பாரம்பரியம்

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், மெர்ல்போர்ன், ஆஸ்திரேலியா.)

 கிராமப்புறங்களில் விவசாயிகள் ஒரு பழமொழி சொல்வார்கள். “முன்ஏர் எவ்வழியோ பின்ஏர் அவ்வழியே” 
          தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்.

ரத்னம் பிறந்தது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். ரத்னத்தின் அப்பா நடராஜன்  மருங்காபுரி ஜமீனில் சுப்பிரண்டாக வேலை. அடுத்தவர் வைத்திலிங்கம், சுந்தர பெருமாள் கோவிலில் போஸ்ட் மாஸ்டர். மூன்றாமவர் சதாசிவம், உள்ளுரில் பெரிய மிராசுதாரிடம் சர்வசுதந்திர கணக்குப் பிள்ளை. நண்காமவர் ராமச்சந்திரன், வேலை எதுவும் இல்லாமல் ஜமீன்தார்கள், பெரிய மடாதிபதிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, சைவத் தொண்டு செய்து கொண்டிருந்தார்; இவருக்கு வாரிசு இல்லை. மற்ற எல்லாருக்கும் ஆண் ஒன்று,பெண் ஒன்று என வாரிசுகள்.
எல்லா பிள்ளைகளும் ஒன்று போலவே நடராஜனை மூத்தப்பா, வைத்திலிங்கத்தை பெரியப்பா, சதாசிவத்தை நடப்பா,   ராமச்சந்திரனை சின்னப்பா என்றுதான்  கூப்பிடுவார்கள்.      

விசேட நாட்களில் வெளியூரில் உள்ளவர்கள் குடும்பத்துடன்  ஆஜர் ஆவதால், அந்த பெரிய மாடி வீடு திருவிழாக் கோலமாக இருக்கும். இந்த குடும்பத்தின் ஒற்றுமை ஊரறிந்தது.        

வெளியூரில் இருந்த  இருவரும் தம்பி சதாசிவம் மூலமே நிலபுலன் வாங்கினார்கள்.

ஒரு விபத்தில் நடராஜனும்,  நோய்கண்டு வைத்திலிங்கமும் சிவலோக பதவி அடைந்து விட்டார்கள். சதாசிவம் தன் அண்ணன் பிள்ளைகளை எந்த வேற்றுமையும் பாராட்டாமல் தன் பிள்ளைகளைப் போலவே கவனித்துக் கொண்டார். 

நடராஜனின் மகன் ரத்தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை; வைத்திலிங்கத்தின் மகன் சுந்தரம், பஞ்சாயத்து யூனியனில் வேலை; சதாசிவத்தின் மகன் சிவானந்தம், எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் வேலை. தன் சகோதரர் எல்லாருடைய மகள்களையும் உள்ளூரிலிருந்த  சதாசிவம்  பெரிய அரசு அதிகாரிகளுக்கு மணமுடித்திருந்தார்.    

எல்லாருக்கும் வாரிசுகள் பிறந்திருந்த வேளையில் பிள்ளைப் பேறில்லாத தன் மகன்,மகள் அந்திமக்காலம் பற்றி சதாசிவம் ரத்தினத்திடம்  வேதனைப்பட்டார். 

ஒற்றுமையாய் இருந்த அவர்கள் நால்வரைப்போல் தாங்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருப்பதாகவும்,  குடும்ப பாரம்பரியத்தை எல்லா விதத்துலயும் காப்பாற்றுவதாகவும் ரத்னம் வாக்களித்தார்.
“நடப்பா, நான் சத்தியம் செஞ்சு சொல்றேன்; நானோ என் பிள்ளைகளோ சிவானந்தத்திடம் சொத்துத் தகறாறுக்கு வரமாட்டோம். இந்த பெரிய பூர்வீக மாடி வீட்டை அவங்க எடுத்துக்கட்டும். நான் சிறிய மனைக்கட்டு ஒன்னு வாங்கி வீடு கட்டிக்கறேன்.” ரத்னம் ஆணித்தரமாகக் கூறினார்.
தன் சித்தப்பா வைத்திலிங்கத்தின் மகன் சுந்தரத்தையும் தன்னைப் போலவே சத்தியம் செய்யச் சொன்னார்.
               அடுத்த சில ஆண்டுகளில் சதாசிவமும் மறைந்த தன் அண்ணன்களை தேடிப் போய் விட்டார்.
சிவானந்தத்தின் மனைவியின் சதோதரியின் ஒரு பெண் பிள்ளையை சிவானந்தத்தின் மனைவி  எடுத்து வளர்த்தாள்.
            இரண்டாம் தலைமுறை ஒன்றுவிட்ட சகோதரர்கள் எல்லாரும் வயதாகி பணிமூப்பு அடைந்து, சொந்த ஊரில் தனித்தனியே வீட்டில் வசித்தார்கள். சிவானந்தமும் அவர் தங்கை மங்கையும் பூர்வீக பெரிய மாடிவீட்டில் வசித்தார்கள்.
       சிவானந்தத்திற்கு பென்ஷன் பணம் போதுமானதாக இல்லை. தன் மைத்துனி மகளை எடுத்து வளர்ப்பதால்  திருச்சியிலிருக்கும் மைத்துனி வீட்டு செலவுகளைக்கூட சிறு முனுமுனுப்பும் இல்லாமல் செய்துவிடுவார்.
      இதற்கெல்லாம் நன்செய் , புன்செய் நிலங்களை விற்று  செலவு செய்தார்.
நிலங்கள் எல்லாம் விற்று முடிந்தபின் செலவுகளை சமாளிக்க அந்த ஊர் மிராசு ஒருவரிடம் அவ்வப்போது பணம் கைமாற்று என்று வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் சொன்னபடி திருப்பிக் கொடுக்க முடியவில்லை. நாணயத்தைக் காப்பாற்ற பெரிய மாடி  வீட்டின் பத்திரத்தை கொண்டு போய் கொடுத்தார்.
” சிவானந்தம், உன் அப்பா சதாசிவம் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட நண்பன்கிறதாலத்தான் உனக்கு பணஉதவி செய்தேன். மத்தபடி இந்த சொத்து அடமானத்தவிட உங்க அப்பாவோட பெயர்தான் அதிக மதிப்பு உள்ளது. அதை நீ காப்பாற்றனும்; நாளைக்கு பிரச்சனை எதுவும் வரக்கூடாதுங்கறதால பத்திரம் என்னிடம் இருக்கட்டும்” என்று வீட்டுப் பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

      பின்னர்  சிவானந்தம் புரோ நோட்டு எழுதிக் கொடு்த்துவிட்டுத்தான் பணம் வாங்கி வந்தார். இது தொடர்கதையானதால் அந்த புரோ நோட்டிலேயே ஒவ்வொரு முறையும் எழுதிக் கையொப்பமிட்டு வந்தார்.

ரத்தினத்திற்கு சுப்பிரமணி எனறொரு மகன் உண்டு. மிராசுவின் மகன் சுப்பிரமணிக்கு நண்பன். அவன் சித்தப்பா சிவானந்தம் கடன் மேல் கடன் வாங்குவதையும்,  நிலத்தைப் போலவே வீடும் கடனுக்கு ஈடாகப் போய்விடும் என்று எச்சரித்தான். அதற்கு சுப்பிரமணியன், ” பாவம் சித்தப்பா என்னதான் செய்யமுடியும்;அவர் அந்த வீட்டை அடமானம் வைத்திருப்பது தெரியும்; நாங்கள் அவருக்கு தொல்லை தர மாட்டோம்” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.   சித்தப்பா சிவானந்தத்தை சந்தித்த சுப்பிரமணி,” சித்தப்பா நீங்களும் எல்லோரும் எங்களுடனே வந்து இருந்து விடுங்களேன் ” என்று அழைப்பு விடுத்தான்.சிவானந்தமோ,” மணி, உண்மையில் உன்னை எனக்கு தத்து கொடுக்கும் படி என் அண்ணனிடம் கேட்பதாக இருந்தேன்; நான் கேட்டதும் அண்ணன் மறுக்காமல் ஒத்துக் கொள்வார் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் நிலைமைதான் வேறு மாதிரி ஆகிவிட்டதே” என்று பரிதாபமாகப் பேசினார்.  சுப்பிரமணி அவருக்கு ஆறுதலாக இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வந்துவிட்டான்.

       தன் அண்ணன் சிவானந்தத்தின் செயல்பாடு பிடிக்காத மங்கை, கணவரின் ஊரான லால்குடிக்குப்  போய்விட்டாள்
        ஒருமுறை  பணம் வாங்க வந்தபோது அந்த மிராசு,
“சிவானந்தம் அசல்,வட்டிக்காக வீட்டை  என் பெயருக்கு கிரயம் செஞ்சு கொடுத்திடு, நான் நாள் பார்த்து சொல்றேன்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
          ரத்தினம் வீடுதேடி வந்த அந்த மிராசுதார்,
“என்ன ரத்னம் சௌக்கியமா” என்றவர்,
“உன் சித்தப்பா மகன் என்கிட்ட வாங்கிய பணத்துக்கு பெரிய வீட்டை கிரையம் செஞ்சு தருவதா சொல்றான். நிலத்தை விற்கிறப்பகூட  சதாசிவத்தோட சொந்த சம்பாத்தியம் என்று எடுத்துக் கொண்டோம். வீடு  உன் தாத்தா காலத்துல கட்டினது. உனக்கும் பாத்தியதை உண்டு” என்றார்.
“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை , இன்னொரு ஒன்றுவிட்ட  தம்பி சுந்தரத்தையும் வந்து கையெழுத்து போடச் சொல்கிறேன். பத்திரப்பதிவு தேதியை மட்டும் சொல்லுங்கள்” என்றார் ரத்னம்.
   அதைப்போலலே பத்திரப் பதிவும் செய்து முடித்தாகி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அவருக்கு வீட்டை காலி செய்து ஒப்படைக்க வேண்டும்.
  “சிவானந்தம்,  என் வீட்டுக்கு வந்து தங்கிக் கொள்ளுங்கள்” என்றார் ரத்னம்.
    வளர்ப்பு மகளுடன் போய் அங்கு தங்கிட சிவானந்தம் மனைவி உடன்பட வில்லை. அவர்கள் திருச்சி சென்று  தங்கிக் கொண்டார்கள். மொட்டைமாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிவானந்தம் நள்ளிரவில் தூக்கக்கலக்கத்தில் சிறுநீர் கழிக்க எழுந்து வந்தபோது மாடிப்படிகளில் உருண்டு அடிபட்டுக் கொண்டார்.
      ரத்தினத்தின் இரண்டாவது மகன் சுப்பிரமணியம் சென்று சித்தப்பாவின் உடல் நலம் விசாரித்தான். அவன் மீது சிவானந்தத்திற்கு அதிகப் பாசம் உண்டு. ஒரு சமயத்தில் அவனையே தான் எடுத்து வளர்த்தாலென்ன என்ற எண்ணம் கூட அவருக்கு உண்டு. சிவானந்தம் தான் செய்த தவறுக்காக கண்ணீர் விட்டார்.

“சித்தப்பா, நான் எப்பாடு பட்டாவது அந்த வீட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரும்பவும் வாங்கி உங்க  மனசை குளிர்விப்பேன்” என்று சிவானந்தத்துக்கு  வாக்குக்கொடுத்து விட்டு வந்தான்.

  சித்தப்பாவிடம் வாக்குக் கொடுத்தது பற்றி அப்பா ரத்னத்திடம் கூறிவைத்தான். அந்த வீட்டை திரும்ப வாங்கும் வரை தன் கல்யாணப் பேச்சை எடுக்கக் கூடாதென்றான். வங்கியில் வேலை நேரம் முடிந்தபின் மாலையில் வீட்டிலேயே பள்ளிப் பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுத்தான். ரத்னம் தன் பங்குக்கு அவ்வூர் கடைகள் சிலவற்றுக்கு கணக்கு எழுதினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் சேமித்த பணம் வீட்டை திரும்ப வாங்க போதுமானதாக இல்லை. எனவே, குடியிருக்கும் கூறை வீட்டையும் விற்று விட்டார்கள். மிராசுதார் தான் பத்திரம் பதிவு செய்த அதே விலைக்கு திரும்பக் கொடுத்துவிட்டார்.

ஒரு நல்ல நாளில் அந்த வீட்டில் பால்காய்ச்சினார்கள். ரத்னம் குடும்பத்தார், சிவானந்தம் குடும்பத்தார், சுந்தரம் குடும்பத்தார் என எல்லாரும் வந்து குழுமி இருந்தார்கள்.
ரத்னம் பேச ஆரம்பித்தார்,
” எல்லாரும் இப்போ நான் சொல்றத கவனமா கேட்டுக்குங்க. எப்படி நம்ப அப்பாக்கள் பேதமில்லாம ஒன்னா ஒத்துமையா இருந்தாங்களோ , அதேமாதிரி நாமும் இருக்கனும். ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்று உலகத்தாருக்கு தெரியவே கூடாது. அத்தனை பண்டிகைகளுக்கும் எல்லாரும் பேரக்குழந்தை சகிதம் இங்க வந்திட வேண்டும். கல்யாணம், காதுகுத்து வளைகாப்பு இன்னும் என்னென்ன விசேடம் உண்டோ எல்லாமும் இந்த வீட்டிலதான் நடத்தனும்”

  அப்போது மங்கை கேட்டாள்,

 ” அண்ணே, காம்பவுண் சுவத்துல ‘தியாக இல்லம் ‘ அப்படின்னு பெயர் பதிச்சிருக்கியே”

” ஆமாம் மங்கை, நம்ப அப்பாக்களுடைய தாத்தா பெயர் தியாகராசன்; அவர் காலத்துல கட்டின வீடு இது.  அதான் அவர் பெயரைப் பதிச்சேன்”

     தன்  மகன் சுப்பிரமணியம் உதவியால் நடப்பா சதாசிவத்துக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் தாண்டி பெரிய செயல் செய்து விட்டார் ரத்னம்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: