(தனியே சென்ற கோழிக்குஞ்சு)
சிலகோழிகளும், குஞ்சுகளும் ஒரே பட்டாளமாக ஒரு ஆல மரத்தின் கீழும்,அதைச் சுற்றிலும் இரை தேடுவது வழக்கம். அதுதான் பெட்டை கோழிகளும்,சேவல் கோழிகளும் இளம் குஞ்சுகளுக்கு எப்படி தரையை சீய்த்து,கிளறி புழு பூச்சிகளை கொத்தி திண்பது என்று கற்றுத்தரும் பயிற்றுக்களம். ஆபத்து ஏதும் வந்தால் ‘கொரேல்’ என்று ஒற்றை ஒலியில் எச்சரித்து குஞ்சுகளை தாயின் இறக்கைகளில் வந்து ஔிந்து கொள்ள கற்றுத்தரப்படும். கூட்டமாக நிறையபேர்கள் இரை தேடுகிறபோது எப்படி லாவகமாக தனக்கான இறையை கவர்ந்துகொண்டு ஓடுவது என்ற அனுபவம் கிடைக்கும். எல்லாவற்றும் மேலாக தன்னுடைய கூட்டத்தைவிட்டு விலகாமல் சேர்ந்தே இருக்க கற்றுத் தரப்படும். அப்படி கூட்டத்தைவிட்டு விலகிச் செல்லும் கோழிக்குஞ்சுகளை சேவல்கோழிகள் கண்கானித்து விரட்டி கூட்டத்தில் கொண்டு சேர்க்கும்.
கொஞ்சம் வளர்ந்த குஞ்சுகளை தாய்க்கோழி கொத்தி தன்னைவிட்டு விலகிச்சென்று தனியே இரை தேட விரட்டும். இந்த ஆலமரத்தடி கோழிக்கூட்டத்தில் ஒரு இளங்குஞ்சு தன்னையும் வளர்ந்த பெரிய குஞ்சாக எண்ணிக்கொண்டு அடிக்கடி தாயைவிட்டு விலகிச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் தாய்க்கோழி அதன் தலையில் கொத்தி “நீ இன்னும் வளரவில்லை;வளர்ந்ததும் நானே உன்னை கொத்தி விரட்டிவிடுவேன்”என்று கண்டிக்கும். ஆனாலும் அந்த சிறு குஞ்சு பல நேரம் தனித்து போய் இரைதேடுவதை நிறுத்திடவே இல்லை.
அப்படி ஒருமுறை தனித்து சென்றபோது ஆலமரத்து மேலிருந்து விழும் ஆலம்பழம் ஒன்று அந்த கோழிக்குஞ்சின் தலைமீது ‘நச்’சென்று விழுந்தது. அவ்வளவுதான் உடனே அது,”ஐயையோ,வானம் இடிந்து என் தலையில் விழுந்து விட்டது”என்று கூக்குரலிட்டது. இதைக்கேட்ட கோழிகளெல்லாம் வந்து குழுமி ‘எங்கே வானம்’என்று தேட ஆரம்பித்தன. யாராலுமே வானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் விழுந்தது வானம்தான் என்று அந்த கோழிக்குஞ்சு அடம்பிடித்து அழுதது. மற்ற கோழிகளெல்லாம் ‘இனி தனியே போகாதே’ என்று எச்சரிக்கை செய்தன.

பெரியவர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த அந்த கோழிக்குஞ்சு வழக்கம் போல தனியே செல்வதை நிறுத்தவில்லை. அப்படி சென்றபோது முன்போலவே ஒரு ஆலம்பழம் அதன் தலையில் ‘நச்’ சென்று விழுந்தது. உடனே அது “ஐயையோ,மறுபடியும் என் தலையில் வானம் விழுந்து விட்டது” என்று கூச்சலிட்டது. எல்லாரும் ஓடிவந்து வானத்தை தேடினார்கள். அப்போது அங்கிருந்த ஒரு சேவல்கோழி விழுந்து விழுந்து சிரித்தது. “இடிந்து விழுந்த வானத்தைத் தேடாமல் இப்படி சிரிக்கிறாயே இது சரியா?” என்று எல்லா கோழிகளும் கடிந்து கொண்டன. அந்த சேவல் அமைதியாக நடந்து சென்று ஒரு ஆலம் பழத்தை எடுத்து வந்து,”இதுதான் நீங்கள் தேடும் வானம்”என்றுகூறி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தது. விழுந்தது ஆலம்பழம்தான்; வானம் இல்லை என்பது மற்ற கோழிகளுக்கெல்லாம் தெரியவந்தது.
அடங்காத கோழிக்குஞ்சை எல்லாம் கண்டித்தன.
நாம் வளர்ந்து அனுபவம் பெற்ற பெரியவர்கள் ஆகும்வரை பெரியவர்களின் சொற்படியே நடக்கவேண்டும்;அவர்களின் அரவணைப்பிலேயே வளரவேண்டும் என்பது இக்கதை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.
Leave a Reply