( நண்பர் திரு.கிறிஸ்டி நல்லரத்னம் அவர்கள் மெல்போன்,ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதுகிறார்.)
அண்மையில் உலகெங்கும் “விஞ்ஞான வாரம்” தேசிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உலகெங்கும் உள்ள பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், நூதனசாலைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆவலுடன் கலந்து கொண்டன. இவ்வாரத்தில் அறிவியல் கண்டுபிடிப்பு, கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆஸ்திரேலியாவின் பங்களிப்பை கொண்டாடுவது மட்டுமல்லாமல் அறிவியல் கல்வியை இளைஞர்கள் ஊக்கமுடன் தொடர அவர்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளை வழங்குவதும் ஒரு அம்சமாகும்.

பல வடிவங்களில் இவை வழங்கப்பட்டன. கண்காட்சிகள், அறிவு சார்ந்த விவாதங்கள், கட்டுரைப்போட்டிகள், இணையவழி நடவடிக்கைகள் என இவை விரியும்.
பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் இவ்வார நாட்களை அறிவுபூர்வமாக கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அறுபதைத் தாண்டிய ‘இளைஞர்களுக்கும்’ ஒரு நற்செய்தியை இவ்வேளையில் பகிர்ந்தே ஆக வேண்டும்.
தம் சிந்தனையில் உதிக்கும் நினைவுக்சிதறல்களை காகிதத்தில் வடித்து அதற்கு கவிதை என்றோ கதை என்றோ பெயரிட்டு தம் முகநூலிலோ அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்றி மகிழ்பவர் பலர். சிலருக்கு ‘சும்மா’ இருக்க இலக்கியம் ஊறும். சிலருக்கு ஒரு கோப்பையின் அல்லது கோலமயிலின் துணை தேவை.
சரி, ‘எனக்கு சுட்டுப்போட்டாலும் எழுத வராது’ என்று சொல்லும் ஒரு கூட்டமும் நிச்சயம் உண்டு.
இந்த விஞ்ஞான வாரத்தில் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
AI என்று செல்லமாக அழைக்கப்படும் Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவுதான் இதற்கு துணைபோனது. Alஐப் பற்றி உங்களுக்கு விஞ்ஞானப்பாடம் நடாத்தும் உத்தேசம் எனக்கில்லை.
இரண்டாம் உலகப்போரில் நாஜிப்படைகள் ‘எனிக்மா’ எனும் யந்திரத்தின் உதவியுடன் குறியீடுகள் மூலம் தம் செய்திப் பரிவர்த்தனைகளைகளை மேற்கொண்டனர். இவற்றை சாதாரணமாக படித்து புரிந்து கொள்ள முடியாது. இக்குறியீடுகளை வெற்றிகரமாக சிக்கெடுத்து போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை கணிதவியலாளர் ஆலன் டூரிங்கை (Alan Turing) சாரும். இவரே AI இன் தந்தை எனலாம். “இயந்திரங்களால் சிந்திக்க முடியுமா?” என்ற கேள்விக்கு இவரின் பதில்தான் இந்த Al. Al என்பது கணினி அறிவியலின் ஒரு கிளை ஆகும். இது இயந்திரங்களில் மனித நுண்ணறிவை பிரதிபலிக்க அல்லது உருவகப்படுத்துவதற்கான முயற்சியாகும். Al இன் விரிவான குறிக்கோள் பல கேள்விகளை மற்றும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இத்தனைக்கு இதன் முழுமையான வரைவிலக்கணம் என்ன என்று இன்னமும் வரையறுக்கப்படவில்லை.

Al என்பது “உள்ளதை சொல்வேன்; சொன்னதை செய்வேன்;வேறொன்றும் தெரியாது” என்பதல்ல. தானே சுயமாய் சிந்தித்து உங்கள் கேள்விகளுக்கு விடைபகிரும் ஒரு பொறிமுறை. மனித மனதை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைப் பிரதிபலிப்பு. தர்க்கரீதியான பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் செயல்படும் சுயமான இயக்கம் என்று கூட சொல்லலாம்.
இதற்கும் கதை எழுதுவதற்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இனி நீங்கள் கதையெழுத கற்பனைக்குதிரையில் ஏறி காத தூரம் அலைய வேண்டியதில்லை. கணினி முன்னால் உட்கார்ந்தாலே போதும்.

இப்போது AIஐ பாவித்து கதை கட்டுரை எழுதும் அனேக இணைய தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் பலவற்றில் இலவசமாக பதிவு செய்து உங்களுக்கு தேவையான ஆக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும். இலவச பாவனையாளர்களுக்கு மாதாந்திர வார்த்தை எண்ணிக்கை பாவனையில் கட்டுப்பாடு உண்டு. நீங்கள் பணம் செலுத்தி பதிவு செய்தால் உங்களுக்கு பல சலுகைகளும் தரமான ஆக்கங்களையும் பெறமுடியும்.
இனி சில உதாரணங்களை பார்ப்போம்:
Deepstory – https://www.deepstory.ai/#!/
“மனிதனின் படைப்பாற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இடையே பாலமமைப்பதே ‘டீப்ஸ்டோரி’யின் பணி. நீங்கள் ஒரு கதைசொல்லியாக இருந்தாலும், திரைக்கதை எழுத்தாளராக இருந்தாலும், கதாசிரியராக இருந்தாலும் சரி அல்லது விளம்பர ஏஜென்சியாக இருந்தாலும் சரி, DeepStory மூலம் உங்கள் கற்பனையால் நீங்கள் ஒருபோதும் மட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்” என்று உறுதியளிக்கிறது இந்த இணையத்தளம். Try Out Demo எனும் பகுதியில் இது எவ்வாறு செயல்படுகிறது என நீங்கள் பார்க்கலாம்.
Rytr AI: https://rytr.me/
இதுவும் டீப் ஸ்டோரியை ஒத்த தளம்.
இறுதியாக:
Texa.AI : https://www.texta.ai/
இவற்றை பலர் முகநூல், டுவிட்டர், blog போன்ற தளங்களில் குறுஞ் செய்திகள் எழுதுவதற்கு பாவிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு இப்போதுதான் தன் பால பருவத்தில் உள்ளது. தன்இயக்க வாகனங்கள், தொழில்சாலை இயந்திரங்கள், விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவ விஞ்ஞானம் என பல உச்சங்களை தொட்டு பயணிக்கும் இதன் எல்லை என்ன என்பதை ஈசனும் அறியான்!
(முற்றும்)
Leave a Reply