புத்தி வந்தது

[சித்திரம்: திரு.கிறிஸ்டி நல்லரத்னம்,மெல்பேர்ன்,ஆஸ்திரேலியா.]

(வஞ்சனை: பொய்,கபடு,தந்திரம் கொண்டு ஏமாற்றும் குணம்.)

ஒரு ஊரில் வித்தகன் என்று பெயர்கொண்ட ஏமாற்றுக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு பிழைப்பே மற்றவர்களை பொய்,கபடு,தந்திரம் கொண்டு ஏமாற்றி வாழ்வதுதான். எல்லாரையும் நம்பும்படி பொய்பேசி  தன்னுடைய வலையில் வீழ்த்திவிடுவான். மக்கள் எல்லாரும் அவன் சொல்வது உண்மை என்று நம்பி ஏமாந்து பொன்னையும் பொருளையும் அவனிடம் இழந்து விடுவார்கள். ஏமாந்து போனவர்கள் எடுத்துச் சொன்னாலும் மற்றவர்கள் அதை நம்புவதில்லை.

மக்களை நம்பும்படி செய்வதற்கு அவன் ஒரு தந்திரம் செய்வான். அதற்காக எப்போதும் ஒருவனை தன்னுடனேயே வைத்திருப்பான். அவன் பெயர் அடியவன். வித்தகன் செய்யும் கபட நாடகங்களுக்கு இவனே உறுதுணையாக இருப்பான். அவ்வப்போது வித்தகன் தரும் சன்மானத்தை வாங்கிக் கொள்வான். வித்தகனின் வஞ்சனையால் அவனிடம் பொன்னும், பொருளும், விவசாய நிலமும் பெருகியது. அவனால் பலர் தங்களது வாழ்வை இழந்து நின்றார்கள். அதற்கு வித்தகனுடன் அடியவன் இணைந்து நின்றதால் இந்த பாவத்தில்  சரிபாதி பங்கு  அடியவனுக்கு உண்டு. அவனது உதவி இல்லாமல் வித்தகனின் பொய்,கபடு,தந்திரம் எதுவும் வெற்றி பெறமுடியாது.

அடியவனுக்கு அந்த ஊரில் ஒரு காணி விவசாய நிலம் இருந்தது.வழக்கம் போல வித்தகனுக்கு அடியவனின் அந்த நிலத்தின் மீது ஒரு கண் இருந்தது. மறைமுகமாக அந்த நிலத்தை கேட்டுப் பார்த்தான்; அடியவன் அதற்கு உடன்படவில்லை.
அடியவனின் நிலத்துக்குப் போகும் வழியை  அடைத்தாற்போல வித்தகன்  வேலி அமைத்துவிட்டான். அடியவன் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் வித்தகன் வழிவிட மறுத்துவிட்டான். இறுதியில் அடியவன் தன்னுடைய நிலத்தை வேறு வழியில்லாமல் வித்தகனுக்கு விற்க வேண்டியதாயிற்று.

அப்போதுதான் அடியவனுக்கு ஒரு உண்மை விளங்கியது. ‘வஞ்சனை செய்பவர்களுக்கு  நண்பர்கள்,சொந்த பந்தங்கள் என்றெல்லாம் எந்த அன்போ பாசமோ கிடையாது.அதிகம் சொல்லப்போனால் மனைவி மக்கள் கூட முக்கியமில்லை. அவர்களது அவாதான் முக்கியம். அதற்காக யாருக்கும் வஞ்சனை செய்வார்கள். அப்படி இருக்கையில் இந்த அடியவன் எம்மாத்திரம்.

வஞ்சனை செய்பவனுக்கு இணக்கமாக இருந்ததற்கு தனக்கு தக்க தண்டனை கிடைத்துவிட்டதாக உணர்ந்தான்.
இதற்கு பிராயச்சித்தமாக ஊர்மக்களிடம் வித்தகனின் வேடத்தை விளக்கி,உண்மையைக் கூறி எல்லாரையும் காப்பாற்றுவதே தனது தலையாய கடமை என்று செயல்படத் தொடங்கினான்.

எனவே,வஞ்சனை செய்பவர்களோடு நாம் எந்தவித ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது;அதுவே நமக்கு நன்மை தரும்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: