வாசிப்பு அனுபவம் – அன்புமொழி
வாசித்தது:-ஜீவனாம்சம்
ஆசிரியர்:-சி.சு .செல்லப்பா
பதிப்பகம்:-காலச்சுவடு
‘ஜீவனாம்சம்’ சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது.
முன்னுரையில் ஆசிரியர் இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை மட்டும் எடுத்து அழகாக முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று….
காரி காளையாக (வாடிவாசல்) மட்டுமல்ல, கைம்பெண்ணாகவும் மாறி , புகுந்த வீடு, பிறந்த வீடுக்கான உறவுச்சிக்கலை கையாளத் தெரியும் என்று சொல்லாமல் சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது.
கதையின் ஆரம்ப வரிகள்:-
மன்னி ‘அண்ணா வந்துவிட்டான் போலிருக்கு’ என்று பாத்திரம் கழுவிக்கொண்டே சாவித்திரி குரல் கொடுக்க ‘இன்றைக்கும் அலைச்சலும் செலவும் தான் மிச்சமா?’ என அண்ணி அலமேலு கேட்க ‘கோர்ட்டுக்கு என்று போனாலே நாயாய் அலைய வேண்டியிருக்கு’ என அண்ணன் வெங்கடேசன். திரைப்படக் காட்சியைப் போல எந்த வர்ணனையுமின்றி கதையை வாசகரிடத்தில் சேர்த்துவிடுகிறார். புகுந்த வீட்டினரிடமிருந்து,’தங்கைக்கு ஏதேனும் தரவேண்டுமென கேட்கட்டுமா?’என அண்ணன் பலமுறை கேட்டபிறகு ‘உனக்கு சரி என்றால் செய்’ என்கிறாள் தங்கை.
தன் அப்பா உயிரோடிருந்த போது அவரின் நண்பர் ‘அவளுக்கு அவர்களின் மாமியார் வீட்டில் கேட்டு ஏதேனும் ஒருவழி செய்யக்கூடாதா?’ என ஆரம்பிக்க அதற்கு அவர் ‘இதைவிட்டு வேறு ஏதாவது பேசு’ என்று கோபமாக கூறிவிடுகிறார். சாவித்திரிக்கு இந்தச் சம்பவம் ஞாபகம் வருகிறது. அண்ணன் கடிதம் எழுத, புகுந்த வீட்டின் பிரதியாக, நிதி (ஜீவனாம்சம்) பற்றி சொல்ல, கணக்கரான, பழக்கத்தில் உறவான சுந்தரம் மாமா வருகிறார். அரைமா நிலம் அனுபவ பாத்தியதை (உரிமையோ, உடைமையோ கிடையாது)யாகத் தருவதாக சாவித்திரியின் மாமனார் கூறியதாக தெரிவிக்கிறார்.
‘கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று கோபத்துடன் கூறுகிறான்.
அடுத்து கொஞ்ச கால இடை வெளியில் குப்புசாமி சாஸ்திரிகள் வந்து ஒரு செய் நிலம் என கூட்டிச் சொல்ல இன்னும் சூடாகிறான் வெங்கடேசன்.
ஊருக்கே சித்தியான காமாட்சி எதேச்சையாக சாவித்திரியைப் பார்க்க வரும்போது அண்ணன், அண்ணி வீட்டில் இல்லாததால் தன் மாமனார், மாமியார், சின்ன (குழந்தை) கொழுந்தன் கணபதி பற்றி கேள்விபட்ட செய்திகளை சொல்லாமல் மறைத்துவிடுகிறாள்.
வீட்டுக்கு வந்த பொியவர்களிடம் தன் அண்ணன் ,அண்ணியின் பேச்சும் நடத்தையும், குறுகிய காலமே வாழ்ந்த தன்மாமியார் வீட்டில் அவர்கள் தன்னை வீட்டுக்கும் வேலையாட்களுக்கும் எஜமானியாக்கியதும், சிறுபெண் என்று சமையல் ,வீட்டுவேலைகளை தானே செய்ததும் ,குட்டி கொழுந்தன் கணபதி மன்னி என்று சுற்றிசுற்றி வந்தது ,புகுந்த வீட்டின் விளக்கான அவள் மனதில் ஒவ்வொரு திரியாக சேர…
கடைசியில் வரும் செய்தீயை கணவனும் மனைவியும் அவளிடம் அதை சொல்லும் விதம் அதன் தொடர்பான நிகழ்வுகள் பற்றவைக்க….
விளக்கை ஏற்றினாளா? அல்லது தன்னை ஏத்திவிடும் உறவுகளை விலக்கினாளா?
என்ன செய்தாள்? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜீவனாம்ச கேஸ் விஷயமாக என் பார்வை ஒன்று, அண்ணியின் பார்வை ஒன்று ,மூன்றாவதாக உன் பார்வை என்ன? அண்ணன் கேட்க தங்கை நேரடியாக பதில் சொல்ல முடியாதவளாகத் தவிக்கிறாள்.
அந்தகால வழக்கப்படி கைம்மை நிலைக்கு தலையை மழிக்கவிடாமல் தடுத்த அண்ணி அலமேலை நன்றியுடன் நினைப்பது.
அண்ணன் வெங்கடேசன் மனித உறவுகளை விட ஜீவனாம்சத்திற்கு பேரம் பேசுகிறானே என்ற கோபம் வந்தபோதும் அவனை மனதிற்குள் திட்டுவதற்கு கூட மனமில்லாதவளாக ஒரே வயிற்றில் பிறந்து உன்னைச் சொன்னால் அது எனக்கும்தான் என்பதாக யோசித்து வீம்பு பிடித்தவன்என்று மட்டுமே சொல்லுவது உறவின் உன்னதம்!!!
அதுபோல அவள் தன் தீர்மானத்தைச் சொன்னதும் அண்ணனாக உடன்படுவதும் வெகு சிறப்பு!!!
பாத்திரம் கழுவும் நேரத்தில் கழுவப்படும் நினைவுகள், ஆட்டுக் கல்லுக்குள் சிக்கும் மாவாக உறவுச் சிக்கல்கள், தன் கோபத்தின் வெளிப்பாடாக துணியை அடித்துத் துவைப்பது என சாவித்திரியின் எண்ண ஓட்டங்களை ய்ப்பா ய்ப்ப்பா . என்ன செ(சொ)ல்லப்பா !!!
Leave a Reply