புத்தகத்தின் பெயர்: பட்டாம்பூச்சி (பாப்பிலான்)
ஆசிரியர்: ஹென்றி ஷாரியர்
தமிழ் மொழி பெயர்ப்பு: ரா.கி.ரங்கராஜன்
பிரபலங்களோ, சராசரி மனிதர்களோ சின்ன தோல்விகளுக்கும் கூட உயிரின் அருமை தெரியாமல் தன் முடிவை வலிந்து தேடிக்கொள்கின்றனர்.
“பட்டாம் பூச்சி” ஒருவரின் வாழ்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. இந்த கதையை முழுமையாக ஒருவர் படித்தாலே! உயிர் வாழ்வதன் அருமை புரியும்.ஹென்றி ஷாரியர், கதையின் நாயகன் தன் உடலில் பட்டாம்பூச்சியை பச்சை குத்தியிருப்பான். அதனால் அவனை எல்லோரும் பட்டாம்பூச்சி என்றே கூப்பிடுகின்றனர். இந்த பெயர் அவனுக்கு பொருத்தமே என்று தோன்ற வைக்கும் அவனது செய்கைகள்.
செய்யாத குற்றத்திற்கு தீவாந்திர சிறைக்கு அனுப்பப் படுகிறான். சுதந்திர மனிதனாக வாழ சிறையிலிருந்து தப்பமுயலும் ஒவ்வோர் முறையும் அகப்பட்டுக்கொள்கிறான். தப்ப முயன்றதை மறைக்காமல், உடன் தப்ப முயன்றவர்களை காட்டிகொடுக்காமல் தண்டனையை அத்தனை முறையும் ஏற்றுக்கொள்கிறான்.
அந்த நேர்மையினால் சிறை அதிகாரிகளின் நட்பையும் அன்பையும் பெறுகிறான். ஆனால் அதற்காக அவன் தப்பிக்கும் முயற்சியை கைவிடாமல், சலிக்காமல், புதுநம்பிக்கையுடன் முயற்சிக்கிறான். ஒரு முறை தப்பிச் செல்லும்போது செவ்விந்தியர்கள் கூட்டத்தை சந்திக்கின்றான். அங்கு அவனுக்கு அன்பு, காதல், பாசம், மரியாதை எல்லாம் கிடைக்கிறது. அவனையே தலைவனாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உயர்கிறான். ஆனாலும் அவன் தன் மனதை மாற்றிக் கொள்ளாமல் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அனைவரின் அனுமதியுடன் தன் பயணத்தைத் தொடர்கிறான். மறுபடியும் மாட்டிக் கொள்கிறான்.
ஒவ்வொரு முறையும் ஆவல் மேலிட, நெஞ்சம் திக்திக் என்று அடித்துக் கொள்ள, இந்த முறையாவது தப்பிக்க வேண்டுமே என்ற எண்ணத்தை யாராலும் தவிர்க்க இயலாது. தப்பித்தானா?இல்லையா? கதாநாயகன் ஹென்றி ஷாரியரோடு பயணித்து என்னைப்போல் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
சுஜாதாவின் அணிந்துரை அருமை; கதையின் சிறப்பை மேலும் கூட்டுவதாகும். ரா.கி.ரங்கராஜன் குமுதம் இதழில் பணியாற்றியவர். இவரைப் பற்றி சுஜாதா அவர்கள் குறிப்பிடுகையில் சூர்யாவாக சிறுகதைகள், ஹம்ஸாவாக வேடிக்கை நாடகங்கள், டி.துரைஸ்வாமியாக துப்பறியும் கதைகள், கிருஷ்ணகுமாராக திகில் கதைகள், மாலதியாக குறும்புக்கதைகள், முள்றியாக குழந்தைக் கட்டுரைகள், அவிட்டமாக நையாண்டி கவிதைகள் என பல்வேறு புனைப்பெயர்களில் எழுதியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
கதை களம், கதையில் வரும் மாந்தர்களின் பெயர்கள் தவிர மொழிபெயர்ப்பு என்று தோன்றாவண்ணம் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார் ரா.கி.கதையின் நாயகனை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் நம்மை றெக்கை கட்டிகொள்ள வைத்து அவனோடு சுவரேறவைத்து, பல மைல் தூரம் நடக்கவைத்து, அலைமேல் பயணிக்க வைத்து, சிரித்து, தவித்து இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்லும் ரா.கி.ரங்கராஜன் அவர்களை “றெக்கை ராஜன்” என்றே சொல்லாம்.
Leave a Reply