வாசித்தது:-தெனாலிராமன் கதைகள்
ஆசிரியர்:-எஸ்.லீலா
பதிப்பகம்:- வித்யா பப்ளிகேஷன்ஸ்
விலை:- 40
பக்கங்கள்:- 144
விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்ற விகடகவிராஜன் எல்லோருக்கும் தெரிந்த தெனாலிராமன். புத்தகத்தில் 27 கதைகள் உள்ளன. தனக்கு வந்த ஆபத்தோ, உடனிருப்பவர்க்கு வரும் சங்கடமோ தன்னுடைய சமயோசித அறிவினால் அழகாக திருப்பிவிட்டு ஒவ்வொருமுறையும் “சபாஷ்” போடவைக்கிறான். படிப்பதால் வரும் அறிவு. பட்டதால் வரும் புத்தி. இது இரண்டையும் தாண்டியது சமயோசித அறிவு.
ஒரு சில சபாஷ்கள்:-
ஜோஸ்யம் பலித்தது:-

பிஜப்பூர் சுல்தான் தன் நாட்டின் மீது கிருஷ்ணதேவராயர் படை எடுப்பதைத் தடுக்க வேண்டி
விஜயநகர அரண்மனை ஜோசியன் ஒருவனை தன் கைக்குள் போட்டுக்கொண்டு படையெடுப்பைத் தடுக்கச் சொல்லி கையூட்டு கொடுக்கிறான். தன்நாட்டை வஞ்சித்து , வாங்கிய காசுக்காக வாஞ்சையாக ராயரின் உயிருக்கு ஆபத்தென்றும் போர் இப்போது வேண்டா மென்றும் சொல்கிறான். அரசிகளின் காதிற்கும் செய்திபரவ அவர்களும் அச்சத்தால் போர் வேண்டாம் என்கிறார்கள். ராயர் தன் ஆப்தநண்பன் தெனாலியிடம் ஆதங்கத்தைக் கொட்ட,
“ஜோஸ்யன் சொல்லும் பலன்கள் எல்லாம் அப்படியே நடந்துவிடுமா அரசே?” என தெனாலி கேட்க,
“நிருபிக்க வேண்டுமே” என்கிறார்அரசர்.
“நான் நிருபிக்கிறேன் அரசே அதற்கான தண்டனையை அவனுக்கு வழங்க தங்களின் அனுமதிவேண்டும்”தெனாலி
மன்னர் சரி என்றிட, அடுத்தநாள் அவையில் …. மீதியைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
மரக்கத்தி மாவீரன்:-

ஒருமுறை அரண்மனைக் காவலன் ஒருவன் தன் மனைவி குழந்தைப் பேறுக்காக தாய்வீடு செல்ல , குழந்தை பிறக்கும் போது தானும் தன் மனைவியுடன் உடனிருக்க விரும்புகிறான். ஆனால் அவனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை. தன் வேதனையை தெனாலியிடம் பகிர, நண்பனுக்கு உதவிட எண்ணி நீ ஊருக்குச் சென்று வா நான் உன்வேலையைக் கவனித்துக் கொள்கிறேன் என மாறுவேடத்தில் காவலாளியாகிறான்.
மன்னர் நகர்வலம் வரும்போது, உறங்கிக்கொண்டிருந்த காவலன் அருகே செல்ல, தெனாலியை அடையாளம் காணும் மன்னர் அவனது வாளை அவனறியாவண்ணம் எடுத்துவிடுகிறார். உறக்கத்திலிருந்து விழித்த தெனாலி உடைவாளைக் காணாது தன் நண்பனுக்கு பிரச்சனை வரக்கூடாதென மரத்துண்டை வாள்போல் சீவி தன் உடையில் வைத்துக் கொள்ள, அடுத்தநாள் அவனுடையில் வாள் இருப்பதையும் அது மரத்தினால் செய்யப்பட்ட வாள் என்பதையும் அவனறியாமல் தொட்டுப்பார்த்து மன்னர் தெரிந்து கொள்கிறார்.
புலவர் ஒருவர் மோசடியில் சிக்கியிருப்பதாக மன்னருக்கு செய்தி வர, அருகிலிருந்த தெனாலியைப் பார்த்து, “வீரனே ! இந்த துரோகியை வாளால் கண்டம் துண்டமாக வெட்டு” என்கிறார். தெனாலிக்கு தன்னுடையது மரக்கத்தி என்ற உண்மையைத் தாண்டி, புலவர் நல்லவர் தவறிழைத்திருக்க மாட்டார் எனத் தயங்குகிறான்.
மன்னர் மறுபடியும் தூண்ட, தாமதித்தால் மற்றொரு வீரனால் புலவருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து வருவதுவரட்டுமென வாளை வீச, புலவர் கழுத்தில் சுற்றியிருந்த முரட்டுத் துண்டால் சிறு காயமுமின்றி தப்ப,அரசர் கோபமாக “மரக்கத்தியையா வைத்திருந்தாய் வீரனே” என கர்சிக்கிறார்.
அதற்கு தெனாலியின் பதில்…. பின் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்… படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்வியலைச் சொல்லாத எதுவும் இலக்கியமாகாது என்பார்கள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு வள்ளுவம். நெருக்கடியை எதிர்கொள்ளும் சமயோசித புத்திக்கு தெனாலிராமன்.
Leave a Reply