( சித்திரம்: கிறிஸ் நல்லரத்னம், மெல்பேர்ன், ஆஸ்திரேலியா )
மைதிலி அதி வேகமாக வீட்டுக்குள் நுழைந்து தான் கொண்டு வந்த பிக் ஷாப்பர் பையை சமையலரை மேடையின் மீது வைத்து விட்டு அங்கு சமைத்துக் கொண்டிருந்த அம்மாவின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்.
“அம்மா எனக்கு கொஞ்சம் டீ வேணும் போட்டுத் தாரியா” வந்து ஹாலில் அப்பாவின் அருகில் உட்கார்ந்தாள்.
“அப்பா, நான் சில ஸ்கெட்ச் போட்டுக் கொண்டாந்திருக்கேன் பாருங்க”
மகன் ப்ரதீப்பை பள்ளியில் விட்டபின் அப்பா அம்மா வீட்டுக்கு வருகிற மைதிலி மாலையி்ல் அவனை அழைத்துக் கொண்டு போகும்வரை இங்குதான் இருப்பாள்.
குன்றத்தூரில் மைதிலி வீட்டுக்காரர் வாங்கியிருக்கும் முக்கால் கிரவுண்டு வீட்டு மனையில் மழைக்காலம் முடிந்து தை மாதம் பிறந்ததும் வீடு கட்டப் போகிறார்கள்.
“அப்பா ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சி நானும் அவரும் வரைஞ்சது இந்த ரெண்டும்.”
“மைதிலி, வீட்டு வரைபடங்கள் பற்றி புத்தகங்கள் நெறைய விற்கிறது; அதுகளை வாங்கிட்டு வந்து , படங்களை ஒன்னோட ஒன்னு கலந்து புதுசா ஒன்னு கண்டு பிடிக்கனும். அதோட வாஸ்து வேற பார்க்கனும்”
“அப்பா நெட்ல வாஸ்து பத்தின ஆப் இருக்கு; அத வைச்சுதான் இதெல்லாம் போட்டிருக்கோம்”
இரண்டு வரைபடங்களையும் சிறு குழந்தையைப் போல் ஆர்வமுடன் அப்பாவுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள். அப்பாவும் ஏதேதோ சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு வீடு கட்டுவது என்பது இன்று எல்லாருக்கும் லட்சியக் கனவு. அதனால்தான் வீட்டைக் கட்டிப் பார் என்ற சொற்றொடர் வந்தது போலும். அந்தக்காலத்தில் வீடுகட்டும் உரிமையாளரே எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். ஆட்களை வைத்து செங்கல் அறுத்து, சூளை போட்டு தேவைப்படும் செங்கற்களை தாங்களே சொந்தமாக தயார் செய்து கொள்வார்கள். வேலைக்கு ஆள் பிடிப்பது, ஆற்றில் இருந்து வண்டியில் மணல் அள்ளிவருவது, தோட்டத்தில் இருந்து முற்றிய மரங்களை வெட்டி ஆறப் போடுவது இன்னபிற வேலைகளையும் வீடுகட்டும் உரிமையாளரேதான் செய்யவேண்டும். இதற்குமுன் வீடுகட்டிய அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்பார்கள். வீடுகட்டுபவர்கள் இன்று உள்ளது போல அதிகமாக இருக்க மாட்டார்கள்; அதனால் கொத்தனார் முதலானவர்கள் வேலைக்கு வராமல் ஆட்டம் காட்ட மாட்டார்கள்.
கையில் டீ டம்ளரோடு வந்த அம்மா அதை இண்டு பேரிடமும் கொடுத்தாள். அத்துடன் ஒரு தட்டில் நாண்கு முள் முறுக்கும் வைத்துக் கொடுத்தாள்.
“ஓ…ராத்திரி இதைத்தான் செஞ்சியா” என்று கேட்டபடியே அப்பா ஒரு முறுக்கை எடுத்து கடித்து,” உன் கை பக்குவம் யாருக்கும் வராது” என்று பாராட்டினார்.
“என்னதான் பாராட்டு பத்திரம் படிச்சாலும் அவ்ளோதான் உங்களுக்கு. முறுக்கெல்லாம் என் பேரன் ப்ரதீப்புக்காக செஞ்சது” என்றாள் அம்மா.
என்னமோ தெரியவில்லை; இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது.
திண்னையில் வட்டமாக உட்கார்ந்து சீட்டு ஆடிக்கொண்டிருப்பவர்களை ‘திட்டுவார்களோ’ என்று சந்தேகத்துடனே எட்டிப்பார்க்கும் சிறுவனைப் போல அந்த வீடு பற்றிய வரைபடங்களை எட்டிப்பார்த்தாள். இரண்டுபேரும் அவளை கண்டு கொள்ளாமல் வரைபடத்தில் ஆழ்ந்திருந்தார்கள். கணவர் குடித்துவிட்டு வைத்த டீ டம்ளரை கையில் பிடித்தபடியே சிறிது நேரம் நின்றிருந்தாள். அவள் பக்கம் திரும்பி அவர்கள் பேசுவதாகத் தெரியவில்லை.
இரும்பு உருக்கும் இடத்தில் ‘ஈ’க்கு என்ன வேலை என்பதாக மீண்டும் அடுக்களைக்கே திரும்பினாள்.
இந்த அம்மாவுக்கு கொஞ்சம்கூட கோபமே வராதா. தனக்கு நியாயப்படி தரவேண்டிய மரியாதையை தரமாட்டேன் என்கிற போதாவது ஒரு சிறிய அளவிலாவது தன் ஆதங்கத்தை தெரிவிக்கத் தெரியாதா. எல்லாவற்றையும் சாதாரணமாக,ஒன்றுமே நடக்காதது போல எப்படி எடுத்துக் கொள்கிறார். ஒருவேளை மனதின் ஆழத்தில் போட்டு அமுக்கி வைத்திருக்கிறாரா; நேரம் வரும் போது எரிமலையாக வெடித்துச் சிதறுமோ, யார் கண்டது.
“அம்மா, வழக்கம் போல எனக்கு இன்னைக்கு ரெண்டு அப்பளாம் வேணும்”
என்ன பதார்த்தம் செய்திருந்தாலும் அம்மாவிடம் அப்பளாம்,வடாம் என்று ஏதாவது பொரித்துதரச் சொல்லி கேட்பது மைதிலி வழக்கம்.
“ரெண்டு போதுமா, சரி” அம்மா அடுக்களையிலிருந்து எட்டிக்கூட பார்க்காமல் பதில் சொன்னாள்.
மைதிலி தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அம்மா அப்பாவுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டாள். இந்த காட்சி எப்படி இருந்ததென்றால் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அவரவர் கொண்டு வந்திருக்கும் சாப்பாட்டை வட்டமாக உட்கார்ந்து பகிர்ந்து கொண்டு சாப்பிடுவது போலிருந்தது. ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் மைதிலி அப்பாவுக்கு பிடித்த காயிலேயே கறி செய்து கொண்டு வந்திருப்பாள். அது அப்பாவுக்கு ரெம்பப் பெருமை. ஆனாலும் அம்மா சமையலை விட்டுக் கொடுக்காமல் உயர்த்திப் பேசியபடியே சாப்பிடுவார். என்ன இருந்தாலும் அவள் மைதிலியின் குரு அல்லவா. மகளின் சாப்பாட்டை ஆசை தீர சாப்பிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டாள் அம்மா.
மதிய சாப்பாடு முடிந்தபின் மகளுடன் உறவுக்காரர்களின் வீட்டு செய்திகளையெல்லாம் தீர பேசிவிட்டு கொஞ்சம் ஓய்வு எடுப்பாள்.
ப்ரதீப்பை பள்ளியில் இருந்து அழைத்து வரும் மைதிலிக்கு காபியும், பேரன் ப்ரதீபுக்கு பாலும், பிஸ்கெட்டும் கொடுப்பாள் அம்மா. ஐந்து மணிக்கு மேல் மைதிலி மகனை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு போவாள்.
சில தினங்களாகவே அப்பாவுக்கு ஒரு மன உறுத்தல் இருந்து வந்தது. தினமும் வரும் மைதிலி தன்னிடம் கலந்து உரையாடுவது போல தன் அம்மாவிடம் உரையாடுவதில்லை என்பதைக் கவனித்த அப்பா, அம்மாவையும் ஆலோசனையில் ஈடுபடுத்த மகளிடம் நாசூக்காக சொல்லி ஏற்பாடு செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதற்குமுன் தன் மனைவியிடம் பேசி அவளுக்கு மகள் பேரில் ஏதோவது மனக்குறை உள்ளதா என அறிய விரும்பினார். அப்படி ஏதேனும் இருக்கும் என்றால் தன்பங்குக்கு ஏதாவது பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் மனைவியிடம் பேச்சை ஆரம்பித்தார்.

“இந்த மைதிலி எத்தனை இங்கிதம் தெரிந்து வைத்திருக்கிறாள்” என்று தொடங்கினார்.
“எதைச் சொல்றீங்க”
“இல்லை…தினமும் வந்து இந்த வீடு கட்டுவது சம்பந்தமாக என்னிடம் லொடலொடன்னு பேசுற மைதிலி உன்னை தொல்லை பண்ணுவதில்லை பார்த்தியா; அப்படிப் பேசினால் உன் சமையல் வேலை கெட்டுவிடும்னு நினைக்கிறா”
“அதெல்லாம் இல்லைங்க; எனக்கு தெரியாத சப்ஜெக்ட்டுன்னு பேசறதில்லை”
“நான் மட்டும் என்ன சிவில் என்ஜினியரா? நான் வெட்டியா இருக்கறதால என்கிட்ட பேசறா. என்கிட்ட சொல்லிட்டா நான் ஓய்வா இருக்கச்ச உன்கிட்ட தெளிவா சொல்லிடுவேன்னு நெனைக்கிறாள் போல இருக்கு”
“நான் எங்கே மைதிலியை தப்பா எடுத்துக்கப் போறேனோன்னு என்னை சமாதானப்படுத்தும் விதமா பேசாதிங்க. அவ சின்ன வயசிலிருந்தே பாடத்திலோ வேற எதிலோ சந்தேகம்னாலும் உங்க கிட்டதான கேட்ப்பா; இது எனக்கு புதுசா என்ன. எனக்கு அவ மேல கிஞ்சித்தும் வருத்தம் கிடையாது; வருத்தம் இருக்குமோன்னு சந்தேகத்துல நீங்க சமாதானம் செய்ய வரவேணாம். இத்தனை வருசத்துல நீங்க என்னைப் புரிஞ்சுகிட்து அவ்ளோதானா. கண்ணதாசனோட ஒரு பாட்டுல ‘ கண்கள் அருகே இமை இருந்தும்,கண்கள் இமையைப் பார்த்ததில்லை ‘ அப்படின்னு ஒரு வரி வரும் அது சரிதான்” அம்மா ஒரு பெரிய லெக்சரே அடித்தவிட்டாள்.
எதுவும் பேசாமல் இருப்பதாலேயே அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது அர்த்தமில்லை. தன் மனைவியின் அறிவாற்றலைவிட பெருந்தன்மை அவரை பெருமை கொள்ள வைத்தது.
மறுநாள் வந்த மைதிலிக்கும் அப்பாவின் கருத்துதான் போலும். அவளும் அம்மாவிடம் மெல்ல இதைப்பற்றி ஆரம்பித்தாள், ” அம்மா இந்த வீடுகட்டும் விபரமெல்லாம் உங்கிட்ட …….” என்று தொடங்கும் போதே இடைமறித்தாள் அம்மா.
“நேற்று அப்பாவிடம் கூறிய கண்ணதாசன் பாடலின் முதல் வரி , பாலசந்தரின் தாமரை நெஞ்சம் படத்தில் சரோஜாதேவியும்,வாணிஸ்ரீயும் பாடுவது போன்ற காட்சியின் பாட்டு,
‘அடிப்போடி பைத்தியக்காரி,நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா’ ங்கிறதைத்தான் உங்கிட்ட பாடனும்” என்றாள்.
நாம் அம்மாவைப் பார்க்கும் கோணத்திற்கும், அம்மாவின் பார்வைக்கும்தான் எத்தனை வேறுபாடு உள்ளது.
தன் குடும்பமும்,பிள்ளைகளும் நன்றாக, மகிழ்ச்சியாக இருந்தால் போதும் ; தனக்கென்று எந்த ஈகோவும் இல்லாதவளே அம்மா.
எவ்வளவுதான் புரிந்துணர்வு மிக்கவளாக அம்மா படைக்கப்பட்டு இருந்தாலும் , அவளுள்ளும் வீட்டின் வடிவமைப்பு இன்ன பிற அம்சங்கள் குறித்தும் அறிய ஆவல் எட்டிப்பார்க்கமாலிருந்திருக்குமா? என்ன? இருந்திருக்க வேண்டும். அந்த நினைப்பில் தான் டீ டம்ளரை கையில் பிடித்தபடியே சிறிது நேரம் நின்றிருப்பாளோ?
LikeLike
அது போலவே, தெருத்திண்ணையில் சீட்டாட்டம் ஆடும் பெரியவர்களை தயக்கத்துடன் எட்டிப்பார்க்கும் சிறுவர்களைப் போலவும் நின்றுவிட்டு ‘இரும்பு உருக்கும் இடத்து ‘ஈ’ யாக நகர்ந்திடுவாள்.
கருத்துரைக்கு நன்றி,உத்தமன்.
LikeLike