(சித்திரம்:கிரிஸ்டி நல்லரத்னம்,மெல்போன்,ஆஸ்திரேலியா)
பரபரப்பாக உள்ளே நுழைந்த உமாவைக் கண்டவுடன் வாசுகியம்மாவுக்கு கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. தாவியோடி வந்த உமா அவரைக்கட்டிக் கொண்டாள். சற்று நேரம் இருவருமே பேச்சற்று இருந்தார்கள்.
பேசுவதற்கு மனதுக்குள் ஆயிரம் இருந்தாலும், எதுவும் பேசாமலேயே ஒரு அணைப்பிலோ, ஆழமான பார்வையிலோ, அன்பான தடவலிலே அத்தனையையும் உணர்த்திட முடியும்.
அப்படித்தான் வாசுகியம்மாள், “வந்துவிட்டாயா, உமா. என் பாரத்தையெல்லாம் உன்மீது இறக்கி வைத்துவிடுவேன்”என்பதாகவும் உமா,” அம்மா, நான்தான் வந்துட்டேனில்ல; நீங்க இனி நிம்மதியா இருக்கனும்” என்பதாகவும் மொழியில்லாமலேயே உரையாடிக் கொண்டார்கள்.
வாசுகியம்மாள் உமாவின் பிள்ளைகளை உள்ளே அழைத்துச் சென்று குளிர் பெட்டியிலிருந்து சாக்லேட்டும், குளிர் பாணமும் எடுத்துக் கொடுத்தார்.
சுவற்றில் மாட்டியிருந்த அரவிந்தனின் படத்தைப் பார்த்த உமா, துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். கல்லூரி நாட்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. அதில் முற்றிலுமாக அரவிந்தனே நினறைந்திருந்தார். அந்த அழகிய நாட்களை இனி நினைத்துப் பார்த்துத்தான் மகிழ்ந்திடமுடியும் ஊன்ற எண்ணம் மேலிட மேலிட மீண்டும் மீண்டும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. மகிழ்ச்சியோ , துக்கமோ இரண்டும் வெளிப்படும் போது இந்த கண்ணீர் வருகிறதே அது எப்படி வேறுபட்ட உணர்வுக்கு ஒரே மெய்ப்பாடு.
உமா எம் எஸ் சி முடித்தபின் ஒரு வேலையில் சேர்ந்தாள். அவளை ஊக்கப்படுத்தி பி.ஹெச் டி படிக்கத் தூண்டியவர் பேராசிரியர் அரவிந்தன்தான். அதுமட்டுமில்லாமல் அவளுக்கு கெய்டு ஆகவும் அவரே அமைந்தார். தன் மகளைப் போல நடத்திய அவர் உமாவின் திருமணத்துக்குப் பின் கணவனோடு வெளிநாடு போகத் தயங்கியபோது தைரியம் தந்து அனுப்பி வைத்தவர். இது மட்டுமல்ல,இன்னும் பல நிகழ்வுகள் வந்து நிழலாடின. புராணக்கதைகளில் இறைவன் பல அற்புதங்களை நடத்தினான் என்று படிப்பதைப் போல், அரவிந்தன் கல்லூரியிலும், அதைக்கடந்து நகரத்திலும் செய்த பல புரட்சிகரமான செயல்கள் நினைவுக்கு வரவே அவளையறியாமலேயே அவள் கரங்கள் குவிந்தன.
உமாவின் கணவன் ராஜன் காரை சரியாகப் பார்க் செய்துவிட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவன், உமாவின் அருகே வந்து அவள் தலையை தடவி முதுகிலே மெதுவாக தட்டிக் கொடுத்து ஆற்றுப் படுத்தினான். திரும்பி வந்த வாசுகியம்மாள் ராஜனை வரவேற்று நலம் விசாரித்தார். பேராசிரியர் அரவிந்தன் பணி ஓய்வு பெற்றபின் சும்மா இருக்க முடியவில்லை.
முப்பது ஆண்டுகளுக்கும்மேல் ஒன்றாக பணியாற்றிய பேராசிரியர் நால்வரை சேர்த்துக் கொண்டு ‘நீட்’ தேர்வெழுதும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். இந்த பாழாய்ப்போன பெருந் தொற்று அவர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டது. அரவிந்தனும், உடன் ஒரு பேராசிரியரும் தொற்றுக்கு பலியாகிவிட்டார்கள். செய்தி கிடைத்ததும் உமா உடனே வரத்துடித்தாலும் மூன்று மாதம் கழித்து இப்போதுதான் வர முடிந்தது. இந்தியா வந்தும் தனிமைப் படுத்தப்பட்டு சில தினங்கள் கழித்துதான் வாசுகியம்மாவை வந்து பார்க்கிறாள்.
உமா எத்தனை நாட்கள் தங்கப் போகிறாள் என்று அவளிடம் கேட்டார். “இனி வெளிநாடு திரும்பும் எண்ணம் இல்லை” என்று உமா கூறினாள். “பின் என்ன செய்வதாக முடிவெடுத்திருக்கிறாய்” என வாசுகியம்மாள் கேட்டார்.” நான் இந்த அரவிந்தன் கோச்சிங் செண்டரை ஏற்று நடத்தப் போறேன். பணவசதி இல்லாத ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக’ நீட் ‘பயிற்சி தரப் போறேன்.” இதைச் சொல்லிவிட்டு உமா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அதில் அவள் அடிமனதில் அடக்கி வைத்திருந்த வேதனை வெப்பக்காற்றாக வெளியேறியது.
செல்வத்தை தேடியவர்கள் அதை இல்லாத ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதுதானே, செல்வத்தை சேமிக்கும் வழி. உமா தான் பெற்ற கல்விச் செல்வத்தை, அது தேவைப்படுவோருக்கு கொடுத்து அதை பெருக்கம் அடையச் செய்யப் போகிறாள்.
மணப்படுக்கையில் இருந்த அரவிந்தன் கூறியது வாசுகியம்மாவின் நினைவுக்கு வந்தது, ” நான் பிழைப்பேனா தெரியாது; ஆனால் என் முயற்சி நிச்சயம் பிழைத்துக் கொள்ளும். எங்கிருந்தோ ஒரு தேவதை, அன்னை தெரசா போல ஒருவரின் வருகையால் இந்த பணிகள் என்னைக்காட்டிலும் சிறப்பாக செயல்படும்”. அது மெய்ப்படத்தான் போகிறது.
மண்ணுலகில் உதிரும் புனிதரான மனிதப் பூக்கள் விண்ணுலகில் போய் பூக்குமாம். அவைகள்தான் நாம் காணும் ஆகாயப் பூக்கள் எனும் நட்சத்திரங்களாம். இது அறிவியலுக்கு புறம்பானதுதான் ; ஆனால் கேட்பதற்கு நன்றாகத்தானே உள்ளது.
அந்த ஆகாயப் பூக்கள் அங்கிருந்து உமாவை வாழ்த்திக் கொண்டுதான் இருக்கும்.
Leave a Reply