வாசித்தது:- வானொலியில் இன்று ஒரு தகவல்(vanoliyil indru oru thagaval) பாகம்-10
ஆசிரியர்:- தென்கச்சி கோ. சுவாமிநாதன்
பதிப்பகம் :- கலைவாணி புத்தகாலயம்
முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒன்றிரண்டாக அதிசயப் பொருளாக பார்க்கப்பட்ட காலத்திலிருந்தே வானொலி மட்டும் என்றும் பதினாறு வயதான மார்க்கண்டேயனாகவே இன்னும் சொல்வதானால்(தனியார் வானொலிகளால்)இளமை கூடி இருக்கிறது. கைபேசியிலும் ஊர்தியிலும் கேட்க கூடியதான வானொலியாலும் அதன் நிகழ்ச்சிதொகுப்பாளர்களாலும் முன்பை விட ரசிகர்கள் கூட்டம் கூடித்தான் இருக்கிறது.
‘ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி’ என்ற கம்பீரக் குரல், மாநிலச் செய்திகளில் சரவெடி செல்வராஜ், நிதானமாய் பத்மநாபன் ஆகியோர் மறக்கமுடியாதவர்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக சென்னை வானொலியின் கூத்தபிரான்,இலங்கை வானொலியின் கே ….எஸ்…ராஜா, அப்துல் ஹமீது ,ராஜேஸ்வரி ஷண்முகம், புவனலோஜனி துரை ராஜசிங்கம், மயில்வாகனம் சர்வானந்தா இவர்களின் குரல்களுக்கு எல்லாம் ரசிகர்களை வசிகரிக்கும் தனித்தன்மைஇருந்தது.
இன்று தொலைக்காட்சியோடு வானொலி போட்டி போட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் ஒரு சுவையான நிகழ்ச்சியை பிரதி தினம் தவறாமல் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் நடத்திவருவது மட்டுமல்லாமல் தினமும் தமது சுவைஞர் கூட்டத்தை அதிகரித்து வருபவர் ஒருவர் உண்டு என்றால் அதுவும் நம் மத்தியிலேயே இருக்கிறார் என்றால் அதுபற்றி நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.
இன்று ஒரு தகவல் என்ற நிகழ்ச்சியை சென்னை வானொலியில் தென் கச்சி கோ. சுவாமிநாதன்தான் தமது தகவல் நேரத்தால் தமக்கும் சென்னை வானொலிக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்து கொண்டிருப்பவர். 28.11.93 பி. பி.சி தமிழோசையில் தமிழ்நாட்டு செய்தி மடலில் இருந்து ஒருபகுதி.
இன்று ஒரு தகவல் புத்தகத்தில் முன்னுரை போன்று பதிப்பகத்தார் இந்த தகவலைத் தந்து ஆசிரியரின் பாணியிலேயே அவருக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தில் 31 தகவல்கள் உள்ளன. படிக்கும் உணர்வு தோன்றா வண்ணம் வானொலியில் அவர் பேசுவதைக் கேட்பது போன்றே தொகுத்திருப்பது அருமை.
ரசித்தது:- “பக்தியும் பகல்வேஷமும்” கடவுளின்பெருமைகளைச் சொல்லும் சாமியார் .அவரைச் சுற்றி எப்போதும் போல் ஒரு மக்கள் கூட்டம். அதைப்பார்த்த கடவுளுக்கே பெருமை தாங்கவில்லை. ஒருநாள் சாமியார் கடவுள் அப்படி இருப்பார் இப்படி இருப்பார் என நேரில் பார்த்ததுபோல் சொல்லிக் கொண்டிருக்க அதேநேரம் இதையெல்லாம் நேரில் பார்க்க மேலுலகத்தில் இருந்து வரும் கடவுள் அங்குள்ள அரசமரத்தின் அடியிலிருந்து கவனிக்கிறார். அங்குவரும்பக்தர் ஒருவர், அட! கடவுள் வேஷம் பொருத்தமா இருக்கே! நல்லா மேக்கப் போட்டிருக்கிறாயே! எனச் சொல்ல கடவுளுக்கு ஷாக் ‘என்னப்பா இது இப்படிச் சொல்ற நான்தான் கடவுள் என்கிறார்.
இருவருக்கும் வாக்குவாதமாக கடவுள், ‘உங்க சாமியார் வரட்டும் என்னை நல்லாவே அவருக்குத் தெரியும் ‘எனச் சொல்கிறார். வெளியில் வந்த சாமியார் கோபமாக ‘இங்கெல்லாம் வந்து ஏம்பா கலாட்டா பண்ற? ‘ என்கிறார். கடவுள் என்ன சொல்லியும் கேட்காமல் அவரை ஒரு அறையில் தள்ளி பூட்டி விடுகிறார்கள். கடவுளுக்கு ஒரே சங்கடமாகிறது.
நள்ளிரவில் கதவைத் திறந்து சாமியார்கடவுளின் காலில் தடாலனெ விழுந்து ‘என்னை மன்னித்துக்
கொள்ளுங்கள் எனக்கு முன்னமே கடவுள் என்று தெரியும் உடனே சொல்லியிருந்தா ‘மெண்டல் கேஸ்’ என என்னையும் உங்களோடே சேர்த்து தள்ளியிருப்பாங்க’ என்கிறார்.
திரும்ப மேலுலகம் வரும் கடவுள் கவலையாக இருக்க அவரின் தேவி ஏன் என்று கேட்க, கடவுள் ‘அந்த சாமியார் தான் காரணம். புரியாத பக்தர்கள் என்னை ‘போயிடு’ ன்னு சொன்னாங்க புரிஞ்சிகிட்ட சாமியாரும் என்னைப் உடனே புறப்பட்டு போங்கன்னார் ஏன் என்னை போகச் சொல்ற?னு கேட்டேன். அதுக்கு அந்த சாமியார் என்ன சொன்னார் தெரியுமா? என்ன சொன்னார்?என்று தேவி கேட்க ‘நீங்க இங்கே வந்துட்டா எங்க பொழப்பு கெட்டுப் போயிடும்’னு சொன்னார் அப்படின்னார் ரொம்ப சோகமாக.
“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்ற பாடலும்”
“கடவுள் பூமிக்கு வருவதில்லை மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன்தான்அலைவான் வீதியிலே..” என்ற பாடல் வரியும் ஞாபகம் வருகிறது.
ஒற்றுமை:-
பெரியவர் ஒருவர் தான் இறப்பதற்கு முன் தன் இரண்டு மகன்களுக்கும் தன்னிடமுள்ள ஒரே மாமரம், ஒரு பசு,ஒரே ஒரு போர்வை ஆகியவற்றை விட்டுச்செல்கிறார். பாதியாக பிரித்து கொள்ளவேண்டும். பாகப்பிரிவினை! அண்ணன் மக்கு என்ன சொன்னாலும் தலையாட்டுபவன். தம்பி புத்திசாலி ஆனால் புத்தியை தப்பா பயன்படுத்துவான். ஒருநாள் தம்பி ,’தன் அண்ணனிடம் நீங்கள்தான் மூத்தவர் அதனால் முன்னுரிமை உங்களுக்குத்தான் என்று மாமரத்தின் அடிபாகம் வலுவானது அதனால் அந்தப்பகுதி உங்களுக்கு, சிரசே பிரதானம் அதனால் பசுவின் தலைப்பகுதி உங்களுக்கு, போர்வையை பகலில் நீங்கள் வைத்திருங்கள் ‘என பங்(குகாய்)களிக்கிறான்பங்காளிக்கு. பசுவின் பால், மரத்தின் காய் ,பழம் இரவில் போர்வை தம்பிக்கு.பசுவை,மரத்தை,போர்வையை பாதுகாப்பது, பராமரிப்பது ,எல்லாம் அண்ணன்.
பக்கத்து வீட்டிலிருந்த ஒருவன் இதை கவனித்து அண்ணனிடம் எடுத்துக் கூறி அடுத்து அவன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூற அண்ணன் பராமரிப்பை நிறுத்தியது மட்டுமின்றி அடி மரத்தை வெட்ட, தம்பி பதறிப்போய் கேட்க, நான் என்னுடைய பங்கைத்தானே வெட்டினேன் என்று கூற, அடுத்து பசுமாட்டையும் பட்டினி போட, போர்வையை நனைத்து தர தனக்கே பூமராங்காக திரும்பி வர தம்பி தம்’b’பிளானை விட்டு ‘a’ (அண்ணனுக்) ஒரு நியாயமான பங்கைத் தருகிறான். மீதி 29யை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட விருதுகள் பரிசுகளுக்காக அவர்இந்த புத்தகத்தில் சொல்லியிருப்பது ஒரு ஆள் தினமும் பல்விளக்குகிறார்! இவர்தினமும்குளிக்கிறார் !அதற்காக விருது கொடுக்கிறோம் என்று யாராவது சொல்வதுண்டா? ‘தினமும் தகவல் சொல்கிறார் அதற்காக இந்தவிருது’ என்று சொல்லும் போது அந்தநினைவுதான் வருகிறது. ஒரு அலுவலகக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற எனக்கு இந்த விருதுகள் அதிகப் படியானவை. உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் என்றிருக்கிறார். சார்! இதுவும் இன்று ஒரு தகவல்தான்,
சிவனுக்கு பாடம் சொல்லி கந்தன் சாமிநாதனான். கச்சியப்பர் கந்தபுராணம் எழுதினார். தன் பெயரில் இரண்டும் உள்ள தென் கச்சியார் இன்று ‘ஒரு’ தகவல் சொன்னதனால் ‘தகவல் நாதன்’ என்றே சொல்லாம் தானே!
Leave a Reply