புத்தகம்:- திருக்குறள் தெளிவுரை
ஆசிரியர்:- டாக்டர் மு.வரதராசனார்
வெளியீடு:- தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்
வகை:- பழந்தமிழ் இலக்கியம்
தமிழன்னைக்கு அணிகலன்கள் அழகான ஐம்பெரும் காப்பியங்கள். அந்த அழகை அள்ளிப்பருகும் இரு கண்கள் உலகப்பொதுமறை என்ற பெயரோடு உலகின் பார்வையை ஈர்த்த இரண்டடி திருக்குறள் தமிழன்னையின் இரு கண்களாக விளங்குகிறது என்றால் மிகையில்லைதானே!
சிறுவயதில் பாடப்பகுதியில் வந்த குறள்களில் மனதில் ஆழப்பதிந்து வாழ்க்கையில் அவ்வப்போதைய நிகழ்வுகளோடு இணைந்த பத்து குறள்களையும் அவற்றின் பொருளையும் புத்தகத்தின் துணையோடு பதிவிடுகிறேன்.
அறன் வலியுறுத்தல்:-(அதிகாரம்-4)
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (குறள்-34)
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே. மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடைமை.
மக்கட்பேறு:-(அதிகாரம்-7)
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல். (குறள்-67)
தந்தை மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல். (குறள்-70)
மகன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ? என்று புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
ஒழுக்கம் உடைமை:-( அதிகாரம்-14)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (குறள்-137)
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கத்தில் இருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
அறிவு உடைமை:-( அதிகாரம்-43)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்-423)
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
நட்பு :-(அதிகாரம்-79)
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (குறள்-783)
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல் நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்
தெரிந்து செயல்வகை:-( அதிகாரம்-47)
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள்-467)
(செய்ய தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
ஊக்கம் உடைமை:-( அதிகாரம்-60)
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. (குறள்-595)
நீர்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினதாகும். மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் உயர்வு.
சாண்றான்மை:-(அதிகாரம்-99)
கொல்லா நலத்தது நோன்பு பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (குறள்-984)
தவம் ஒர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது. சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
வாய்மை:-( அதிகாரம்-30)
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.( குறள்-293)
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
ஆள்வினை உடைமை:- (அதிகாரம்-62)
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (குறள்-616)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருந்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள்-619)
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்ததின் கூலியையாவது கொடுக்கும்.
ஆள்வினை உடைமையில் உள்ள இந்த குறள் விடா முயற்சியின் பலனை அழகாக சொல்கிறது. எந்த ஒரு செயலிலும் உண்மையான முயற்சி, இடைவிடாத உழைப்பின் பயனாய் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. அதனால் யாருக்கும் மனச் சோர்வு வருவது இயல்பு. ஆனால் அதற்காக மேற் கொண்ட பயிற்சி, பயிற்சியால் பெற்ற அறிவு நமக்கு கிடைத்த பலனாகும். செயலின் குறையை சரிசெய்து இன்னும் அதிகப்படியான முயற்சிக்கும் ஊக்கத்தை இந்த குறள் நமக்குத் தருகிறது.
செய்யும் தொழில் தெய்வம்!
குற்றமற்ற குறையில்லா முயற்சிதான் வழிபாடு சரிதானே!!!
Good Reads:
திருக்குறள் தெளிவுரை: thirukkural in tamil with explanation by Thiruvalluvar
View all my reviews
Leave a Reply