ஆசிரியர்:-சாவி
பதிப்பகம்:-நர்மதா பதிப்பகம்
வகை:-நாவல்
ராணிமுத்து வரிசையில் படித்தது. அதன் படங்களும் கதையும் நினைவில் அப்படியே இருந்தது. மீண்டும் இப்போது படித்தபோதும் எத்தனை முறை பார்த்தாலும் நாகேஷ், வடிவேலு நகைச்சுவைக் காட்சியை முதலில் பார்த்து சிரித்தது போல ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சிரிப்போம். இந்த கதை கூட அப்படித்தான் ரசிக்கவைத்தது. கதை உருவானவிதம் பற்றி சொல்லியிருப்பதே நல்ல சுவாரஸ்யம்.
கதை:-
லோசனாவின் கணவர் கும்பகோணம் டி.கே.மூர்த்தியும் மிஸஸ் ராக்பெல்லரின் நாத்தனாரான கேத்ரினின் கணவர் ஹாரி ஹாப்ஸும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். லோசனா மெட்ராஸ் ஸ்டேட்டை, தென்னிந்தியாவை, தென்னை மரத்தைப் பற்றி கேத்ரினிடம் அளந்து விட அவளுக்கு எல்லாவற்றையும் நேரில் பார்க்க வேணடுமென்ற ஆசை வருகிறது.
லோசனா தஞ்சாவூரில் நடக்க இருக்கும் தன் மகள் வசந்தாவின் திருமணத்திற்கு குடும்பத்துடன் வரவேண்டுமென அழைக்கிறாள். கேத்ரின் மகள் லோரிட்டாவுக்கு தஞ்சாவூரைப்பற்றி வசந்தா சொல்லியிருக்கும் செய்திகளால் சந்தோஷமாய் சம்மதிக்கிறாள்.
திருமணத்தைப் பார்த்து களித்து அமெரிக்கா திரும்பும் கேத்ரின் மிஸஸ் ராக்பெல்லரிடம் திருமண நிகழ்வுகளை ‘டிடெயில்’ ஆக சொல்ல ஹாரி ஹாப்ஸ் திருமணச் சடங்குகளின் புகைப்படம் அதுபற்றி குறிப்புகளையும் காட்டுகிறார். அவற்றையெல்லாம் கேட்க கேட்க, படிக்க படிக்க, பார்க்க பார்க்க தென்னிந்திய திருமணம் ஒன்றை பார்க்க ஆசை வர உடனே அமெரிக்காவிலேயே தென்னிந்திய திருமணம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று தன் கணவரிடம் அந்த சீமாட்டி கேட்டுக்கொள்கிறார்.
‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற பழமொழியை தமிழ் நாட்டுத் திருமணம் ஒன்றை வாஷிங்டனில் நடத்திப்பார் என்று சொல்லலாம் போல திருமணத்திற்கான அத்தனை ஏற்பாடுகளுடன் நடக்கிறது. அதை சுவைபட, இனிக்க ,மணக்க திருமணவிருந்தாக தன் எழுத்தாலும் கற்பனையாலும் சாவி அவர்கள் பரிமாறியிருக்கிறார்.
ரசித்தது:- (கதை)விருந்து முழுமையுமே. இருப்பினும் வாஷிங்டனில் திருமண விருந்தில்ருசித்த சிலவற்றைத் தருகிறேன். தஞ்சாவூரில் தெருக்கள் குறுகலாக இருக்கும் எதிரெதிராக வருபவர் ‘பச்சைகுதிரை ‘தாண்டிக் கொண்டுதான்செல்வார்கள். ‘க்ரீன் ஹார்ஸ் ஜம்பிங்’ பார்க்க வேடிக்கையாக இருக்கும், தெருப்புழுதி (ரோட்-டஸ்ட்) ப்ளவர் பஞ்ச்- கதம்பம், இன்னும் பலவும் லோரிட்டாவுக்கு தஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வருகிறது.
பந்தலுக்கு தேவையான வாழைமரம், முதல் வாத்தியக்கார்கள், அப்பளமிடும் கிழவிகள், அப்பளக் குழவிகள், சாஸ்திரிகள் சமையல்காரர்கள் இன்னும் மற்ற பொருட்களையும் கொண்டு வர (தஞ்சாவூர் to கும்பகோணத்திற்கும் சென்று வரும் ரூட் பஸ் போல) தினம் நான்கு பிளேன்ஸ் அமெரிக்காவுக்கும் மெட்ராஸுக்கும் சென்றுவர ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருமண நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஔிபரப்ப ஏற்பாடாகிறது, இந்த செய்தியால் ஏரோபிளேனில் வரும் திருமண கோஷ்டியைக்காண பெரும்கூட்டம் கூடிவிடுகிறது. அம்மாஞ்சி ‘வெளியே பாத்தீரா கூட்டத்தை எள்ளுபோட இடமில்லை’ என்று சாஸ்திரிகள் சொல்ல உடனே அம்மாஞ்சி தன் மடியிலிருந்த பொட்டலத்திலிருந்து சிறிது எள்ளை எடுத்துப்போட விமானத்திலிருந்து இறங்கியதும் நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வியால் துளைக்க அதற்கு அவரின் பதில்களால் எள்ளிலிருந்து எண்ணெய் கிடைக்கும் என்று கண்டு பிடித்த இண்டியன் ஸயிண்டிஸ்டு(!?) என்ற செய்தியுடன் அவரின் புகைப் படத்தையும் பிரசுரிக்கின்றனர்.
அமெரிக்காவின் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், பூதத்துவ ஆராய்ச்சியாளர்களும் சயிண்டிஸ்ட்
அம்மாஞ்சியை அவசர அவசரமாக பேட்டி காண புறப்படுகிறார்கள்.
மிஸஸ் ராக்பெல்லர் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்வது பின்அதைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டு தொலைபேசியில் தோழிகளுக்கு கூப்பிடுச்சொல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அலிபாபாவின் குகையின் கதவு திறக்க ‘திறந்திடு சீசேம்’ என்று சொல்ல வேண்டும். பல்வேறு அழுத்தங்களால் மூடிக்கிடக்கும் மனதை திறக்கும் சாவி, விசா இன்றி வாஷிங்டனில் திரும(ன)ணம் காண வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சா(வி)ர்.
Leave a Reply