இரண்டாவது நாள் காலை அந்த மிருதுளா எனும் ஆசிரியை , மழையையும் பொருட் படுத்தாமல் கோமதி வீட்டுக்கு வந்தாள்.

கோமதி வீட்டின் போர்டிகோவில் வாயிற்படியை ஒட்டினாற்போல் ஐந்தடிக்கு திண்ணை மாதிரி சிட்டவுட் இருக்கும். அந்த திண்ணையில் இரண்டு சூட்கேஸையும் தூக்கி வைத்தாள். ரோகினியை அருகில் கூப்பிட்டு சாவியைக் கொடுத்து அவற்றை திறக்கச் சொன்னாள். ஒரு சூட்கேஸில் முழுவதும் பட்டுப் புடவைகள். எல்லாம் கோமதியின் அம்மாவுடையவை. இரண்டாவதில் ஒரே வெள்ளிப் பொருட்கள். தட்டு, சொம்பு,காமாட்சி விளக்கு, ஜோடிக் குத்து விளக்குகள், கோமதியின் சிறுவயது கொலுசுகள்,தண்டை, பாலடை எல்லாமும் வெள்ளியில். கும்பகோணம் ஈய உருளி, ரசம் வைப்பதற்கு. இதைத்தவிர தங்கத்திலான இரட்டைவடம் செயின், அட்டிகை,ஆரம், ஒட்டியாணம் எல்லாம் தனித்தனி நகைப் பெட்டிகளில் உள்ளே இருந்தன.

“இதெல்லாம் உன் பாட்டியோடது. இதெல்லாம் உன் தாத்தா பேரிலான சொத்துக்களின் பத்திரங்கள். உரிய வாரிசு உரிமை பத்திரம் மனு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்”

மிருதுளா எழுந்து நடக்கவும் , புக் செய்திருந்த கார் வரவும் சரியாயிருந்தது.

உள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்து

“அப்படியே நில்லு” 

என்று சொல்ல வந்த கோமதி கதவருகில் ஸ்தம்பித்து நினறுவிட்டாள்.

இரண்டு நாளாய் வெறுமனே வந்து உடகார்ந்து பார்த்து விட்டு செல்லும் பறவை எங்கிருந்தோ திடீரென பறந்து வந்து மிருதுளா தலை மீது வட்டமடித்து பறந்து சென்றது.

Advertisement

6 thoughts on “அப்படியே நில்

Add yours

  1. கதையைத் தொடர்ந்த கதை அருமை. பெற்ற மகளாக இருந்தாலும் சமூகத்துடன் சேர்ந்துதான் அவள் தந்தையைப் பார்க்கிறார்.
    கதாசிரியர் ரத்ன ராஜீ எனும்
    ராஜராஜேஸ்வரன் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே கற்பனை வளத்துடன் பேசக் கூடியவர் மிக தாமாதமாக கதாசிரியர் ஆகியிருக்கிறார்.
    மேலும் பல நல்ல கதைகள் அவர் எழுத வேண்டும்.
    பாபநாசம் நடராஜன் (வேம்பு )

    Liked by 1 person

    1. உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வேம்பு..

      Like

  2. அந்த பறவை ….. கடைசியில் சஸ்பென்ஸ் உடைந்தது…. முன்னோர்கள் அந்த பறவை வடிவத்தில் வந்து கவனித்து சென்றனர்…. அருமை… அருமை….கவித்தலத்தின் கற்பனை அலாதி….. வாழ்த்துக்கள்…..

    Liked by 1 person

    1. தொண்டு செய்வது இயல்பாகத்தான் வரும்போலும். தாயை வாழவைத்த பள்ளியிலிருந்து கற்றிருக்கிறாள் மிருது. ரொம்ப மிருது. சொத்துக்கு உரிமைகோரும் ரத்த உறவுகளுக்கு அவர்கள் விரும்பியபடி பரிசளித்துவிட்டுப் புறப்படும் வீரமே கதைமுடிவில் கம்பீர உணர்வைத் தருகிறது.

      சிறுகதை இலக்கியத்தரம் மாற்றுக்குறையவில்லை.
      ஓட்டமும் திருப்பமும் முடிவும் அப்படியே வசம் செய்துவிட்டது.

      ர.ரா எதற்காக தலைப்பு அப்படி வைத்தீரோ.
      “தடம்மாறாதே அப்படியே நில்”
      “அர்ப்பணிப்பை ஒரு பறவை ஆராதனை செய்யும்போது அப்படியே நிற்கிறாள் மிருது-தப்பாட்டம் ஆடியவர்களும் அப்படியே நின்றுவிட்டார்கள்.

      கதையும் மனதில் அப்படியே நிற்கும். நீதியும் அறமும்தான் அப்படியே நிற்கும்.

      ஆனால் அப்படியே நின்றுவிடாமல் நிறைய படைக்கவேண்டும் திரு ர.ரா. உங்கள் பெயர்முன் நானே ‘திரு’
      காத்திருப்பேன்.

      கதை இந்தக்குறளில்:

      “சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு”

      பெரும் நோக்கம் உள்ளவர்களை சின்னபுத்திக் காரர்கள் உணர்வதில்லை.

      Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: