வாசித்தது:- டான்டூனின் கேமரா
ஆசிரியர்:-எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்:- தேசாந்திரி
விலை:-150 ரூபாய்
பக்கங்கள்:- 48
வகை:- சிறார் கதை
புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.
குழந்தை படைப்புகள் குழந்தைகளைக் கவரும் விதமாக எழுதுவது அதுவும் கதை எழுதுவது அவ்வளவு எளிதில்ல அதற்கு முதலில் எழுதுபவர் மனதால் குழந்தைகளாக மாறி அவர்கள் தங்களுக்குள் எப்படி பேசுவார்கள், யோசிப்பார்கள் ,கேள்விகேட்பார்கள், பிடித்து, பிடிக்காதது என இன்ன பிறவற்றையும் செயற்கையாக இல்லாமல் மிக கவனத்துடன் எழுத்தில் கொண்டுவருவதும் எளிதல்ல .ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எந்தக் குறையிமின்றி இந்தக் கதையை வடித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றிகள் பாராட்டுகள்.
கேமராவின் வழியாக:-
கதாநாயகன் டான்டூன் (எறும்பு) சிறுவன் என்பதால் மற்ற எறும்புகள் எல்லாம் வேலைக்குச் சென்றபின் மரத்தடி நிழலில் படுத்தபடி கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் அடடா …அடடா…. என்றிருக்கும்.
உதாரணத்திற்கு ஒன்று ‘வெளி நாட்டு எறும்புகள் என்ன மொழி பேசும்’? …எப்படி
கதையில் நாமும் அதனுடன் ஊர்ந்தும், ஓடியும்,அலைந்தும், தூங்கியும் ,சபதம் செய்தும், இடையில் தனக்கான இணையைக் கண்டு கொள்வதும், கதையில் சபதத்தை நிறைவேற்ற எடுக்கும் பயிற்சி, முயற்சி, வெற்றிக்கான கடைசி எத்தனிப்பு என அழகாக வெகு அழகாக கொண்டு சென்றிருக்கிறார். இறுதி பத்தி நம் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருகிறது.
என்ன சபதம்? எதற்காக? எப்படி நிறைவேற்றியது என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ரசித்தது:-தன் முயற்சி
வெற்றிபெறுவதற்கு, பயிற்சி வேண்டி ஷெகர் என்ற சோம்பேறி பூனையிடம் வரும் டான்டூனிடம் பெரிய பயில்வான் போல் அதுசெய்யும் அலட்டல் ஒருநாள் தான் ‘சாப்பிட ஈரல் வாங்கிவா’ என்பது இன்னொருநாள் ‘மெக்சிகன் பீட்ஸா வாங்கிவா அதுவும் டபுள் சீஸ் போட்டு ‘என்பது இடையிடையே டான்டூனை மட்டம் தட்டும் வகையில் பேசுவது இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு’ மாஸ்டர் கோபப்படாதீங்க ‘என்று சொல்லி தனக்கான ஆலோசனையைப் பெறுவது டான்டூன் தன்னுடைய செயலில் குறிக்கோளில் உறுதியாக இருக்கவேண்டுமென்பதைக் காட்டுகிறது.
டான்டூன் கடற்பந்தாட்டம் என்ற விளையாட்டில் சிறந்த வீரனான லைமான், மற்றும்தன்தோழன் ஸாகருடன் பயிற்சி மேற் கொண்டிருக்கும் போது எதிரணியான சிவப்பு எறும்புகள் ஒரு படகில் வந்து ஸாகரையும், லைமானையும் பிடித்துக் கொண்டு போய்விட, டான்டூன் தாத்தாவிடம் வந்து முறையிட, சிவப்பு எறும்புகளின் தற்காலிகத் தலைவனிடம் சமாதானம் பேசச் செல்ல , எதிர்பாரா திருப்பமாக கடற்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றால் அவர்களை விடுவிப்பதாக நிபந்தனையிட, வந்த சண்டையை விடக் கூடாதென ரோஷமாக டான்டூன் ஒப்புக்கொள்கிறது. திரைப்படம் போல கடற்பந்தாட்ட காட்சி, திருப்பம் ,எதிர்பாரா திருப்பம் என குழந்தைகளுக்கு பிடிக்கும்படியாக எஸ்.ரா. இந்தக் கதையை தன் எழுத்தில் படமாக்கியிருக்கிறார்.

பெரியவர்கள் தான் விரும்பியதை தன் கண்ணோட்டம் கொண்டு தன் குழந்தைகளை செய்யச் சொல்வதை விட்டு அவர்கள் விரும்பியதைச் செய்ய பெரியவர்கள் துணை நின்று உதவிடவேண்டும் என்பதும் இந்தக்கதையினால் ஆசிரியர் சொல்கிறார்.
குழந்தைகளும் தன்னுடைய முயற்சியில் தோல்வியை வெற்றியாகிட இடைவிடாத பயிற்சி முக்கியம் என்பதை, டான்டூன் வீணாக அலைந்து கொண்டிருக்கிறது என்ற கோபத்தில் இருக்கும் தன் அம்மாவிடம் ஷெகரிடம் இருந்து பெற்ற ” கஷ்டப்படாமல் எதையும் கற்றுக்கொள்ள முடியாது”என்று சொல்வதாக அமைத்திருக்கிறார்,பாராட்டுகள் சார். உண்மையில் இது தான் இன்றைய குழந்தைகளுக்குத் தேவையானது.
வீட்டுக்கு ஒரு குழந்தை, கேட்டதெல்லாம் உடனே கிடைப்பது, பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு புரியும்படி சொல்லித்தர பொறுமை, நேரமின்றி இருப்பது, குழந்தைகள் வேறு வழியின்றி தொலைக்காட்சியை, அலைபேசியைத் துணையாகக் கொள்வது இன்றைய பெற்றோர் கிடைக்கும் நேரத்தை கொஞ்சம் பிள்ளைகளுடன் செலவிடுங்கள் நம்பெற்றோர் நம்மை வளர்த்ததை நினைத்துப் பார்த்திடுங்கள்! நீங்களும் உங்கள் பெற்றோர்க்கு குழந்தைகளே! அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்!
Leave a Reply