எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்

புதிய வானம்! புதிய பூமி!! 
++++++++++++++++++ 

முதியோர் நலம்


1950 ம் ஆண்டு. மாலை நேரம். ஜேம்ஸ் – மாத்தா தம்பதியர் தம் வீட்டின் வராந்தாவில் அமர்ந்து பரந்த முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் தமது ஆறு செல்வங்களையும் கனிவுடன் நோக்கினர். என்ன அமைதியான வாழ்க்கை!இரண்டாம் உலகப்போர் முடிந்து எங்கும் அமைதி! நாடுகளின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் விண்ணைத்தொட உயரும் நாட்கள் அவை. அந்த ஆறு செல்வங்களும் Baby boomers எனும் ஒரு புதிய சமுதாயத்தின் பிரதிநிதிகள். இவர்கள் மட்டுமா? இல்லை, 1946 – 1964 ஆண்டுகளுக்குள் பிறந்த எல்லோருக்கும் இப்பெயர் பொருந்தும். இக்கால கட்டத்தில் உலகின் சனத்தொகை ஒரு பாரிய வளர்ச்சியை பதிவு செய்தது. ஐம்பது ஆண்டுகள் தாண்டி இந்த புதிய சமுதாயத்தினர் இன்று தங்கள் முதிர்வயதை எட்டி தம் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் தருணம். சடுதியாக ஆஸ்திரேலியாவின் சனத்தொகையில் இந்த முதிய பிரஜைகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.இன்று ஆஸ்திரேலியாவின் ஆறில் ஒருவர் 65 வயதுக்கும் மேற்பட்டவர் ஆவார். இந்தியாவின் சராசரி நடுத்தர வயது (median age) 28 ஆகவும் ஆஸ்திரேலியாவில் இது 38 ஆகவும் இருப்பது இந் நாட்டின் முதியவர்களின் சனத்தொகை விகிதாசாரத்தை நன்கு உங்களுக்கு புரியவைக்கும். சனத்தொகையின் 2.1 சதவீதமானோர் 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள்! நாட்டுக்காக உழைத்த இவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் சுமை இன்று அரசின் கைகளில். முதியோர் பராமரிப்பு, ஓய்வூதியம், வைத்திய சேவைகள், முதியோர் பொழுதுபோக்கு, நிதி முதலீடு என பல துறைகளில் இவர்களின் தாக்கங்கள் இல்லாமல் இல்லை. இம்முதிய பிரஜைகளை பராமரிக்கும் பாரிய பொறுப்பு மத்திய, மானில அரசு வரவு – செலவு திட்டத்தில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.எனினும் 1983 இல் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கமைய எல்லா ஸ்தாபனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்தது அவர்கள் சம்பளத்தில் 9 சதவீதத்தை ஒரு ‘ஊழியர் சேம நிதியத்தில்’ சேமிக்க வேண்டும். ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தன்னிச்சையாக இந்த நிதிக்கு மாதந்தோறும் செலுத்த முடியும். இவற்றிற்கு வரிச்சலுகைகள் பல உண்டு. இளைப்பாறிய பின்பே இந்நிதியில் ஊழியர்கள் கை வைக்க முடியும்.

ஓய்வூதியம்

ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து இளைப்பாற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதை தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்கு செல்வது சகஜம்.  ஒருவர் அரசினால் வழங்கப்படும் வாழ்வாதார ஓய்வூதியத்தைப் பெற 67  வயதையும் எட்ட வேண்டும். இந்த ஓய்வூதியத்தைப் பெற அரசின் கடிய சொத்து மற்றும் வருவாய், ஆதன, முதலீடு மதிப்பீடு  கணிப்பு சோதனைகளில் சித்தி அடைய வேண்டும். 

பணி ஓய்வுக்குப் பின்

நீங்கள் கைவேலைகளில் ஆர்வமுள்ளவரானால் உங்களுக்கும் இருக்கவே இருக்கிறது Men’s Shed எனும் அமைப்பு. இங்கு மர வேலை, இரும்பு மற்றும் மோட்டார் சம்மந்தப்பட்ட எல்லா  உபகரணங்களும் உண்டு. உதாரணமாக நீங்கள் ஒரு மரப்பலகையை இங்கு கொண்டு வந்து இங்கிருக்கும் நவீன யந்திரங்களின் உதவியுடன் ஒரு மரத்தளபாடத்தை உருவாக்க முடியும்.இவ்வாறான அரச முன்னெடுப்புகள் முதிய பிரஜைகளின் தனிமையை போக்குவது மட்டுமன்றி அவர்கள் மனோதிடத்தையும் சரீர சுகத்தையும்  பேணிப் பாதுகாக்கும் கருவிகளாக பயன்படுகின்றன என்பதில் ஐயமில்லை.என் தமிழக நண்பர் ஒரு முறை இம் முன்னெடுப்புக்களைப் பார்த்து  நம் ஊரிலும் பாடசாலை விடுமுறையிலாவது இது போன்ற முதியோர்கான  வகுப்புக்களை  நடத்தலாமே என அங்கலாய்த்தார். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை! 

சரி, நீங்கள் பல வருடங்கள் வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டீர்கள். உங்கள் ஆபீஸ் நண்பர்கள் விடைபெற்று போன பின் தனிமைதான் உங்கள் நண்பன்.  இத் தனிமையையும் விரட்டியடிக்கத்தான் ஆஸ்திரேலிய  அரசின் பல முன்னெடுப்புகள் உதவுகின்றன. உதாரணமாக U3A என அழைக்கப்படும் University of Third Age எனும் அமைப்பு  அனேக உள்ளூர் நகரங்களில் அமைந்துள்ளன. இங்கு பரீட்சை இல்லாத பாடங்கள் நடத்தப்படுகின்றன! என்ன, மீண்டும் பாடசாலையா என முகம் சுழிக்க வேண்டாம். நீங்கள் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியரா?  வாரத்திற்கு ஒரு நாள் சில மணி நேரம் ஓவியம் கற்பிக்க ஆவலா? நீங்கள் U3A இல் இணைந்து ஒரு ஓவிய வகுப்பை ஆரம்பிக்கலாம். உங்கள் மாணவர்கள்  எல்லாம் உங்கள் வயதை ஒத்த “இளைஞர்கள்” தான்!  இதில் விசித்திரம் என்னவெனில் உங்களுக்கும் ஊதியம் இல்லை,  மாணவர்களுக்கும் செலவு கிடையாது. அரசு இச்சேவைக்கான கட்டிட மற்றும் வாகன தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒருவர் எத்தனை பாடங்களையும் தெரிவு செய்ய முடியும். ஓவியம், யோகாசனம், நாட்டு நடப்பு, சரித்திரம், பட விமர்சனம், புகைப்படக் கலை, இசை – நாட்டியம் என பல சுவாரசியமான தலைப்புகளில் வகுப்புகள் காலை 9.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறும். இது பற்றி மேலும் அறிய கீழ் உள்ள வலைத்தளத்தை தட்டிப்டாருங்கள்.https://u3awaverley.org.au/

தமிழ்சமுதாயம்

அடுத்து ஆஸ்திரேலியாவின் தமிழ் சமுதாயத்தைப் பற்றி பார்ப்போமா? இறுதியாக நடைபெற்ற 2016 ஆண்டு சனத்தொகை கண்ககெடுப்பின்படி (மறு கணக்கெடுப்பு கடந்த வருடம் நடைபெற்றது – முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை) ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73, 161 பேரில் 28, 055 பேர் இந்தியாவிலும் 27,352 பேர் இலங்கையிலும் 9.979 பேர் ஆஸ்திரேலியாவிலும் பிறந்தவர்கள். நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் விக்டோரியா மாநிலத்திலுமே பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள்.தமிழர்கள் தம் கலாச்சாரத்தையும் மொழியையும் கட்டிக்காத்து இந்நாட்டில் பெருமையுடன் கல்வி, விஞ்ஞான ஆராய்ச்சி, முகாமைத்துவம், எழுத்துத் துறை உட்பட பல துறைகளில் முன்னணி வகித்து சாதனை படைத்து வருகின்றனர்.தமிழ் வளர்ப்பதில் பல அமைப்புகள் தன்னலம் பாராது தம்மை அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றன. 

தமிழ்க் கல்வி

இங்கு பல்கலைக்கழக நுழைவுப்பரிட்சைகளில் (பிளஸ் 2 விற்கு சமமானது)  Language Other than English எனும் பிரிவின் கீழ் தமிழ் மொழியையும் விக்டோரியா மாநிலத்தில்  ஒரு பாடமாக எடுக்க முடியும். இதற்கான வகுப்புகளை அனேக தமிழ் சங்கங்கள் நடாத்துகின்றன. மற்ற மாநிங்களிலும் இதை ஒத்த செயல்பாடுகள் உள்ளன. இம் முன்னெடுப்பு இளம் சமுதாயத்தினருக்கு தமிழ் மொழியின் பாவனையை செயல்படுத்தும் ஒரு நல்ல கருவியாக கணிக்கப்படுகிறது. 

தமிழ்ச் சேவைகள்

ஆஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 1978 இல் அரசு உடமையான ‘சிறப்பு ஒலிபரப்புச் சேவை’ (SBS – Special Broadcasting Service) முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்தது. இவ்வொலிபரப்பை கீழே உள்ள வலைத்தளத்தின் மூலம் கேட்க முடியும்:https://www.sbs.com.au/language/tamil

சிட்னி நகரில் இருந்து ஒலிபரப்பும்  ‘இன்பத் தமிழ் ஒலி’  ஒலிபரப்பு 1995 இருந்து நடாத்தப்படுகின்றது. சிறப்புப் பட்டி மன்றம், அறிவியல், பேட்டிகள், கவிதை மன்றம் என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவ் வானொலியை அதன் முகநூல் தளத்தின் மூலம் உலகின் எப்பகுதியிலும் இருந்து செவிமடுக்கலாம். மெல்பேர்னில் இருந்து இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கம் பலதரப்பட்ட இலக்கிய நிகழ்வுகளை கடந்த பல சகாப்தம்களாக நடாத்தி வருகிறது. இளம் தலைமுறைகளிடையே தமிழ் வழர்ச்சி எனும் தொலைநோக்குடன் இச் சங்கம் பல கருத்தரங்குகளையும் போட்டிகளையும் இளைஞர்களுக்காக நடாத்தி வெற்றி கண்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் தமிழ் எழுத்தாளர் விழா மூன்று நாட்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே நடைபெறும். தமிழ்நாட்டில் இருந்தும் பல இலக்கிய ஆளுமைகள் இவற்றில் கலந்து கொள்வதுண்டு. கடந்த வருடம் எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் மெய்நிகர் வழியாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி விழாவை சிறப்பித்தார்.

திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
திரு. எஸ்.ராமகிருஷ்ணன்

சாகித்திய விருது பெற்ற ஈழத்து மூத்த எழுத்தாளர் திரு. லெட்சுமணன் முருகபூபதியின் வழி நடத்தலின் இச்சங்கம் இன்னும் பல மைல் கற்களை தொட்டுச் செல்லும் என உறுதியாய் நம்பலாம். 

திரு. லெட்சுமணன்
திரு. லெட்சுமணன் முருகபூபதி

சமய நல்லிணக்கம்

சமய வழிபாடு ஆஸ்திரேலிய பிரஜைகளின் பண்பாட்டிலும் குடும்ப வாழ்விலும் ஆழப்பதிந்ததொன்று. சனத்தொகையில் 60 சதவீதமானோர் ஏதாவது ஒரு சமயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். இதே வேளையில் அனேக இளம் வயதினர் (39%)  எந்த சமயத்தையும் சாராது இருப்பது கவலையே.ஆஸ்திரேலியா பல்லின,  பல சமய வழிபாடுகளை பின்பற்றும் பெரும் தேசமாகும். மிகப் பெரிய சமயமாக கிறிஸ்தவர்கள் 52.2 சதவீதத்தையும் இஸ்லாமிய மதத்தவர் 2.6 சதவீதத்தையும் பெளத்தர்கள் 2.4 சதவீதத்தையும் இந்துக்கள் 1. 9 சதவீதத்தையும்  பங்கு போட்டுள்ளனர். 2016 சனத்தொகை கணிப்பின்படி 440, 300 இந்துக்கள் இம்மண்ணில் வசிக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் சமயங்களில் இந்து மதம் இங்கு முன் இடத்தை வகிக்கிறது!அனேகமான மாநிலங்களில்  இந்துக்கோவில்கள் அம்மாநில இந்து மா சபைகளால் நிர்மாணிக்கப்டட்டு கம்பீரமாய் வான்தொட்டு எழுந்தருளி இருக்கும் காட்சி இந்நாட்டின் பல் இன மக்களின் கலாச்சாரத்தின் அடையாளங்கள் என பெருமையாய் கூற முடியும்.

தமிழர் வழிபாடு

சிட்னி முருகன் ஆலயம்  ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம்

சிட்னி முருகன் ஆலயம்  ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம், மெல்பெர்ன் சிவா – விஷ்ணு ஆலயம், வக்ரதுண்டர் விநாயகர் ஆலயம், கான்பெரா முருகன் ஆலயம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பாலமுருகன் ஆலயம் உட்பட பல ஆலயங்கள் மாநில பக்தர்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்து அருள் பரப்பி வருகின்றன.ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோவில்களின் அழகை அவற்றைப் பார்க்கும், குறிப்பாக மேல்நாட்டவர், எவரும் பாராட்டாமல் இருந்ததில்லை. அகம சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களின் சிற்பக் கலையின் அழகையும்  அதற்குத் தேவையான கல் பாறைகளின் தேர்வு முறை தொடக்கம் கர்பக்கிரகத்தையும் கோபுரங்கள் அனைத்தையும் தலைசிறந்த தமிழக சிற்பிகளை அழைப்பித்து செதுக்குதல் வரை நுணுக்கமாக ஆராய்ந்து நிறைவேற்றும் கோவில் பரிபாலன சபையை பாராட்டாமல் இருக்க முடியாது. அனேகமான கோவில்களை ஒட்டி திருமண மண்டபங்களும் வடை பாயாசத்துடன் நாவுக்கு ருசியான சைவ உணவு வகைகளும் பரிமாறப்படுவது ஒரு சிறப்பு! 

தொப்புள் கொடி

புலம் பெயர்ந்து வந்து இங்கு தமக்கென ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொண்ட பலர் தாம் பிறந்த மண்ணை மறவாமல் அங்குள்ள விளிம்புநிலை மக்களுக்கும் தாம் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். பழைய மாணவர் சங்கங்களும் மற்ற தமிழ் சமூக அமைப்புகளும் இதை முன்னின்று நடத்துவது மகிழ்ச்சிக்குரிய விடயமே.

கலைத்துறையில்..

ஆஸ்திரேவியாவின் கலைத்துறையில் திரைப்பட தயாரிப்பு முன்னணி வகிக்கிறது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இந்நாட்டில் கமராவின் பசிக்கு நிச்சயம் தீனி தேவைக்கு அதிகமாக உள்ளது.அனேக தமிழ் ஹிந்தி திரைப்படங்கள், விசேடமாக பாடல் காட்கள், இங்கு படமாக்கப்படுவது சகஜம். 

ஊறுகாய் போத்தலுடன் மாதவன் மெல்பேர்ன் விமான நிலையத்தில் “நளதமயந்தி ” இல் அலைவதையும் உலக நாயகனின் “இந்தியன்” பாடல் காட்சியில் கோலாவுடன் கொஞ்சுவதையும் உங்களுக்கு ஞாபகம் இருக்குமே? 

கொரோனா பாதிப்பால் ஹாலிவுட்டில் திரைப்படங்கள் படமாக்க முடியாத நிலையில் அனேக பிரபல அமரிக்க ஸ்டூடியோக்கள் இங்கு களம் அமைத்து  படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றை ஊக்குவிற்கும் பொருட்டு மத்திய அரசு $400 மில்லியன் Location Incentive Boost எனும் நிதி உதவி திட்டத்தை கடந்த வருடம் அறிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் வரை $2.1 பில்லியன் மதிப்புள்ள 37 திரைப்பட திட்டங்கள் கையிருப்பில் உள்ளனவாம். மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு பல வரிச்சலுகைகள் வழங்கி இவர்களை கவர முனைகின்றன.

 Nicole Kidman, Tom Hanks, Liam Neeson, Chris Hemsworth, Matt Damon, Dwayne Johnson

தற்போது ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான Nicole Kidman, Tom Hanks, Liam Neeson, Chris Hemsworth, Matt Damon, Dwayne Johnson ஆகியோர் இங்கு  கூடாரமடித்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் உங்களுக்கும் இவர்களின்  இப் படங்களில் ஆஸ்திரேலியாவின் வனப்பு மிகு இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க வாய்ப்புண்டு!

பெருந் தொற்று

கொரோனாவின் கொடிய பிடியில் சிக்கி உலக நாடுகள் தத்தளிக்கும் வேளையில் ஆஸ்திரேலியா முன்நோக்குடன் எடுத்த பல நடவடிக்கைகளினால் வைரஸ் பரவலை ஒருவாறு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது எனலாம். எனினும் நாட்டின் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்து சர்வதேச மாணவர் வருகை, கட்டிட மற்றும் கல்வித் துறை போன்றவை பாரிய பாதிப்பை முன்னேக்கின என்பது உண்மை.

ஆஸ்திரெலியா அண்மையில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனுங்களுடன் ஒரு சமர் புரிந்து வெற்றியீட்டிய செய்தியையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டு. கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் செய்திப் பதிவுகளை வெளியிடுவது தெரிந்ததே. ஆனால் இச்செய்திகளை முதற்கண் சேகரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நயா பைசா கூட கொடுப்பதில்லை. என்ன,  ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையருக்கு உடைத்தானாம்’  எனும் முதுமொழி ஞாபகத்தில் வருகிறதோ? 

இச்சுமைகள் போதாதென்று வைரசின் ரிஷிமூலம் தேட உலக சுகாதார நிறுவனத்திடம் சீனா மீது ஒரு விசாரணையை ஆரம்பிக்குமாறு ஆஸ்திரேலியா வற்புறுத்தியது. இச்செயல் சீனாவை ஆத்திரமடையச் செய்தது வியப்பல்ல. இதற்குப் பதிலடியாக சீனா இங்கிருந்து ஏற்றுமதியாகும் நிலக்கரி,  பருத்தி, பார்லி, திராட்சை ரசம்(ஒயின்), மட்டு இறால் ஆகிய பொருட்களை வாங்க மறுத்தது. இந்த வர்த்தக முறுகலில் இடையில் மாட்டிக் கொண்ட விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் விழி பிதுங்க மத்திய ஆரசின் உதவியை நாடி நிற்கின்றனர். இன்று வரை இதற்கான தீர்வு காணப்படவில்லை.”எங்களைச் சீண்டினால் இதுதான் கதி ” என சீனா மற்ற உலக நாடுகளை எச்சரிப்பதற்காகவே இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலியாவின் மொத்த ஏற்றுமதியில் 32 சதவீதம் (பெறுமதி : $123 பில்லியன்) சீனாவுடனாதலால் இந்நாட்டின் பொருளாதாரத்தில் இச்செயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகப் பாதுகாப்பு

முடிவாக…..

இதற்கு எல்லாம் முடிவுகட்டும் வகையில் அரசு “news media bargaining code” எனும் புதிய சட்டத்தை கடந்த வருடம் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. இச்சட்டத்தின் கீழ் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் பல உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன்  பல லட்சங்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்யும்  என எதிர்பார்க்கலாம். கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஆஸ்திரேலியாவின் இப்புதிய சட்டத்திற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இது எல்லா செய்தி நிறுவஙை்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரு வெற்றியே! 

முடிவாக….

கடந்த நான்கு வாரங்களாக இந்த ரம்மியமான பூமியைப் பற்றியும் அதன் சரித்திர கலாச்சார பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொண்டோம். ஆஸ்திரேலியா என்றதும் அதன் பச்சைப்பசேல் எனும் புல்வெளி சார்ந்த மலைப் பகுதிகளையும் அங்கு அமைதியாய் அசை போட்டபடி மேயும் பசுக்களும் எம் நினைவிற்கு வரும்.  இக்காட்சியின் பின்னால் இந் நாடு உருவாகும் போது இரத்தம் சிந்திய இம் மண்ணின் மைந்தர்களையும் புது நாடு தேடி உலகின் பல பாகங்களில் இருந்தும் குடிபெயர்ந்து தம் கனவை நனவாக்க வந்த நல்ல பிரஜைகளையும் நாம் நினைவு கூருவோம்!இந்நாட்டிற்கு அகதிகளாய் வந்து தம் குடும்பத்திற்கு ஒரு அமைதியான நல்வாழ்வை ஏற்படுத்தி இந்நாட்டுக்காய் உழைக்கும் அனேக நல்ல உள்ளங்களையும் நினைவு கூருவோம்! 

புதிய கனவுகளை தன்னகத்தே பகிர்ந்து ஒரே குரலில் ‘நாம் ஆஸ்திரேலியன்’ எனும் ஆர்ப்பரிப்புடன் இப் புண்ணிய பூமி தன் பயணத்தை தொடரட்டும்!

நன்றி 
 

We are one, but we are many

And from all the lands on earth we come

We’ll share a dream and sing with one voice

I am, you are, we are Australian! 


முற்றும்

Advertisement

2 thoughts on “எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்

Add yours

  1. எங்க நாட்டிலே கல்கியில் நான்குவாரத் தொடராக வந்தபோதே வாசித்துவிட்டேன். கடந்த இருபது வருடங்களாக ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்ற போதிலும், நான் அறியாத பல விடயங்களை இக்கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன். கட்டுரை ஒரு வாசகனை உள்ளே இழுத்து அதில் லயிக்கச் செய்துவிடுகின்றது. வாழ்த்துகள்.

    Like

    1. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: