ஓவியம்: கிறிஸ்டி நல்லரத்னம் அவர்கள்,மெல்பேர்ன்,ஆஸ்திரேலியா
ராஜாவும் மூர்த்தியும் ஒரே தெருவில் அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் நண்பர்கள். ஒரே வயதுக்காரர்கள் ஆனதால் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வந்ததும் கை, கால் கழுவி வேறு உடை மாற்றிக்கொண்டு, சிற்றுண்டி ஏதாவது சாப்பிட்டுவிட்டு ஒன்றாக விளையாடப்போவார்கள. உடலுக்கும்,மூளைக்கும் பயன்தரும் விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆறு மணி ஆனதும் மூர்த்தி விளையாட்டிலிருந்து விடுபட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவான். அன்றாடம் எழுத வேண்டிய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துவிட்டு சாப்பிட்டு தூங்குவான். ஆனால் ராஜாவோ,ஆறுமணி ஆன பின்பும் தன்னைவிட வயதில் குறைந்த சில சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாடுவான். கண்ணாமூச்சி போன்ற சாதாரனமான விளையாட்டுகளையே விளையாடுவான். அச்சிறுவர்கள் எல்லாம் வீட்டுப்பாடம் எழுத வேண்டிய தேவையில்லாத மழலையர் வகுப்பில் படிப்பவர்கள். எட்டு மணி வரை விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் ராஜா சாப்பிட்டுவிட்டு களைப்பு மிகுதியால் தூங்கிவிடுவான்.காலையில் எழுந்து அவசரஅவசரமாக வீட்டுப் பாடத்தை ஒன்றும் பாதியுமாக எழுதுவான். அன்றாடம் சொல்லித்தரும் பாடங்களை அவனுக்கு படிக்க நேரமே கிடைக்காது. இதன் காரணமாக தேர்வுகளில் தேவையான குறைந்த பட்ச மதிப்பெண்களையே அவன் பெற்றுவந்தான்
மூர்த்தி ராஜாவிடம் தன்னைப் போலவே ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடங்களை எழுதச் சொல்வான்.

அப்போதெல்லாம் 'மாலை முழுதும் விளையாட்டு' என்றுதான் பாரதியார் கூறுகிறர் என்று பதில் சொல்லிவிடுவான். ராஜவின் வீட்டில் ஒரு விசேட நிகழ்ச்சிக்கு உறவினர்களெல்லாம் வந்திருந்தனர். அவன் வயது ஒத்தவர்களும் அதில் நிறைய இருந்தார்கள். அவர்களுடன் இரண்டு நாட்கள் ஆனந்தமாக விளையாடிப் பொழுதைக் கழித்தான். அப்போது அவனது பள்ளி மதிப்பெண் அட்டை விருந்தினர் வீட்டு பிள்ளைகள் கண்ணில் பட்டுவிட்டது. ராஜா வாங்கியிருந்த மதிப்பெண்களைப் பார்த்த அவர்கள் எல்லாரும் அவனைக் கேலி செய்தார்கள். ராஜாவுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. அவன் மகிழ்ச்சியே பறிபோய் விட்டது. அவர்கள் அங்கு தங்கியிருந்த அடுத்தநாள் முழுவதும் அவன் யாரிடமும் பேசவும் இல்லை;விளையாடவும் இல்லை. தனிமையில் போய் அமர்ந்து கொண்டான்.
உறவினர்கள் எல்லாரும் திரும்பிச் சென்றவுடன்,தன் நண்பன் மூர்த்தியிடம் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கூறி அழுதான். நண்பனுக்காக வருந்திய மூர்த்தி,அவனைத் தேற்றினான். தன்னைப் போலவே மாலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குச் சென்று,அன்று இரவே வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு மறுநாள் காலை படிக்கச் சொன்னான். ராஜாவும் அந்த ஆலோசனையைப் பின்பற்றினான்; ராஜாவும் அதிக மதிப்பெண் பெற ஆரம்பித்தான். பிறகென்ன, வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவதில் மூர்த்திக்கும் ராஜாவுக்கும்தான் இப்போது போட்டியே.
அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதைத்தான்
'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்'
என்று உலகநாதர் இயற்றிய 'உலகநீதி ' பாடல் கூறுகிறது.
Leave a Reply