மறைந்து வரும் மரங்கள்

வாசித்தது:- மறைந்து வரும் மரங்கள்
ஆசிரியர்:- சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம்:- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை:- கட்டுரை (சுற்றுச் சூழல்)

‘எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையைின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக  அதிசயமாயுள்ளது அப்படித்தான் மரங்கள் அழிவதும்’  முன்னுரையில்  சுப்ரபாரதிமணியன் சொல்லியுள்ள வரிகளைப் படித்ததும் மரங்களே, நம்மைப்பார்த்து  கிண்டலாக அதே நேரம் வருத்தமாகச் சொல்வது போல்  இருக்கிறது. மரங்களே மன்னித்துக் கொள்ளுங்கள்  என்று மனதார  மனதிற்குள் சொல்லிவிட்டு புத்தகத்தை ம் ..ஹூகும் மரங்களைப் பற்றி  படிக்கத் தொடங்கினேன்.

இலுப்பை தொடங்கி உருத்திராட்சம் வரையிலும் முப்பது விதைகளை  தூவியிருக்கிறார் ஆசிரியர். என்னால் முடிந்த அளவு நாற்றுகளை பா(த்)தியளவு பத்தியில் நடவு செய்திட முயற்சித்திருக்கிறேன்.

இலுப்பை:-

இலுப்பை
இலுப்பை

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மரத்தால் செய்த  தேர்கள் இன்றும் தமிழகக் கோயில்களில் திடமாக உள்ளன.  சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இம்மரத்தால் செய்யப்பட்ட வாயிற் கதவுகள் தஞ்சைப் பெரிய கோயிலின் அம்மன் சந்நிதியில்  இன்றும்  பொலிவோடு விளங்குகின்றன என்றால் இந்த மரத்தின் பெருமையை என்ன சொல்ல ? கிராமங்களில் ஒன்றிரண்டு இலுப்பை மரங்களைக் காண்பது கூட அரிதாகிவிட்டது.

இலந்தை:-

இலந்தை
இலந்தை

இலந்தை மரங்கள் அடர்ந்த காடாக இருந்த இடம் என்ற பொருளில் ‘பத்திரிகா ஆசிரம்’ என்று வழங்கி பின்னாளில் அது திரிந்து ‘பத்ரிநாத்’ ஆனது. அங்கிருந்த முனிவர்கள் இலந்தை பழத்தை உண்டே நீண்ட நாட்கள்  வாழ்ந்தனராம்.

இலந்தை பசுமையான பள்ளிக்கூட நினைவுகளை மீண்டும் சுவைக்க வைத்தது.

பேய் அத்தி: –

பேய் அத்தி

சங்க காலத்தில் இதன் பெயர் அதவம். அதவ மரத்தின் பழம் ஒன்று கீழே விழ ஆற்றில் வாழ்ந்த ஏழு நண்டுகள் அதனை ஏறி மிதித்தனவாம். காதலன் தன்னுடன் இல்லாதபோது காதலனைப்பற்றி தூற்றுவோர் நாக்கு,ஏழு நண்டுகள் மிதித்த ஒரு அத்திப்பழத்தை போல   துன்புறட்டும் என்று காதலி ஒருத்தி சாபமிடுகிறாள் என சங்ககாலப்  பாடல் ஒன்று தெரிவிக்கிறது என ஆசரியர் குறிப்பிட்டுள்ளார். அடேயப்பா காதலனைப்பற்றி குறை சொன்னல் என்ன கோபம் வருகிறது காதலிக்கு.

தில்லை:-

தில்லை

சிதம்பரம் என்ற ஊருக்கு மற்றொரு பெயர் தில்லை. தில்லை மரங்கள் மிகுதியாக இருந்ததால் தில்லை வனம் என்று அழைக்கப்பட்டது. இப்போது தில்லை சிதம்பரத்தில் இல்லை என்றாலும் பக்கத்தில்  உள்ள பிச்சாவரம் உப்பங் கழிகளில் இன்றும் மிகுதியாகக் காணப்படுகின்றன.


சந்தன வேங்கை:-

சந்தன வேங்கை

சந்தனமரம் தனித்து வளராது.  பக்கத்தில்  உள்ள மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய சத்துகளை பெற்றுக் கொள்கிறது. முதலில் சந்தனமரம் மற்ற மரத்திலிருந்து உறிஞ்சுகிறது. பிறகு தன்னையே தேய்த்து (அரைத்து) மற்றவர்க்கு வாசனையைத் தந்து சமன் செய்துவிடுகிறது . நல்ல பண்பாடு! செம்மரம் என்று சொல்வது இந்த சந்தனவேங்கை மரங்களையே. கதிர்வீச்சிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஜப்பான் போன்ற நாடுகள்    சிறிய செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தங்களைக் காத்துவருகிறார்கள். அழுக்கு நீரில்சந்தனத் துண்டைப் போட்டால் நீர் சுத்தமாகும்.

சேராங்கொட்டை:-

ராங்கொட்டை

ரோமர்களின் விவசாயக் கடவுளுக்கு சேரஸ் என்பது பெயராகும். கற்பகம் ,சஞ்சீவி என்று பழைய சித்தர்களால் போற்றப்படுவது.  இரண்டு தலைமுறைக்கு முன்பு துணி துவைக்கும் தொழிலாளர்கள் இதன் சாறை  சிவப்பு மையாக துணியில் அடையாளமிட பயன்படுத்துவார்கள்.

மகிழம்:-

மகிழம்

ஆண்டு முழுவதும் இலை உதிர்க்காதது இதன் சிறப்பு. சூரியஔி நுழைய முடியாதஅளவு இலைகள் அடர்ந்திருக்கும். ஆங்கிலத்தில் இந்த மரத்தை’ புல்லட் உட்’ என்பார்கள் அந்தஅளவுக்கு உறுதியும் ,கடினமும், மதிப்புமிக்கது. மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ்  என்பர்.அதன்மணம் மனதிற்கு இதம்.

சரக்கொன்றை:-

ராஜ விருட்சம் என்று  சமஸ்கிருதத்தில் வழங்கப்படும் சரக்கொன்றை. கொன்றை வேந்தன்,  ஐங்குறுநூறு,நற்றிணை என பல இலக்கியங்களிலும் காணப்படுகிறது.

திருவோடு:-

திருவோடு

திருவோடு ஒரு மரத்தின் விதையாகும். உலகிலேயே மிகப் பெரிய தேங்காயின் ஓடு ஆகும். கடல் பனை, மாலத்தீவு தேங்காய் என்ற வேறு பெயர்கள் உண்டு. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக ஆக்குகிறார்கள். இது பனைமரம் போல் உயரமாக இருக்கும். இதிலும் ஆண்,பெண் மரங்கள் உள்ளன. விதை முளைக்கத் தொடங்கி இலை தோன்றுவதற்கே 3 வருடங்களாவது ஆகுமாம். பெண் மரங்கள் 100 வருடங்கள் கழித்தே பூக்கத்  தொடங்குகின்றன. பூமலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும். இந்த விதை தானாகத்தான் முளைக்குமாம். தோட்டங்களில் வளர்க்க முயன்றாலும் முடிவதில்லை. அப்படியே வளர்ந்தாலும் வெகு சீக்கிரம் அழிந்திடுமாம்.

தன்னை உணர்ந்து தவ வலிமை கொண்ட உண்மையான துறவிகள் தானே தோன்றும் திருவோடு மரத்தைப் போன்றவர்கள். போலிச்சாமியார் தோன்றிலும் மறைந்து போவதைப் போல விளைவித்தாலும் விளையாத  திருவோடு போன்றவர்களோ?

புன்னை:-

புன்னை

‘விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி’ என்ற நற்றிணைப் பாடலொன்று  புன்னை மரம் தலைவிக்கு சகோதரிஎன்பதாக சொல்கிறது. தலைவன் தலைவியை ஒரு மரத்தின் அடியில் சந்திக்க வருகிறான்.அவளோ இந்த மரம் என்  தாய் நட்டு வளர்த்ததால் சகோதரிக்கு சமம். இங்கிருந்து பேசக் கூச்சமாக இருக்கிறது என்கிறாள். தமிழ் பண்பாடு செடி கொடிகளைப் பாசமாக உறவாக நினைப்பது.   தென்னை மரக்கன்றை தென்னம்பிள்ளை என்றுதானே சொல்கிறோம்.

நாவல், ஒதிய , குங்குமப்பூ, கோங்கு தான்றி, பலாசம் என்று இன்னும் பல மரங்களைப் பற்றியும் அதன் மருத்துவப்பயன்கள், புராணக்கதைகள்,அதன் வகைகள்,சின்ன சின்ன மருத்துவக் குறிப்புகளையும் மணி மணியாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர் சுப்ர பாரதி மணியன்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்றார் வள்ளுவர். அதைவிட மனிதர்களின் செயலுக்கு குலத்தை கெடுக்கவந்த கோடாரிக் காம்பு என்ற வலிமிகுந்த வரியையும் தாங்கிக் கொண்டு அந்தகோடாரி செய்வதற்கான மரம் மட்டுமல்லாது அதை வைத்து வெட்டுபவனுக்கும் இளைப்பாற நிழலாக, பசிக்கு கனியைக் கொடுப்பது மரங்களே! செஞ்சோற்றுக் கடனாக கர்ணன் தன் சகோதர்களுக்கு எதிராக நிற்க வேண்டியவனான். தலைமுறை தாண்டி எல்லோருக்கும் என்றும் உதவக்கூடிய  வரங்களை ‘தா’ எனப் பெற்ற புத்திசாலிகள் தாவரங்களே!!! 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: