உயிர்த்தெழும் உயிரினம்!

ஒலி வடிவம்:

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்றும் போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயிரினத்தை நிரந்தரமாக இழந்து நின்றது!

2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை ஆஸ்திரேலியாவின் ஏனய மாநிலங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. தஸ்மேனிய தீவில் மட்டுமே உயிர் வாழ்ந்த கடைசி மிருகமும் உயிர்நீத்தது!

தஸ்மேனியன் புலி என இவற்றிற்கு இங்கு குடியேறிய ஆங்கிலேயர் பெயரிட்டாலும் இவை பைம்மாவினம் (marsupials)எனும் பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும். இவற்றுக்கு தைலசின்கள் (Thylacines) என்ற விஞ்ஞானப் பெயரும் உண்டு.

இவை ஆஸ்திரேலியா, மற்றும் அமெரிக்காவிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்களின் இளம் குட்டிகள் இவற்றின் வயிற்றுப்பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள் கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தஸ்மேனிய டெவில் ஆகியவை ஆகும். மேலே உள்ள உயிரினங்களில் இருந்து நமது நாயகன் சிறிது வேறுபடுகிறார். ஆம், ஆண் தஸ்மேனிய புலிக்கும் பெண் புலியைப் போல் வயிற்றில் பை இருக்கும். இதனால் தம் வாரிசுகளை பேணுவதில் இருவருக்கும் சமபங்குண்டு என எண்ணவேண்டாம். ஆணுறுப்பை குளிரான காலநிலைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் சக மிருகங்களுடன் சமர்செய்யும்போது ஒரு பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இவை பார்ப்பதற்கு வேட்டை நாயைப்போல் தோன்றினாலும் அவற்றைப் போல் நாலுகால் பாய்ச்சலில் விரைவாய் ஓட முடியாது. கங்காருவைப்போல் துள்ளிக்குதித்தே நகரும். இதனாலேயே ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய வேட்டை நாய்களுக்கு இவை பலியாகின. மேலும் இவற்றின் தாடையில் உள்ள தசைநார்கள் சிங்கம் புலி போன்ற விலங்குகளுக்கு உள்ளதைப் போல் பலம் வாய்ந்ததாய் இருப்பதில்லை. எனவே குரூரமான விளைவுகளை இதன் கடி எற்படுத்தாது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், பழங்குடியேற்றவாசிகளின் குடியேற்றத்தினால் ஆஸ்திரெலியாவில் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இறுதியில் மறைய, ஆஸ்திரேலிய கடல் பரப்பிற்கு அப்பால் உள்ள தீவான தஸ்மேனியாவில் மட்டுமே இவை தப்பிப்பிழைத்து வாழ்ந்தன. இத்தீவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியான செம்மறி ஆடு வளர்ப்பிற்கு இப்பிராணிகள் அச்சுறுத்தலாக இருந்தமையினால் இவையும் வேட்டையாடி அழிக்கப்பட்டன. இவற்றை கொன்றால் 1 பவுண்ட் சன்மானம் வேறு அரசால் வழங்கப்பட்டது!

இன்னமும் தஸ்மேனியாவில் இப்பிராணிகள் சில தப்பி வாழ்கின்றன எனக் கூறும் ஒரு சாராரும் உண்டு. இவர்கள் இப்பிராணிகள் வாழ்வதற்கான ஆதாரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இவை உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வழங்கினால் பணப்பரிசு வழங்குவதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் இன்றுவரை இப்பரிசை எவரும் தட்டிச்செல்லவில்லை! எனவே நீங்கள் தஸ்மேனியாவிற்கு விஜயம் செய்வதாய் இருந்தால் ‘புலிப்பொறி’ ஒன்றை கொண்டு வருவது உகந்ததே!

இவ்வுலகைவிட்டு மறைந்துபோன இந்த உயிரினத்தை மீண்டும் விஞ்ஞானத்தின் உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது ஒரு உற்சாகமான செய்தி! 

மைக்கேல் கிரிக்டன் எழுதிய நாவலான Jurassic Parkஇல் எவ்வாறு மரபணு பொறியியலைப் பாவித்து விஞ்ஞானிகள் டைனோசர்களை உருவாக்கினார்களோ அதே செயல்பாட்டை பாவித்து இந்த தைலசின்களை மீள உருவாகக முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. 

Michael Crichton

இக்கனவை நனவாக்க முன்னின்று உழைப்பவர் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அன்றூ பாஸ்க் (Prof. Andrew Pask). இவர் இந்த ஆராய்ச்சியில் 2017 முதல் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியுதவிகள் தேவை. எனவே ஆராய்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறுவது தடைப்பட்டது. 

Prof. Andrew Pask

பேராசிரியர் அன்றூ தைலசின்களுக்கும் ‘நம்பட்’ (Numbat) எனும் சிறு அணில் போன்ற பிராணியின் நிறமூர்த்தத்திற்கும் 95% ஒற்றுமை இருப்பதை கண்டுபிடித்ததின் விளைவாக இந்த அணிலை செவிலித்தாயாக பாவித்து மறைந்த தஸ்மேனியன் புலியை மீள உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். மெல்பேர்ன் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக கண்ணாடிக்குடுவையில் வைக்கப்பட்டிருந்த தஸ்மேனியன் புலிக்குட்டியிலிருந்தே ஒப்பீட்டிற்கு அவர் நிறமூர்த்தங்களை பெற்றுக்கொண்டார்.

ஆனால் பச்சத்தண்ணியில் பலகாரம் சுட முடியாதே! இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி தேவையல்லவா?

இத்திட்டத்திற்கான நிதியுதவி எதிர்பார்க்காத ஒரு மையத்தில் இருந்து அண்மையில் கிடைத்தது!

ஆம், அவுஸ்திரேலியாவில் பிறந்து இன்று ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஹெம்ஸ்வேர்த் சகோதரர்கள் (Hemsworth brothers) இந்த ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை செய்வதாக அண்மையில் அறிவித்தனர். Chris Hemsworth பல ‘மார்வல்’ திரைப்படங்களில் தோர் (Thor) பாத்திரமேற்று நடித்து சக்கைபோடு போட்டவர் என்பதை உங்கள் பேரனை கேட்டால் சொல்வார்!

Hemsworth brothers Thor

இனியென்ன… நிதி கிடைத்துவிட்டது. பேராசிரியர் அன்றூவின் ஆராய்ச்சி வெற்றிகரமாய் நடந்தேறினால் இன்னும் 10 ஆண்டுகளில் மறைந்துபோன தஸ்மேனியன் புலியை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துவார் என்பதில் ஐயமில்லை! இத்துறையில் மாஸ்டர்களான அமெரிக்காவின் Colossal Biosciences (https://colossal.com/) எனும் நிறுவனம் பேராசிரியர் அன்றூவுடன் இணைந்து இப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 

நவீன விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக மரபணு பொறியியல் துறை இன்று இமயம் தொடும் சாதனைகளை படைத்துள்ளது. விசேடமான மருத்துவத்துறையில் இவற்றின் உச்சம் தொட்ட சாதனைகள் பல.  

பேராசிரியர் அன்றூ பாஸ்கின் கனவு நனவானால் நாம் திரையில் பார்த்த Jurassic Park நனவாக அதிக நாட்கள் இல்லை! ஆனால் அதுவரை நம் தயவில் வாழும் உயிரினங்களின் நல்வாழ்விற்காய் சிந்தித்து செயல்படுவோம்.

Jurassic Park

(முற்றும் )

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: