ஆசிரியர்:- மு .மேத்தா
வகை: – கவிதை
பதிப்பகம்:- கவிதா பப்ளிகேஷன்ஸ்
பக்கம்:- 96
முகநூலில் ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ கவிதை நூலின் பதிவு என்னை படிக்கத் தூண்டியது. 1994 முதல் 2003 வரை வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு சில தலைப்புகளில் உள்ள மிக ரசித்தவற்றை பகிர்கிறேன்.
ஞானம் :-
“எடைக்குப் போடும் போதுதான் தெரிகிறது பத்திரிக்கைகளில் படிக்காமல் விட்ட பயனுள்ள பக்கங்கள்”
வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை செய்திருக்கிறோம் என்று.
நதி :-
கர்நாடகத்தில் உடையட்டும்
உன் கால் விலங்கு
காவிரியாய் நீ நடந்து தேன் வழங்கு
உலகத்தின் தாகத்தை
தணிப்பவளே !உன்னுடைய
உள்ளத்தில் தாகம் ஏதும்
உண்டோ?
இதே கவிதையின் மற்றோர் வரியில் ‘கடலின் மணமகள் !ஆகாய மருமகள்! நாங்கள் புன்னகைக்க கண் கசக்கும் மழைமகள் ‘என்று குறிப்பிட்டுள்ளார். தன் மணமகனை சென்றடைய விடாமல் தடுக்கும்போது நீராவியாக பெருமூச்செறிய ஆகாயம் எனும் மாமியார், மழை எனும் மகளை நல்லெண்ணத்துடன் அனுப்ப மழையின்வேகம் தாளாமல் அணையை உடைத்துக் கொண்டேனும் தன் மணமகனை சேர வந்திடுகிறாள். முறைப்படித் தன்னை (அணையைத் திறந்து) அனுப்ப மாட்டார்களா?என்ற தா(க்)கம் இருக்கத்தானே செய்யும்?
சுவரொட்டித் தலைவர்கள் :-
ஆளே இல்லாத்
தலைவர் ஆயினும்
அலைகடலாய் திரண்டுவர
மக்களை அழைக்கிறார்.
சுவரொட்டித் தலைவர்களை
நாங்கள்
சகிப்பதன் காரணம்
ஒட்டுவோர் எழுதுவோர்
ஒருசிலர் பிழைக்கிறார்…
மேத்தாவின் இந்த வரிகளைப் படித்ததும் இந்த மாதிரித் தலைவர்கள் தொலைக்காட்சி பேட்டியில் எல்லாத் தொகுதிகளிலும் நிற்போம் என்று சொல்வதைக் கேட்க சிரிப்பே வராத சிறந்த நகைச்சுவை என்றே தோன்றும்.
நியாயங்கள்:-
மெழுகுவர்த்திக்கு
தியாகி என்ற திமிர்
விளக்குக்கு
போராளி என்ற கர்வம்!
இரண்டுக்குமான வாக்குவாதமாக கொண்டு சென்று சுவையான கவிதையாய் அமைத்திருப்பார்.
ஓர் உரையாடல்:-
இந்த தலைப்பில் காவிரியின் நடுவர் மன்றத் தீர்ப்பும், அதை ஒட்டிய நிகழ்வையும் வைத்து கேலியான ஒரு கவிதை.
மற்ற கவிதைகளை புத்தகத்தை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். காதல் கவிதைகள் இல்லையோ என்று நினைப்பவர்களுக்கு காதலை எழுதாத கவிஞர்கள் உண்டா என்ன? புத்தகத்தில் இடம்பெற்ற முதல் தலைப்பு “இந்தியா என் காதலி to விடை பெறும் வேளை” என்ற கவிதை வரையில் ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ ‘தீண்டாமை’ என்று பலவற்றிலும் காதல் கவிதைகளும் அவளுக்கு ஓர் ஆடை, (மறைந்த சில்க் பற்றியது) வாழ்க்கை, கன்னி மாடம் , மழையில் நினைந்த குடையைப் பற்றிய கவிதை என நிறைய ….படித்து மகிழுங்கள்.
Leave a Reply