விண்ணையும் மண்ணையும் தொட்டுச்செல்லும் கட்டுரைத் தொடர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் நண்பர் கிறிஸ்டி நல்ல ரத்தினம் அவர்கள் நமது வலைதளத்திற்கு பிரத்தியேகமாக எழுதி அளிக்கும் கட்டுரையாகும் தற்போதைக்கு மாதத்திற்கு இரண்டு கட்டுரைகள் வழங்கிடத் திட்டம்.
இத்தொடர் விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை நிச்சயம் கவர்ந்திடும்
இதில் “அங்கு” என்ற தலைப்பில் விண்வெளி / விஞ்ஞானம் சம்மந்தமான நிகழ்வுகளையும் “இங்கு” எனும் தலைப்பின் கீழ் சமகாலத்தில் நிகழும் கலை, இலக்கிய விடயங்களை எழுதுவதே இவரது எண்ணம்.
இங்கு
பாலு மகேந்திரா வாழ்கிறார்!
தமிழ் திரைப்பட உலகிற்கு புகழ் சேர்த்த நம் பாலு மகேந்திராவிற்கும் ஈரானைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட ஞானி மஜீத் மஜீதிக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தியது இலங்கையில் இயங்கும் “பாலு மகேந்திரா நூலகம்”. கடந்த வருடம் இந் நூலகத்தின் இணையத்தளத்தை திரு.மஜீதி சம்பிரதாயபூர்வமாய் திறந்து வைத்து எதிர்கால இளம் சமுதாயமும் பாலுமகேந்திரா எனும் படைப்பாளியின் கனவுத் தொழிற்சாலையில் ஒரு சில்லாய் சுழல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிக்கும் வித்திட்டார்.

‘ஈழத்திரைப்படத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்று செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்புடனான திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம் இதுவாகும்’ என தன்னை அறிமுகப்படுத்துகிறது இந்த அமைப்பு .
கடந்த ஓராண்டு காலமாய் இயங்கி வரும் இந்நூலகம் உலகப்புகழ் பெற்ற திரைப்படக் கல்லூரிகள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்ட 800க்கும் அதிகமான திரைப்பட நூல்களையும், 200க்கும் அதிக புனைகதை நூல்களையும் பன்னீராயிரத்திற்கும் அதிகமான உலக திரைப்பட DVD களையும் தன்னகத்தே தாங்கி இயங்குகிறது.
வெறும் திரைப்படம் சம்மந்தமான புத்தகக் கட்டுகளையும், எண்மின் காணொளி வட்டுகளையும் (DVD) அடுக்கி வைத்து அழகு பார்க்காமல் களத்தில் இறங்கி முழு நேர இலவசத் திரைப்பட கற்கை நெறிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் இவர்கள். திரைக்கதை, வசனம் எழுதுவது, இயக்கம், எடிட்டிங் என இப் பட்டியல் நீழ்கிறது.
தமிழகத்தின் பல திரைப்படத் துறை ஜம்பவான்கள் இவ்வமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டு இந்த ஆர்வம் மிக்க இளம் சிற்பிகளின் வழி நடத்துவது ஒரு சிறப்பு.
இலங்கையின் வட பகுதியில் உள்ள கிளிநொச்சி எனும் நகரில் அமைந்துள்ள இந்த அமைப்பிற்கு பாலு மகேந்திரா எனும் திரையாளுமையின் குடும்பத்தினர் 200 DVDகளையும் 200க்கும் அதிகமான புத்தகங்களையும் வழங்கி இம்முயற்சிக்கு ‘கிளாப்’ அடித்து 2020ல் ஆரம்பித்தனர்.
ஒரு நூலகமாக மட்டும் செயல்படாமல் மக்களிடையே திரைப்பட ரசனையை மேம்படுத்தும் நோக்கில், இங்கு உலகத் திரைப்படங்களை திரையிட்டு அது சார்ந்த விவாதங்களையும் நிகழ்த்துகின்றனர். அத் திரைப்படங்களில் சம்மந்தப்பட்ட கலைஞர்களையும் இணைய வழி (zoom) மூலம் இணைத்து ஒரு கலந்துரையாடல்களாகவும் இது உரு மாறுவதுண்டு.
பாலு மகேந்திரா தன்னுடன் பணியாற்றும் சக உதவி இயக்குனர்களளுள் வாசிப்பு அனுபவத்தை விதைத்தவர் என்பது தெரிந்ததே. இதையே தன் திரைப்படக் கல்லூரியிலும் ஒரு கட்டளையாகவே கடைப்பிடித்தவர். இதன் நிழல் இங்கும் படராமல் இல்லை. தம் வசிப்பு அனுபவத்தை மெய்நிகர் வழியூடாக பகிர்வது மட்டுமல்லாமல் பல எழுத்தாளர்களும் இந்நிகழ்வுகளில் பங்கேற்று தம் ‘கதை பிறந்த கதையை’ சொல்லிப் போவதுண்டு. அண்மையில் ஒரு சிறுகதைப் போட்டியை வேறு நடாத்தி முடித்தார்கள் இந்த இளம் சிங்கங்கள்! குறும்படத்தயாரிப்பு , பயிற்சிப் பட்டறை என விரிகிறது இவர்கள் இலக்கு.
இன்னும் அறிய இவர்களின் வலைத்தளத்தை தட்டிப்பாருங்கள்:
https://www.balumahendralibrary.org/ta
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்த இந்த மாபெரும் திரையுலக ஆளுமை இன்று வடக்கில் ஒரு கலங்கரை விளக்கமாக கால் பதித்து பல இளம் திரை படைப்பாளிகளை உருவாக்க வித்திட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியே!
ஒரு கலைஞன் மறைவதில்லை. அவன் கலையோடும் மனதோடும் என்றும் வாழ்கிறான்!
இதற்கு சான்று பகிர்கிறான் பாலு மகேந்திரா எனும் இந்த திரையுலக பிரமன்!
அங்கு
விண்ணில் ஒரு கண்!
கடந்த ஆண்டு நத்தார் தாத்தா தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஜரோப்பிய ‘ஸ்பேஸ் போட்’ பக்கம் தன் ‘மான்-வாகனத்துடன்’ தலைகாட்ட தயங்கியிருந்தார். இருக்காதா பின்னே?
நத்தார் தினத்தன்று இங்கிருந்துதான் ‘ஏரியன் 5’ ராக்கெட்டில் தொத்திக்கொண்டு நாசாவின் ஜேம்ஸ் வெப் வான் தொலைநோக்கி விண்ணில் பாய்ந்தது. தாத்தா குறுக்கிட்டிருந்தால் வீட்டில் மான் றோஸ்ட்தான் அன்று ஸ்பெஷல் டிஷ்!
அது இருக்கட்டும்….. யார் இந்த ஜேம்ஸ் வெப்?

இவர்தான் நாசாவின் தலைவராக 1961 முதல் 1968 வரை பணியாற்றியவர். அப்பல்லோ வான்வெளித்திட்டத்தின் பிதாமகன். இவரை கெளரவிக்கவே இப்பெயர் சூட்டல்.
நாசாவுடன் ஜரோப்பிய மற்றும் கனெடிய விண்வெளி ஏஜன்சிகள் இணைந்து இந்த ராட்சத தொலைநோக்கியை வானுக்கு அனுப்பி வைத்தன. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் பல தொழில்நுட்ப தடைகளைத்தாண்டி 2021ல் தான் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
இதன் நோக்கம் பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய மர்மங்களையும் பிற உயிர்களின் தோற்றம் பற்றி கண்டறிவததே.
ஆனால் விண்ணில் விரிந்து தரவுகளை பூமிக்கு அனுப்பும் முன் பல சவால்களை இந்த தொலைநோக்கி சந்திக்காக வேண்டும்.
முதல் சவால்: குடை போல் விரியும் தொலைநோக்கியை பக்குவமாய் மடித்து 5.4 மீட்டர் அகலமான ராக்கட்டுக்குள் மடித்து வைக்க வேண்டும். ராக்கட்டின் அதிர்வில் நோக்கிக்குள் பொருத்தப்பட்டிருக்கும் பல மில்லியன் டாலர் பெறுமதியான உபகரணங்கள் சேதமடையக் கூடாது.
இரண்டாம் சவால்: வானில் பறந்த 28ம் நிமிடத்திலேயே ராக்கட்டும் தொலைநோக்கி உறங்கும் கலமும் விடை பெற்றுக் கொள்ளும். அதன் பின் மெதுவாக கலத்தின் சோலார் பேனர்கள் குடை விரிக்க வேண்டும். அதிலிருந்து 12 மணிக்குள் கலத்தில் உள்ள ராக்கெட்டுகள் உயிர்ப்பித்து கலத்தை ஒரு மில்லியன் தொலைவில் உள்ள பிரபஞ்சத்திற்கான பயணத்தை தொடங்க வேண்டும்.
மூன்றாம் சவால்: ஜந்தாம் நாளில் தொடங்கி அடுத்த 25 நாட்களுக்கு மிக மிக மெதுவாக தொலைநோக்கியின் கருவிகள் விரியத் தொடங்கும். சூரிய தடுப்புத்தான் மிக அகலமான – மூன்று டெனிஸ் மைதான அளவு – அமைப்பு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஒரு வெளவாலின் சிறகு போல் விரியும் இதன் வேலை சூரியன், பூமி, நிலவு போன்றவற்றின் கதிரியத்தில் இருந்து தொலைநோக்கியை பாதுகாப்பதாகும். மிக சிக்கலான தொழில் நுட்பத்துடன் 140 யந்திரங்கள், 8 மோட்டார்கள், 400 கப்பிகள், 90 கேபிள்கள் ஒன்றிணைந்து இயங்கி இதை விரித்து குடையாக்கும். ஆறாம் நாளில் தொடங்கும் இப்பணி நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மெதுவாய் விரிந்து நிறைவு பெறும்.
நான்காம் சவால்: தொலைநோக்கிக்கு பார்வையளிக்கும் கண்ணாடிகள் விரிந்து காட்சிகளை துல்லியமாக அனுப்பும் நுணுக்கமான நிகழ்வு நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது முற்றுப்பெறும்.
இத்தனை சவால்களை தாண்டி ஜனவரி மாத இறுதியில் இன்று வரை மானுடர் கண்டிராத பல பிரபஞ்சங்களின் மர்மங்களை துலக்கும் படங்களை பூமிக்கு அனுப்பத்தொடங்கும்.
1990ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஹொபிள் தொலைநோக்கியை விட நாசா தற்போது அனுப்பியுள்ள இந்த 6000 கிலோ எடையுள்ள தொலைநோக்கி மிக உயர்ந்த தொழில்நுட்ப திறனும் சக்தியும் வாய்ந்தது.

ஒரு ஒப்பீட்டுக்கு சொல்வதானால் ஹொபிளின் பிரதிபலிப்பு கண்ணாடிகள் 4.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவை. இதே கண்ணாடிகள் ஜேம்ஸ் வெப் வான் தொலைநோக்கியில் 25 சதுர மீட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
மேலும் ஹொபிள் பூமியில் இருந்து வெறும் 600 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடியேதான் தன் பணிகளை ஆற்றியது. ஆனால் ஜேம்ஸ் வெப் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் வாடியமைத்து பணிகளைத் தொடங்கும்.
இத் தொலைநோக்கியை உருவாக்குவதில் இந்தியாவைச்சேர்ந்த நாசா விஞ்ஞானி டாக்டர் திருமதி ஹஷிமா ஹசனின் பங்களிப்பையும் குறிப்பிட்டாகவேண்டும்.

உத்தரபிரதேச மாநில லக்னோவைச் சேர்ந்த இவர் இத்திட்டத்தில் துணை நிரல் விஞ்ஞானியாக (Deputy Program Scientist) கடமையாற்றி இத்திட்டத்தை கண்காணிக்கும் மற்றும் நிர்வகிக்கும் பாரிய பொறுப்பை மேற்கொண்டுள்ளார். பாரதி கண்ட புதுமைப்பெண்கள் இன்று விண்ணையும் தாண்டி சாதனை படைப்பது போற்றுதற்குரியது!
வரும் மாதங்களில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பல மூலைகளில் மறைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும் படங்களை பூமிக்கு அடுத்த பத்து ஆண்டுகள் வரை அனுப்பிக் கொண்டே இருக்கும்!
‘கண்ணுக்கு எட்டா தூரத்தில் உள்ளது என்ன’ எனும் நமது கேள்விக்கு இந்த வான் தொலைநோக்கி விடை பகரும் என நம்புவோம்.
Leave a Reply