சித்திரம்: கிறிஸ்டி நல்லரத்னம்,மெல்பேர்ன்,ஆஸ்திரேலியா.
சிறுவர்களுக்கான நீதி கூறும் உலகநீதி புராணத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது வரி ‘ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்’என்பது. இதை விளக்கும் நீதிக்கதையைப் பார்க்கலாமா.
ஒரு அடர்ந்த காட்டிலே சிங்கம்,யானை,கரடி,சிறுத்தை,மான்,
காட்டெருமை,நரி, ஓநாய்,முயல் போன்றவற்றுடன் இன்னும் சில விலங்குகளும் வசித்து வந்தன. காட்டுக்கு ராஜாவான சிங்கம் நல்ல முறையில் ஆட்சி செய்து விலங்குகளுக்கு இடையிலே எந்த விரோதமும் உண்டாகாதபடி பார்த்துக் கொண்டது. எல்லா விலங்குகளும் ஒருவருக்கொருவர் அன்புடனும், உதவி செய்தும் வசித்து வந்தன. சிங்கராஜாவும் எந்த விலங்கையும் வேட்டையாடாமல் விபத்தினாலும், வயது முதிர்ந்ததாலும் இறக்கும் விலங்குகளையே சாப்பிட்டுவந்தது.
காட்டில் இருந்த நரி மட்டும் எப்போதும் வஞ்சகமாகவே நடந்து கொண்டது. சிங்கராஜாவுக்கு வேண்டிய உதவிகளை தேடிப்போய் செய்துவந்தது. அதனால் தன்னை சிங்கத்துக்கு மிகவும் நெருக்கமான விலங்காகக் காட்டிக்கொண்டது. மான்,முயல் போன்ற மற்ற விலங்குகள் சிங்கத்தை நெருங்க முடியாதபடி பல தந்திரங்களைச் செய்தது.

சிங்கத்துக்கு அடுத்தபடியாக அதிகாரம் தனக்கே இருப்பதாகக் கூறி சிறிய விலங்குகளை வேலை வாங்கியது . தனக்கு உணவுக்காக தினந்தோறும் குளத்திலிருந்து நண்டுகளை பிடித்துவர வேண்டும் என முயல்களுக்கு கட்டளை இட்டது. அதில் துணிவுள்ள ஒரு முயல் “அப்படியெல்லாம் செய்ய முடியாது” என்று கூறிவிட்டது. கடுங்கோபம் கொண்ட நரி சிங்கத்திடம் போய்
“காட்டின் சட்ட திட்டங்களுக்கு முயல் கட்டுப்பட மாட்டேன் என்கிறது. சிங்கராஜாவான உங்களின் ஆணைக்கு இணங்க மறுக்கிறது. நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற விலங்குகளும் சட்டத்தை மதிக்காமல் போய்விடும்”என்று பழி கூறியது.
இதைக் கேட்ட சிங்கத்துக்கு கோபம் தலைக்கேறவே,” அந்த முயலை இழுத்து வா”என்று கட்டளையிட்டது. கரடி வேகமாக ஓடி அந்த முயலை சிங்கத்திடம் அழைத்து வந்தது. முயலிடம் சிங்கம், ” நரி சொல்வதைக் கேள்; சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம்”என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது. அடுத்த நாள் முயல் நரிக்காக நண்டுகளை கொண்டு வந்து கொடுத்தது.
அப்போது அங்கிருந்த கரடியிடம், “பார்த்தாயா கரடியாரே!இதேபோல நாளைக்கு நீர்தான் நண்டுகளை பிடித்து வந்து தரவேண்டும்.சிங்கத்தின் கட்டளை தெரியுமல்லவா; என் பேச்சை கேட்க வேண்டும் ” என்றது. கரடியும் தலையை ஆட்டியபடியே அங்கிருந்து சென்றது.
மறுநாள் கரடி நண்டுகளை கொண்டு வரவில்லை. நரிக்கு பசியால் கண்கள் இருண்டு காதுகள் அடைக்க ஆரம்பித்தது.வேகவேகமாக சிங்கத்திடம் சென்றது.”சிங்கராஜா, காட்டில் சட்டம் ஒழுங்கு மேலும் கெட்டுவிட்டது. முயல் போலவே இன்று கரடி சட்டத்தை மதிக்கவில்லை”என்று நரி முறையிட்டது. கரடியை அழைத்து வர சிங்கம் ஆளனுப்பியது.
சிங்கத்தின் அருகில் கரடி வந்து நின்றது;அதன் கைகளில் சில நண்டுகள் இருந்தன. “இது என்ன கரடியாரே?” என்று சிங்கம் கேட்டது. “சிங்கராஜா இந்த நண்டுகள் நரிக்கான உணவு. தினமும் யாராவது அதற்கு கொண்டு வந்து தரவேண்டுமாம்;இது காட்டின் சட்டத்தில் எத்தனையாவது விதி”என்று கரடி கேட்டது.
நரியின் சூழ்ச்சி சிங்கத்துக்கு புரிந்து விட்டது.
“என்ன நரியாரே, உனக்கு தினமும் யாராவது உணவு கொண்டு வந்து தர வேண்டுமா?நேற்று முயல்,இன்று கரடி. நாளைக்கு யார் யானையா?” என்று சிங்கம் கேட்டது. நரி செய்வதறியாது விழித்தபடி நின்றது.
” நீயே எனக்கான உணவை தினமும் கொண்டு வந்து தரவேண்டும்; மற்றவர்க்கு பொல்லாங்கு (தீங்கு)செய்த உனக்கு இதுதான் தண்டனை” என்று சிங்கம் தீர்ப்பளித்தது.
மற்றவர்க்கு தீங்கு செய்ய நினைத்து தனக்கே தீங்கு வந்துவிட்டதை எண்ணி நரி வருந்தியபடியே சென்றது.
அதனால் நாம் யாருக்கும் தீமை செய்யாமல் வாழவேண்டும்.
Leave a Reply