ஆரஞ்சுப்பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். இது சிறப்பான சேவைக்கு வழங்கப்படுவதுதானே, இதில் சிறப்பாக கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என சிலருக்கு கேட்டகத் தோன்றும். எனவே கொஞ்சம் விரிவாகப் பார்ப்போனால் அதிசயித்துப் போவோம்.
தட்சிண கன்னடா எனப்படும் கர்னாடகப் பகுதியில் மங்களூருவில் பேருந்து நிலையத்தில் கூடையில் வைத்து ஆரஞ்சுப் பழம் விற்பவர்தான் ஹரேகலா ஹாஜப்பா. 17.10.1952(69வயது) இல் ஹரேகலா எனும் கிராமத்தில் பிறந்தவர்.
1978இல் இரு வெளிநாட்டினர் இவரிடம் ‘பழம் என்ன விலை’ என்று கேட்டனர். படிக்காத இவரால் அவர்களுக்கு பதில் கூறி வியாபாரம் செய்ய இயலவில்லை. படிப்பறிவில்லாததால் அவ்வியாபாரம் நழுவிப்போனது. இந்த சம்பவம் இவர் மனதில் ஆழப்பதிந்தது, கல்வி இல்லாத நிலையினால் தன் இயலாமையை நினைத்து வருந்தினார்.தன் ஊரில் ஒரு பள்ளி இருந்திருந்தால் தானும் படித்திருக்கலாம்,தனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்காது என எண்ணினார். இதன் விளைவு , தன் சொந்த முயற்சியில் பணம் சேர்த்து தன் சொந்த ஊரில் ஒரு பள்ளி தொடங்கி அங்குள்ள பிள்ளைகள் எல்லாரும் கல்வி கற்க வழிகாணவேண்டும் என உறுதி மேற்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தார். ஒரு பள்ளிவாசல் இடத்தில் இருபது மாணவர்களைக் கொண்டு 2000 ஆவது ஆண்டில் ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினார்.பின்னர் அரசியல்வாதிகள், பிரமுகர்கள்,தொழிலதிபர்கள் எனப் பலரிடமும் பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கொடை வேண்டி முயற்சித்தார்.

பெரிய நிறுவனங்களின் வாயில் முன் காத்திருப்பார். அப்போது அவரைப்பார்த்து,”நீ யார், இங்கு ஏன் நிற்கிறாய்” எனக் கேட்பவர்களுக்கு தான் பள்ளி கட்ட நன்கொடை கேட்டு வந்திருப்பதாகக் கூறுவார். இவரின் உடையும், எளிமையும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டாது. இவரின் கூற்றை நம்பாதவர்கள் இவரின் மகள்களின் திருமணத்துக்கு நூதனவழியில் பணம் சேர்க்கிறார் என்றும் குடும்பத்தை வளப்படுத்த பணம் தேடுகிறார் என்றும் கேலி பேசியதும் உண்டு. அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தன் குறிக்கோளில் தளராமல் உழைத்தார்.உள்ளூர் ஊடகம் ஒன்றில் இவரைப் பற்றிய செய்தி ஔிபரப்பப் பட்டது; இதனால் இவருக்கு 5லட்ச ரூபாய் பரிசாகக் கிடைத்தது. பள்ளி வளர்ச்சியடைந்து 1.5 ஏக்கர் இடத்தில் கட்டப்பட்டது. ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை 100 மாணவர்கள் படிக்கத் தொடங்கினார்கள். தற்போது 175 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

தன்னுடைய முயற்சிக்கு ஊக்கமளிக்கும் முகத்தான் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை சலவைக்க்லில் பொறித்து பள்ளி வளாக சுவற்றில் பதித்துள்ளார்.
தினந்தோறும் காலையில் பள்ளிக்கு வருகிறார். தன் காலணியைக் கழற்றி வெளியில் ஒதுக்குப்புறமாக வைத்துவிட்டு ஒவ்வொரு வகுப்பாக பார்வையிடுகிறார். அதன் பின்னரே தன்னுடைய குடும்பத்தின் தேவைக்கான வருவாயைத்தேட பழ வியாபாரத்திற்கு செல்கிறார். ஊருக்கு உழைத்திடும் இவர் இன்னமும் தன் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்திட வேண்டும்; இவருடைய மகன் பெயிண்ட் தொழிலாளியாகத்தான் வேலை செய்கிறார். கூறை வீட்டில்தான் வாழ்கிறார், என்றும்போல் எளிய உணவுதான் உட்கொள்கிறார்.இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையி் பேசிய பெண் ‘ஹாலப்பா’விடம் பேச விரும்பினார். அவர் கூறியவை ஹாலப்பாவுக்கு புரியவில்லை. மேற்கொண்டு பேச தயங்கிய ஹாலப்பா அருகே இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கைபேசியைக் கொடுத்து பேசச் சொன்னார். அவருடைய கல்விச் சேவையைப் பாராட்டு முகத்தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் படுவதாகவும், குடியரசுத்தலைவர் அவர்களிடம் வந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தான் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்தியை ஓட்டுனர் ஹாலப்பாவிடம் கூறினார்.

பத்மஸ்ரீ ஹரேகலா ஹஜப்பா
தனது கிராமத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உன்னத இலக்குடன் செயல்பட்டு வரும் ஹரேகலா ஹஜப்பாவுக்கு பலரும் உறுதுணையாக உள்ளனர். இவருக்குக் கடந்த 2020 ஜனவரி மாதமே பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் அதற்குள் கொரோனா பரவல் உச்சமடையவே விருதுகள் வழங்கப்படவில்லை. கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தான் விருதுகள் வழங்கப்பட்டன.

தனது கிராமத்தில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் கூடுதலாகப் பள்ளிகளையும் புதிய கல்லூரி ஒன்றை தொடங்குவதையும் அடுத்த இலக்காகக் கொண்டுள்ளார். இவரின் நல்முயற்சிக்குப் பலரும் அளித்துள்ள நன்கொடை மற்றும் விருதுகளில் கிடைத்துள்ள பணத்தையும் சேர்த்து நிலம் வாங்க தீர்மானித்துள்ளார். மாணவர்களுக்கு உதவும் வகையில் மேல்நிலைப் பள்ளியைத் தனது கிராமத்திற்குக் கட்டித் தந்து +1, +2 படிப்பவர்க்கு உதவிட பிரதமர் மோடியிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.
‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
என்ற பாரதியின் வரிகளை மெய்பித்து காட்டியவர்.
இவரின் அருஞ்செயலைப் பார்த்து பணம் படைத்தவர்கள் உதவும் நல்ல மனம் படைத்தவர்களாக மாறவேண்டும் என்பதே எம் விருப்பம்.
Leave a Reply